.
தேரி கதா எனப்படும் பௌத்த பெண் துறவிகளின் பாடல்களைக் கொண்ட தொகுப்பினை வாசித்தேன்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டுப் புத்தர் மறைவுக்குப்பின் 1905 இல் திருமதி ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்தத் தொகுப்பில் புத்தரின் தாயான மகா பிரஜாபதி கௌதமியின் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இவரே புத்தரை வளர்த்தவர். இவர் புத்தரின் தாயான மாயாவின் தங்கை.
புத்தர் பிறந்த ஏழாம் நாளில் அவரது தாய் இறந்துவிடவே பிரஜாபதியே அவரை வளர்த்தார். இரண்டு குழந்தைகளின் தாயான பிரஜாபதியின் தனது சொந்த மகன் நந்தனை தாதியிடம் வளர்க்கச் சொல்லிவிட்டு புத்தரை வளர்ப்பதிலே தன் வாழ்வினை செலவிட்டார். பிரஜாபதியின் மகன் நந்தன் பின்னாளில் புத்தரின் சீடர்களில் ஒருவனாக மாறினான்.

பிரஜாபதி பௌத்த சமயத்தின் முதல் பெண் துறவியாகக் கருதப்படுகிறார். ஐநூறு பெண்களுடன் இவர் புத்தரிடம் தீட்சை பெற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவரைப் பிக்குணியாக ஏற்றுக் கொள்ளும் போது பௌத்த சங்கத்தில் பெண்களை ஏற்றுக் கொள்வது குறித்துப் பலத்த வாக்குவாதம் நடைபெற்றது. ஆரம்பத்தில் புத்தர் அவரைத் துறவியாக ஏற்கவில்லை. ஆனால் தானே தலைமுடியை மழித்துக் கொண்டு மஞ்சள் துறவாடை உடுத்தி துறவு ஒழுக்கத்துடன் வாழத்துவங்கிய பிரஜாபதி புத்தரைத் தேடி சகதுறவிகளுடன் வைஷாலிக்கு 150 மைல் நடந்தே பயணம் மேற்கொண்டார். இந்த மனவுறுதியைக் கண்டு வியந்த புத்தர் பின்பு தீட்சை வழங்கினார்.
புத்த பிக்குணிகளில் மூத்தவர்களான ஐம்பது பேர்களின் பாடல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் தனது குழந்தையின் இறப்பு காரணமாகவே துறவு வாழ்க்கைக்கு வந்திருக்கிறார்கள். மரணத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பிரஜாபதியும் தன் கணவரின் மரணத்திற்குப் பிறகே பிக்குணியாக மாறுகிறார்.
ஐம்பது பிக்குணிகளில் முப்பத்திரண்டு பேர் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு ஞானம் அடைந்தவர்கள். பதினெட்டுப் பெண்கள் திருமணமானவர்கள். பின்பு துறவியாக மாறியிருக்கிறார்கள். சுமா அனுபமா சுமேதா ஆகிய மூன்று பெண்கள் வசதியான வீட்டில் பிறந்தவர்கள்.

பௌத்தப் பிக்குணிகளின் பாடல் அவர்கள் எப்படித் துறவு வாழ்வினை மேற்கொண்டார்கள் என்பதை விவரிக்கிறது.
இந்தப் பாடலில் மகாபிரஜாபதி சொல்கிறார்
முன்பு நான் தாய், மகன், தந்தை, சகோதரர் மற்றும் பாட்டி;
எனச் சம்சாரத்தில் பயணம் செய்தேன்.
முடிவில் நான் உண்மையை அறிந்தேன்
இது என் கடைசி உடல்.
எனது பிறப்பின் நீள் பயணம் நீக்கப்பட்டது
இதுவே எனது கடைசி உடல் என்ற அவரது பிரயோகம் நிறைய யோசிக்க வைக்கிறது. நோய் மற்றும் மரணத்தால் உடல் பாதிக்கப்படுகிறது. உடலைக் கையாளுவது தான் வாழ்க்கையா, பிக்குணிகள் யாவரும் இது தங்களின் கடைசி உடல் என்றே கூறுகிறார்கள். மனதாலும் புலன்களாலும் தான் உடலைப் பாதுகாத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
மகாபிரஜாபதியின் மௌனம் ஆழமானது. அவர் புத்தரை வளர்க்கும் போது கண்ட கனவுகள் யாவை. அவற்றை எப்போதாவது வெளிப்படுத்தியிருக்கிறாரா. புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறிய மறுநாள் மகாபிரஜாபதி எப்படி உணர்ந்தார். அவரது வேதனையைப் புத்தர் அறிவாரா. புத்தரை மட்டுமின்றி அவரது மகன் ராகுலனையும் பிரஜாபதியே வளர்க்கிறார். ராகுலனுக்குக் கதைகள் சொல்கிறார். அவரது நினைவுகள் செஞ்சுடராக அவருக்குள்ளே எரிந்து அடங்கிவிட்டது.
