புதிய சிறுகதை
அந்த இரண்டு ஜப்பானியர்களும் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்திருந்தார்கள். கியாத்தோவிலிருந்து இந்தியாவின் தென்கோடியிலிருந்த கொடைக்கானல் மலைக்கு வந்து சேர்ந்த தூரமது.

உடல்வாகை வைத்து ஜப்பானியர்களின் வயதைக் கண்டறிய முடியாது. முகத்திலும் பெரிய மாற்றமிருக்காது. முழுவதுமாகத் தலைநரைத்த ஜப்பானியர் ஒருவரைக் கூட நந்தகுமார் கண்டதில்லை. கொடைக்கானலுக்கு வரும் வெள்ளைக்காரர்களில் ஒரு சிலரே வசதியானவர்கள். மற்றவர்கள் அந்த நாடுகளில் நடுத்தர வருமானமுள்ள தொழிலாளர்களாகவோ, அலுவலகப் பணியாளர்களாகவே இருப்பவர்கள். அபூர்வமாக ஒன்றிரண்டு இசைக்கலைஞர்கள், புகைப்படக்கலைஞர்கள் வருவதுண்டு. இதுவரை ஒரு சுமோ பயில்வான் கூடக் கொடைக்கானலுக்கு வந்து நந்தகுமார் கண்டதில்லை. சுமோ பயில்வான்களின் சண்டையைத் தொலைக்காட்சியில் ரசித்துப் பார்த்திருக்கிறான்.
எத்தனையோ ஜப்பானியர்கள் கொடைக்கானலுக்கு வந்து போயிருக்கிறார்கள். ஆனால் பொதுவெளியில் குடித்துப் போதை தலைக்கேறி கூச்சலிடும் ஒரு ஜப்பானியரை அவன் கண்டதில்லை. அவர்கள் சுய ஒழுக்கத்தை எப்போதும் பேணுகிறார்கள். நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பதில் தீவிரமாகயிருக்கிறார்கள்.
மேபல் விடுதி அறையிலிருந்து ரத்னபிரபாகர் போன் செய்து அந்த ஜப்பானியர்கள் டக்ளஸ் பங்களாவைப் பார்க்க விரும்புவதாகச் சொன்ன போது வெளியாட்களுக்கு இப்போது அனுமதியில்லை. இரண்டு வருஷங்களாக அனுமதி நிறுத்தப்பட்டுவிட்டது என்று தான் நந்தகுமார் சொன்னான்.
ஆனால் பிரபாகர் இவர்கள் டக்ளஸ் பங்களாவைக் காணுவதற்காக மட்டுமே ஜப்பானிலிருந்து வந்திருக்கிறார்கள். அரை மணி நேரம் போதும் என்கிறார்கள். சரியாகக் காலை ஏழு மணிக்கு வந்துவிடுவார்கள் என்று சொல்லி அவனைச் சம்மதிக்க வைத்தான்.
டக்ளஸ் பங்களா என்று அழைக்கப்படும் அந்த மாளிகை ஒரு வண்ணத்துப்பூச்சி ம்யூசியம். அப்படி ஒரு ம்யூசியம் இருப்பது கொடைக்கானலில் வசிக்கும் பலருக்கும் தெரியாது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எப்போதாவது அதைப் பார்வையிட வருவதுண்டு. ம்யூசியத்தைச் சுற்றிப் பார்க்க நூறு ரூபாய் கட்டணம்.
வண்ணத்துப்பூச்சிகளை நம் ஆட்களில் எவர் காசு கொடுத்துப் பார்க்கப்போகிறார்கள். சாலையோரம் தென்படும் மஞ்சள். வெள்ளை நீல வண்ணத்துப்பூச்சிகளையே யாரும் கவனித்துப் பார்ப்பதில்லை. அதன் அழகை ரசிப்பதில்லை. இந்த நிலையில் பாடம் செய்து வைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளைக் காண யார் வரப்போகிறார்கள்.
பதினேழாயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி ரகங்கள் உலகில் இருக்கின்றன என்கிறார்கள். இந்த ம்யூசியத்தில் நான்காயிரம் விதமான வண்ணத்துப்பூச்சிகள் பாடம் செய்து வைக்கப்பட்டிருந்தன. அத்தோடு வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய ஓவியங்களும், புத்தகங்களும் ஆராய்ச்சி குறிப்புகளும் அங்கிருந்தன.
ஜான் டக்ளஸ் தாம்சன் கண்டுபிடித்த வண்ணத்துப்பூச்சி ஒன்றுக்கு அவரது பெயரே வைத்திருக்கிறார்கள். அதையும் இந்த ம்யூசியத்தில் காணலாம்.

ஒரு மனிதனின் பெயரை எதற்காக வண்ணத்துப்பூச்சிக்கு வைக்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. பெயரில்லாத வண்ணத்துப்பூச்சிகள் என்ன செய்யும். வண்ணத்துப்பூச்சியை யார் பெயர் சொல்லி அழைப்பார்கள்.
அந்த ம்யூசியத்தின் பொறுப்பாளராக நந்தகுமாருக்கு வேலை கிடைத்தது தற்செயலானது. அவன் விலங்கியல் முதுகலை படித்துவிட்டு பெங்களூரிலுள்ள ஆய்வு நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணி செய்து கொண்டிருந்த போது வண்ணத்துப்பூச்சிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினான். அது மெக்சிகோ வண்ணத்துப்பூச்சி ரகம் ஒன்றினைப் பற்றியது.
அந்தக் கட்டுரை லண்டனிலுள்ள ஆய்விதழ் ஒன்றில் வெளியானது. அதைப் படித்துத் தான் லாரா அவனுடன் தொடர்பு கொண்டாள்.
