‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ – வாசிப்பனுபவம்
முனைவர் ப. சரவணன், மதுரை.
கடுங்கோடையில் மழைக்காகக் காத்திருக்கும்போது வானிலிருந்து சரமென இறங்கும் கோடைமழையின் முதற்துளியைக் கையில் ஏந்தியது போன்றதுதான் பருவவயதில் வாய்த்துவிடும் முதற்காதலை வரவேற்கும் இளம் மனத்தின் நிலை.

அந்த மனநிலையை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. அதன் பின்னர் ஆயிரமாயிரம் பெருங்காதல்கள் வந்து மனத்தில் குடியேறியபோதும் அந்த முதற்காதல் நினைவுகள் கடுங்கோடையில் மண்ணில் விழுந்த முதல்மழையின் சுவடுகள்போலப் பதிந்தே இருக்கும்.
காதலைக் கொண்டாடாத படைப்பாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா? எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் நாவல்வரிசையில் காதலைக் கொண்டாடும் முதல் நாவல் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ ஆகும்.
இந்தத் தலைப்பே ஒரு குறியீடுதான். ‘இந்த விடுமுறைக்காலம்’ எதைக் குறிக்கிறது? இயல்பான மனநிலையிலிருந்து காதல்கொண்ட மனநிலைக்குத் தாவி? மீண்டும் இயல்பான மனநிலைக்குத் திரும்பிவரும் அந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியைக் குறிக்கிறது. அந்தத் தாவலில் இயல்பான மனநிலைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்தக் காலக்கட்டத்தில்தான் பள்ளியில் கோடைவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. அது நீண்ட விடுமுறைக்காலம்தான். ஆனால், காதல்கொண்ட மனத்துக்கு அந்த விடுமுறை போதுமானதாக இருப்பதில்லை. அந்த விடுமுறையைக் காதல்கொண்ட மனம் வேகமாகக் கடந்துவிடுகிறது. அதனால்தான், இதனை ‘ஒருசிறிய விடுமுறைக்காலம்’ என்று எழுத்தாளர் குறிப்பிடுகிறார் போலும்.
பதின்பருவத்தை எட்டும்போது உடலில் நிகழும் பெரும் மாற்றங்களுக்கும் அதனால் மனம் மேற்கொள்ளும் பெரும் பாய்ச்சலுக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி அல்லது இடைவெட்டு இருக்கிறது.
அந்தக் காலக்கட்டத்தில்தான் நாமறியாத பெருமாற்றத்தின் திகைப்பு நம் நெஞ்சைக் கவ்விக்கொள்ளும். அப்போது நாம் தேங்கி நிற்போம் அல்லது நாம் தேக்கப்படுவோம். அது நமது சிந்தனைச் செயல்பாடுகளுக்கான விடுமுறைக்காலம். அதுவும் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலம்’தான். அது நாமறியாத எண்ணற்ற உணர்வுநிலைகள் நம்மில் வந்து குடியேறும் காலம்.
இந்தப் பருவத்தைக் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரும்பாலும் தடுமாறி, தவறி விழுந்தோ அல்லது விரும்பியே அதில் குதித்தோ அதிலிருந்து மீள விரும்பும் மனம். அந்தப் பருவத்தைத் தாண்டிக் கடந்தவர்கள் மிகச் சிலரே. பிற்காலத்தில் அவர்கள் இந்தத் தாண்டலைத் தம் வாழ்வில் ஒழுக்கமாக வாழ்ந்துவிட்டதாக நினைத்தாலும் அவர்கள் இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் வழங்கிய பெருங்கொடையைத் தவறவிட்டவர்களே ஆவா். தவறிவிழுந்தவர்கள் தங்களின் மனத்தை உலுக்கிக்கொண்டு வேறுதிசையை நோக்கி நடக்கிறார்கள். விரும்பி விழுந்தவர்கள் தங்களை அதிலேயே கரைத்துக்கொள்கிறார்கள்.

