ஒரே கிராமத்தினர்

ரஷ்யச்சிறுகதை

வாலென்டின் காத்தயேவ்

தமிழில் பாஸ்கரன்

“பெண்கள் என்னைக் காதலிக்கின்றனர்” என்று சிலிர்த்த தலை மயிரையுடைய கட்டையான அழகிய சிப்பாய் ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தனது சகாக்களிடம் கூறினான்.

 அவன் அந்தக் குடிசையின் நடுவில் நின்று கொண்டிருந்தான். அவனைத் தவிர அங்கே மூன்று நோயாளிகள் இருந்தனர். மக்கிப்போன வைக்கோல் நாரினால் கட்டப்பட்ட அகன்ற அட்டைகளில் அவர்கள் படுத்திருந்தார்கள். அதில் இருவர்  அசிரத்தையாக கூரையைப் பார்த்தவண்ணமிருந்தனர். மூன்றாவது ஆசாமி மூலையில்  படுத்தவாறே கிழிந்த துணிகளினால் பெண்ணைப் போல் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் பனியால் விறைத்துப் போயிருந்தான.

அழுத்தமாகக் கவிந்திருந்த ஆர்க்டிக் பனிக்காலம். அங்கே மரப்பலகையிலான குடிசைகளும், பென்சிலைப்போல் நெட்டுக்குத்தாக பிர் மரங்களுமிருந்தன. என்ஜினிலிருந்து வந்த புகைமண்டலம் ரயில் நிலையத்திற்கு மேலே தெரிந்தன. காக்கைக் கூட்டங்கள் தாழ்ந்து பறந்து கொண்டிருந்தன. செஞ்சிலுவையிட்ட கூட்ஸ் வண்டிகளில், புள்ளி விழுந்த பிர்ச் கட்டைகளிருந்தன.

நோயாளிச் சிப்பாய்கள் வேலையில்லாமையால் ரொம்பக் களைத்துப் போய்ச் சோர்ந்திருந்தார்கள் என்றாலும் கூட, தங்கள் பட்டாளத்தோடு சேர்ந்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில், அங்கே உத்திரவிற்குக் கீழ்ப்படிய வேண்டும். குழிகளைத் தோண்ட வேண்டும். அதோடு மட்டுமின்றி, எதிரிகளினால் ஆபத்து வேறு இருக்கிறது. ஒருவனுக்கு கீல்வாதம் இன்னொருவனுக்கு கால் முழுதும் கட்டிகள் கந்தலைச் சுற்றிக் கொண்டு படுத்திருப்பவனுக்கு கடுமையான டைபாய்டு வந்திருக்கிறது. சிலிர்த்த தலை மயிரையுடைய அந்த சிப்பாய்க்கு கெட்ட நடத்தை காரணமாக ஏற்பட்ட நோய்.

“பெண்கள் என்னைக் காதலிக்கின்றார்கள்” என்று அவன் மெதுவாகக் கூறினான். “நான் பொய் சொல்கின்றேன் என்று எண்ணுகின்றீர்களோ? கடவுள் சத்தியமாகச் சொல்கின்றேன். இது உண்மை!  ஏன் அவர்கள் என்னைக் காதலிக்கிறார்கள்? அது சாத்தானுக்குத்தான் தெரியும். பெண்களுடன் எப்படி பழகுவது என்பது எனக்குத் தெரியும். அதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், காலத்தினால் பெண்களை வசப்படுத்த முடியாது. எப்படி அவர்களை வசப்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆமாம் அதுதான்! ஏனென்றால், எல்லாப் பெண்களும் கர்வத்தை மதிப்பதில்லை. ஆனாலும் சிலர், இருக்கத்தான் செய்கிறார்கள். அதைப்பற்றி நான் எதிர்த்து ஒன்றும், கூறப்போவதில்லை. அதில் பிரயோசனமுமில்லை.

