காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி

அந்தோ”! என்றது எலி, “ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரியதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காகப் பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்”.

நீ உன் திசையை மாற்றவேண்டிய தேவை உள்ளது” என்ற பூனை, அதனைச் சாப்பிட்டது.

இது காஃப்காவின் புகழ்பெற்ற குறுங்கதை

இந்தக் கதையில் வரும் எலி ஒவ்வொரு நாளும் உலகம் சிறியதாகிக் கொண்டே வருவதாகப் புலம்புகிறது. காரணம் அந்த எலியைப் பூனை துரத்திக் கொண்டிருக்கிறது.

பூனையின் கண்களில் தெரியும் உலகமும் எலிக்குத் தெரியும் உலகமும் ஒன்றில்லை. நீங்கள் துரத்தப்படும் எலியாக இருக்கும் போது உலகம் சுருங்கிவிடுகிறது. உங்கள் முன்னால் இருப்பது பொறி மட்டுமே.

இந்த அனுபவத்தை வேறு விதங்களில் பலரும் எழுதியிருக்கிறார்கள்.

சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்ட வசீலி என்ற கைதி தனது அனுபவத்தை எழுதும் போது இதே அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

நாற்பது பேரை கைது செய்து தீவாந்திர தண்டனைக்காகச் சைபீரியா அனுப்பினார்கள். அந்தக் கைகால்களில் விலங்கிடப்பட்டுப் படகில் நாங்கள் ஏற்றப்பட்டோம். படகு ஆற்றில் செல்ல ஆரம்பித்தது. நிலம் கண்ணை விட்டு மறைய ஆரம்பித்தது. சிறுவயதிலிருந்து நான் அறிந்திருந்த அந்த ஆறு அன்று மிகச்சிறியதாகத் தோன்றியது. அது போலவே படகிலிருந்த மனிதர்கள் எவரும் கண்ணில்படவேயில்லை. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட குருவி ஒன்றைப் போலவே உணர்ந்தேன். உலகம் ஏன் இவ்வளவு சிறியதாகவிட்டது என்று அழுகையாக வந்தது என்கிறார் வசீலி.

இது தான் அந்த எலியின் நிலைமை.

காஃப்காவின் கதையில் வரும் பூனை நீ உன் திசையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லியபடியே எலியைப் பிடித்துக் கொன்றுவிடுகிறது. அப்படித் தான் உலகின் அறிவுரைகள் இருக்கின்றன.

பால்ய வயதில் உலகம் மிகப்பெரியதாக இருந்தது. வீதி மிகப்பெரியதாக இருந்தது. மரங்கள் மிக உயரமாக இருந்தன. அடிவானம் மிகத்தொலைவிலிருந்தது. பெரியவர்களின் செருப்பு கூட மிகப்பெரியதாகத் தோன்றியது. நாலைந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கண்மாயிற்குக் குளிக்கப்போவோம். கண்மாய்ப் பெரிய கடலைப் போலத் தோற்றம் அளிக்கும். சிறிய தட்டில் உண்டு. சிறிய உடைகள் உடுத்தி சிறிய தலையணையில் உறங்கி எழுவோம். ஆனால் பெரியவர்கள் ஆனதும் இதைக் கண்டா பிரமித்தோம் என்று அந்தக் காட்சி சுருங்கிப் போய்விட்டன.

வண்ணதாசன் கதை ஒன்றில் சுற்றுலா செல்லமுடியாத சிறுவர்கள் வீட்டுத் தூம்பு வாயில் கொட்டும் தண்ணீரை அருவியாக நினைத்துக் குளிப்பார்கள். அது தான் சிறார்களின் உலகம்.

சிறுவயதில் உலகின் ஓசைகளும் மிக அதிகமாகக் கேட்பது போலிருந்தன. ஒரு நத்தை ஊர்ந்து போவது கூடக் கண்ணில் பட்டது. நாயின் நாக்கை ஆழ்ந்து கவனித்திருக்கிறேன்.ஆனால் வயது வளர வளர பெரிய நிகழ்வுகள். பெரிய விஷயங்கள் மட்டுமே கண்ணில் விழுகின்றன. ஊர்ந்து செல்லும் நத்தை பெரிய விஷயமாகயில்லை. உலகின் ஓசைகள் தொந்தரவாக மாறிவிட்டன.