லாரா தாம்சன் தான் தற்போது டக்ளஸ் பங்களாவை நிர்வாகம் செய்து வருபவர். அந்த மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே ம்யூசியமாக மாற்றப்பட்டிருந்தது. மற்ற பகுதி லாராவின் உபயோகித்திற்காகப் பயன்படுத்தபட்டது. ஆண்டில் ஒரு மாதம் லாரா இந்தியா வருவார். அப்போது அந்த அறையில் தங்கிக் கொள்வதுண்டு. லாரா ஜான் டக்ளஸிற்கு என்ன உறவு என்று தெரியவில்லை. ஆனால் உயிலில் அத்தனை சொத்துகளும் அவளது பெயரில் தான் எழுதப்பட்டிருந்தது.
அவள் யாராக இருந்தாலும் நமக்கென்ன என்றே நந்தகுமார் நினைத்தான். நல்ல சம்பளத்துடன் வேலை. ம்யூசியத்தை ஒட்டிய சிறு அறை ஒன்றிலே தங்கிக் கொள்ளலாம். நல்ல சீதோஷ்ண நிலை. இந்த மூன்றும் சேர்ந்து அவனைக் கொடைக்கானலில் வேலையை ஏற்றுக் கொள்ள வைத்தன.
வேலைக்குச் சேர்ந்த சில நாட்களில் ஒருவர் கூட ம்யூசியத்திற்கு வராத போது எரிச்சலாக வந்தது. பேச்சுத்துணைக்குக் கூட ஆள் இல்லையே என்று ஏங்கினான். பாடம் செய்து வைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டாலே வெறுப்பாக வந்தது.
பின்பு அவனாகத் தேவாலயத்தை ஒட்டி மெக்கானிக் ஷாப் வைத்துள்ள சாய் பிரசாத்துடன் நட்பு கொண்டான். அவன் வழியாகப் புதிய நண்பர்கள் உருவானார்கள். அவர்கள் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ம்யூசியத்தை மூடிவிட்டு சீட்டு விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். சில நாட்கள் ஏழு மணி வரை சீட்டு தொடர்வதுண்டு. இரவில் குடி. போதையுடன் உறக்கம். சில நாட்கள் ஜீப்பில் மதுரைக்குப் போய்ச் சுற்றித் திரும்பி வருவதும் உண்டு.
மழைக்காலத்தில் ஒற்றை ஆளாகத் தங்கியிருப்பது நந்தகுமாருக்குச் சங்கடமாக இருந்தது. மழை என்றால் பேய் மழை. மரங்கள் முறிந்து விழுந்து சாலையில் போக்குவரத்து நின்றுபோகுமளவு மழை. ஜன்னல், கதவுகளை மூடி கட்டிலில் படுத்து கிடந்த போதும் காற்றின் வேகத்தில் கதவு பிய்த்து எறியப்படுமோ என்று பயமாக இருக்கும்.
குளிர்காலத்தில் மிகவும் ரம்மியாக இருக்கும். அவன் குளிரை மிகவும் ரசிப்பான். அதுவும் விடிகாலை நேரங்களில் அந்த மாளிகையை ஒட்டிய சாலையில் பனிப்புகையின் ஊடாக நடந்து செல்வது அத்தனை சுகமாகயிருக்கும். லாரா அவனது சம்பளத்தைத் தவறாமல் கொடுத்துவந்தாள். எப்போதாவது ஒரு முறை போனில் அவனுடன் பேசுவதுண்டு. எதற்காக இப்படி ஒரு ம்யூசியத்தை நடத்துகிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் லாரா இனி பொதுமக்கள் யாரையும் ம்யூசியத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். ஆய்வாளர்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்று சொன்னாள்.
பொதுமக்கள் யார் வரப்போகிறார்கள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டபடியே அப்படியே செய்துவிடுகிறேன் என்று நந்தகுமார் ம்யூசியத்தின் வாசலில் ஒரு அறிவிப்புப் பலகையை எழுதி வைத்தான். அதை எவரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
ஜான் டக்ளஸ் தாம்சனுக்கு எப்படி வண்ணத்துப்பூச்சிகளின் மீது ஆர்வம் உருவானது என்று தெரியவில்லை. மனிதர்களின் விசித்திரம் அவர்கள் எதில் எப்போதும் தீவிரம் கொள்வார்கள் என்று யாருக்கும் தெரியாது என்பதே.
அந்த ம்யூசியத்தில் இருந்த ஜான் டக்ளஸ் டயரியில் அவரது பயணக் குறிப்புகளும் வரைபடங்களும் இருந்தன தவிர அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் அதிகமில்லை.
கிழக்கிந்திய கம்பெனியில் டாக்டராகப் பணியாற்றியவர் ஜான் டக்ளஸ் தாம்சன் தன் இருபது வயது முதல் உலகெங்கும் சுற்றியலைந்திருக்கிறார். சில காலம் அவர் சீனாவிலும் ஜப்பானிலும் மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு சித்திர எழுத்துக்கலைஞராக மாறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் ஜாவாவில் உள்ள பௌத்த மடாலயம் ஒன்றில் துறவியாகக் கழித்திருக்கிறார்.
பின்பு அங்கிருந்து வெளியேறி இலங்கையிலுள்ள குதிரைப்பண்ணை ஒன்றினை நிர்வாகம் செய்திருக்கிறார். பின்பு லண்டன் சென்று திருமணம் செய்து கொண்டு இளம்மனைவியோடு இந்தியா திரும்பி. பதினேழு ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுமதி நிர்வாகத்தினைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரது மனைவியின பெயரில் சொந்தக் கப்பல் ஒன்று இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் வணிகம் செய்தது. அதில் நிறையப் பொருள் ஈட்டினார். கல்கத்தாவில் பெரிய வீடு ஒன்று கட்டி குடியிருந்தார்.