ஒரு நல்ல பெண்ணோடு இருப்பதென்றால், ரொம்பக் கௌரவமாக இருக்க வேண்டும். அவள் உங்களைப் பார்த்து ஆமாம் என்பாள். நீங்கள் அவளைப் பார்த்து ஆமாம் எனக் கூற வேண்டும். அவள் இல்லையென்றால், நீங்களும் இல்லை யென்றால், நீங்களும் இல்லை என்றே கூற வேண்டும். அவள் இல்லையென்றால், நீங்களும் இல்லை என்றே கூற வேண்டும். அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்;  ஆமாம். அவ்வளவுதான்! நான் ஒரு காலத்தில் காப்டன் விரெனிடம் உண்மையாக உழைத்துக் கொண்டிருந்தேன்.

காப்டன் விரென் சுயேச்சையானவர். அங்கே ஒருத்தி வேலை செய்து வந்தாள். அவள்தான் வீட்டுவேலைக்காரி. அவள் ரொம்ப சுத்தமாக இருப்பாள். அவள் இளமையானவள்தான். அவளுடைய பண்புகளைக் குறை கூறுவதற்கில்லை. ஆரம்பத்தில் அவளை கர்வத்தின் மூலம் கவர்ந்துவிடலாம் என எண்ணினேன். அதனால் ஒன்றும் பயனில்லை. பின்னர் வேறு வழிகளைக் கையாண்டேன். அவள் ஆமாம் என்றால் நானும் ஆமென்பேன். அவள் இல்லையென்றால், நானும் இல்லையென்பேன். அவளோடு நான் எல்லா இடங்களுக்கும் செல்வேன். நாடகக் கொட்டகைகளுக்குச் செல்வேன். அவளுக்கு நான் சாக்லெட் கூட வாங்கித் தருவேன். எனக்கென ஒரு வழியுண்டு. அவள் இந்தப் பக்கமும், அந்தப்பக்கமும் செல்வாள்-ஆனால், காலம் தாழ்ந்துவிட்டது. நான் ஒவ்வொரு நாள் இரவிலும் அவளைச் சந்திக்கச் செல்வேன்….  ஆமாம். நான் களைப்படைந்துவிட்டேன். அதுதான் உண்மை. பெண்கள் என்னைக் காதலிக்கின்றார்கள்- அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்

உதவி டாக்டர் கையில் ’தர்மாமீட்டர்’ எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தார்.

“ஆமாம். கிராமத்தார்களே, பெண்கள் உங்களைக் காதலிக்கின்றார்கள் என்ற கயிறை இன்னும் திரித்துக் கொண்டுதானிருக்கிறீர்களோ?” என்று கேட்டார். “சரி பொய் சொல்லிக் கொண்டிருங்கள்! இதிலிருந்தே பெண்கள் உங்களை எப்படிக் காதலிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது”

அவர் தனது கண்ணைச் சிமிட்டினார்.

“உண்மைதான். உனக்குத்தான் அன்பளிப்பு தந்திருக்கிறார்களே!”

“ஆ, அந்தப் பெண்கள்!”- கவலையற்றவனைப் போல பாசாங்கு செய்தபடி முன்னவன் கூறினான்:  “அவர்கள் நாசமாகப் போகட்டும் என்று மூன்று முறை கூறுகின்றேன். அவர்கள் எனது வாழ்க்கையைக் கெடுத்துவிட்டார்கள் என்பது உண்மைதான்.”

கந்தைத் துணிகளைச் சுற்றிக் கொண்டு படுத்திருந்தவன் தோளைப் பிடித்தார் டாக்டர்.

“என்னப்பா! தூங்குகின்றீர்களா? எழுந்திருங்கள். மாட்டீர்களா? நான் இப்பொழுது ‘டெம்பரேச்சர்’ பார்க்க வேண்டும். என்ன இவ்வளவு நடுங்குகின்றீர்களே! ஜுரம் 104, 105 டிகிரி இருக்கும்போலிருக்கிறதே!”

“நான் ஏதாவது குடித்தால் தேவலாம் என்று எண்ணுகிறேன்…..“ என்று வலியால் அவஸ்தைப்படும் சிப்பாய் அமைதியாகக் கூறினான்.