வீட்டினை, உறவுகளை, பிள்ளைகளை விலக்கிவந்த மனநிலையை அறியாமையிலிருந்து விடுபட்டுத் தெளிவு கொண்ட நிலை போலவே பிக்குணிகள் விளக்குகிறார்கள்.
பழுக்கக் காய்ச்சிய இரும்பினை தண்ணீரில் குளிரவைத்தால் அது சப்தமிடும். ஆனால் பின்பு அதன் சூடு முற்றிலும் அடங்கிவிடும். அப்படித் தான் தனது காமமும் ஆசைகளும் ஆரம்பத்தில் ஓலமிட்டன. பின்பு தானே முற்றிலுமாக அடங்கிவிட்டது என்கிறார் ஒரு பிக்குணி.
புத்தரின் முற்பிறப்பு கதைகளைப் போலவே பிரஜாபதிக்கு முற்பிறப்புக் கதைகள் கூறப்படுகின்றன. அதில் அவர் முற்பிறவி ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தரின் மகளாகப் பிறந்து துறவிகளுக்கான தங்குமிடம் ஒன்றை கட்டி எழுப்பினார். அங்கே வரும் துறவிகளுக்கு உணவு வழங்கினார் என்கிறது அக்கதை.
இன்னொரு கதையில் புத்தரிடமிருந்து தனது பார்வையை விலக்கக் கூடாது என்பதற்காகப் பின்பக்கமாகவே பிரஜாபதி நடந்து சென்றார். அவரது பார்வை எப்போதும் புத்தரை நோக்கியே இருந்தது என்றொரு குறிப்புக் காணப்படுகிறது.
இயேசுவின் அன்னையான மரியாள் வணங்கப்படுவது போலப் புத்தரின் அன்னையான பிரஜாபதி வணங்கப்படவில்லை. ஆனால் பிக்குணிகளில் மூத்தவராக, ஞானவாணியாக அறியப்படுகிறார்.
வீட்டைப் பிரிந்து செல்கிறவர்கள் தரும் துயரத்தைப் பெண்கள் காலம் காலமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரிந்தவர்களுக்காக மௌனமாகக் கண்ணீர்விடுகிறார்கள். காத்திருக்கிறார்கள். அது புத்தனாக இருந்தாலும் சரி, கூலி வேலைக்காக வெளிநாடு போன மகனாக இருந்தாலும் சரி தாயின் கண்ணீர் ஒன்று தானே.

அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் வீட்டைவிட்டு ஓடிப்போன கணவர் சாமியராகத் திரும்பி வருவதைச் சுஜாதாவின் தாய் மகிழ்ச்சியோடு வரவேற்பார். இத்தனை ஆண்டுகளாக அவர் தங்களைக் கஷ்டத்தில் விட்டுப்போய்விட்டாரே எனச் சுஜாதா கோவித்துக் கொள்ளும்போது என்ன இருந்தாலும் அவர் உன்னோட அப்பா என்று அவரது அன்னை பதில் சொல்லுவார். அதைத்தான் சுஜாதாவால் தாங்கிக் கொள்ளமுடியாது
வீட்டைவிட்டு ஓடிப்போய் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டவர்களை எப்படிப் பெண்கள் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்கள். நடிகை சோபியா லாரன் ஹாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் கேரி கிராண்டைக் காதலித்தார். இருவரும் மிக நெருக்கமாக பழகினார்கள். ஒன்றாக நடித்தார்கள். சிறந்த ஜோடி என சினிமா உலகம் அவர்களைக் கொண்டாடியது.
