புனைவெழுத்தின் வரைபடம்.

‘விழித்திருப்பவனின் இரவு – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை

அக இருளிலிருந்து முளைத்து, தலைநீட்டி வளர்ந்து, புறத்தில் பல வண்ணங்களில் ஒளிர்ந்து, மலர்வதுதானே படைப்பு! உலக அளவில் மிகவும் கவனிக்கத்தக்க படைப்பாளர்களுள் 28 பேரின் அகவாழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் ‘விழித்திருப்பவனின் இரவு’.

ஓர் எழுத்தாளரின் படைப்பைப் பற்றி முழுதும் அறிய வேண்டுமென்றால், நாம் அந்தப் படைப்பாளரின் அகவாழ்வை முழுதும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் அகவாழ்வை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. காரணம், எல்லாப் படைப்பாளர்களும் தம்மைத் ‘திறந்த புத்தகமாக’ வைத்துக்கொள்வதில்லை.

இந்தப் புத்தகத்தில் படைப்பாளர்களின் படைப்புகளைப் பற்றி விரிவாகப் பேசப்படவில்லை. ஆனால், அந்தப் படைப்பாளர்களின் மற்றொரு முகத்தைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் மற்றொரு ஆளுமையைத் தெரிவிப்பதன் வழியாகவே அவர்களின் படைப்புகளின் தன்மை உணர்த்தப்பட்டுள்ளது.

படைப்பாளர்களின் படைப்புகளைப் பற்றிப் பேசாமல், அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு கூர்முனைகளைப் பற்றிக் குறிப்பிட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்? எழுத்தாளரின் வாழ்க்கையிலிருந்து அவரின் படைப்புக்கும் அவரின் படைப்பிலிருந்து அவரின் வாழ்க்கைக்கும் என வாசிப்பு சார்ந்த ஓர் ஊடாட்டத்தை நிகழ்த்தத்தான்.

ஒவ்வொரு படைப்பாளரின் பிறிதொரு ஆளுமையைப் பற்றி விளக்குவதன் வழியாக அந்தப் படைப்பாளரை ஒவ்வொரு வாசகரும் மனத்தளவில் மிகவும் நெருங்க வாய்ப்புள்ளது. 

விரிவான அனுபவங்கள் வாய்க்கப்பட்ட எழுத்தாளர்கள் தம் படைப்புகளை ஆழமாக எழுதவல்லவர்கள். வாசகர்கள் எழுத்தாளர்களின் பன்முக ஆளுமையை  அறிவதன் வழியாகவே அவரின் படைப்புகளை எளிதில் புரிந்துகொள்ள இயலும். இவர்களின் படைப்புகளுக்கும் இவர்களின் பன்முக ஆளுமைக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. ஆனால், இவர்களின் பன்முக ஆளுமையின் தாக்கம் இவர்களின் படைப்புகளில் நீருள் விழுந்த ஒளியாகக் கலந்திருக்கும்.

இப்படி ஒரு கட்டுரைத்தொகுப்பினை உருவாக்க வேண்டுமெனில், அந்தந்த எழுத்தாளர்களின் முழுப் படைப்புகளைப் படிக்க வேண்டும், அவரின் படைப்புகள் பற்றி எழுதப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் தேடித் தொகுத்துப் படிக்க வேண்டும், அவரின் தனி வாழ்வு குறித்த குறிப்புகளைப் பல தரப்பிலிருந்தும் திரட்டிப் படிக்கவேண்டும். அந்த வகையில், இந்தப் புத்தகத்தைத் தம் கடின உழைப்பின் வழியாக உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

விளாதிமிர் நபகோவ் வண்ணத்துப் பூச்சி ஆய்வாளர். ஜோர்ஜ் லூயி போர்ஹே புலிகளின் மீது பேரார்வமிக்கவர். கார்லோஸ் புயண்டஸ் சட்ட வல்லுநர், பேராசிரியர், மெக்சிகோ நாட்டு அரசின் தூதுவர் எனப் பன்முக  ஆளுமை கொண்டவர். ஹென்றி டேவட் தோரோ இயற்கை ஆர்வலரும் சொற்பொழிவாளருமாவார். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சிறந்த பத்திரிகையாளர். அன்னா அக்மதோவா வாழ்க்கை முழுவதும் பல வகையில் துயருற்றவர்.

பிடெரிகோ கார்சியா லோர்கா நாடகாசிரியரும் ஜிப்ஸி போல வாழ்ந்தவருமாவார். வர்ஜீனியா வுல்ப் இளமைக்குப் பின்னர் வாழ்நாள் முழுக்க மனச்சிதைவு நோயாளராகவே இருந்தவர். ஜோசப்கான்ராட் கடலோடி. கோபோ அபே பூச்சியியல் ஆய்வாளர். மிலோராட் பாவிக் அதிகற்பனையாளர். ராபர்டோ கலாசோ புத்தகங்களைத் திருத்தும் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர்.