“இந்த ‘தர்மாமீட்டரை’ உன் கட்கத்திற்குள் வைத்துக்கொள்”

நோயாளிச் சிப்பாய், கீழ்ப்படிதலோடு அந்தத் ‘தர்மாமீட்ட’ரை எடுத்து வைத்துக்கொண்டு மௌனமானான். அவனுக்கு ரொம்ப உஷ்ணமாகவும், அசௌகரியமாகவுமிருந்தது.

குடிசைக்குள் இருள் பரவத் தொடங்கியது. டாக்டர் வெளியே போய்விட்டு ஒரு கோப்பை, சிம்னி இல்லாத விளக்கு இவற்றோடு திரும்பி வந்தார். அந்தச் சிறிய விளக்கு சிகப்புப் புகையைக் கக்கியது. டாக்டர் அதை ரொட்டியடுப்பின்மீது வைத்தார். உடனே ஜன்னல்களெல்லாம் நீல நிறமாகத் தெரிய ஆரம்பித்தன. அறையில் வெளிச்சம் பரவியதும் அந்த அறை நெருக்கமாகவும், அழுக்காகவும் தோன்றியது.

“உனக்கு ரொம்ப கடுமையாக இருக்கிறதா?” என்று கேட்டார் டாக்டர்.

“ஆமாம்.”

“நான் பெரிய டாக்டரிடம் சொல்லுகிறேன்”

அரைமணி நேரத்திற்குள்ளாக அந்த சிறிய விளக்கும், சிகப்ப் புகையும் அவர்களுக்குப் பழக்கமாகி விட்டது. மீண்டும் எரிச்சல் சூழ்ந்தது. கீல்வாதமுள்ள சிப்பாய் சொரிந்து கொண்டான். ஏதோ பூச்சிகள் அவனைக் கடித்தன.

“அவை நாசமாகப் போகட்டும்! அந்தச் சனியன்கள் மீண்டும் கடிக்கின்றன. அதனால்தான் எனக்கு மின்ஸ்க் மாகாணம் பிடிப்பதில்லை. அவை இல்லாத ஒரு வீடு கூட அங்கே கிடையாது.”

“அவன் அமைதியின்றி தவித்தான். பைக்குள்ளிருந்து ஏதோ ஒரு எண்ணெய்ப் பசையுள்ள பெட்டியை எடுத்து நெருப்புக்குச்சியைக் கிழித்து, சுவற்றில் காட்டிக் கொண்டிருந்தான்.

“அவற்றை மறுபடியும் எரிக்கிறாயா?” என்று, கட்டிகளுள்ள சிப்பாய் கேட்டான்.

“ஆமாம். நான் அவற்றை எரிக்கிறேன். என்னை எவ்வளவு துன்புறுத்துகின்றன, தெரியுமா?”

“இந்தக் குடிசையைக் கொளுத்தி விடாமல் பார்த்துக் கொள்”

“ ஒன்றும் பயப்படாதே!”

நீண்ட நேரம் மௌனம் நிலவியது.

“அவ்வளவுதான்-பெண்கள் என்னைக் காதலிக்கிறார்கள்” என்றான் அந்தச் சிப்பாய் மீண்டும். “அவர்கள் ஏன் என்னைக் காதலிக்கிறார்கள். அதை என்னால் சொல்ல முடியவில்லை. என்னை எதிர்த்து நிற்க முடியவில்லை. கடவுள் சத்தியமாக அது உண்மைதான். சென்ற வருடம் நான் விடுமுறையிலிருந்த பொழுது பெண்களின்றி என்னால் இருக்கவே முடியவில்லை. அவர்கள் எல்லாரும் சிப்பாய்களின் மனைவிமார்கள். நீங்கள் நம்பவே மாட்டீர்கள்!”

“சிப்பாய்களின் மனைவிகள் என்றால் அது உண்மைதான்!” என்றான், பூச்சிகளை எரித்துக் கொண்டிருந்தவன்.

“அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்! என்றாலும் அது எல்லோருக்கும் தெரியும். கணவன்மார்கள்தான் வீடுகளிலில்லையே.”