புகழின் உச்சியிலிருந்த கேரி கிராண்ட்டை திருமணம் செய்து கொள்வதா, அல்லது இத்தாலியினரான கார்லோ பாண்டி என்ற தன்னை விடப் பலவயது மூத்தவரைத் திருமணம் செய்வதா என்ற குழப்பம் சோபியா லாரனுக்கு ஏற்பட்டது. அவர் இத்தாலியப் பண்பாடு தெரியாத கேரி கிராண்டினை திருமணம் செய்வதை விடவும் தனது தந்தையின் வயதை ஒத்த கார்லோ பாண்டியைத் திருமணம் செய்வது என முடிவு செய்தார்.
சோபியாவின் நெருங்கிய தோழிகள் இது தவறான முடிவு என்றார்கள். ஆனால் சோபியா லாரன் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும் போது ஒரு அமெரிக்கரை மணந்து கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு வரக்கூடாது. இத்தாலிய உணவை, இத்தாலியப் பண்பாட்டினை அவருக்குப் பாடம் நடத்திக் கொண்டே இருக்க முடியாது. ஆகவே கார்லோ பாண்டியைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றார். அப்படியே திருமணமும் செய்து கொண்டார். கேரி கிராண்டிற்கு இது பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.
சோபியாவின் திருமண வாழ்க்கை நீண்டகாலம் இனிமையாகவே தொடர்ந்தது. இப்படித் தான் பெண்கள் முடிவு எடுக்கிறார்கள். கேரி கிராண்டினை திருமணம் செய்து கொண்டிருந்தால் புகழின் உச்சத்திற்குப் போயிருக்கலாம். மிக வசதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் தந்தையின் அன்பை போன்ற ஒன்றையே அவர் தேர்வு செய்தார். இது போல பெண்கள் எடுக்கும் முடிவுகள் விசித்திரமானதே.
பிரஜாபதியும் இப்படியான ஒரு முடிவினை தான் எடுத்தார். அவர் தனது சொந்தப்பிள்ளைகளைத் தாதியின் வளர்ப்பில் விட்டுவிட்டார். சித்தார்த்தனை மட்டுமே தனது பிள்ளையாகக் கருதினார். தாயன்பினை அவருக்கு முழுமையாக அளித்தார். கடைசி வரை புத்தரின் கூடவே நிழல் போல இருந்தார்.
பிள்ளைகள் தாயை விலக்கக் கூடும். பிரிந்து போகக்கூடும். தாயால் ஒரு போதும் பிள்ளைகளை வெறுக்கவோ, விலக்கவோ முடியாது. பிள்ளைகள் எங்கேயிருந்தாலும் அவர்களுக்காகத் தாய் கவலைப்பட்டுக் கொண்டேதானிருப்பார்.
புத்தருக்கும் அவரது மனைவி யசோதராவிற்க்கும் ஒரே வயது. அந்தக் காலத்தில் எப்படி ஒரே வயதுள்ள இருவர் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது வியப்பானதே. யசோதராவிற்கும் மகாபிரஜாபதிக்குமான உறவு எப்படியிருந்தது. தன் மருமகளைப் பிரஜாபதி எப்படி நடத்தினார் என்பதெல்லாம் நிழலான விஷயங்களே.
யசோதரா குதிங்கால் வரை தொடும் நீண்ட தலைமயிரைக் கொண்டிருந்தார் என்கிறார்கள். அவர் சித்தார்த்தனைத் திருமணம் செய்து கொண்ட போது வயது பதினாறு. அவளை அடைவதற்காக சித்தார்த்தன் வில்வித்தை, குதிரையேற்றம் என பல போட்டிகளில் வென்றிருக்கிறார். பிரிந்த கணவனை யாரோ ஒருவரைப் போல ஒரு பெண் சந்திக்கும் தருணம் விநோதமானது. அப்படி ஒரு தருணத்தை ஆன்டன் செகாவ் தனது கதை ஒன்றில் எழுதியிருக்கிறார். அந்தப் பெண் தனது ஏக்கத்தை மறைத்தபடியே பேசிக் கொண்டிருப்பாள். ஆனால் யசோதரா தனது மனதின் ஆசைகளை ஒருபோதும் புத்தரிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவள் கணவன் சித்தார்த்தன். புத்தர் அவள் அறியாத மாமனிதர். யசோதராவின் கடைசி நாட்கள் எப்படியிருந்தன. எந்த நினைவுகளில் அமிழ்ந்து கிடந்தாள். கணவரை மகனைப் பிரிந்த அவள் தனிமையில் ஒரு பிக்குணி போலவே வாழ்ந்தாள்.