ஜான் டக்ளஸ் கொடைக்கானலுக்கு எப்படி வந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது இறுதி ஆண்டுகள் முழுவதும் கொடைக்கானலில் கழிந்திருக்கின்றன. கையில் ஒரு வலையோடு அவர் வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்திப் போவதை உள்ளூர்வாசிகள் கண்டிருக்கிறார்கள். அவருக்குப் பூச்சி பிடிப்பவன் என்று தான் பட்டப்பெயர்.
இந்த மாளிகையை அவர் கட்டி நூற்றுப்பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தன. யாரெல்லாம் இதில் வசித்தார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகள் இருந்தது போன்ற அடையாளமேயில்லை.
ம்யூசியத்தின் நுழைவாயிலில் அவரது ஆள் உயர ஓவியம் ஒன்று இருக்கிறது. அந்த ஓவியத்தில் செம்பட்டை மயிர் கொண்ட நாயோடு அவர் நின்று கொண்டிருக்கிறார். நல்ல உயரம். கூர்மையான நாசி. சிறிய கண்கள். அவர் வைத்திருந்த தொப்பியில் ஒரு குயிலின் படம் வரையப்பட்டிருந்தது. ரசனையான மனிதராக இருந்திருக்கிறார் என்று நந்தகுமாருக்குத் தோன்றியது

பார்வையாளர்கள் வராத நாட்களில் நந்தகுமார் ம்யூசியத்திலிருந்த பழைய இதழ்களைப் புரட்டிப் படித்துக் கொண்டிருப்பான். இன்னும் மனிதர்கள் கண்டறியாத வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. புதையல் தேடுவது போல அதைச் சிலர் தேடிக் கொண்டு தானிருக்கிறார்கள்.
நம்மைச் சுற்றி ஏராளமான உலகங்கள் தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று வண்ணத்துப்பூச்சிகளின் உலகம். அதை நோக்கி ஒருவன் திரும்பிவிட்டால் அந்த உலகம் அவனை இழுத்துக் கொண்டுவிடும். இப்படி ஓராயிரம் உலகங்கள் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வேலை வீடு குழந்தைகள் சாப்பாடு தூக்கம் என்றிருக்கும் நமது உலகம் மட்டும் வாழ்க்கையில்லை. அதற்கு வெளியே அசாதாரணமாக நிறைய நடக்கவே செய்கின்றன
ஒருமுறை அந்தமானிலிருந்து வந்திருந்த ஆய்வாளர் ம்யூசியத்திலிருந்த வண்ணத்துபூச்சிகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு ஜான் டக்ளஸ் தாம்சன் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்லும் போது கடலில் நோயுற்று இறந்து போனார். அவரது உடலைக் கடலில் வீசிவிட்டார் என்ற தகவலைச் சொன்னார். பாவம். டக்ளஸ் தனது சொந்த ஊருக்குத் திரும்பாமலே இறந்து போயிருக்கிறார். கடலில் அவரது உடல் மிதப்பதைப் பற்றி நினைத்தபோது நந்தகுமாருக்கு வருத்தமாகவே இருந்தது
••
சரியாகக் காலை ஏழுமணிக்கு அந்த இரண்டு ஜப்பானியர்களும் ம்யூசியத்தின் வாசலில் நின்றிருந்தார்கள். நந்தகுமார் அப்போது தான் எழுந்திருந்தான். இன்னும் டீ கூடக் குடிக்கவில்லை. ஆனால் அழைப்பு மணி ஒலிக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தான்.
இரண்டு ஜப்பானியர்களும் ஒன்று போலக் கறுப்பு நிற மேல்கோட்டு அணிந்திருந்தார்கள். உள்ளே வெள்ளை நிற சட்டை. சாம்பல் வண்ண பேண்ட். லெதர் பூட்ஸ்.. அவர்கள் அணிந்திருந்த கண்ணாடி கூட ஒன்றுபோலவே இருந்தது. ஒருவர் கையில் பெரிய லெதர் பை வைத்திருந்தார். மற்றவர் கோட்டில் தங்கத்தில் பறவை உருவம் பதித்த கிளிப் சொருகப்பட்டிருந்தது. அவர்களின் முகம் முழுமையான புத்துணர்ச்சியோடு இருந்தது. நந்தகுமார் அவர்களை வரவேற்றுப் பதிவேட்டில் அவர்களின் பெயர் விபரங்களை எழுதும்படி ஆங்கிலத்தில் சொன்னான்
நன்றி சொன்னபடியே இருவரில் தங்கப் பறவை கிளிப் சொருகியிருந்தவர் அழகான கையெழுத்தில் தன் பெயரை எழுதிவிட்டு “என் பெயர் டாக்டர் வாட்னபே“ என்று அறிமுகம் செய்து கொண்டார்.
லெதர் பை வைத்திருந்தவர் அது போலவே கையெழுத்துப் போட்டுவிட்டு தன் பெயர் மசகோ டோகாவா என்று அறிமுகமானார்.