“அவர்கள் எதற்காகப் பயப்பட வேண்டும்?” என்று ஆத்திரத்தோடு கூறினான் கட்டிகளுள்ள சிப்பாய், “புருஷர்களோ பதுங்குக்குழிகளில் இருக்கின்றனர். அதுவும் ரொம்ப  தூரத்திற்கப்பால்! ஆண்கள் இல்லாமல், வாழ்வது ரொம்புவம் கஷ்டம்! ஹும்! நமது வாழ்க்கையெல்லாம், கடுங்காவல் தண்டனை அனுபவிப்பது போலத்தான். என் மனைவி மட்டும் அப்படிச் செய்கிறாள் என்பதை நான் கண்டுபிடித்து விட்டால் அவ்வளவுதான்! நான் அவளைக் கொன்று விடுவேன். ஆமாம் கடவுள் சாட்சியாக நான் கொன்றுவிடுவேன்.”

“ரொம்ப சரி! இருந்தாலும் நீ ஒன்றும் அப்படிச் செய்யமாட்டாய்!” என்றான் மற்றொரு சிப்பாய்.

“நான் கூறியதைப் போல விடுமுறையில் அங்கே சென்றிருந்தேன். எல்லோருமே என்னைக் கண்டதும் தலைவணங்குகிறார்கள்! ஆமாம். அந்த விடுமுறை ரொம்ப உல்லாசமாகத்தான் கழிந்தது.

பெண்களுக்காக அங்கே அலைய வேண்டியதில்லை. எனக்கு அப்படிப்பட்ட பெண்கள் வேண்டியதில்லை. எனக்கு வேண்டியது இளமங்கை;  சொகுசானவள். நான் தங்கியிருந்த அந்தக் கிராமத்தில் கடைசியிலிருந்த மூன்றாவது குடிசையில் அப்படிப்பட்ட இளமங்கை  ஒருத்தி இருந்தாள். அவளும் ஒரு சிப்பாயின் மனைவிதான். அவளை தாஷா என்றழைத்தார்கள். அதாவது தார்யா என்று அர்த்தம். அவள் நல்ல பெண். ஆமாம்;  நான் அவளை விரும்பினேன். ஆரம்பத்தில் ஒன்றுமில்லை. அவள் தன் போக்கிலே சென்றாள். எதையும் கேட்கவில்லை. நான் கர்வத்தோடிருந்து பார்த்தேன். பயனில்லை. கௌரவமாகப் பழகிப் பார்த்தேன். அதிலும் பலனேற்படவில்லை. அவளை வசப்படுத்துவது ரொம்புவம் கஷ்டமான காரியம்தான் என்று எண்ணினேன்.

எப்படி எல்லாமோ அவளை முயற்சித்துப் பார்த்தேன்- அவள் வழிக்கு வரவில்லை. தினசரி அவளைத் தொடர்ந்து நடந்து பார்த்தேன்- பயனில்லை. ‘இன்றிரவு நான் வருகிறேன்’ என்று சொல்லுவேன். அவள் முகமெல்லாம் அடுப்பைப்போல் வெண்மை படர உட்கார்ந்திருப்பாள். அவள் கொஞ்சம் சிரித்தால் போதும். ஆனால், அதுதானே இல்லை! என்னைப் பார்த்து ஜனங்கள் சிரித்தார்கள். ஆனால், அவள் சிறிதும் அசையவே இல்லை! ஒருநாள் அவளே என்னிடம் வந்தாள். ‘என் புருஷனின்றி என்னால் இனிமேல் இருக்கவே முடியாது’ என்று கூறினாள். அவள் அழுதாள்:  ஏனெனில், அவள் புருஷனைக் கண்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. நான் அவளை இதமாக முத்தமிட்டேன். அவள் கைகளை என் கைகளால் பிடித்துக்கொண்டேன். அந்த விடுமுறைக் காலம் பூராவும் என் மனைவியுடன் வாழ்வதைப் போலவே, அவளோடு வாழ்ந்து வந்தேன்.