புத்தர் மீதான யசோதராவின் அன்பு நிகரற்றது. தனது 78 வயதில் யசோதரா இறந்து போனாள். அப்போது புத்தர் என்ன நினைத்திருப்பார். எப்படி அதை எதிர்கொண்டார் என்ற குறிப்புகளை அறிய இயலவில்லை. ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் அது அழகான கதைக்கான கரு என்பதை அறிவேன்.
தேரி காதையின் ஒரு பாடலில் ஒரு பெண் சால் மரத்தின் அடியில் நிற்கிறாள். மரம் பூத்துக் குலுங்குகிறது. மரத்திற்கு இத்தனை பூக்கள் துணையிருக்கின்றன. உனக்கு யார் இருக்கிறார்கள் என்று காற்று அவளிடம் கேட்பது போல உணருகிறாள்.
பௌத்த பிக்குணியாக மாறிய போதும் அவர்கள் தாய்மை உணர்விலிருந்து விடுபடவில்லை. ஒரே மாற்றம் சொந்தக் குழந்தைகளுக்குப் பதிலாக அனைவரையும் தனது பிள்ளையாகக் கருதும் மனநிலைக்கு அவர்கள் மாறியதே.
ஏழு வயது வரை ராகுலன் தனது தந்தையை அறியவில்லை. முதன்முறையாகப் புத்தரைச் சந்தித்தபோது ராகுலன் உங்களின் நிழல் கூட எனக்குச் சந்தோஷம் அளிக்கிறது என்றான்
ராகுலன் துறவு வாழ்க்கையை ஏற்றபோது புத்தரின் தந்தை அவரிடம் வேண்டுகோள் வைத்தார். பிள்ளைகள் இப்படித் துறவியாக மாறுவது தந்தையின் மனதை வேதனைப்படுத்தக்கூடியது. பிள்ளைகளின் பிரிவைத் தந்தையால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆகவே துறவியாவதற்குத் தந்தையின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற ஒரு விதியை உங்கள் சங்கத்தில் உருவாக்குங்கள் என்றார். மன்னர் சுத்தோதனார் கண்ணோட்டத்தில் அவரது மகன், மனைவி, மருமகன் பேரன் பேத்தி என அனைவரும் பௌத்த துறவியாகிவிட்டார்கள். அது எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிற விஷயமா என்ன.
சாரிபுத்தன் மற்றும் மொகல்லானா இருவரும் ராகுலனின் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இதில் சாரிபுத்தன் ராகுலனுக்குத் தம்மத்தைப் பற்றிய அறிவைக் கற்பித்தார் மொகல்லானா ராகுலனின் நடத்தையினை ஒழுங்குபடுத்தினார்.
ஒவ்வொரு காலையிலும் ராகுலன் எழுந்து கைபிடி நிறைய மண்ணை எடுத்துக் காற்றில் வீசிவிட்டு “இன்று நான் எனது ஆசிரியர்களிடமிருந்து இந்த மணற்துகளைப் போல நிறைய அறிவுரைகளையும் அறிவுறுத்தலையும் பெறுவேன் என்று கூறுவானாம். அந்தக் காட்சி மனதில் தனித்துவமானதாக ஒளிர்கிறது.
ஒரு நாள் புத்தர் ஒரு கண்ணாடியை ராகுலனிடம் காட்டி இது எதற்காகப் பயன்படுகிறது என்று கேட்டார். பிரதிபலிப்பதிற்காக என்று ராகுலன் பதிலளித்தான். அதைக் கேட்ட புத்தர் சொன்னார்: “இதைப்போல், ராகுலா, நீயும் எதையும் சொல்வதற்கு அல்லது செய்வதற்கு முன்பு உனக்குள் பிரதிபலிக்கவும். உனது பேச்சு அல்லது செயல் மற்றவர்களுக்கும் உனக்கும் எவ்வளவு நன்மை அளிக்கும் என்பதை யோசிக்கவும்.
ஒருவேளை உன் செயல் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்காது என்று நீ உணர்ந்தால் அதைச் சொல்வதிலிருந்தும் செய்வதிலிருந்தும் விலகு
ஒருவேளை அச்செயல் மற்றவர்களுக்கு முழுமையாக நன்மை பயக்கும் என்று உணர்ந்தால் அச் செயலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்றார்.
அது ராகுலினுக்காகச் சொன்ன பாடம் மட்டுமில்லை.