இந்தியன் குக்

புதிய சிறுகதை

அந்த வனவிடுதியில் கிளாவெல்லைத் தவிர வேறு எவரும் தங்கியிருக்கவில்லை அது விருந்தினர்களுக்கான விடுதி என்ற போதும் வால்டர் கிளாவெல் வனத்துறை அதிகாரியாக வந்தபிறகு அதைத் தன்வசமாக்கி வைத்துக் கொண்டான். வேட்டைக்கு வரும் ஜமீன்களுக்குக் கூட அந்த விடுதியில் தங்க இடம் கிடைப்பதில்லை.

இங்கிலாந்திலிருந்து 1845ல் இந்தியாவிற்கு வந்த வால்டர் கிளாவெல் வன அதிகாரியாக அஸ்ஸாமில் தான் பணியில் அமர்த்தப்பட்டான். ஏழு வருஷஙகள் அங்கே பணியாற்றியபிறகே தென்வனம் எனப்படும் அந்தக் காட்டினை நிர்வாகம் செய்ய அனுப்பி வைக்கபட்டான். அது கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய காடு.

நூறு மைலுக்கும் மேல் பரந்து விரிந்திருந்த அந்தக்காடு முழுவதும் வால்டர் கிளாவெல் கட்டுப்பாட்டில் தானிருந்தது. அவன் தன்னைக் காட்டின் அரசனாகவே உணர்ந்தான். அவனது மூர்க்கமான செயல்கள் காட்டினுள் வசித்த பழங்குடியினரை பயமுறுத்தின. அவர்கள் கிளாவெல்லின் கண்ணில் படாமல் மறைந்து நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

கிளாவெல் வந்தபிறகு அந்தக் காட்டினை விட்டுப் பழங்குடிகள் எவரும் வெளியே போகக் கூடாது என்று சட்டம் விதித்தான். தட்டாம்பாறை ஒட்டியிருந்த பழங்குடிகளின் குடிசைகளை மொத்தமாகத் தீவைத்து எரித்துவிட்டு அவர்களை மேகவளைவு என்ற பக்கத்தில் குடியேறச் செய்தான்.

பழங்குடி பெண்களில் சிலரை அவன் தூக்கிச் சென்று நாட்கணக்கில் அருவிக்கரையில் கூடாரம் அமைத்து அதற்குள் நிர்வாணமாக வைத்திருந்தான். அந்தப் பெண் பின்னிரவில் தப்ப ஒட முயன்றபோது பிடித்துத் தலைகீழாக அவர்களை மரத்தில் கட்டி தொங்கவிட்டிருந்தான். மூன்று பெண்கள் அதில் இறந்துபோனார்கள். இறந்த உடல்களை அருவியில் தூக்கி வீசும்படி செய்திருந்தான்.

கிளாவெல் வந்தபிறகு காட்டின் இயல்பு முற்றிலும் மாறியிருந்தது. அடிபட்ட புலி காட்டிற்குள் மூர்க்கமாக அலைவது போல அவன் அலைந்து கொண்டிருந்தது.

நல்லவேளையாகக் கல்கத்தாவிலிருந்து அவனது மனைவி லாராவும் இரண்டு மகள்களும் அவனுடன் வசிப்பதற்காகத் தென்வனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்தபிறகே வனவிடுதியை அவன் தனதாக்கிக் கொண்டான்.

கிளாவெல்லின் வனவிடுதியில் ஞாயிறு தோறும் பார்ட்டி நடப்பது வழக்கம். இதில் முப்பது பேருக்கும் மேலாக வந்து போவதுண்டு. அதில் மேலையூர் ஜமீன்தார் உள்ளிட்ட சிலரும் அடக்கம். சிலவேளைகளில் அவர்கள் துப்பாக்கியோடு வனவேட்டைக்குப் போய் வருவார்கள். வேட்டையப்பட்ட முயல்களையும், காட்டுபறவைகளையும் மான்களையும் சமைக்க வேண்டியது முலாக்கின் வேலை. சில நேரம் ஆற்றிலிருந்து மீன் பிடித்து வந்து சபேசன் சமைக்கவும் செய்வான்.

மூன்று சமையற்காரர்களுக்கும் வெளியே தெரியாத வெறுப்பும் இனம்புரியாத கசப்புணர்வும் இருந்தது. அதிலும் ஜுலியனுக்கு இந்தியர்களைப் பிடிக்கவேயில்லை. முலாக்கை அவன் சகித்துக் கொண்டதற்குக் காரணம் முலாக் தயாரித்துத் தரும் நாட்டுசாராயத்திற்குத் தான்.