அவர்களிடம் ம்யூசியத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணத்தை வசூல் செய்துவிட்டு அவர்களின் பாஸ்போர்ட் நம்பரை பதிவு செய்தவற்காகக் கணிப்பொறியை நோக்கிச் சென்றான் நந்தகுமார்
அவர்கள் ம்யூசியத்தினுள் செல்லாமல் ஓரமாக ஏதோ யோசனையுடன் நின்றிருந்தார்கள்
“நீங்கள் உள்ளே போய் ம்யூசியத்தைச் சுற்றிப் பார்க்கலாம்“ என்றான் நந்து
“நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளைக் காண வரவில்லை“ என்று டாக்டர் வாட்னபே தாழ்ந்த குரலில் சொன்னார்
“வேறு என்ன வேண்டும்“ என்று குழப்பத்துடன் கேட்டான் நந்தகுமார்
“இங்கே ஜான் டக்ளஸ் தாம்சன் சேகரித்த கலைப்பொருட்கள் யாவும் இருக்கிறதா“
“ஆமாம். உள் அறை ஒன்றில் பூட்டி வைத்திருக்கிறோம்“
“அதை நாங்கள் பார்க்க முடியுமா“
“அதற்கு நீங்கள் முன்அனுமதி பெற வேண்டும்“
“பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டதாக அறிந்தே வந்தோம்“
“யார் சொன்னது அப்படி“ என்று கேட்டான் நந்தகுமார்
அவர்கள் ஒரு பழைய ஆங்கில வார இதழில் வெளியான கட்டுரையைக் காட்டினார்கள். அதில் அந்த ம்யூசியத்தைப் பற்றிய விபரங்களுடன் ஜான் டக்ளஸ் தாம்சஸின் கலைப்பொருட்கள் கொண்ட அலமாரிகளின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.
“2016ல் ஒரு திருட்டு நடந்துவிட்டது. அதன் பிறகு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை“
“நாங்கள் அந்தப் பொருட்களை ஒருமுறை கண்ணால் பார்த்தால் போதும்“
“என்னால் அனுமதிக்கமுடியாது. நீங்கள் இதன் உரிமையாளரைத் தான் தொடர்பு கொள்ள வேண்டும்“
“மூன்று முறை லாரா தாம்சனைத் தொடர்பு கொண்டோம். அவர் எங்களுக்குப் பதில் அளிக்கவில்லை. “
“அப்படியானால் உங்களை அனுமதிக்கமுடியாது. நான் ம்யூசியத்திற்கு மட்டுமே நிர்வாகி. “
“ஏழாயிரம் கிலோ மீட்டர் பயணித்து வந்திருக்கிறோம். ஒரேயொரு முறை பார்த்தால் போதும். “
“என்னால் அனுமதிக்க முடியாது. வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க விரும்பினால் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிளம்புங்கள்“ என்று கறாராகச் சொன்னான் நந்தகுமார்
“ஏன் கோவித்துக் கொள்கிறீர்கள். நீங்கள் மனது வைத்தால் எங்களுக்காக லாராவிடம் பேசி அனுமதி பெற முடியும் “
“நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாதே“
“நாங்கள் டோக்கியோ பல்கலைக்கழக கலைவரலாற்றுத் துறை ஆய்வாளர்கள். நான் முப்பது ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். இவர் ஒய்வு பெற்றுவிட்டார்“ என்று சொன்னார் மசகோ டோகாவா
அத்துடன் தனது லெதர் பையிலிருந்து நிறையப் புகைப்படங்கள். பேப்பர் கட்டிங் போன்றவற்றை எடுத்துக் காட்டினார்.
“லாரா லண்டனில் வசிக்கிறார். அவரை இப்போது தொடர்பு கொள்ள இயலாது. பாரீன் கால் பேசும் வசதி இங்கேயில்லை“
“ஒரு மெயில் அனுப்பிப் பாருங்கள்“ என்றார் டாக்டர் வாட்னபே
“லாரா உடனே பதில் தரமாட்டார். “
“நாங்கள் காத்திருக்கிறோம்“.
“அவர் உங்களை நிச்சயம் அனுமதிக்கமாட்டார். நீங்கள் கிளம்பலாம்“
“ஒருவேளை அனுமதித்தால். அது அதிர்ஷ்டம் தானே. காத்திருப்பது எங்களுக்குச் சிரமமான விஷயமில்லை“
“ஐம்பது ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்“ என்றார் டாக்டர் வாட்னபே
“இதற்கு முன்பு எப்போதாவது இங்கே வந்திருக்கிறீர்களா“
“1993ல் டாக்டர் இஷிகவா வந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய கலை ஆய்வாளர். இஷிகவா ஆண்டுக்கு ஒருமுறை இங்கே வருவது வழக்கம். 2015ல் இறந்துவிட்டார். அவரைக் கடைசி வரை கலைப்பொருட்களைப் பார்வையிட அனுமதிக்கவேயில்லை“ என்று வருத்தமான குரலில் சொன்னார் டாக்டர் வாட்னபே
“அது தெரிந்தும் நீங்கள் ஏன் அனுமதி பெறாமல் வந்திருக்கிறீர்கள்“
“தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கல் கரைந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதில்லையா“ என்று சொன்னார் மசகோ டோகாவா
“வீண் நம்பிக்கை. இங்கே முறையான அனுமதி பெறாமல் எதையும் காண முடியாது. ம்யூசியம் முழுவதும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இங்கே வரும் அனைவரும் பதிவு செய்யப்படுகிறார்கள். என்னால் உங்களுக்கு உதவ முடியாது“ என்று அழுத்தமா குரலில் சொன்னான் நந்தகுமார்
“நாங்கள் ஆய்வாளர்கள். திருடர்களில்லை“ என்று பணிவாகச் சொன்னார் டாக்டர் வாட்னபே
“திருடர்கள் யாரும் பகலில் இப்படிக் கதவைத்தட்டி உள்ளே வருவதில்லை“ என்றான் நந்தகுமார்.
“எங்களுக்காக இந்த உதவியை நீங்கள் செய்ய வேண்டும். ஒருவேளை லாரா அனுமதி தர மறுத்துவிட்டால் நாங்கள் புறப்பட்டு விடுகிறோம்“.
