பார்வையாளர்கள் இல்லாத நாடகம்

லாக்டவுன் காரணமாக லண்டனின் நாடக அரங்குகள் செயல்படாத சென்ற ஆண்டில் பார்வையாளர்கள் இல்லாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நாடகம் நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படி நிகழ்த்தப்பட்ட ஆன்டன் செகாவின் Uncle Vanya நாடகத்தை முழுமையாக ஒளிப்பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைப் பார்த்தேன்

இந்த நாடகம் இரண்டு முறை திரைப்படமாக வெளிவந்துள்ளது. திரைப்படத்தை விடவும் மேடைநாடகத்தை அப்படியே பதிவு செய்துள்ளது சிறப்பாக இருக்கிறது.

பார்வையாளர்கள் இல்லாமல் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் மேட்ச் போல இதுவும் நடந்தேறியிருக்கிறது.

தேர்ந்த நடிகர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட முறை இந்த நாடகத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு அந்த நாடகம் சொந்த வாழ்க்கையின் பகுதி போன்றது.

பேராசிரியர் செரப்ரியாகோவின் எஸ்டேட்டில் ஒரு இலையுதிர் பிற்பகல் பிற்பகலில் துவங்குகிறது. அந்தப் பண்ணைக்குத் தனது இளம் மனைவியுடன் வருகை தருகிறார் செரெப்ரியாகோவ். அந்த எஸ்டேட்டில் டாக்டர் ஆஸ்ட்ரோவ் பேராசிரியரின் கீல்வாதத்திற்குச் சிகிச்சையளிக்கிறார். அவரை குடும்பத்தில் ஒருவராகவே நடத்துகிறார்கள். .

செரப்ரியாகோவின் முதல்மனைவி இறந்து போய்விடவே அவர் இளம்பெண்ணான யெலினாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பேராசிரியரின் மகள் சோபியா எனப்படும் சோன்யா இளம்பெண். அவளுக்கு டாக்டர ஆஸ்ட்ரோவ் மீது காதல். அவளது காதலை உணர்ந்த போதும் ஆஸ்ட்ரோவ் அதை ஏற்கவில்லை. அவருக்கு யெலினா மீது ஆசை.

அவளுடன் ஊரை விட்டு ஒடிவிடுவதற்கு ஆசைப்படுகிறார். அவளோ வசதியான இந்த வாழ்க்கையை விட்டுப் போக விருப்பமின்றி டாக்டரின் காதலை ஏற்கத் தயங்குகிறாள். யெலினாவின் புத்திசாலித்தனம், அழகு இரண்டும் அவளது சமரசங்களினால் ஒடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் அந்த வீட்டின் காப்பாளராக உள்ள வான்யா மாமாவிற்குத் தன் வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் அதிகமாகிறது. அவருக்கு இப்போது வயது 47. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அந்தப் பண்ணையைப் பராமரித்து வருகிறார். இதனால் பேராசிரியர் நகரில் சொகுசாகச் சகல சௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு வாழ முடிகிறது..

வான்யா மாமா திருமணம் செய்து கொள்ளாதவர். பெண்கள் மீது தனக்கு நாட்டமில்லை என்கிறார். அது ஒரு நடிப்பு என்று ஆஸ்ட்ரோவ் குத்திக்காட்டுகிறான். அது உண்மையே. மாமாவிற்கும் யெலினா மீது ரகசியமாகக் காதல் இருக்கிறது.

பேராசிரியரின் பண்ணையைப் பாதுகாப்பதில் தனது வாழ்க்கை வீணாகிவிட்டது. தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பணமும் கிடைக்கவில்லை என்று வான்யா மாமா புலம்புகிறார்.

சோபியாவும் வான்யா மாமாவும் சேர்ந்து தான் எஸ்டேட்டை நிர்வாகம் செய்கிறார்கள். . பல ஆண்டுகளாக,, எஸ்டேட் வருமானத்தைப் பேராசிரியருக்கு முறையாக அனுப்பி வந்தார் மாமா வான்யா. அதற்கு அவருக்குச் சிறிய சம்பளம் மட்டுமே தரப்பட்டது

நாடகத்தின் முடிவில் பேராசிரியர் அந்த எஸ்டேட்டை விற்க விரும்புவதாகச் சொல்லும் போது வான்யா மாமா கொந்தளிக்கிறார்.

வான்யா மாமா ஒரு குறியீடு. இவரைப் போன்ற மனிதர்கள் எல்லாக் குடும்பங்களிலும் இருந்தார்கள். அவர்கள் எப்போதும் தன் வாழ்க்கை வீணாகிவிட்டதாகப் புலம்பிக் கொண்டும். தங்கள் தியாகத்தைப் பற்றித் தானே பெருமை பேசிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் பிரதிநிதியாகவே வான்யா மாமா உருவாக்கப்பட்டிருக்கிறார்.