முலாக் அதை எப்படிக் காச்சுகிறான். எங்கே வைத்துக் காய்ச்சி எடுக்கிறான் என்று எதுவும் தெரியாது. ஆனால் அவன் கொண்டு வந்து சாராயத்தின் போதையை எந்த விஸ்கியும் தந்ததில்லை

சபேசன் அதிகாலையில் எழுந்து காட்டாற்றில் சென்று குளித்துவிட்டு திருநீறு பூசிக் கொள்வான். ஒருநாள் அதைப்பற்றி லாரா அவனிடம் கேட்டாள்.

திருநீற்றை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது எனப் புரியாமல் சபேசன் கையெடுத்து வணங்கிவிட்டு நெற்றியில் கோடு போடுவது போலச் சைகை காட்டினான்.

லாராவிற்க்கு அது புரிந்தது போலச் சிரித்துவிட்டு இந்தக் குளிரிலும் பச்சை தண்ணீரிலா குளிக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

சபேசன் தலையசைத்தபடியே “ரிவர் வாட்டர் வெரி கோல்ட். இட்ஸ் குட்“ என்று சொன்னான்.

லாராவிற்கு. வனத்துறைக்குச் சொந்தமான அந்தப் பாரஸ்ட் பங்களாவும் அதைச் சுற்றிய மரங்களும் அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. கிளாவெல் அஸ்ஸாமில் பணியாற்றியபோது அவனுக்குச் சமையல் செய்வதற்காக நியமிக்கபட்ட முலாக்கையும் அவர்கள் உடன் அழைத்து வந்திருந்தார்கள்.

லாரா வந்தபிறகும் கிளாவெல் காட்டிற்குள் தான் சுற்றிக் கொண்டிருந்தான். அவள் தனது தனிமையைப் போக்கிக் கொள்ள விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தாள். அப்போது வருகை தரும் ஜமீன்தார்களுக்குச் சமைப்பதற்கென்றே ஒரு இந்தியன் குக்கை ஏற்பாடு செய்யும்படி சொல்லியிருந்தார்.

சபேசன் அப்படித்தான் கிளாவெல்லிடம் வேலைக்குச் சேர்ந்தான். அவன் வந்து சேர்ந்த முதல்நாளே கிளாவெல்லின் கோபத்திற்கு ஆளாகினான். காரம் அதிகமாக கோழி இறைச்சியை சமைத்துவிட்டான் என்று அவன் மீது காறி துப்பினான் வால்டர். அத்தோடு அவன் செய்திருந்த உணவில் மூத்திரம் பெய்தான். அப்படியும் கோபம் அடங்கவில்லை  சூட்டுக்கோலை காயவைத்து அவனது முதுகில் மூன்று கோடுகள் போட்டுவிட்டான். நாயை போலத் தன் உத்தரவிற்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று சப்தமிட்டான்

சபேசனுக்கு அந்த காயம் ஆற இரண்டு வாரங்களானது. காட்டு மூலிகைகளை கொண்டு அவனே சுய வைத்தியம் செய்து கொண்டான்.

கிளாவெல் காட்டிற்குள் சென்றுவிடும் நாட்களில் லாரா அவன் செய்து தரும் சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டாள். குறிப்பாக அவன் செய்து தரும் இனிப்பு வகைகள் மிகவும் பிடித்திருந்தது.  பால் பாயாசத்தை பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டார்கள். ஆனால் கிளாவெல் இருக்கும் நாட்களில் ஒரு போதும் அந்த இனிப்பை சபேசன் செய்வதில்லை.

லாரா அவனை இந்தியன் குக் என்றே அழைத்தாள். துரையிடம் வேலைக்கு வந்த ஆறு மாதங்களில் சபேசன் அறைகுறையாக இங்கிலீஷ் கற்றுக் கொண்டுவிட்டான். அந்தப் பாரஸ்ட் பங்களாவில் அவனைப் போல இன்னும் இரண்டு சமையற்காரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவன் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவன் அவனது பெயர் முலாக். மற்றவன் இங்கிலாந்தில் இருந்து மேடம் லாராவுடன் வந்தவன். அவனது பெயர் ஜுலியன். அவன் தான் இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட்  தயாரிப்பவன்.

ஜூலியனும் முலாக்கும் வனவிடுதியினுள் இருந்த சிறிய அறை ஒன்றில் ஒன்றாகத் தங்கிக் கொண்டார்கள். அவர்களுடன் சேர்ந்து இருக்கச் சபேசனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே. சமையலறைக்குள்ளே சிறிய அவன் தங்கிக் கொண்டான்.

சபேசன் ஒரு நாள் லாராவிற்காகப் பலாப்பழ இனிப்பு இலை அடை செய்து கொடுத்தான்.

“எதற்காக இந்தியர்கள் இவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறார்கள்“ என்று அவள் கேட்டாள்.

“இனிப்பு தான் நாக்கை விழிக்க வைக்ககூடியது. நாக்கில் இனிப்பு பட்டதும் மனதில் சந்தோஷம் வந்துவிடும்“ என்று சொன்னான் சபேசன். அதைக்கேட்டு லாரா சிரித்தாள்.