“சரி, உங்களுக்காக மெயில் அனுப்பிப் பார்க்கிறேன். பதில் கிடைத்தால் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்“
“மேபல் ஹோட்டலுக்குத் தெரிவித்துவிடுங்கள். உடனே கிளம்பி வந்துவிடுகிறோம் “என்றார் மசகோ டோகாவா
விருப்பமில்லாமல் தலையாட்டினான் நந்தகுமார்
அவர்கள் நன்றி தெரிவித்தபடியே வாசலுக்கு வந்தார்கள். திடீரென ஏதோ மனதில் தோன்ற அவர்களிடம் “தேநீர் அருந்துகிறீர்களா“ என்று கேட்டான் நந்தகுமார்
சரியெனத் தலையாட்டினார்கள்.
“உட்காருங்கள் கொண்டுவருகிறேன்“ என்று அவன் தன் அறையை நோக்கி நடந்தான்
அவர்கள் இருவரும் இரண்டு நிழல்கள் அமர்ந்திருப்பது போல இருக்கையில் சலனமின்றி அமர்ந்திருந்தார்கள்
அவன் கொடுத்த தேநீரைக் கையில் வாங்கிக் கொண்டு மசகோ சொன்னார்
“உங்கள் அன்புக்கு நன்றி. “
அது போலவே நன்றி தெரிவித்தபடியே டாக்டர் வாட்னபே தேநீரை வாங்கிக் கொண்டார். உதட்டு நுனியில் தேநீர் கோப்பையை வைத்துச் சப்தமில்லாமல் துளித்துளியாகத் தேநீரை அவர்கள் ருசித்துக் குடிப்பதை வியந்து பார்த்துக் கொண்டிருந்தான். இதில் கூடவா இத்தனை நேர்த்தி. கவனம்.
“நீங்கள் வந்த கார் எங்கே நிற்கிறது“ என்று கேட்டான் நந்தகுமார்
“நாங்கள் விடுதியிலிருந்து நடந்தே வந்தோம். நாம் விரும்பும் விஷயம் நடக்க வேண்டும் என்றால் இப்படிப் பாதயாத்திரை செய்வது வழக்கம் தானே“ என்றார் வாட்னபே.
மேபல் விடுதியிலிருந்து இந்த ம்யூசியம் எப்படியும் பத்துகிலோ மீட்டர் இருக்கும். அவ்வளவு தூரம் விடிகாலையில் நடந்துவந்திருக்கிறார்கள். அப்படி என்ன தேடுகிறார்கள். எதற்காக இந்த வேண்டுதல் என்று புரியவில்லை.
தாம்ஸனின் கலைப்பொருட்களைப் பார்க்காமல் போகிறோமே என்ற துளி வருத்தம் கூட அவர்கள் முகத்தில் இல்லை. பள்ளிவிட்டு வீடு திரும்பும் சிறுவர்களைப் போலவே உற்சாகத்துடன் அவர்கள் மேபல் விடுதியை நோக்கி நடந்தார்கள்.
அவர்கள் சென்றபிறகு ஜான் டக்ளஸ் தாம்ஸனின் கலைப்பொருட்கள் இருந்த உள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்று நந்தகுமார் பார்வையிட்டான். சீனவிசிறிகள். வெண்கலத்தால் செய்த புத்தர் சிலை, பறவை வடிவிலான உலக்கை,கிரேக்க காதலர் சிற்பம், அஸ்டக்குகளின் தலைக்கவசம், பாபிலோனிய வெண்கலக் கண்ணாடி, டிராகன் கிண்ணம், முகலாய மதுக்கோப்பைகள். வெண்கல பதுமைகள், பிரெஞ்சு கண்ணாடி சிற்பங்கள். ஐந்து தலை நாகச்சிலை, கப்பலில் பயன்படுத்தபடும் தொலைநோக்கிகள். பழைய சுவர்கடிகாரங்கள். தாந்திரீக பதுமைகள். பௌத்த பிரார்த்தனை மணி. தந்தத்தில் செய்த அலங்காரப்பெட்டி பழைய காலத் துப்பாக்கிகள். குறுங்கத்திகள். மணற்கடிகாரம். அரபு நாட்டுச் சதுரங்கப்பலகை. ஹவாய் இறகுத் தொப்பி என விநோதமான பொருட்கள் மூன்று அலமாரிகள் நிறைய இருந்தன.
இதில் சில பொருட்களை அவனால் அடையாளம் காணவே முடியவில்லை. இதில் எதைத் தேடி அந்த ஜப்பானியர்கள் வந்திருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
ஒரு ஆராய்ச்சிக்காக முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ஜப்பானியர்கள் அலைந்து கொண்டிருப்பது அவர்கள் மீது பரிவை ஏற்படுத்தியது. அன்று மாலை லாராவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். அதில் டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருந்தான்.
மறுநாள் காலை அதே ஏழு மணிக்கு அழைப்பு மணி அடிக்கும் சப்தம் கேட்டுப் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தபோது புன்சிரிப்புடன் அதே இரண்டு ஜப்பானியர்கள் காலை வணக்கம் சொன்னார்கள்.
“லாராவிடமிருந்து பதில் வரவில்லை“ என்று தூக்க கலக்கமாகச் சொன்னான் நந்தகுமார்
“நல்லது. வளாகத்தின் நுழைவாயிலில் நிறையக் காய்ந்த சருகுகள் நிரம்பிக் கிடக்கின்றன. படிகளில் கூட ஒரே அழுக்கு. ஒரு துடைப்பானும் வாளியும் தரமுடியுமா“ என்று கேட்டார் மசகோ
“நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். சுத்தம் செய்ய ஆள் இருக்கிறார்கள்“ என்று மறுத்தான் நந்தகுமார்.
