1984ம் ஆண்டுக் கான்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இயக்குநர் ராபர்ட் ப்ரெஸனை நேரில் சந்தித்து ஒரு நேர்காணல் எடுக்க விரும்பிய நான்கு இளைஞர்கள் பகலிரவாக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தொலைப்பேசி செய்தபடியே இருந்தார்கள். ராபர்ட் ப்ரெஸன் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க விரும்பாதவர். நேர்காணல்களில் விருப்பமில்லாதவர். ஆகவே அவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில் அந்த இளைஞர்கள் திரைப்படவிழாவிற்கு வந்திருந்த லூயி மால், பால் ஷ்ராடர் தார்க்கோவ்ஸ்கி பல்வேறு இயக்குநர்களிடம் ராபர்ட் ப்ரெஸன் பற்றிப் பேட்டி எடுத்து அதைத் தொகுத்து ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

The Road to Bresson என்ற அந்தப் படத்தை நேற்றிரவு பார்த்தேன்.
தனது நாற்பதாண்டுக்காலத் திரை வாழ்வில் பதிமூன்று படங்களைத் தான் பிரெஸன் இயக்கியிருக்கிறார். அந்தப் படங்களைத் தூய சினிமா என்று அழைக்கிறார்கள். உணர்ச்சிகளை முகத்தின் வழியாகவும் உரையாடல் வழியாகவும் வெளிப்படுத்துவது நாடகத்தின் வேலை. சினிமா வெறும் நாடகமில்லை. காட்சிகளும் இசையும் சப்தங்களும் கொண்டது. ஆகவே அங்கே மேடையைப் போன்ற நடிப்பு அவசியமில்லை. கைகள் மற்றும் கால்களின் அசைவு, மையத்தை விட்டுவிலகி பொருட்கள். மலர்கள். சின்னஞ்சிறு காட்சிகள் இவற்றையே பிரெஸன் முதன்மைப்படுத்தித் தனது சினிமாவை உருவாக்கியிருக்கிறார்.
ஆகவே படத்தில் நாம் காணுவது வாழ்க்கையில் நேரடியாக மனிதர்களைக் காணுவது போன்ற அனுபவத்தையாகும். பிரபலமான நடிகர்களைத் தவிர்த்து புதுமுகங்களையே தனது படத்தில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். காரணம் அவர்களைத் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயார் செய்ய இயலும். அவரது படத்தில் நடித்த நடிகையின் நேர்காணலில் பிரெஸன் மிகக் குறைவான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்றார். குரலை ஒரு போதும் உயர்த்தக்கூடாது. பின்னணி இசை இன்றிச் சலனமின்றிக் குரலை வெளிப்படுத்துவது அவரது பாணி. அது எளிய சினிமா பார்வையாளரைக் கவராது. ஆனால் அதைப்பற்றிப் பிரெஸன் கவலைப்படவில்லை. தான் ஒரு கலைஞன் என்ற முறையில் தனக்கான திரைமொழியை அவர் உருவாக்கிக் கொண்டார் என்கிறார்

பிரெஸனின் பிக்பாக்கெட் படத்தின் துவக்கக் காட்சியில் கதாநாயகன் ஒரு பெண்ணின் கைப்பையிலிருந்து பணத்தைத் திருட முயல்கிறான். அப்போது அவனது முகபாவங்களைப் பாருங்கள். உடல் உறைந்து போயிருக்கும். தலை மட்டும் சிறியது அசையும். அவனது கைகள் ரகசியமாக முன்சொல்லும். கைப்பையை அவன் தொட்டுத் திறக்கும் விதமும் பணத்தை எடுப்பதும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. A Man Escaped படத்தில் சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
திரைப்படவிழாவில் சிறந்த படமாகப் பிரெஸனின் படம் தேர்வு செய்யப்படுகிறது. ஆர்சன் வெல்ஸ் இந்த விருதை அளிக்கிறார் அவருடன் தார்க்கோவெஸ்கியின் படமும் விருது பெறுகிறது. மேடையில் விருதைப் பெற்றுக் கொண்டு நன்றி சொல்ல எதுவுமில்லை என பேசமறுத்து திரும்புகிறார் பிரஸன். தனது படைப்புகளை தவிர தன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதே அவரது இயல்பு. பிரஸனை மிகப்பெரும் கலைஞனாகக் கொண்டாடும் தார்க்கோவ்ஸ்கியின் தோளைப் பற்றிக் கொண்டு மேடையை விட்டுச் செல்கிறார்
தனக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் அழைப்பினை ஏற்கும் ஒரேயொரு கேள்வி கேட்கலாம் என்று நிபந்தனை விதிக்கிறார் பிரெஸன். அவர்கள் நேரில் சந்தித்து இரண்டு மூன்று கேள்விகளை ஒன்றாக்கி ஒரு கேள்வியாகக் கேட்கிறார்கள். அதற்கு மிகச்சிறிய பதில் தருகிறார். இளம் இயக்குநர்களுக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஸ்டெந்தால் சொன்ன பதில் ஒன்றைச் சொல்கிறார்.

