வெறும் வலை

மால்டாவிலுள்ள மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் “Luzzu” படத்தை இயக்கியுள்ளார் அலெக்ஸ் காமிலேரி. இயக்குநரின் முதற்படமிது

தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெஸ்மார்க்கின் வழியே கதை சொல்லப்படுகிறது. அவன் வைத்துள்ள நாட்டுப்படகு அவனது தாத்தாவிற்குச் சொந்தமானது.

நவீன இயந்திர படகுகளும் புதிய கடல் விதிமுறைகளும் வந்தபிறகு மீன்பிடி தொழிலில் கள்ளச்சந்தை உருவாகிவிட்டது. அது ஜெஸ்மார்க்கிற்குப் பிடிக்கவில்லை. மேலும் படகுகள் அதிகாரிகளால் சீரற்ற முறையில் சோதனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் மிரட்டி லஞ்சம் பெறுகிறார்கள். உள்ளூர் மீன் ஏலத்தினைச் சிலர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு கொள்ளை லாபம் பார்ப்பதுடன் கள்ளச்சந்தையினையும் உருவாக்குகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின் படி கடலில் உள்ள சில அரிய வகை மீன்களைப் பிடிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அந்த மீன்கள் வலையில் அகப்பட்டால் கூட அவற்றைக் கடலில் திரும்ப விட்டுவிட வேண்டும் . ஆனால் சில மீனவர்கள் அவற்றை ரகசியமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு ஏலம் விடுபவர்கள் உறுதுணை.

ஜெஸ்மார்க் தனது பழைய நாட்டுப்படகுடன் கடலுக்குச் செல்கிறான். கிடைத்த மீன்களை விற்று வாழ்க்கையை நடத்துகிறான். கஷ்டமான சூழ்நிலை. அவனது இளம்மனைவி டெனிஸ் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வேலைக்குப் போய் வருகிறாள்.

போதுமான தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைக்குச் சத்துக்குறைபாடு ஏற்படுகிறது. . அதற்குச் சத்தான உணவு மற்றும் பால்பொருட்கள் வாங்கித் தர வேண்டும். சிறப்பு மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்கிறார் பெண் மருத்துவர்.

இதற்குப் பணத்திற்கு என்ன செய்வது என ஜெஸ்மார்க் கவலைப்படுகிறான். ஆனால் டெனிஸ் தனது அம்மாவின் உதவியை நாடுகிறாள். இது ஜெஸ்மார்க்கிற்குப் பிடிக்கவில்லை. அவளோ நெருக்கடியான நிலையில் பிள்ளையைத் தனது அம்மாவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அவனுடன் சண்டையிட்டு குழந்தையுடன் சென்றுவிடுகிறாள்

கடலுக்குச் செல்லும் ஜெஸ்மார்க் வலையில் மீன்கள் விழுவதில்லை. ஏமாற்றத்துடன் கரை திரும்புகிறான். அவன் கொண்டுவரும் மீன்களை ஏலத்தில் விடுகிறவன் நிராகரிக்கிறான். ஆகவே சம்பாதிக்க வேண்டித் தெரிந்த சில்லறை வேலைகளில் ஈடுபடுகிறான்.

இந்தச் சூழலில் மீன் தொழிலின் குற்றவியல் உலகம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. ஜெஸ்மார்க் தவறான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறான். இதில் நிறையப் பணம் கிடைக்கிறது. ஆனால் அவனது மனைவிக்கு அவனது இந்தப் புதிய வாழ்க்கை பிடிக்கவில்லை.

படம் முழுவதும் அவனது படகு ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. படகின் ஒருபக்கம் ஏற்பட்டுள்ள கசிவைச் சரிசெய்ய அவனுக்குப் பணம் தேவைப்படுகிறது. அவன் குழந்தையாக இருந்தபோது அவனது காலடித் தடத்தை அந்தப் படகில் தந்தை பதித்திருக்கிறார். அது போலவே ஒரு காட்சியில் ஜெஸ்மார்க்கும் தனது மகனின் காலடித்தடத்தைப் பதிவு செய்கிறான். ஆனால் அந்தப் படகை நம்பி வாழ முடியாது என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்துவிடுகிறது. முடிவில் படகை விற்றுவிட்டு ஒரு வேன் வாங்குகிறான். கள்ளச்சந்தையில் அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறான்.

ஏமாற்றமான மனநிலையில் ஜெஸ்மார்க் மீனவர்களுடன் உரையாடும் காட்சி சிறப்பானது. அதில் அவர்கள் காலமாற்றம் கடல் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். கவலைப்படுகிறார்கள். மீனவர்களுக்குத் தரப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அது தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றியும் ஆதங்கத்துடன் உரையாடுகிறார்கள்.