“எங்களால் முடிந்த உதவி“ என்றபடியே அவர்கள் வெளியே இருந்த இரும்பு வாளி. துடைப்பான். பெருக்குமாறு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நுழைவாயிலை நோக்கி நடந்தார்கள்
நந்தகுமாரால் அவர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு மணி நேரத்தின் பிறகு அவன் நுழைவாயில் அருகே சென்றபோது சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தது. தொட்டிச்செடிகளை வெயில்படும்படி சரியாக அடுக்கியிருந்தார்கள். தண்ணீர் குழாயின் அடியில் படிந்திருந்த பாசியைச் சுத்தமாக அகற்றியிருந்தார்கள். அவர்கள் இருவரும் பெரிய பேராசிரியர்கள் என்பது வியப்பாக இருந்தது
அன்றும் அவர்கள் நந்தகுமாருடன் தேநீர் அருந்தினார்கள். டாக்டர் வாட்னபே தயக்கத்துடன் கேட்டார்
“உங்களைச் சிரமப்படுத்துகிறோம்.இன்னொரு முறை லாராவிற்கு மெயில் அனுப்ப முடியுமா “
“நேற்று அனுப்பிய மெயிலுக்குப் பதில் இல்லை. மறுபடியும் அனுப்பினால் கோவித்துக் கொள்வார்“
“அதுவும் சரி தான். நாங்கள் காத்திருக்கிறோம்“.
என்றபடி அவர்கள் மேபல் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஐந்து நாட்கள் இப்படி அவர்கள் காலை மாலை என்று ஏதாவது ஒரு நேரம் அவனைத் தேடி வந்து நின்றார்கள். ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு புதிய மலர்ச்செடி ஒன்றைக் கொண்டுவந்து தோட்டத்தில் நட்டுவைத்தார்கள். இன்னொரு நாள் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தை மண் அள்ளிப் போட்டுச் சரிசெய்தார்கள். இன்னொரு நாள் ஒரு கட்டு ஊதுபத்தி வாங்கி வந்து ம்யூசியத்தில் ஏற்றி வைத்து நறுமணம் கமழச் செய்தார்கள். அவர்களிடம் ஏமாற்றத்தின் அடையாளமேயில்லை. காத்திருப்பின் வலியை அவர்கள் கடந்து சென்றுவிட்டார்கள். சந்தோஷமாக அதை எதிர்கொண்டார்கள்.
ஆறாம் நாளில் காலை அவர்கள் வந்த போது நந்தகுமார் சொன்னான்
“லாரா உங்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். காலையில் தான் மெயில் வந்தது. இதற்கு மேல் நீங்கள் அலைவது வீண். “
“நன்றி. நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி. அடுத்த ஆண்டு நிச்சயம் அனுமதியோடு வருவோம். “
“இதில் வருத்தமேயில்லையா“
“நாம் விரும்பும் போது மழை பெய்யுமா. அல்லது முழுநிலவு தோன்றுமா. அது நடக்கும் போது தான் நடக்கும். காத்திருக்க வேண்டியது நமது கடமை. “
“உங்களை ஏமாற்றத்துடன் அனுப்ப மனம் வரவில்லை“.
“இதில் ஏமாற்றம் ஒன்றுமில்லை. இன்னும் சில காலம் கூடுதலாகக் காத்திருக்கப்போகிறோம். அவ்வளவு தான்“
“நீங்கள் புகைப்படம் எதுவும் எடுக்கமாட்டீர்கள் என்றால் நான் ஒரு யோசனை சொல்வேன்“
“கேமிரா எதையும் நாங்கள் கொண்டுவரவில்லை. “
“நான் உங்களை ஜான் டக்ளஸின் கலைப்பொருட்கள் உள்ள அறைக்கு அழைத்துப் போகிறேன். நீங்கள் ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம்“
அதைக்கேட்டவுடன் அவர்கள் கண்கள் விரிந்தன. உடலைக் குனிந்து வணங்கி நன்றி சொன்னார்கள்
நந்தகுமார் கண்காணிப்பு கேமிராவின் இணைப்பை தற்காலிமாகத் துண்டித்துவிட்டான். பின்பு அவர்களை உள் அறைக்குள் கூட்டிச் சென்றான். அவர்கள் நிதானமாகக் கண்ணாடி அலமாரியினுள் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறந்த குழந்தையைக் காணும் தந்தையைப் போலிருந்தது அவர்களின் செய்கை.
மூன்றாவது அலமாரியைப் பார்த்தபோது அவர்கள் முகம் மலர்ந்தது
டாக்டர் வாட்னபே மகிழ்ச்சியோடு சொன்னார்
“இதோ இருக்கிறது“
மசகோ அதை வியப்புடன் பார்த்தபடியே “ஆஹா. அற்புதம்“ என்று வியப்பில் ஆழ்ந்து போனார். அவரது கண்கள் எவ்வளவு விரிய முடியுமோ அவ்வளவு அகன்று விரிந்தன.
அப்படி என்ன வியந்து பார்க்கிறார்கள் என்று நந்தகுமாரும் எட்டிப்பார்த்தான்

அது ஒரு பூக்குவளை. அடர்நீல வண்ணபூக்குவளை. அரையடி உயரத்திலிருந்தது. இதில் என்ன இருக்கிறது என்று இப்படி வியந்து பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.
மசகோ தயக்கமான குரலில் கேட்டார்
“அந்த பூக்குவளையை வெளியே எடுத்து காட்ட முடியுமா“
நந்தகுமார் பூக்குவளையை வெளியே எடுத்துக் அவர்களின் கைகளில் கொடுத்தான். தெய்வ விக்ரகம் ஒன்றை வாங்கிக் கொள்வது போலப் பரவசத்துடன் அதைக் கையில் வாங்கிக் கொண்டார்கள்.