இங்கிலாந்தில் அவள் சாப்பிட்டிருந்த இனிப்பு வகைகளுக்கும் இந்திய இனிப்பிற்கும் நிறைய வித்தியாசமிருந்தது. குறிப்பாக இந்திய இனிப்பு வகைகள் நாக்கில் பட்டதும் சுவை உடலில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகள் தரும் சுவைக்கு நிகரேயில்லை.

சபேசன் சைவ உணவு வகைகள் மட்டுமின்றி மீன் கோழி இரண்டினையும் மிக ருசியாகச் சமைத்துக் கொடுத்தான். அவன் சமையலின் காரம் லாராவிற்குக் கண்ணீர் வரவழைத்தது. ஆனால் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் ரசித்துச் சாப்பிட்டார்கள். அது லாராவிற்குப் பெருமையாக இருந்தது.

சபேசன் தன் அறையில் தேவையான பலசரக்குப் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டான். மண்பாத்திரங்கள். வெண்கலப் பாத்திரங்கள். கண்ணாடிப் பாத்திரங்கள் என விதவிதமான பாத்திரங்களைத் தேர்வு செய்து வைத்துக் கொண்டான். திருகையும் அம்மியும் உரலையும் பின்வாசலில் போட்டு வைத்துக் கொண்டான். சமையலுக்கென மழைத்தண்ணீரை ஒரு அண்டாவில் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான்.

அது எதற்காக என லாரா கேட்டபோது “மழைத்தண்ணீரின் ருசி கிணற்று தண்ணீருக்கு கிடையாது“ என்றான்.

சபேசனிடமிருந்து இந்திய இனிப்பு வகைகளைச் செய்வதற்கு லாரா கற்றுக் கொண்டாள். அதைச் சிறிய நோட்டில் குறிப்புகளாகவும் எழுதிவைத்துக் கொண்டாள்.

சபேசன் ஒரு நாள் சொன்னான்

“சமைப்பவர் மனதிலிருந்துதான் உணவிற்கு ருசி வருகிறது. சமைப்பவன் மனது கசந்து போனால் உணவில் அது வெளிப்படவே செய்யும்“

லாரா அதை உணர்ந்திருக்கிறாள். அவள் கோபத்தில் செய்த கேக் எதுவும் ருசியாக இருந்ததில்லை

ஒரு நாள் அவள் சபேசனிடம் கேட்டாள்

“நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை“

“பிரம்மச்சாரிக்கு தான் கைமணம் அதிகமிருக்கும். “

“அதற்காகத் திருமணம் செய்து கொள்ளாமலா இருப்பாய்“

“சமையலை விட்டுவிட்டால் திருமணம் செய்து கொள்வேன்“ என்று சொல்லி சிரித்தான்.

சமையல் நேரங்களைத் தவிர மற்றவேளைகளில் முலாக்கை அந்த வீட்டில் காணவே முடியாது. காட்டிற்குள் சுற்றியலைந்து கொண்டிருப்பான். பழங்குடி பெண் ஒருத்தியின் பின்னால் அவன் சுற்றுவதைச் சபேசனே ஒரு நாள் பார்த்தான்.

வால்டர் கிளாவெல் துரையின் வீட்டுவேலையாட்கள். குதிரைவண்டி ஒட்டுகிறவன். தபால் கொண்டு போகிறவன். புல்வெட்டுகிறவன், ஆயா மற்றும் இரவுக்காவல் செய்பவர்கள் அத்தனை பேருக்கும் தனிச் சமையல். அந்தச் சமையல் வீட்டிற்கு வெளியே தனியே நடந்தது.

சபேசன் காலையில் வெறும் எலுமிச்சை சாறு மட்டும் தான் குடிப்பான். மதியம் சோறு. குழம்பு வெறும் அப்பளம். இரவில் மோர்விட்ட சாதம். வடுமாங்காய். இவ்வளவே அவனது சாப்பாடு. இத்தனை ருசியாகச் சமைத்தும் அவன் ஒருபோதும் இனிப்பு சாப்பிடுவதில்லை. ஆசையாக எந்த உணவினையும் செய்து சாப்பிடுவதில்லை.

கிளாவெல்லிடம் பணியாற்ற வந்தபிறகு சபேசன் ஒரேயொரு விஷயத்தைப் புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தான். அது குடிப்பது. அவன் பார்ட்டியில் மீதமாகிப்போட்ட புட்டிகளைச் சேகரித்து வைத்திருப்பான். இரவானதும் அதைக் குடிக்க ஆரம்பிப்பான்.

அந்தக் காட்டு பங்களாவின் பின்புறம் விரிந்து கிடந்தது தென்வனம் இரவில் காட்டுப்பூச்சிகளின் இரைச்சலும் மின்மினிகளின் பறத்தலுமிருக்கும். வீட்டின் பின்புறமிருந்த கோட்டைச்சுவர் பாதி உடைந்து கிடந்தது. அதற்கு அப்பால் ஒரே புதர் செடிகள்.