ஒரு காட்சியில் ஜெஸ்மார்க் குழந்தையைக் காணுவதற்காக மாமியார் வீட்டிற்குச் செல்லும் போது அவள் அவமானப்படுத்தித் துரத்துவதும், கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்து உறங்கும் குழந்தையைக் கையில் ஏந்திக் கொஞ்சுவதும் அழகான காட்சி. இது போலவே வீட்டில் நடக்கும் விசேசத்தின் போது அது தனக்குப் பிடிக்கவில்லை என்பதை ஜெஸ்மார்க் வெளிப்படுத்தும் விதம். இரண்டும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது

தனக்கு விருப்பமில்லாத விஷயத்தில் ஒருவன் ஈடுபடும் போது இப்படியான அவமானங்களைச் சந்திக்கவே நேரிடும். தொழிலும் குடும்பமும் ஒரே நேரத்தில் அவனைத் துரத்துகின்றன.

ஜெஸ்மார்க்கின் படகு சரிசெய்யப்படும் போது புதிய வாழ்க்கையை அவன் துவக்கக் கூடும் என்றே நாம் நம்புகிறோம். ஆனால் அது சாத்தியமில்லை என்று உணர்ந்து அவனாகப் படகை விற்பனை செய்யக் கொண்டு செல்லும் போது நாமும் அந்த வேதனையைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்த நெருக்கத்தை உருவாக்கியதே படத்தின் சிறப்பு.

படகிலுள்ள மரக்கண்கள் மனதை உறுத்துகின்றன. அந்தக் கண்கள் அர்த்தமில்லாத உலகத்தை உற்று நோக்குகின்றன. எதையோ சொல்கின்றன.

ஒரு காட்சியில் மீன் ஏலமிடுகிறவனுடன் சண்டையிட்டுத் தான் பிடித்த மீன்களைத் தானே விற்பனை செய்யக் கடை கடையாகக் கொண்டு செல்கிறான் ஜெஸ்மார்க். எவரும் அதை வாங்க தயராகயில்லை. அவரது நிர்கதி கடல்வாழ்க்கை இன்று கைமாறிப்போய்விட்டது என்பதை நன்றாகப் புரிய வைக்கிறது.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பல இடங்களில் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் நாவல் நினைவிற்கு வந்தது. சாண்டியாகோ இப்படித் தான் வெறும் வலையுடன் பல நாட்கள் வீடு திரும்புகிறான். இளவயது சாண்டியாகோ போலவே ஜெஸ்மார்க் தோன்றுகிறான்.

தனது குழந்தையைத் தன்னோடு வைத்துக் கொண்டு அதற்குத் தேவையான உணவும் மருத்துவப் பராமரிப்புகளும் தர வேண்டும் என்று ஜெஸ்மார்க் விரும்புகிறான். சம்பாத்தியமில்லாத அவனால் அது இயலாது என்று அவனது மனைவி நினைக்கிறாள். இந்த எதிர்நிலையைப் படம் சரியாக வளர்த்தெடுத்திருக்கிறது

இயல்பான நிகழ்வுகளின் வழியே விரியும் திரைக்கதை இதன் கூடுதல் சிறப்பு. இயலாமையின் உச்சத்தில் தான் அவன் குற்றவுலகிற்குள் செல்கிறான். பின்பு அவனிடம் தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வேயில்லை. அந்த உலகிற்குள் தனது இடத்தை உறுதியாக்கிக் கொள்ளவே முயலுகிறான்.

படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் யாவரும் உண்மையான மீனவர்களே. கதாநாயகனாக நடித்துள்ள ஜெஸ்மார்க் சிக்லுனா மால்டா மீனவரே. மீன் ஏலமிடும் காட்சி உண்மையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் லியோ லெஃபெவ்ரே கடற்காட்சிகளை, இரவுக் காட்சிகளை வெகுசிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்.

எங்களைப் போன்ற வீடற்ற மனிதர்களை நிலம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் கடல் ஏற்றுக் கொள்கிறது. இந்தப் படகு தான் எனது வீடு. இதில் எங்கெங்கோ பயணம் செய்திருக்கிறேன் என்று ஒரு காட்சியில் ஜெஸ்மார்க்கின் நண்பன் சொல்கிறான். அவன் தன் சந்தோஷத்தை உணவின் வழியே வெளிப்படுத்துகிறான். அவர்களுக்குள் உருவாகும் நட்பு அழகானது.

இத்தாலிய நியோ ரியலிச படங்களின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள நவீன கலைப்படைப்பு என்ற விதத்தில் இப்படம் முக்கியமானது என்பேன்.

••

0Shares
0