இந்த நாவலில் அந்தப் பருவத்தில் நிகழும் இயல்பான மனமாற்றங்களை உளவியல் அடிப்படையில் விளக்க நினைக்கிறார் எழுத்தாளர். அதற்கு ஏற்ற சான்றுகளாகவே கதைக்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
காதல் ஒருவகையான வாழ்வென்றால், காதலுக்குப் பிறகான வாழ்வென்பது வேறொரு வகையாகவே இருக்கிறது. இதில் தடுமாறியவர்களுக்கும் தடம்மாறியவர்களுக்கும் வாழ்வென்பது பிறிதொரு வகையாக அமைந்துவிடுகிறது. இந்த நாவலில் இந்த மூன்று புள்ளிகளையும் நாம் காணமுடிகிறது.
இந்த நாவால் யதார்த்த வாழ்வை, அதன் விதிப்பாடுகளுக்கு இணங்கி அப்படியே நமக்குக் காட்டுகிறது. வாழ்வை அதன் போக்கில் ஏற்க நினைக்கும் மனம்படைத்தவர்களுக்கு இந்த நாவல் மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும். வாழ்வைத் தன் போக்கில் இழுத்துக்கொண்டு, தனக்கேற்பவே வாழ நினைப்போருக்கு இந்த நாவல் நல்லதொரு அனுபவப்பாடமாக மாறிவிடும்.
இலக்கியவாசிப்பின் பயனே புதியதொன்றைக் கற்றுக்கொள்வதும் புதிய பாதையில் பயணித்துத் திரும்புவதும்தானே! அந்த இரண்டும் இந்த நாவலில் மிகச் சரியாக வாசகருக்குக் கிடைக்கும். அதையும் தாண்டி இந்த நாவலில் பல சிறப்புக் கூறுகள் உள்ளன. அவை –
1. கோடைக்காலச் சித்திரம்
2. காதலைப் பந்தாடும் மனம்
3. காதலால் பந்தாடப்படும் மனம்
4. மனித உறவுகளின் மனநிலை மாற்றங்கள்
5. விதியின் விளையாட்டு
இந்த நாவலில் என்னை ஈர்த்த முதற்கூறு, ‘கோடைக்காலச் சித்திரம்’ தான். கோடையை மிகுதியாக எழுத்தில் கையாண்ட எழுத்தாளர்களுள் முதல்நிலையில் இருப்பவர் எஸ். ராமகிருஷ்ணன். எல்லோரும் வெறுக்கும் வெய்யில் இவருக்கு மட்டும் இனிக்கிறது. வெய்யிலை நேசிக்கும் இவரின் மனம் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.
இவரின் படைப்புகள் பலவற்றில் வெய்யில் பற்றிய வர்ணனைகள் விதவிதமாக இடம்பெற்றுள்ளன. இந்த நாவலிலும் வெய்யில் பற்றிய குறிப்புகள் நம் மனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன. குறிப்பாகக் கோடை வெய்யிலை உவமையாக்கியும் பயன்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.
“கோடை வெய்யிலைப் போலச் சில்வியா எனக்குள் அழிவற்று ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறாள்.”
“பள்ளி வயதின் கோடைவிடுமுறை நினைவுகள் மரத்தின் கிளையொன்றில் சிக்கிக்கொண்ட பட்டம் போலப் படபடத்துக்கொண்டேயிருக்கின்றன.”
“கோடைக்காலத்திற்கென்றே தனியான சுபாவமிருக்கிறது. கோடையில்தான் எத்தனை புதிய ருசிகள். கோடையில் விளையும் பழங்கள். எப்போதும் குடிக்கும் தண்ணீர் கோடையில் புது ருசி கொண்டுவிடுகிறது. கோடையில் அபூர்வமான சில பறவைகளைக் காண முடிகிறது. கோடையில் மட்டுமே காணப்படும் மோர்ப்பந்தல். அங்கே கிடைக்கும் கொத்துமல்லி இலைகள் மிதக்கும் மோர்.”
ஒவ்வொருவரையும் காதல் படுத்தும்பாடு சொல்லிமாளாது. வெய்யில் பறந்தலையும் எளிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இனிய மனிதன் ராமசுப்ரமணியம்தான் இந்த நாவலின் நாயகன். மணி, பட்டு, சுப்ரமணி, சுப்பி என்றெல்லாம் அவன் அழைக்கப்படுகிறான். நகர நாகரிகத்தில் தோய்ந்த தேவதை சில்வியாதான் நாயகி. நாயகன் காதலால் பந்தாடப்படுகிறான். நாயகி காதலைப் பந்தாடுகிறார்.