டாக்டர் வாட்னபே தனது கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு லென்ஸை எடுத்து அந்தப் பூக்குவளையை ஆராய்ந்து பார்த்தார்.
“கொக்கு முத்திரையிருக்கிறது. இது தாஷிமாவின் பூக்குவளையே தான்“
மறுநிமிஷம் அவர்கள் இருவரும் அந்தப் பூக்குவளையைத் தரையில் வைத்து அதன் முன்னால் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் கண்கள் கலங்கியிருந்தன. மூன்று முறை அவனுக்கு நன்றி சொன்னார்கள். பின்பு அந்தப் பூக்குவளையைக் கையில் எடுத்துச் சுற்றிச்சுற்றி நுட்பமாகப் பார்த்தபடியே இருந்தார்கள்
“விலை மதிப்பு மிக்கக் குவளையா“ என்று நந்தகுமார் கேட்டேன்
“இதற்கெல்லாம் விலையே கிடையாது. உலகில் இது போன்ற பூக்குவளை இன்னொன்று கிடையாது“
“என்ன சொல்கிறீர்கள்“
“இது உராசாகி தாஷிமா என்ற ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பக்கலைஞர் செய்த பூக்குவளை. இது போல மூன்றே மூன்று பூக்குவளைகளைத் தான் செய்திருக்கிறார். அதில் இரண்டு மன்னருக்குப் பரிசாக அளிக்கபட்டன. அது மன்னரின் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்தது. மலர்கள் வெறும் அலங்காரத்திற்கானவையில்லை. அவை முழுமையின் அடையாளம். ஒவ்வொரு மலரும் ஒரு ரகசியம். மலரென்பது அசாத்தியத்தின் அழகு. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது அந்தப் பூக்குவளைகள் உள்ளிட்ட விலை மதிக்கமுடியாத பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன. தாஷிமா செய்த மூன்றாவது பூக்குவளையை அவரது மகள் அயகாவிற்குப் பரிசாக அளித்திருக்கிறார். அவள் பதிமூன்று வயதில் நோயுற்று இறந்து போகவே இந்தக் குவளையும் அவளுடன் புதைக்கப்பட்டுவிட்டது. சில காலத்தின் பின்பு அந்தப் புதைமேட்டிலிருந்து பூக்குவளையை யாரோ திருடி விற்றுவிட்டார்கள் என்று படித்திருக்கிறோம். அதன்பிறகு தாஷிமாவின் பூக்குவளையைக் கண்டறிய முடியவில்லை. இந்தத் தேடல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது . எவர் கண்ணிலும் படவில்லை. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் இதைக் கண்ணால் பார்த்துவிட்டோம். “
“அப்படி என்ன இந்தப் பூக்குவளையில் அதிசயம்“ என்று கேட்டான் நந்தகுமார்
“இந்த பூக்குவளையில் வைக்கப்படும் மலர்கள் வாடவே வாடாது. அத்தோடு மலர்கள் ஒளிரும் என்பார்கள்“.
“நிஜமா“ என்று வியப்புடன் கேட்டான்
“அது தான் தாஷிமாவின் சிறப்பு. கலையின் உச்சத்தில் அது மாயத்தை உருவாக்கவே செய்யும். நீங்கள் விரும்பினால் பரிசோதனை செய்து பார்க்கலாம். “
“இது தான் தாஷிமாவின் பூக்குவளை என்று எப்படிச் சொல்கிறீர்கள்“
“இந்தப் பறவையைப் பாருங்கள். அதன் கண்களுக்குள் ஒரு எழுத்து இருக்கிறது. அது தாஷிமாவின் மகள் பெயரைக் குறிக்கும் அடையாளம். “
பறவையின் கண்ணே மிகச்சிறியதாக இருந்தது. அதற்குள் ஒரு கோடு போல ஏதோ கிறுக்கலாகத் தெரிந்தது. வாட்னபே தனது லென்ஸை வைத்து அந்தப் பறவையின் கண்ணில் தெரியும் எழுத்தைக் காட்டினார். எழுத்தையே சித்திரமாக்கியிருந்தார்கள். எவ்வளவு மகத்தான கலைநுட்பம்
வாட்னபே மேலும் சொன்னார்
“இந்த மலர்களைப் பாருங்கள். அதில் மூன்றாவது மலரில் ஒரு இதழ் குறைவாக இருக்கும். அதுவும் தாஷிமாவின் சிறப்பு. அவரது மூன்றாவது வயதில் அவரது அம்மா இறந்து போனாள். அந்த நினைவாக அவர் உருவாக்கிய கலைப்பொருட்களில் எப்போதும் மூன்றாவது மலர் முழுமையாக இருக்காது“
“ஆச்சரியம்“ என்றான் நந்தகுமார்
“இந்த பூக்குவளை எப்படி ஜான் டக்ளஸ் தாம்சனுக்குக் கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால் இதன் மதிப்பை உணராமல் அவர் ஒரு மூலையில் போட்டு வைத்திருக்கிறார்“ என்றார் மசகோ டோகாவா
“அது உண்மை. தாம்சனுக்கு இந்தப் பூக்குவளையினைப் பற்றித் தெரிந்திருந்தால் அது இந்நேரம் இங்கிலாந்து போயிருக்கும். ஒருவேளை ஏதாவது ம்யூசியம் விலைக்கு வாங்கியிருக்கவும் கூடும். “
“தாஷிமாவின் பூக்குவளை இங்கேயிருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது“
“வாரப்பத்திரிக்கையில் வந்த டக்ளஸ் ம்யூசியம் பற்றிய புகைப்படத்தில் இந்தப் பூக்குவளையை அடையாளம் கண்டு கொண்டவர் டாக்டர் இஷிகவா. அவரால் நேரில் பார்த்து உறுதி செய்யாமல் இதை உலகிற்கு அறிவிக்க முடியவில்லை. ஆகவே ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக அவர் ஆண்டுதோறும் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். அவரது வாழ்வின் இறுதி வரை அவரால் இதைக் காண முடியவில்லை. அவரது மாணவர்கள் என்ற முறையில் நாங்கள் அதைத் தேடிக் கொண்டிருந்தோம். புத்தரின் கருணை இன்று அதைச் சாத்தியமாக்கியது. “
நந்தகுமாருக்கு அவர்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்படும் அளவிற்கு அந்தப் பூக்குவளையில் என்ன இருக்கிறது என்றே தோன்றியது. அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாக இருந்தால் என்ன. அதற்காகக் கண்ணீர் விடுவார்களா. இப்படி ஆண்டுக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து தேடிக் கொண்டிருப்பார்களா. என்ன முட்டாள்தனமிது.