பள்ளி நாட்களில் நண்பன் ஒருவனின் வீட்டிற்குச் சென்றபோது எவ்வளவு பெரிய வீடாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன். இப்போது அந்த வீட்டினைக் காணுகையில் அது தீப்பெட்டி சைஸில் இருக்கிறது.. உலகம் மாறவில்லை. ஆனால் நாம் வளர்ந்தவுடன் உலகம் வேறு தோற்றம் கொண்டு விடுகிறது

இது தான் கதைகளின் ஆதாரப்புள்ளி. எப்போது உலகம் மாறுகிறது. எவ்விதம் மாறுகிறது. அந்த மாற்றத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதையே கதைகள் முதன்மைப்படுத்துகின்றன

காகிதம் மடங்கிக் கொள்வது போல நாமும் பல நேரங்களில் மடங்கிக் கொண்டுவிடுகிறோம். காவலர் உங்களைச் சாலையில் நிறுத்தி மிரட்டும் குரலில் கேள்விகள் கேட்டால் உடனே மடங்கிப் போய்விடுகிறீர்கள். அதிகாரி உங்கள் மீது குற்றம் சுமத்தினால் நீங்கள் மடங்கிப் போய்விடுகிறீர்கள். மகனோ, மகளோ உங்கள் விருப்பத்தை மீறி செயல்பட்டால் உடனே மடங்கிப் போய்விடுகிறீர்கள். இப்படி ஓராயிரம் முறை மனிதர்கள் மடங்கிப் போகிறார்கள்.

டைப்ரைட்டிங் பயிலச் செல்பவர்கள் வெள்ளைக்காகிதத்தைச் சுருட்டிக் கொண்டு போவார்கள். வாழ்க்கை பலநேரங்களில் நம்மை அப்படிச் சுருட்டி கையில் எடுத்துக் கொண்டுவிடுகிறது. .

சூழலின் முன்பு ஒரு மனிதன் மடங்கிக் கொள்ளும் போது அவ்வளவு தான் தன்னால் செய்ய முடியும் என்று நம்புகிறான். ஆனால் சில காலம் சென்றபிறகு தான் ஏன் அப்படி மடங்கிப் போனேன் என்று நினைத்து நினைத்துத் துயரமடைகிறான். பெண்களில் பலர் இந்தத் துயரத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்

சமீபத்தில் பார்த்த ஜப்பானியப் படம் ஒன்றில் ஒரு வட்டிக்கடைகாரன் இளம்பெண்ணை ஏமாற்றி ஆசைநாயகியாக வைத்துக் கொள்கிறான். இது வட்டிக்கடைக்காரன் மனைவிக்குத் தெரியாது. அவள் மடங்கிக்கொண்டு ஆசைநாயகியாக வாழுகிறாள்

ஒரு நாள் ஆசைநாயகி தனது வேலைக்காரியை அனுப்பி மீன் வாங்கி வரச் சொல்கிறாள். மீன் விற்கும் பெண் ஆசைநாயகிக்கு மீன் விற்கமுடியாது என்று மறுத்துவிடுகிறாள். அது ஆசைநாயகியைக் குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது. தான் தவறான வாழ்க்கையை வாழுவதாக அப்போது தான் உணருகிறாள்.

இன்னொரு காட்சியில் வட்டிக்கடைக்காரன் மனைவியைத் தற்செயலாக சந்தையில் சந்திக்கிறாள் ஆசைநாயகி. அவளால் நேர்கொண்டு பேச முடியவில்லை. அவசரமாக ஒடிவிடுகிறாள். தன்னைப் பார்த்தவுடன் ஒரு பெண் தலைகவிழ்ந்து ஓடுகிறாள் என்றால் அவள் நிச்சயம் தன் கணவனால் ஏமாற்றப்பட்டவள் என்று மனைவி நினைக்கிறாள். அன்றிரவு கணவனோடு சண்டையிடுகிறாள்.

பேசிக் கொள்ளாமல் இரண்டு பெண்களும் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்கிறார்கள். இதைத் தான் இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. மொழியைக் கொண்டு மொழி செயல்படாத தளங்களை இலக்கியம் சுட்டிக்காட்டுகிறது. புரிய வைக்கிறது. கண்ணீர்த் துளி சிறியது தான் ஆனால் அதன் கனத்தைக் கவிதை தான் உணர்த்துகிறது

இதே திரைப்படத்தில் ஆசைநாயகியாக இருக்கும் பெண்ணின் தந்தை ஒவ்வொரு நாளும் பகலில் ரகசியமாக மகள் வீட்டின் சமையலறை ஜன்னல் பக்கம் வந்து என்ன சமைக்கிறார்கள் என்று பார்க்கிறார். விதவிதமாக மகள் சமைத்து உண்பது அவருக்குச் சந்தோஷம் தருகிறது. ஆனால் அவர் ஒரு போதும் மகள் வீட்டிற்குச் சாப்பிட வருவதில்லை. அவள் அழைத்தாலும் அந்த வீட்டின் படியேற மறுக்கிறார். இது தான் தந்தையின் நிலை. அந்தத் தந்தை மடங்கியிருக்கிறார். ஆனால் மகள் மீதான நேசம் மாறவேயில்லை.