‘காதல் பந்தாடும் மனம்’ பற்றி ரஷ்ய எழுத்தாளர் பியோதர் மிக்கைலோவிச் தஸ்தயெவ்ஸ்கி அவர்கள் தன்னுடைய ‘வெண்ணிற இரவுகள்’ என்ற குறுநாவலிலும் கனடா எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தன்னுடைய ‘மகாராஜாவின் ரயில்வண்டி’ என்ற சிறுகதையிலும் மிகச் சிறப்பாக எழுதியிருப்பார்கள். ஆனால், இந்த நாவல் காதல் பந்தாடும் மனம் காதலின் போக்கிலெல்லாம் சென்று இறுதியில் அதிலிருந்து மீளும் நுட்பத்தைத் தெரிவிக்கிறது. ‘யதார்த்தமாக வாழ்தல்’ என்பதே, எதிலும் அகப்படாமல் இருப்பதும் அகப்பட்டதிலிருந்து லாவகமாக விடுபடுவதும்தானே!
“கொந்தளிக்கும் மனம்தான் இப்படியான பிரமைகளை ஏற்படுத்துகிறது. ஆயிரம் ஜன்னல் கொண்ட வீடு போலதான் மனமும். ஒரே நேரத்தில் அத்தனை ஜன்னல்களும் திறந்து கொண்டுவிடுகின்றன. பகிர்ந்து கொள்ள முடியாத நினைவுகள் குருட்டுப் பறவைகள் போலப் பறக்க இயலாமல் முட்டிமோதி தடுமாறுகின்றன. ”
‘காதலைப் பந்தாடும் மனம்’ எல்லோருக்கும் கைவருமா எனத் தெரியவில்லை. வித்தியாசமான, குழந்தைத்தனமான உள்ளம் கொண்டவர்களுக்கே அது சாத்தியம் என்று நினைக்கிறேன். இந்த நாவலில் சில்வியா அத்தகையவராக இருக்கிறார்.

சில்வியா நகரச் சூழலில் வளர்ந்தவர். பொருளாதாரத்தில் தன்னிறைவுபெற்ற குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால், அவரின் மனத்தில் துக்கமே மிஞ்சியிருக்கிறது. அவரின் பெற்றோருக்கிடையில் இருக்கும் மோதல் அவரை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. அதில் இருந்து விடுபடவே, ஒருமடைமாற்றமாகவே அவர் தன்னுடைய குழந்தைத்தனத்தைக் கைவிடாமல் இருக்கிறார் என்று எனக்குப் படுகிறது.
தன்னைச் சுற்றி வேடிக்கை விநோதங்களை உருவாக்கிக்கொள்ளவே அவர் விழைகிறார். ஒருவகையில் காதலும் காதல் சார்ந்தவையும் அவருக்கு அந்த வேடிக்கை விநோதங்களுள் ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் அவர் இந்த நாவலின் நாயகனைத் தன் காதலால் பந்தாடுகிறார்.
இந்த நாவல் காதல் கதையைக் கருவாகக் கொண்டிருந்தாலும் இதில் இழையோடுவது மனித உறவுகளின் மனநிலை மாற்றங்கள் பற்றிய உண்மைநிலவரம்தான். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் மனித மனம் பற்றிய வெவ்வேறு சித்திரங்கள் வெளிப்பட்டபடியே இருக்கும். மனித உறவுகளின் மோதல்கள் உளவியல் அடிப்படையில் உருவாவதை நுட்பமாகக் காட்டக் கூடியவர் எஸ். ராமகிருஷ்ணன்.
இந்த நாவலில் சில்வியாவுக்கும் அவரின் கணவருக்குமான உறவுநிலை, ராமசுப்ரமணியத்துக்கும் அவரின் மனைவிக்குமான உறவுநிலை ஆகிய இரண்டும் ஒரு தீற்றலாகத்தான் காட்டப்பட்டுள்ளன. அதில் உள்ள நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது. அந்தத் தீற்றலிலிருந்து நாம் உருவாக்கிக்கொள்ளும் மனச்சித்திரம்தான் இந்த நாவலை நம் மனத்துக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவருகிறது.