“இதன் மதிப்பு எவ்வளவு லட்சமிருக்கும்“ என்று மறுபடியும் கேட்டான் நந்தகுமார்
“இதைப் பணத்தால் மதிப்பிட நாங்கள் விரும்பவில்லை. உங்கள் குழந்தை எவ்வளவு பணம் பெறும் என்று நீங்கள் மதிப்பீடு செய்வீர்களா“ என்று கேட்டார் டாக்டர் வாட்னபே.
இது என்ன அசட்டுத்தனம். குழந்தையும் பூக்குவளையும் ஒன்றாகிவிடுமா என்ன. நந்தகுமார் அவர்களிடமிருந்த பூக்குவளையைத் தன்னுடைய கையில் வைத்துப் பார்த்தான். சாதாரணப் பழைய கலைப்பொருள். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. பாடம் செய்துவைக்கபட்ட வண்ணத்துப்பூச்சி போலத் தான் இதுவும்.
அவர்கள் மிகுந்த பணிவுடன் அவனுக்கு மறுபடியும் நன்றி சொன்னார்கள். டாக்டர் வாட்னபே அவனது கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னார்
“இனி நாங்கள் மகிழ்ச்சியோடு ஊர் திரும்புவோம். “
“இந்த பூக்குவளையைப் பார்த்த விஷயத்தை யாரிடம் சொல்ல வேண்டாம். என் வேலை பறிபோய்விடும்“ என்றான் நந்தகுமார்
“நிச்சயம் தெரிவிக்கமாட்டோம்“ என்று இருவரும் சொன்னார்கள்.
மறுபடியும் அந்தக் குவளையை அவர்கள் வணங்கினார்கள்.
அறைக்கதவை மூடிவிட்டு நந்தகுமார் வாசலுக்கு வந்தபோது அவர்கள் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கைகளைக் காற்றில் வீசி நடனமாடுவது போல நடந்து போவதைக் கண்டான். அதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை
••
அன்றிரவு அவன் மறுபடியும் அந்த அறைக்குள் போய்த் தாஷிமாவின் பூக்குவளையைத் தன்னுடைய அறைக்கே எடுத்துக் கொண்டு வந்தான். டிவி மீது அந்தப் பூக்குவளையை வைத்துவிட்டு வெளியே சென்று ஒரு கொத்து மலர்களைப் பறித்து வந்தான். அதைப் பூக்குவளையில் வைத்துவிட்டு டிவி பார்க்க ஆரம்பித்தான். இரவு உறங்கப்போவதற்காக விளக்கை அணைத்தபோது பூக்குவளையில் இருந்த மலர்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். என்ன ஆச்சரியமிது என்றபடியே அருகில் சென்று பார்த்தான். மின்மினிப்பூச்சி ஒளிர்வது போல மலர்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவர்கள் சொன்னது நிஜம். இது தாஷிமாவின் பூக்குவளையே தான்.
அன்றிரவு முழுவதும் அவன் அந்தப் பூக்குவளையைப் பார்த்தபடியே இருந்தான். மனதில் சொல்லமுடியாத சந்தோஷம் நிரம்பத் துவங்கியது.
மறுநாள் லாரா தாம்சன் போனில் அழைத்துக் கேட்டபோது அந்த ஜப்பானியர்கள் அதன்பிறகு திரும்பி வரவேயில்லை, ஊருக்குப் போய்விட்டார்கள் என்று பொய் சொன்னான்
அந்த ஜப்பானியர்கள் எப்போது ஊருக்குப் போனார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் பிந்திய தினங்களில் அவனுக்குள் பால்ய நினைவுகள் கொந்தளிக்கத் துவங்கின. உடனே சொந்த ஊருக்குப் போய் வரவேண்டும் என்ற ஆசை தீவிரமாகியது. மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்ட சொந்த ஊருக்குப் போய்ப் பழைய நண்பர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த நாளில் அறைக்கதவைத் திறந்த போது தாஷிமாவின் பூக்குவளையில் அப்போது தான் மலர்ந்தது போலப் பூக்கள் புதிதாக இருந்தன. அந்த மலர்களைக் காணும் போது ஜப்பானியர்களின் சிரித்த முகமே நினைவில் வந்து போனது
விசித்திரமான கலைப்பொருட்களை விடவும் விந்தையானவர்கள் மனிதர்களே என்று நந்தகுமாருக்குத் தோன்றியது.
தாஷிமாவின் பூக்குவளையை இருந்த இடத்தில் வைப்பதற்காகக் கையிலெடுத்துக் கொண்டு நடந்தான். மலரைப் போலவே அந்தப் பூக்குவளையும் எடையற்று இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
••••