நாடகத்தின் ஒரு அங்கத்தில் இந்தச் சலிப்பான வாழ்க்கை போதும் என டாக்டரும் ஊரைவிட்டு வெளியேறிப் போக முற்படுகிறார். அவரது நல்ல மனைவியாகத் தான் இருப்பேன் என்று சோன்யா மன்றாடுகிறாள். டாக்டர் குடிக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்கிறாள். அவரோ எப்படியாவது யெலினாவை அடைந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்

செகாவின் சிறுகதைகளைப் போலவே போலித்தனமும் வீண் பெருமையும் பேசும் கதாபாத்திரங்கள். திருமணத்திற்குப் பிறகான காதல். வீழ்ச்சியின் சித்திரங்களை இந்த நாடகத்திலும் காணமுடிகிறது.

யாரும் படிக்காத ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் ஓய்வுபெற்ற பேராசிரியர் அலெக்சாண்டர் செரெப்ரியாகோவ் தன்னை அறிவாளியாக நினைக்கிறார். ஆனால் அவர் ஒரு முட்டாள் என்கிறார் வான்யா மாமா.

எல்லோரும் தங்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்து கிடக்கிறார்கள். அனைவரும் சுயநலமானவர்களே. அவரவர் வட்டத்திற்குள் இருந்தபடியே உலகைக் காணுகிறார்கள். பிறரை மதிப்பிடுகிறார்கள். அந்த வீட்டிற்குள் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் ரகசியமாக நடந்து கொள்கிறார்கள். வம்பு பேசுகிறார்கள்.

நாடகத்தின் வான்யா மாமாவாக நடித்தவர் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். நாடகம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் இல்லாத போதும் நடிகர்கள் மேடையில் வந்து நின்று காலியான அரங்கினை வணங்கினார்கள். பின்பு அவர்கள் ஒப்பனை அறைக்குச் சென்று தனது ஒப்பனையைக் கலைத்துவிட்டு அவரவர் வீடு திரும்பக் காரை நோக்கிப் போகிறார்கள்

ஆளற்ற சாலை. அடைத்துச் சாத்தப்பட்ட கடைகள். லாக்டவுன் காலத்தின் இறுக்கமான சூழல். ஆனால் இதை எல்லாம் மறந்து அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள ரஷ்ய வாழ்க்கையினை அனுபவித்து வீடு திரும்பினார்கள்

நடிகர்களின் வருகையில் துவங்கி அவர்கள் வீடு திரும்புவது வரையான காட்சிகளைப் பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது சிறந்த அரங்க அமைப்பு. ஒளியமைப்பு. இசை என முழுமையான கலை அனுபவத்தை உருவாக்குகிறார்கள்.

செகாவ் செக்கோவ் இறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாடகம் 1899 இல் முதன்முறையாகக் கான்ஸ்டான்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியால் நிகழ்த்தப்பட்டது. அப்போது இந்த நாடகம் வெற்றிபெறவில்லை. எஸ்டேட் வாழ்க்கையை சொல்லும் இந்த நாடகம் முதலில் மாகாண அரங்குகளில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் இடம்பெற்ற மகிழ்ச்சியற்ற கதாபாத்திரங்களை மக்கள் விரும்பவில்லை

நாடகங்களை மேடையில் பார்ப்பதை விடவும் அதன் பிரதிகளை வாசிப்பதையே அதிகம் விரும்புகிறேன் என்கிறார் போர்ஹெஸ். நாடகப்பிரதிகளை வாசிக்கும் பழக்கம் நம்மிடையே இல்லை. ஆனால் கிரேக்க நாடகங்களையும். ஷேக்ஸ்பியரையும், மோலியரையும், டெனிசி வில்லியம்ஸ் நாடகங்களையும் வாசிக்கும் போது அவை மிகச்சிறந்த இலக்கியப்பிரதிகளாகவே இருக்கின்றன.

வாழ்க்கை தனக்கு அநீதி இழைத்துவிட்டது என நினைத்துப் புலம்பும் வான்யா மாமாவின் நிலை வேடிக்கையும் துயரமும் ஒருங்கே கொண்டது. அபத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது நகைச்சுவை ஒரு தப்பித்தலாகப் பயன்படுகிறது என்கிறார் செகாவ். இந்த நாடகத்திலும் அப்படியே நடைபெறுகிறது

••

0Shares
0