பிரஸன் விளம்பரங்களை விரும்பாதவர். பணத்திற்காகவோ, புகழிற்காகவோ எந்த வேலையும் செய்யாதவர். சினிமாவைப் பற்றிய தனது எண்ணங்களை மிகச்சிறிய நூலாக Notes on the Cinematographer என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். அது முக்கியமான கையேடு
ப்ரெஸனின் திரைப்படங்களை ஆராய்ந்து அமெரிக்க இயக்குநரான பால்ஷெரடர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் ப்ரெஸனின் திரைப்பாணியை Transcendental style என்று அழைக்கிறார். அது உண்மையே.
ப்ரெஸன் தனது படைப்பின் மூலம் ஒரு உள்ளார்ந்த கலைவெளிப்பாட்டினை வெளிப்படுத்துகிறார், அது எளிமையின் அழகியல். தனித்துவமும் வியப்பும் கொண்ட திரைமொழி. ப்ரெஸன் ஓவியராக வாழ்க்கையைத் துவக்கியவர். ஓவியமே சினிமாவை நோக்கி தன்னை அழைத்துச் சென்றது என்கிறார்.
A Man Escaped படத்தின் துவக்கக் காட்சியினைப் பாருங்கள். காரில் கைதியாக அழைத்து வரப்படும் ஃபோன்டைன் காரிலிருந்து குதித்துத் தப்புவதற்காகத் தனது கைகளைக் காரின் கைபிடியை நோக்கி ரகசியமாக நகர்த்துகிறான். அவனது கண்களில் சலனமில்லை. அருகிலுள்ள கைதிகளும் அதைக் கண்டுகொள்வதில்லை. கார் ஒட்டுகிறவனின் கைகள் மட்டுமே காட்டப்படுகின்றன. கார் சாலையின் ஒரு திருப்பத்தில் அவன் காரிலிருந்து குதித்துத் தப்பிவிடுகிறான். கேமிரா காரின் பக்க கண்ணாடி வழியா வெளியே நடப்பதைக் காட்டுகிறது. ஃபோன்டைன் பிடிபடுகிறான். அடித்துத் துவைக்கப்படுகிறான். அவனை இழுத்துக் கொண்டுவந்து காரில் ஏற்றி விலங்கிடுகிறார்கள். ரத்தகறை படிந்த முகம். உடைகள். படம் முழுவதும் ப்ரஸன் கைகளை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படம் தஸ்தாயெவ்ஸ்கியின் The House of the Dead நாவலை நினைவுபடுத்துகிறது தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகனைப் போலவே தான் ஃபோன்டைன் நடந்து கொள்கிறான். சிறையில் ஒருவன் தனது மீட்சிக்காக ஒருவன் பைபிளைத் தேர்வு செய்வதும் தஸ்தாயெவ்ஸ்கியின் சாயலைத்தான் வெளிப்படுத்துகிறது. அவரது பிக்பாக்கெட் படமும் தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் தழுவப்பட்ட வடிவமே. நெருக்கடி ஒருமனிதனை என்ன செய்யும் என்பதையே ப்ரஸன் ஆராய்கிறார். புறச்சூழலின் பாதிப்புகள் எதுவும் ஃபோன்டைன் முயற்சிகளைத் தடுக்கவில்லை. அவன் உறுதியாகத் தனது முயற்சியை நம்புகிறான். முடிவில் வெற்றிபெறுகிறான். இந்த விடுதலை உணர்வை அவரது படங்களில் தொடர்ந்து காணமுடிகிறது.
Film is the definition of an art that requires a style: it takes an auteur, a signature. The auteur writes to the screen, expressing himself by way of varied shots of varied duration, varied angles and points of view. என்கிறார் பிரஸன். அதற்குச் சிறந்த உதாரணம் அவரது படங்களே
••