வனவிடுதியில் மின்சார வசதி கிடையாது. பதினாறு எண்ணெய் விளக்குகளும் ஆறு பெரிய மெழுகுவர்த்திகளும் தினசரி ஏற்றப்பட்டன. இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளையும் மேடம் லாரா தன் அறையில் மட்டுமே பயன்படுத்தினாள். கொசுவை விரட்டுவதற்காக மாலை நேரம் காய்ந்த வேப்பிலை பொடியை தூவி புகை போடுவார்கள். அப்போது லாராவும் அவளது மகளும் அறையின் ஜன்னல்களை மூடி உள்ளே பதுங்கிக் கொள்வார்கள்.

பாரஸ்ட் பங்களாவில் இருந்து மேற்கே நடந்தால் மரப்பாலம் ஒன்று காணப்பட்டது. அதைக்கடந்து மேலேறினால் காட்டாறு ஒ. அந்த ஆற்றின் கரையில் இரண்டு பெரிய பாறைகள் யானை படுத்துகிடப்பதை போல உயர்ந்திருந்தன. அந்தப் பாறையின் மீதேறி நின்றபடி மாலை நேரத்தில் மேடம் லாரா தொலை தூரத்து அருவியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். சில நாட்கள் வானவில் தென்படும். ஒரு சிறுமியை போல வியந்து ரசித்தபடியே இருப்பாள். . பருத்து உயர்ந்து நின்ற மரங்களும் புதர்செடிகளும் காட்டுக்கொடிகளும் நிரம்பிய அந்த மேற்குபாதையில் அவள் தனியே நடந்து செல்வாள். சில வேளைகளில் காட்டுகோழிகள் வழியில் எதிர்படுவதுண்டு..

லாரா இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்த போது அவளது வயது பதினெட்டு. அவள் வந்த கப்பல் முழுவதும் இளம் பிரிட்டீஷ் அதிகாரிகளைத் திருமணம் செய்து கொள்வதற்காக இளம்பெண்கள் இந்தியா வந்திருந்தார்கள். அரசு செலவிலே அப்படியான ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லாராவின் துணைக்கு அவளது அத்தை உடன் வந்திருந்தாள். மூன்று மாத காலத்தில் அவர்கள் இந்தியாவில் ஒரு இங்கிலீஸ்காரனைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று இங்கிலாந்து திரும்புவதாக இருந்தால் அவர்கள் சொந்த செலவில் தான் செல்ல வேண்டும்.

இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரி ஒருவனைத் திருமணம் செய்து கொண்டுவிட்டால் கர்ப்பிணியானதும் இங்கிலாந்து திரும்பி போய்விடலாம். அதன்பிறகு அவளது அத்தனை செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும். அப்படித் தான் லாரா கிளாவெல்லை திருமணம் செய்து கொண்டாள்.

திருமணத்திற்குப் பிறகே அவனது மூர்க்கமான செயல்களும் மிதமிஞ்சிய குடியும் அவளுக்குத் தெரிய வந்தன. போதையில் பலமுறை அவளை அடித்திருக்கிறான். ஒருமுறை அவளது வலதுகை உடைந்தும் போயிருக்கிறது. கர்ப்பிணியானவுடன் அவள் இங்கிலாந்து போய்விடலாம் என்று கனவு கண்டாள். ஆனால் வால்டர் கிளாவெல் அவளை அனுப்பி வைக்கவில்லை. மாறாக இனி அவள் எப்போதும் இங்கிலாந்து போகமுடியாது என்றும் அறிவித்தான். லாராவிற்கு வேறுவழியில்லை. அவள் கிளாவெல்லை சகித்துக் கொண்டு அவனோடு வாழ்ந்து வந்தாள்.

தென்வனத்திலிருந்த பழங்குடிகள் கிளாவெல்லை கடவுளைப் போலவே நடத்தினார்கள். மதுவேறிச் சிவந்த கண்களுடன் ஒற்றை ஆளாக அவன் குதிரையில் சுற்றியலைந்து கொண்டிருந்தான்.

அருவியை ஒட்டிய மரத்தில் அமைத்த பரண்வீடு ஒன்றில் வால்டர் கிளாவெல் தங்கிக் கொண்டான். இரவெல்லாம் குடித்தான். புகைத்தான். பழங்குடி பெண்களை அனுபவித்தான். சில நாட்கள் அவன் நிர்வாணமாகக் காட்டில் அலைவதுண்டு. இரையெடுக்க அலையும் ஒநாய் போலவே அவன் நடந்து கொண்டான். காட்டின் தனிமை அவன் மூர்க்கத்தை அதிகமாக்கியது. அதுவும் மழைபெய்யும் நாட்களில் அவன் மிகுந்த உக்கிரம் கொள்வான். இடியை விடச் சப்தமாகக் கத்துவான். மழையின் ஊடாகவே காட்டில் அலைந்து திரிவான். காட்டுக்குரங்குகள் அவனைக்கண்டு பயந்து அலறின. காட்டில் அவன் வைத்தது தான் சட்டம். சுள்ளி பொறுக்க வந்த ஆட்களை அடித்து விரட்டினான்

இரண்டு ஆண்டுகளுக்குள் அந்தக் காட்டினை உள்ளங்கையின் ரேகைகளைப் போலத் துல்லியமாக அறிந்திருந்தான்.

ஒரு நாள் மதராஸிலிருந்து அவனுக்கு ஒரு தந்தி வந்திருந்தது. கென்னிங் பிரபுவும் அவரது மனைவியும் புலிவேட்டைக்காகத் தென்வனத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து தரவேண்டும் என்று தந்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிளாவெல்லே திருநெல்வேலி ரயில் நிலையத்திற்குப் போய்க் கென்னிங் பிரபுவையும் அவரது மனைவியினையும் வரவேற்று அழைத்துவந்தான். டோரதிக்கு முதல்பார்வையிலே கிளாவெல்லை பிடிக்கவில்லை. அவர்களைத் தனது காரில் அழைத்துச் செல்லும் போது கிளாவெல். டோரதியை விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கென்னிங்கின் மனைவி டோரதி பேரழகியாக இருந்தாள். தலையில் அவள் கட்டியிருந்த சிவப்பு ரிப்பனும் அவள் உடலில் பூசியிருந்த வாசனை தைலமும் அவனைக் கிறக்கமடையச் செய்தன.

.கென்னிங் பருத்த தொப்பைகள் கொண்ட குள்ள உருவமாக இருந்தார். சர்ச்சலின் சுருட்டைப் போல ஒன்றை பிடித்துக் கொண்டிருந்தார். கென்னிங்கிற்காகக் காட்டிற்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரம் ஒன்றில் அவர்களைத் தங்க வைத்தான் கிளாவெல்.

மறுநாள் காலை அவன் டோரதியை சந்தித்துக் காட்டில் பறித்துக் கொண்டுவரப்பட்ட பூக்கள் எனச் சிவப்பும் மஞ்சளுமான பூக்களைக் கொடுத்தான். அதைக் கையில் வாங்கும் போது அவளுக்கு அச்சமாக இருந்தது.

கென்னிங் பிரபுவை அருவியில் குளிப்பதற்காக அழைத்துப் போகவதாகச் சொன்னார்

“அவ்வளவு தூரம் என்னால் நடக்கமுடியாது “என்றார் கென்னிங்

“உங்களை டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு போவார்கள்“ என்றான் கிளாவெல்

அதன்படியே கென்னிங் பிரபுவை நான்கு பேர் அருவி வரை மூங்கில் இருக்கை ஒன்றில் உட்காரவைத்து தூக்கிக் கொண்டு போனார்கள். கென்னிங் அருவியில் குளித்தபடியே குடித்தார். நிர்வாணமாக நடனமாடினார். அவருக்குக் கிளாவெல்லை மிகவும் பிடித்துப் போனது.

திரும்பி வரும்போது வெள்ளிகிழமை காலையில் புலி வேட்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னான் . டோரதி தனக்கு ஒரு புலிக்குட்டி உயிருடன் வேண்டும். பிடித்துத் தரமுடியுமா எனக்கேட்டாள். நிச்சயம் அவள் காட்டினை விட்டுப் போவதற்கு ஒரு புலிக்குட்டியை பிடித்துத் தருவதாகச் சொன்னான்.

புலிவேட்டைக்கு முரசு அடித்து விரட்டுபவர்கள். துணையாட்கள். வில்லாளிகள், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் சகிதமாகக் கென்னிங் பிரபு யானை மீதேறி வேட்டைக்குக் கிளம்பினார். அவர்களுக்கு முன்பாகவே கிளாவெல் காட்டிற்குள் போயிருந்தான்.

காடு விடிகாலையில் புதுமணம் கொண்டுவிடுகிறது. சூரிய வெளிச்சம் படுவதற்கு முன்பு ஒளிரும் காட்டின் அழகு வியப்பூட்டக்கூடியது. டோரதி இளம்பச்சை நிற கவுன் அணிந்திருந்தாள். தலையில் வெள்ளை தொப்பி. காட்டிற்குள் உதிர்ந்து கிடந்த பறவையின் இறகுகளை அவளுக்காகச் சேகரித்துக் கொடுத்தார்கள். அதைக் கையில் ஏந்தியிருந்தாள். காட்டிற்குள் இருந்த குளிர்ச்சி இங்கிலாந்தில் இருப்பது போலவே உணரச்செய்தது. புலி எங்கே மறைந்திருக்கும். எந்த இடத்தில் வேட்டை நடக்கப் போகிறது என ஆர்வமாகக் கேட்டபடியே வந்தாள்.

கென்னிங் பிரபு முந்தைய இரவில் நிறையக் குடித்திருந்தார். அவரது கண்பிதுங்கி வெளியே வருவது போலப் பெரியதாகியிருந்த்து. கண்ணுக்குக் கிழேயுள்ள பை சரிந்து தொங்குவது போலிருந்தது. அவர் யானையின் மீது அமர்ந்திருந்தார். இன்னொரு யானையில் டோரதி வந்து கொண்டிருந்தாள். யானையின் முன்னால் ஈட்டி ஏந்திய வீர்ர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். யானை ஆடி அசைந்து நடந்து கொண்டிருந்தது

அவர்கள் ஆற்றின் கரைக்கு வந்து சேர்ந்த போது கிளாவெல்லைக் காணவில்லை. எங்கிருந்தோ அவனது சப்தம் மட்டும் கேட்டது. அடுத்தச் சில நிமிஷங்களுக்குப் பிறகு புலி ஒன்று ஒடிவருவது தெரிந்தது. சிகாரிகள் கென்னிங் பிரபுவிடம் புலி அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்

கென்னிங் பிரபு தனது வேட்டை துப்பாக்கியை உயர்த்திக் குறி வைத்தார். புதர்செடிகள் அசைய ஆரம்பித்தன. கென்னிங் பிரபு அந்தப் புதரை நோக்கி சுட்டார். ஏதோவொரு விலங்கு அடிபட்டு ஒடுவது போலத் தெரிந்த்து. கென்னிங் அந்த விலங்கை நோக்கி யானையைச் செலுத்த ஆரம்பித்தார். யானை வேகமாக நடந்தது. சரிவு ஒன்றில் யானை இறங்கும் போது மரத்தின் உயரத்தில் நின்றிருந்த கிளாவெல் தனது துப்பாக்கியால் குறிபார்த்துக் கென்னிங்கை சுட்டான். யானை மீது இருந்து கென்னிங் சரிந்து விழுந்தபோது அடிவயிற்றில் இருந்து ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

வெடிச்சப்தம் கேட்ட யானை புதர்களை மிதித்து நசுக்கியபடியே வேகமாக ஒடியது.

கிளாவெல் செத்துகிடந்த கென்னிங் அருகில் வந்து நின்று காலால் அவர் உடலைப் புரட்டிப்பார்த்தான். பிறகு தனது துப்பாக்கியை வானிற்கு உயர்த்திச் சுட்டான். இப்போது அவன் வேட்டைக்கு ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் அனைவரும் டோரதி இருந்த யானையை அப்படியே விட்டுவிட்டு விலகிப் போக ஆரம்பித்தார்கள். எங்கே போகிறார்கள் எனப்புரியாமல் டோரதி சப்தமிட்டாள். அந்த யானை மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தது. டோரதி யானையின் மீதிருந்து குதித்துவிட முயன்றாள்.

பாகன் அதை அனுமதிக்கவில்லை. அவள் பாகனை மீறி யானையின் மீதிருந்து கிழே இறங்க முயன்றபோது கிளாவெல் அருகில் வந்திருந்தான். அவன் யானையை நிறுத்தச்சொல்லி அவளைக் கிழே இறக்கிவிட்டான். கென்னிங் பிரபுவிற்கு அடிபட்டுவிட்டது. புலி அவனைத் தாக்கிவிட்டதால் ரத்தவெள்ளத்தில் மிதக்கிறார். வாருங்கள் எனத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனான்.

அவள் பயமும் குழப்பமுமாகக் கிளாவெல்லை பின்தொடர்ந்தாள். கிளாவெல் மரத்தில் கட்டியிருந்த பரண் வீட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றபோது அங்கே யாருமில்லை

அவள் கோபத்துடன் “கென்னிங் எங்கே“ எனக்கேட்டாள்

வானை நோக்கி கையைக் காட்டியபடியே கிளாவெல் சிரித்தான். அவளுக்குப் புரிந்துவிட்டது. கிளாவெல் தன்னை அடைவதற்காகவே கென்னிங்கை கொன்றிருக்கிறான். கிளாவெல் அவளை நோக்கி நெருங்கி வந்து அவளது தோளை தனது வலிமையான கைகளால் பற்றிக் கொண்டபடியே சொன்னான்

“நீ காட்டை விட்டு போகமுடியாது. “

அவள் கிளாவெல்லின் கைகளைத் தள்ளிவிலக்க முயன்றாள். கிளாவெல் சிரித்தபடியே சொன்னான்

“புலிக்குட்டி வேண்டும் என்று கேட்டாயே.. நான் ஒரு புலி என்னையே தருகிறேன் “

அவள் ஒங்கி அடிப்பது போலக் கைகளை உயர்த்தினாள். தனது அகன்ற கைகளால் அவள் முகத்தில் ஒங்கி அறைந்த கிளாவெல். அவளைத் தரதரவெனத் தனது வெட்டவெளியை நோக்கி இழுத்துக் கொண்டு போனான். உடைகளைக் கிழித்து அவளுடன் கூடியதை புணர்ச்சி எனச் சொல்லமுடியாது. கொல்லப்பட்ட மானின் சதையைப் புலி பிய்த்து தின்னுவது போன்ற வேட்டையது.

தொடைகள் கிழிந்துபோக மார்பில் நகம் பதிந்து கீறல் விழ, வீங்கிய உதடுகளும் நடுங்கும் கால்களுடன் டோரதி கட்டிலில் கிடந்தாள். கிளாவெல் அவள் அருகில் உட்கார்ந்தபடியே தன் நாவால் அவள் உடலை நக்க ஆரம்பித்தான். ரத்தம் ருசிக்கும் மிருகத்தின் செயல். டோரதி அலறினாள். அந்த இரவில் காட்டில் அவளது கூக்குரல் தனியே கேட்டுக் கொண்டேயிருந்தது. ஆறு இரவு பகல்கள் அந்த மரவீட்டிற்குள்ளாகவே டோரதி நிர்வாணமாகக் கிடந்தாள். கிளாவெல் குடிப்பதும் அவளுடன் கூடுவதுமாகவே இருந்தான்.

ஏழாம் நாளின் காலையில் அவளை நிர்வாணமாக நடத்தி ஆற்றின் கரைக்கு அழைத்துப் போனான். அவளை ஆற்று நீரில் இறங்கச் செய்து வேடிக்கை பார்த்தான். பிறகு பாறை ஒன்றில் ஏறி நிற்க சொன்னான். குளிரில் ஜில்லிட்ட உடலுடன் அவள் கைகூப்பி வணங்கினாள். அவளைத் திரும்பி நிற்கச் சொன்னான் கிளாவெல். ஈரம் சொட்டும் முதுகுடன் அவள் நின்றிருந்தாள். கிளாவெல் தனது ரிவால்வாரை எடுத்து அவளது முதுகில் சுட்டான். அறுபட்ட வாழைமரம் போல விழுந்தாள் டோரதி. காலால் அவள் உடலை காலால் எத்திவிட்டாள். ஆற்றில் மிதந்து சென்றாள் டோரதி.

கிளாவெல் சந்தோஷ மிகுதியில் ஒடும் தண்ணீரை நோக்கி ஒரு முறை சுட்டான்.

கென்னிங்பிரபுவும் அவனது மனைவியும் காட்டுபுலியால் வேட்டையாடப்பட்ட நிகழ்வை அவன் ரிப்போர்ட் செய்த போது கம்பெனி அதைப்பற்றித் துளி சந்தேகத்தையும் எழுப்பவில்லை.

ஆனால் இதை லாராவால் மன்னிக்க முடியவில்லை. அவள் நடந்த விஷயங்களைக் கேள்விபட்டபிறகு கிளாவெல்லுடன் ஒன்றாகப் படுப்பதற்குக் குற்றவுணர்வு கொண்டாள். அவனை என்ன செய்வது என அவளுக்குப் புரியவேயில்லை.

மழைக்காலத்தின் நடுவே ஒரு நாள் கிளாவெல் குதிரையிலிருந்து தவறி விழுந்தான். இடுப்பு எலும்பில் சிறிய முறிவு ஏற்பட்டிருந்தது. ஆகவே அவன் மூலிகை வைத்துக் கட்டி நாற்பத்தியெட்டு நாட்கள் ஒய்வெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டான்

வேறு வழியின்றி நாற்பத்தியெட்டு நாட்களும் அவன் வனவிடுதியில் இருக்க வேண்டிய கட்டாயமானது.

அந்த நாட்களில் அவன் சதா குடித்தபடியே இருந்தான். போதையில் முலாக் மீது மதுவை ஊற்றி நெருப்பு வைத்தான். முலாக் அலறியபடியே ஒடும்போது லாரா பயந்து போனாள். அதன்பிறகு தான் கிளாவெல் சபேசனுடன் நெருக்கமாகத் துவங்கினான்.

குறிப்பாக வலியை மறப்பதற்காகச் சபேசன் செய்து கொடுத்த இனிப்பு அடையைத் தின்றவுடன் உடல் வலி மறையத் துவங்கியதோடு விசித்திரமான கனவுகள் வரவும் துவங்கின.

அந்தக் கனவுகளிலிருந்து அவனால் விழித்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு நாள் கிளாவெல்லின் கனவில் அருவி அவன் வீட்டிற்குள் விழுந்து கொண்டிருந்தது. யானைகள் வானில் பறந்து கொண்டிருந்தன. உடல் எடையற்றுப் போனது.

அந்த இனிப்பு அடைக்காகக் கிளாவெல் ஏங்க ஆரம்பித்தான். அதைத் தயாரிக்கத் தாமதமான போது கைகள் நடுங்க காத்திருந்தான்.

அந்த அடையைக் கிளாவெல்லிற்காக மட்டுமே தயாரிப்பதாகவும் அதை வேறு எவரும் சாப்பிடக் கூடாது என்றும் சபேசன் சொன்னான்.

லாரா அதில் ஒரு துண்டினை சாப்பிடக் கேட்டபோதும் அவன் மறுத்துவிட்டான்

இந்த இனிப்பினை சாப்பிட்டு பழகிய கிளாவெல் சதா கனவுகளிலே மிதந்தான்.

பதினெட்டு நாட்கள் தொடர்ந்து இனிப்பு அல்வாவை தின்று கனவுகளில் சஞ்சரித்த கிளாவெல் பத்தொன்பதாம் நாள் காலை படுக்கையில் இருந்தபடியே கத்தினான்

அவனது குரல் அடிபட்ட விலங்கு கத்துவது போலிந்தது. பொதுவாக அவன் கோபத்தில் சப்தம் போட்டவுடன் லாரா மதுப்புட்டியை கொண்டு போய் வைப்பது வழக்கம். ஆனால். அன்றைக்கும் லாரா போன போது கிளாவெல் உடல் முழுவதும் கொப்பளித்து வீங்கியிருந்தது.

ஏதோ பூச்சி கடித்திருக்கிறது. மருத்துவர் ஹாமில்டன்னை அழைத்துக் கொண்டு வரச்சொல் என்று கத்தினான். லாரா தலையசைத்தபடியே அறையை விட்டு வெளியே சென்றாள்

ஹாமில்டன் வந்து பரிசோதனை செய்வதற்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் பெருகியிருந்தன. ஹாமில்டனுக்கு அது என்ன நோய் என்று புரியவில்லை. அந்தக் கொப்பளங்களிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டேயிருந்தது.

கிளாவெல் வலி தாங்கமுடியாமல் கத்தினான். பித்தேறியவன் போல ஒலமிட்டான். அவன் குரல் அடங்கவேயில்லை.

லாராவிற்கு என்ன நோய் இது என்று புரியவில்லை. அவள் பயந்து போயிருந்தாள்

சபேசன் ஒரு இரவு அவளிடம் வந்து சொன்னான்

“இனி என்னால் இங்கே வேலை செய்ய முடியாது. நான் ஊருக்குக் கிளம்புகிறேன். நீங்களும் இங்கிலாந்து கிளம்புங்கள். இனி கிளாவெல்லால் பிழைக்க முடியாது. அவனுக்காக நான் செய்து கொடுத்த இனிப்பு அவன் உடலை நஞ்சாக்கிவிட்டது. அவன் மூன்று நாட்களில் இறந்துவிடுவான். இறப்பதற்கு முன்பு வலியின் உச்சத்தை அவன் அனுபவிப்பான். கதறுவான். ஒலமிடுவான். அந்தக் குரலை இந்தக் காடு கேட்கட்டும். சமையல் என்பது ஒரு கலை. அது உடலை வளர்ப்பதற்கு மட்டும் உதவி செய்வதில்லை. உடலை அழிப்பதற்கும் தான். கிளாவெல்லை போன்றவர்களை வேறு வழியில் அழிக்க முடியாது. இந்த இனிப்பிற்காக நான் தேடிச்சேகரித்த எல்லா மூலிகைகளும் இந்தக் காட்டில் விளைந்தது தான். கிளாவெல் காட்டைத் தன் அதிகாரத்தில் வைத்திருந்தான். ஆனால் காடு எவர் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டதில்லை. அதைக் காடு என் வழியாக நிரூபித்திருக்கிறது. “

சபேசன் சொன்னது போலவே மூன்றாம் நாளை அழுது புலம்பி ஊளையிட்டு கிளாவெல் இறந்து கிடந்தான். லாராவும் அவள் பிள்ளைகளும் விநோதமான நோய் தாக்கி கிளாவெல் இறந்துவிட்டான் என்ற அறிக்கையில் கையெழுத்திட்டு விட்டு லண்டன் புறப்பட்டார்கள்.

இங்கிலாந்தில் வசித்த போது லாரா எப்போதாவது தனது நோட்புக்கை பார்த்து இந்திய இனிப்பு வகைகளைச் செய்து பார்ப்பாள். அப்போதெல்லாம் அவள் சபேசனை நினைத்துக் கொள்வாள். கூடவே தென்வனக்காட்டினையும் கிளாவெல்லின் ஒலத்தையும் சேர்த்தே நினைத்துக் கொள்வாள்.

இனிப்பு சந்தோஷத்தை மட்டும் நினைவுபடுத்துவதில்லையே

••

0Shares
0