இந்த நாவலில் சில்வியாவுக்கும் அவரின் சகோதரிகளுக்குமான உறவுநிலை இடைவெட்டாகக் கிளைபிரிந்தோடுகிறது. வளர்இளம் பருவத்தில் நட்பும் உறவுமாகத் திகழும் அந்த மனநெருக்கம் ஒருகட்டத்தில் உடைந்து சிதறும் சூட்சுமத்தை யாரும் அறியமுடியாததாகத்தான் இருக்கிறது.
‘எந்தப் புள்ளியில் எந்த உறவு முறியும்’ என்பது, ஒரு வேடிக்கைக்காட்சியாகத்தான் நம் வாழ்க்கை முழுவதும் இருக்கிறது. இத்தகைய உறுதியற்ற சூழலில் ‘உறவற்ற ஓர் உறவு உன்னதம் கொள்கிறது’ என்றால், அது காதலின் அடித்தளத்தில்தானே உருப்பெற முடியும்? அந்தக் காதல், ‘அன்பினால் விளைந்ததாக இருக்க வேண்டும்’ என்பதுதான் முதல் விதி. அந்தக் காதல் காமத்தின் சுடரால் விளைந்ததாக இருந்தால், அது எல்லா உறவையும் அழித்தல்லவா வளரும்?.
“அன்புதான் உலகை மீட்கும் வழி என்கிறார் இயேசுநாதர். எல்லாச் சமயங்களும் அன்பைத்தானே வலியுறுத்துகின்றன? அன்பைச் செலுத்துவதுதானே நட்பும் காதலும்? ”
இந்த நாவலில் தன் மகள் உள்பட எல்லா உறவுகளாலும் கைவிடப்பட்ட சில்வியாவைத் தாங்கிப் பிடிப்பது, அன்பில் விளைந்த காதல் உறவுதானே! அது ராமசுப்ரமணியத்தின் வழியாக அவருக்குக் கிடைக்கிறது. அந்த அன்பின் நிழலில் இளைப்பாறவே இருவரும் விரும்புகின்றனர்.
இந்த நாவலில் விதியின் விளையாட்டு ஆங்காங்கே பட்டுச்சேலையில் நெய்யப்பட்ட வெள்ளிப் புட்டாபோல இடம்பெற்றுள்ளது. அந்த விதியின் விளையாட்டை விரித்தெழுதினால், அது சிறந்த சிறுகதையாகக்கூட அமையக்கூடும். அப்படி இந்த நாவலில் வாசகர்கள் தம் மனத்துள் விரித்து எழுதிக்கொள்ளக் கூடிய எண்ணற்ற சிறுகதைகள் மறைந்திருக்கின்றன. தேர்ந்த வாசகர்களால் அவற்றைச் சேகரித்து, தம் மனத்தை நிறைத்துக்கொள்ள முடியும்.
“தொலைதூர சாலையில் தபால்காரர் மெதுவாகத் தனது சைக்கிளில் போகிறார். அவரது பையிலிருந்த கடிதங்களில் ஒன்று ஊரைப் பிரிந்தவனின் வேதனையைச் சொல்லக்கூடியது. அவன் தப்புத்தப்பான எழுத்துகளால் மனத்தை வெளிக் கொட்டியிருக்கிறான். படிக்கத் தெரியாத அவனின் அம்மா அந்தப் போஸ்ட் கார்டினை வெறித்துப் பார்த்தபடி இருப்பாள். அந்தச் சொற்களின் வழியே அவனின் முகம் தென்படக்கூடுமோ, என்னவோ. அந்தக் கடிதம் அம்மாவிற்கு எழுதப்பட்டிருந்தாலும் தனக்குத் தானே ஆறுதல் தேடிக்கொள்வதுதான்.”