எர்னெஸ்ட் ஹெமிங்வே காளைச் சண்டை வீரர். பாப்லோ நெருதா சிலி நாட்டு அரசின் தூதுவர். ஆக்டேவியா பாஸ் மெக்சிகோ நாட்டு அரசின் தூதுவர். யுகியோ மிஷிமா தனியாக ராணுவக் குழுவை அமைத்த வீரரும் சாமுராயாகவே வாழ்ந்தவருமாவார். லூயி கரோல் கணித மேதையாகவும் புகைப்படக் கலைஞராகவும் இருந்தவர். மிலன் குந்தேரா பியானோ இசைக்கலைஞரும் திரைத்துறைப் பேராசிரியருமாவார்.சர்  ரிச்சர்ட் பர்ட்டன் 29 மொழிகளை அறிந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் பயணியுமாவார்.

ஹெர்மன் மெல்விஸ் கடலோடி. பிராம் ஸ்டாகர் நாடக அரங்கின் மேலாளர். ஜே.ஆர்.ஆர். டோல்கின் பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமாவார். ஜோஸ் சரமாகோ தீவிர கம்யூனிஸவாதியும் பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமாவார். ஜேஃஎம்ஃ கூட்ஸி பேராசிரியர். ஒரான் பாமுக் தான் பிறந்த நகரை தன்னெழுத்தால் எல்லா வகையிலும் கொண்டாடியவர்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த எழுத்தாளர்களின் அக மற்றும் புற வாழ்வை விரித்துரைத்து, அவர்களின் படைப்புகள் எந்தெந்த வகையிலெல்லாம் அவர்களின் பன்முக ஆளுமையோடு பொருத்திப் போகிறது என்பது பற்றியும் அலசி, ஆய்ந்து எழுதியுள்ளார். வர்ஜீனியா வுல்ப் பற்றி இவர் பின்வருமாறு கூறியிருப்பதை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

“வர்ஜீனியாவிற்குள் நினைவுகள் குளத்துப் பாசிகள் போல ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடந்தன. தன்னைப் பாதித்த நிகழ்வுகளும் அன்றைய நாளும் அவளுக்குள் ஈரம் உலராமல் அப்படியேயிருந்தன. அவள் கதாபாத்திரங்களின் வழியே முக்கிய சம்பவங்களை உருவாக்கிக் காட்டும் எழுத்தை உருவாக்குவதை விடவும் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு கணத்திலும் தனது மனத்திற்குள்ளும் நிஜ உலகத்திற்குள்ளும் எப்படி மாறி மாறிப் பயணம் செய்கிறார்கள் என்பதிலே அதிகம் கவனம் செலுத்தத் துவங்கினாள். எப்படி ஒரு நிறம் அல்லது ஒரு வாசனை ஒரு மனிதரையோ அல்லது ஒரு நிகழ்வையோ நினைவுபடுத்திவிடுகிறது என்பதே அவரது கதைசொல்லலின் தனித்துவமாகயிருந்தது. நினைவுகளின் சிற்றோடைகள் ஒன்றையொன்று குறுக்கிட்டு ஓடிக்கொண்டிருப்பதுதான் வர்ஜீனியாவின் எழுத்து”.

எழுத்தாளர்கள் பற்றித் தம் கருத்தாக எர்னெஸ்ட் ஹெமிங்வே,

“கதைகள் எழுதி, அதில் கிடைக்கும் பெயரையும் வசதிகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல ஓர் எழுத்தாளரின் வேலை. எழுத்தாளராக இருப்பது ஒரு சவால். அது வாழ்வில் அடைய முடியாத செயல்களின் மீது ஆர்வம் கொள்ளக்கூடியது” என்று கூறியுள்ளார்.

அந்த வகையில், இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலக எழுத்தாளர்கள் 28 பேருமே வாழ்வில் அடைய முடியாத செயல்களின் மீது பேரார்வம் கொண்டவர்களே. அதுமட்டுமல்ல, எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் கூறுவதுபோல, இவர்கள் அனைவருமே “புனைவெழுத்தால் தங்களின் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்” என்றுதான் தெரிகிறது. அதனாலேயே அவர்கள் உலக எழுத்தாளர்களாகத் திகழ்கிறார்கள்.

இந்தப் புத்தகம் உலக இலக்கிய ஆளுமைகளின் விரிவாக வாழ்க்கையைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றிய அரிய பல கருத்துகளையும் முன்னெடுத்தும் பேசுவதால், இதனை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்படி இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டால், அது இனி வரும் தலைமுறையினரின் மனத்தில் உலக இலக்கியம் பற்றிய ஆழ்ந்த புரிதலை  ஏற்படுத்தும்.

– – –

0Shares
0