மாலை வேளைகளில் அவளைப் பார்க்க வருவேன் எனது பூட்ஸ்களைக்  கழற்றுவாள்;  உடலெல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கும். அது எவ்வளவு அற்புதமாகவிருந்தது! நான் எங்கெல்லாம் சென்றோனோ அங்கெல்லாம் அவள் நிழலைப்போலவே என்னைத் தொடர்ந்தாள். அவள் அவ்வளவு நல்லவள். ரொம்ப அருமையான பெண். அதில் முக்கியம் என்னவெனில், வேறு இளைஞன் யாரேனும் அவளிடம் சென்றிருந்தாலும் அவள் ஒன்றும் இணங்கியிருக்கமாட்டாள். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலோ, அது வேறு விஷயம். பெண்கள் என்னைக் காதலிக்கின்றனர். அது உண்மைதான்!”

“உன்னுடைய மாகாணம் எது?” என்று கேட்டான் கட்டிலிலுள்ள சிப்£ய் சந்தேகக்குறிப்போடு.

“அனான்யேவ்ஸ்கி ஜில்லாவிலுள்ள கெர்ஸன். நாம் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களா என்ன?”

“இல்லை. நான் தாவ்ரிசெஸ்க்கைச் சேர்ந்தவன்”

“ஆமாம். அவள் மிக அருமையானவள். அந்த தாஷாதான். சுருக்கமாகச் சொல்வதென்றால் ரொட்டியுடன் சேர்ந்த தேநீரைப் போன்றவள். அவளை நினைத்தாலே போதும்…..“

பின்னர் நீண்டநேரம் மௌனம் நிலவியது.

“என்ன?  உன்னுடைய கிராமம் எது?” என்று திடீரெனக் கேட்டான். கந்தல் துணி சுற்றியிருப்பவன் பலவீமான குரலில்.

எல்லோரும் அவனைப் பார்த்துத் திரும்பினர். அங்கே இருண்ட மூலையிலிருந்து ஒரு கண் கவனமாகப் பார்த்தபடி மின்னியது.

“நான் நிகோலெவ்ஸ்காவைச் சேர்ந்தவன். ஆமாம் அனான்யெவ்ஸ்கி ஜில்லாதான். நாம்  சந்தர்ப்பவசமாக ஒரு ஊரோ?”

“ஆமாம். நாம் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.”

கந்தல் துணி சுற்றியிருந்தவன் கூறினான் “நானும் கூட அனான் யேவ்ஸ்கியைச் சேர்ந்தவன்தான்”

“ஆ! அப்படியானால் அந்தச் சிப்பாயின் மனைவி தாஷாவை உனக்குத் தெரியுமென்று சொல்” என்று உணர்ச்சி மேலிட்டுக் கத்தினான் அவன்.

“அவளை எனக்குத் தெரியும்!” என்றது அந்த மெல்லிய குரல்.

“அவள் என் மனைவி”

“ஆமாம். நாம் எல்லாம் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான்!”

அவர்கள் எல்லோரும் மௌனத்தில் ஆழ்ந்தனர். ஐந்து மைல் தூரத்துக்கப்பால் வெடித்த குண்டுகளின் சப்தம் கூட ரொம்பத் தெளிவாகக் கேட்டது. கட்டிகளுள்ள சிப்பாய் இருமினாள்.

“எனக்கு ஏதாவது குடிப்பதற்கு மட்டும் இருந்தால்….“ என்றான் கந்தல் துணி போர்த்தியவன்.

மீண்டும் அவனுக்கு குளிர் கண்டது. ரொம்பக் கஷ்டப்பட்டாள். தான் எதையுமே பார்க்க முடியாமலும் கேட்க முடியாமலும் இருக்க வேண்டுமென்று விரும்பினான். ஜுரம் கூட தனக்குத் தெரியக்கூடாது என விரும்பினான். அங்கே யுத்தமிருப்பதாகவோ, அது ஒரு புதிய இடமென்றோ, அங்கு குட்டையான சிப்பாய் நிற்கின்றானென்றோ அவனுக்குத் தோன்றவில்லை. அவன் தனது குடிசைக்குள்ளேயே இருப்பதாக நினைத்தான்-இவைகளெல்லாம் ஏதோ ஒரு பயங்கரமான கனவுபோல் அவனுக்குத் தோன்றியது.

••

0Shares
0