சூழ்நிலை தரும் அழுத்தமும் நெருக்கடியும் ஒவ்வொரு நாளும் மனிதர்களை இப்படி மடக்கிக் கொண்டேயிருக்கிறது. சிலரை மண்டியிடச் செய்கிறது. சிலரைத் தனித்து அழ வைக்கிறது. சிலரை மௌனமாக ஒடுக்குகிறது. இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது.

காஃப்கா கதையில் வரும் எலி தன்னைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக உலகைப் பற்றிப் பேசுகிறது. உலகம் பாதுகாப்பானது என்று நம்புகிறது. உலகம் சுருங்கிவிட்டதே தனது நெருக்கடிக்குக் காரணம் என்று நினைத்துக் கொள்கிறது. உலகம் அப்படி மாறவில்லை. ஆனால் உலகின் மீது நாம் குற்றம் சுமத்துவதன் மூலம் ஆறுதல் தேடிக் கொள்ள முடிகிறது என்பதே உண்மை

குளக்கரையில் நின்று தன்னைக் கொத்துவதற்காகக் காத்திருக்கும் பறவையைப் பார்த்து ஒரு மீன் தானும் வானில் பறக்க ஆசைப்படுவதாகச் சொல்வதாக ஒரு கொரியக் கவிதையை வாசித்திருக்கிறேன்.

கொக்கும் மீனும் நிரந்தர எதிரிகள். ஆனால் எங்கோ ஒரு மீன் இப்படிக் கொக்குடன் ஸ்நேகம் கொள்ளவும் சேர்ந்து பறக்கவும் ஆசைப்படுவதை இலக்கியம் தானே அறிமுகம் செய்கிறது

சின்னஞ்சிறு விஷயங்களை உலகம் கண்டுகொள்ளாத போது இலக்கியம் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்கிறது. சின்னஞ்சிறு மனிதர்களை உலகம் அலட்சியப்படுத்தும் போது இலக்கியம் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது.

பெரும்போர்கள். சாம்ராஜ்ஜியங்களை வென்ற கதைகளை விடவும் சாமானியனின் வெற்றி தோல்விகளையே இலக்கியம் தொடர்ந்து முன்னிறுத்துகிறது.

ஒரு காலத்தில் எந்தத் துறையில் யார் ஜெயித்தாலும் அவர் பக்கம் நியாயம் இருப்பதாக மக்கள் நினைப்பார்கள். சும்மா ஒன்றும் ஜெயித்துவிடவில்லை. தர்மமும் உழைப்பும் இருக்கிறது என்று பேசுவார்கள். ஆனால் இன்று யார் எதில் ஜெயித்தாலும் அது நியாயமாக இருக்காது என்றே தோன்றுகிறது. உண்மையான வெற்றிகள் கூடச் சந்தேகப்பட வைக்கின்றன. ஏதாவது குறுக்குவழிகள் செய்து தான் வெற்றி அடைந்திருப்பார் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி விட்டது.

இந்தச் சூழலில் அப்படி நடந்திருந்தாலும் நியாயம் தோற்காது. அது நிச்சயம் வெல்லும். நீதி இன்று மறுக்கப்படலாம். தோற்கடிக்கப்படலாம். ஆனால் அது நிரந்தரமானதில்லை. காலம் நீதியின் குரலை ஓங்கி ஒலிக்க வைக்கும் என்று இலக்கியம் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டேயிருக்கிறது

மடங்கும் மனிதனை அது சூழ்நிலையின் நெருக்கடி மட்டுமே என்று உணர்த்தி மடங்காத மனிதனாக இலக்கியம் உருமாற்றுகிறது.

You live in the past என்று இலக்கியவாதிகளைப் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்தகாலம் என்பது உலகிற்கு ஒருவிதமாகவும் கலைஞர்களுக்கு ஒருவிதமாகவும் இருக்கிறது. உணரப்படுகிறது.

கலைஞர்கள் கடந்தகாலத்தைப் பற்றிப் பேசுவது வெறும் ஏக்கமில்லை. மாறாகக் கடந்தகாலத்தைக் கொண்டே நிகழ்காலத்தை அணுகுகிறார்கள். கண்டறிகிறார்கள்.

உலகம் முழுவதும் பல்லாயிரம் பக்கங்கள் பால்ய வயதின் நினைவுகள் பலராலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதற்கான காரணம் பால்யவயதின் காட்சிகள் அனுபவங்கள், உணர்வுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டேயிருக்கிறோம். அல்லது இன்றைய உலகைப் புரிந்து கொள்கிறோம் என்பதே

“Every sorrow suggests a thousand songs, and every song recalls a thousand sorrows, and so they are infinite in number, and all the same.”

என்கிறார் எழுத்தாளர் Marilynne Robinson,

இலக்கியம் செய்யும் பணி என்பதும் இதுவே

••

Thanks

காஃப்காவின் குறுங்கதை

webdunia.com

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: