மன்னரின் மூக்குக் கண்ணாடி

The Last Emperor படத்தில் சீனாவின் கடைசி அரசர், புய் ஒரு அரசியல் கைதியாகவும், போர்க்குற்றவாளியாகவும் இருக்கிறார். அங்கே அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் மரியாதை செய்கிறார்கள். அது அவரை அதிகக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. வீழ்ச்சியின் போது ஒரு மனிதன் தனது பழைய மரியாதையைப் பெறுவதை விலக்கவே முற்படுகிறான். ஆனால் அவனது வீழ்ச்சி தற்காலிகமானது என்பது போலவே மக்கள் பழைய மரியாதையை அளிக்க முற்படுகிறார்கள்.

படம் புய்  தற்கொலை செய்ய முயல்வதிலிருந்து துவங்குகிறது. மன்னர்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் குறைவே. போரில். வேட்டையில் அல்லது விஷமிட்டுக் கொல்லப்பட்டவர்கள் அதிகம். தோல்வியின் காரணமாகத் தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் புய் ஒரு நவீன மனிதன். அவனுக்குத் தனது அதிகாரம் பறிபோனதை விடவும் வீழ்ச்சியின் கடைசிக்கண்ணியாகத் தான் இருக்கிறோம் என்ற குற்றவுணர்வே மேலோங்கியிருக்கிறது

படத்தின் ஒரு காட்சியில் இளவரசர் புயிக்கு கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்கிறார். குறைபாட்டினை சரி செய்ய ஒரு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஒரு மன்னர் கண்ணாடி அணிந்து கொள்வதா என்று ராஜகுடும்பம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஆனால் புயி கண்ணாடி அணிந்து கொள்கிறார். கண்ணாடி அணிந்த மன்னர் என்பது தான் படத்தின் முக்கியமான குறியீடு.

ஒரு மன்னர் கண்ணாடி அணிந்து கொள்வது என்பது எளிய விஷயமில்லை. ஜப்பானிய மன்னர்கள் குடும்பத்தில் கண்ணாடி அணிவது தடைசெய்யப்பட்டிருந்த காரணத்தால் பார்வை பறி போன வரலாறு இருக்கிறது.

புயி மிக அழகான வட்டவடிவ கண்ணாடி அணிந்து கொள்கிறார். கண்ணாடி அணிந்த மன்னரின் முகம் என்பது நவீனத்துவத்தின் அடையாளம். உண்மையில் கண்ணில் பார்வைக்குறைபாடு ஏற்படுவது காலம் காலமாக இருந்து வரக்கூடியது. பார்வைக் குறைவுள்ள மன்னர்கள் யுத்தகளத்தில் எப்படிச் சண்டையிட்டிருப்பார். குதிரையேறி சவாரி செய்திருப்பார்கள். இன்றிருப்பது போல மூக்குக் கண்ணாடிகள் அந்தக் காலத்தில் கிடையாது- ஆனால் வைத்திய முறைகள் இருந்தன. அவற்றைக் கொண்டு கண்ணைச் சரி செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மன்னர் என்பதால் ராஜகுடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறி கண்ணாடி அணிந்து கொண்டுவிடுகிறார். இது ராணியாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்காது. மூக்குக் கண்ணாடி அணிந்த மகாராணி வரலாற்றில் இல்லை. இங்கிலாந்தின் ராஜகுடும்பத்திலே நீண்ட தயக்கம் விவாதங்களுக்குப் பிறகே ராணி கண்ணாடி அணிந்திருக்கிறார்

மன்னர் காலத்தைப் பற்றிய நமது பொதுப்பிம்பத்தின்படி அரசருக்கு வயதாகும் என்ற நினைப்பே ஏற்படாது. ஆனால் வரலாற்றில் சரும நோய்களால். உடல் பருமனாலும் பார்வைக்குறைபாடு மற்றும் ஆண்மையற்று போனதால் மன்னர்கள் செய்து கொண்ட சிகிச்சைகள் ஏராளம். கடைசி வரை குணப்படுத்த முடியாமல் இறந்து போயிருக்கிறார்கள்

இந்தப் படத்திலே இன்னொரு காட்சியில் மன்னர் சைக்கிள் ஒட்டுவார். அரண்மனையை விட்டுச் சைக்கிளில் வெளியே செல்ல முயற்சிப்பார். சைக்கிள் என்பது எளியோரின் வாகனம். அதை ஒரு மன்னர் ஒட்டுவது என்பது பெரிய மாற்றம். சைக்கிள் அறிமுகமான நாட்களில் டால்ஸ்டாய் சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கி பண்ணையினுள் ஒட்டிக் கொண்டு சென்றிருக்கிறார். அவரது பண்ணையாட்கள் அதை வியந்து பார்த்திருக்கிறார்கள்.

நவீன வாழ்க்கையின் அம்சங்கள் வரலாற்றுக் காலத்தில் எளிதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இன்று நம் எல்லோர் கையிலும் வாட்ச் இருக்கிறது. மணி பார்க்க எவர் தயவும் தேவையில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மன்னராக இருந்தாலும் காலத்தை அறிந்து கொள்ள ஆள் உதவி தேவை. மணற்கடிகாரம். சூரியக்கல். சந்திரக்கல். நீர்கடிகாரம் எனப் பல்வேறு வகையான கடிகாரங்கள் வழக்கிலிருந்தன. ஆனால் நாம் சொல்வது போலத் துல்லியமாக மணியைச் சொல்ல முடியாது. மன்னர்கள் காலத்தை விடவும் நாம் கூடுதல் வசதிகளுடன் வாழுகிறோம்

பைனாக்குலர் முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமான போது ஒரு மன்னருக்கு அதைப் பரிசாக அளித்திருக்கிறார்கள். அவரால் தொலைவில் உள்ள ஒரு பொருள் அண்மையாகத் தெரிவதை நம்பவே முடியவில்லை. ஏதோ ஒரு மாயாஜாலம் என்றே நினைத்திருக்கிறார்.

மன்னர்கள் காலம் முடிந்து மக்களாட்சியின் காலம் உருவானது போது ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. முதன்முறையாக டெலிபோன் அறிமுகமான போது ராஜஸ்தானிலிருந்த ஒரு மன்னர் முதல் முறையாக போன் பேசுவதற்கு நாள் நட்சத்திரம் குறித்திருக்கிறார். விசேச பூஜை நடந்திருக்கிறது. அது மட்டுமின்றி யாரோடு மன்னர் பேசப்போகிறார் என்பதை ஜாதகத்தை வைத்துக் கணித்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்தது. அப்போது மன்னன் ஹிரோஹிட்டோவின் புகைப்படத்தை நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன. அதில் கண்ணாடி அணிந்த பேராசிரியர் போன்ற தோற்றம் கொண்ட மன்னரின் உருவம் வெளியானது. அமெரிக்கர்களால் அதை நம்ப முடியவில்லை. இவர் தான் மன்னரா, கிரீடமில்லை. பட்டாடைகள் இல்லை. பாதுகாவலர்கள் வாள் ஏந்தி நிற்கவில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்னர் மெல்லிய குரலில் பேசியது ஆச்சரியமாக இருந்தது. வரலாற்றில் இப்படித்தான் இருந்திருப்பார்கள். நமது கற்பனை தான் மன்னர் என்றால் வீராவேசமாகப் பேசுவார்கள் என்று பதிய வைத்திருக்கிறது

புகைப்படக்கலை அறிமுகமான நாட்களில் சமஸ்தானங்களை ஆண்ட அரசர்கள் ஆசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அரசியைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. நடனமாடும் பெண்கள். மற்றும் அந்தப்புர ஆசைநாயகிகளைப் புகைப்படம் எடுக்க அனுமதித்தார்கள். மன்னரின் ஆல்பத்தில் அவரது புகைப்படம் மட்டுமே ஒட்டப்பட்டிருக்கும். அவரது அரசியின் படத்திற்குப் பதிலாக ஒரு ரோஜா பூவின் படம் வரையப்பட்டிருக்கும். அரச குடும்பத்து புகைப்பட ஆல்பங்களில் அப்படியிருப்பதை நானே கண்டிருக்கிறேன்.

ஆங்கில அதிகாரிகள் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதைப் போஸ்ட் கார்டுகளாக்கி விற்பனை செய்திருக்கிறார்கள். இந்த நிர்வாணப் புகைப்படங்களுக்கு லண்டனில் பெரிய கிராக்கியிருந்திருக்கிறது. இப்படி மலபாரில் மார்பகங்கள் தெரிய எடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த கவிஞர் பூதலேர் To a Malabar Woman என்ற கவிதையை எழுதியிருக்கிறார்.

இன்றிருப்பது போல மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாத மன்னர்கள் காலத்தில் தன் பிரஜைகளாக எவ்வளவு குடிமக்கள் இருக்கிறார்கள் என்ற தகவலே கூட மன்னருக்கு யூகமாகத் தான் தெரிந்திருக்கும். மன்னர்கள் வாங்கிய கடன். அதற்கு அவர்கள் ஈடாகக் கொடுத்த நிலம். நகைகள் பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்றில் உள்ளன.

த லாஸ்ட் எம்பெரர் படத்தில் வருவது போல மன்னர்கள் குடும்பத்தின் கடைசி வாரிசுகள் வறுமையில் தனது பட்டாடைகளை விற்று வாழ்ந்த வரலாறெல்லாம் இந்தியாவில் இருக்கிறது. நாம் தான் இன்னமும் தங்கக் கீரிடம் அணிந்த மன்னர்களின் கற்பனை உலகிலிருந்து விடுபடவேயில்லை

0Shares
0