“தாத்தாவுக்கு என் அப்பாவைப் பிடிக்காது. இருவரும் பேசிக்கொண்டதாக எனக்கு நினைவேயில்லை. அப்பாவின் குணம் அப்படி. அவர் தாத்தாவை விடவும் அதிகம் கோபம் கொண்டவர். ஒருமுறை பள்ளி மாணவர்களில் ஒருவன் கன்னத்தில் அவர் ஓங்கி அறையவே அவன் மயங்கி விழுந்துவிட்டான். ஊரே கூடிவிட்டது. நல்லவேளை, அவன் மயக்கம் தெளிந்துவிட்டான். பிறகு அந்தப் பையன் பள்ளிக்கே வரவில்லை. பின்னாளில் அந்தப் பையனுக்குக் காது கேளாமல் போய்விட்டது என்றார்கள்.”
“பாவம்பா, அந்தக் குதிரை வண்டிக்காரன். அவன் வீட்ல ரெண்டு குட்டிப்பாப்பா. டுவின்ஸ். அந்த ஆளோட பொண்டாட்டி அழு அழுனு அழுகுறா. அந்த ஆளோட குதிரை செத்துப் போனதுல இருந்து ஒரே குடியாம். வெறும் வண்டி அந்த ஆள் வீட்டு முன்னாடி நிக்குது. பரோட்டாக் கடைல வேலை செய்து இருக்காரு. அந்த வேலை பிடிக்கவேயில்லையாம். செத்துப் போகப் போறேன். செத்துப் போகப்போறேன்னு சொல்லிக்கிட்ட இருப்பாராம். அந்தப் பொம்பளை சொல்லி சொல்லி அழுகுறா”
யதார்த்த வாழ்வைச் சிறு கோட்டோவியமாகக் காட்டிச் செல்வதில் எஸ். ராமகிருஷ்ணன் கைத்தேர்ந்தவர்.
“உண்மையைச் சொன்னால் சிரிக்க முடிவதில்லை. வயது வளர வளர வாழ்க்கை யாரை மனம்விட்டுச் சிரிக்க அனுமதிக்கிறது? தன்னை மறந்து சிரிப்பதெல்லாம் பள்ளிநாட்களுடன் போய்விடுகிறது. இப்போது சிரிப்பு ஒரு நடிப்பே.”
“ஒரே உலகில் மனிதர்கள் யாவரும் வாழ்வதாக நினைப்பது கற்பிதம். ஒவ்வொருவரும் தனக்கான தனியுலகில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.”
இந்த நாவலின் ஒட்டுமொத்த ஓட்டத்தையும் உளவியல் அடிப்படையில் வெளிப்படுத்தும் ஐந்து வரிகள் இந்த நாவலுக்குள் உள்ளன. அது சில்வியா ராமசுப்ரமணியத்திடம் தன் கனவு பற்றிச் சொல்லும் பகுதி.
“ரயில் கனவுதான் நிறைய வரும். வெள்ளை ரயிலைப் பார்த்து இருக்கியா? நான் கனவில் பார்த்திருக்கிறேன். எல்லா ரயில் பெட்டியும் வெள்ளை வெளேர்ணு பனியில் செஞ்சது மாதிரி இருக்கும். அந்த ரயில்ல நான் ஒரு ஆள் மட்டும்தான் போவேன். அந்த ரயில் எங்கேயும் நிற்காது. ஓடிக்கிட்டே இருக்கும். ”
உண்மைதான்! சிலர் இப்படித்தான் தமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தனி ரயிலில், தனித்துப் பயணம் செய்தே கழித்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் வீடுநிறைய சொந்தங்களைப் பெற்றிருந்தாலும் தனக்குள் தனித்துத்தான் பயணம் செய்ய நேர்ந்துவிடுகிறது.
உலக வாழ்வில் ‘யதார்த்தம்’ என்பது இந்த வெள்ளைநிற ரயில்பெட்டிபோலத்தான் இருக்கிறது. வேறு வழியில்லை எல்லோரும் தங்களுக்கான ரயிலில் தனித்துத்தான் பயணித்தாக வேண்டியுள்ளது. அந்த ரயில் நிற்காது. ஓடிக்கொண்டே இருக்கும். அது காலத்தின் ரயில். அந்த ரயிலின் ஓட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; ‘ஒரு சிறிய விடுமுறைக்காலம்’ கூடக் கிடையாதுதான்.
–