ஒரு வாரம் ஹைதராபாத்திலிருந்தேன்.
நண்பர்கள் சந்திப்பு. சினிமா வேலை, ஊர்சுற்றல் என நாட்கள் போனதே தெரியவில்லை.

ஹைதராபாத்தில் போக்குவரத்து நெருக்கடி மிகவும் அதிகம். விடிகாலை துவங்கி நள்ளிரவு வரை எந்தச் சாலையில் சென்றாலும் நீண்ட வாகன வரிசை. நெடிய காத்திருப்பு. ஹைதராபாத் இன்னொரு துபாய் என்றே தோன்றியது.
ஹைதராபாத் முழுவதும் விதவிதமான உணவகங்கள். சாப்பிடுவதற்கு இடம் பிடிக்கக் குறைந்தது ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டும். விதவிதமான பிரியாணிகள். ருசியான உணவு. அதுவும் இரவுக்கடைகளின் வரிசையினைக் காணும் போது இன்னொரு உலகமாக இருந்தது.
ஹைதராபாத்திற்குப் பலமுறை போய் வந்திருக்கிறேன். லாக்டவுன் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் செல்லவில்லை. இந்த முறை விமானநிலையத்திலிருந்து வரும் போது நகரம் உருமாறியிருப்பதைக் கண்டேன். எங்குப் பார்த்தாலும் ஆள் உயரக் கட்டிடங்கள். புதிய கட்டுமானப்பணிகள். பரபரப்பான வாழ்க்கை. புதிய விமான நிலையம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது சர்வதேச முனையமாக இருக்கும் என்றார்கள்.
ஹைதராபாத்திலிருந்த நாட்கள் முழுவதும் காரிலே சுற்றிக் கொண்டிருந்தேன். சார்மினார் பகுதிக்குள் காரில் போனது இன்னொரு நூற்றாண்டிற்குள் போய் வந்தது போலவே இருந்தது.
ஷாப்பிங் மால். சினிமா தியேட்டர் என எங்கும் பார்க்கிங் கட்டணம் கிடையாது. எவ்வளவு நேரம் என்றாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள். வசதியான நிறுத்துமிடங்கள்.

சென்றவாரத்தில் ஒரு நாள் சலார் ஜங் அருங்காட்சியகம் போயிருந்தேன். இந்த மியூசியத்தை இதற்கு முன்பு நான்குமுறை பார்த்திருக்கிறேன். ஆனாலும் இங்குள்ள கலைப்பொருட்களைத் திரும்பக் காணும் ஆசை தூண்டியது.

சலார் ஜங் சாலையில் உள்ளது இந்த மியூசியம். போக்குவரத்து நெருக்கடிக்குள் காரில் போய்ச் சேருவதற்குக் குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாகிவிடுகிறது. மூன்று தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான மாளிகை. அருங்காட்சியகங்களுக்கான கட்டிடக்கலையில் இது தனிச்சிறப்புக் கொண்டது, இந்தியாவின் மூன்று தேசிய அருங்காட்சியகங்களுள் இதுவும் ஒன்று
மீர் யூசுஃப் அலிகான் சலார் ஜங் சேகரிப்பிலிருந்த கலைப்பொருட்களைப் பாதுகாத்து அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள். உலக அளவிலே தனிநபர் சேமிப்பில் மிக அதிகமான கலைப்பொருட்கள் உள்ள மியூசியம் இதுவே


இந்திய, ஐரோப்பிய, சீன ஜப்பானியக் கலைப் பொருட்களும் அந்தக் காலக் கடிகாரங்களும் ஆயுதங்களும் உடைகளும் வெள்ளிப்பொருட்களும் யானைத் தந்தம் மற்றும், சலவைக்கல்லால் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்களும், காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவை மட்டுமின்றிப் பெர்சிய உருதுப்புத்தகங்கள், எழுதுகோல்கள். கைப்பிரதிகள். ஒப்பந்தங்கள். சதுரங்கப் பலகைகள். பதக்கங்கள், பீங்கான் கோப்பைகள். தேநீர் கலன்கள். அரிய புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

மியூசியத்தினைப் பார்வையிடுவது என்பது வெறுமனே சுற்றிவருவதில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில்லை. அதன் வரலாற்றையும் அங்குள்ள கலைப்பொருட்களைப் பற்றிய தகவல்கள். அது சேகரிக்கப்பட்ட காலம். கலைப்பொருட்களின் தனித்துவம். மற்றும் நுணுக்கங்கள் பற்றிய அறிந்து கொள்ளும் போது தான் மியூசியத்தின் அருமை புரியத் துவங்கும்.
இந்த மியூசியத்தில் புகைப்படம் எடுப்பதற்குக் கேமிரா, செல்போன் பயன்படுத்த ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்த டிக்கெட்டில் உள்ள பார்கோடினை ஸ்கேன் செய்து அருங்காட்சியக ஆப்பில் இணைந்து கொண்டால் அங்குள்ள கலைப்பொருட்கள் பற்றிய ஆடியோ கைடினைக் கேட்கலாம்.
நான் முன்னதாக நான்கு முறை பார்த்திருக்கிறேன் என்பதால் நான் விரும்பிய தளங்களை, விரும்பிய கலைப்பொருட்களை மட்டுமே தேர்வு செய்து பார்ப்பது என முடிவு செய்து கொண்டேன். அப்படியும் ம்யூசியத்திற்குள் ஐந்தாறு மணி நேரமாகி விட்டது.
ஒருவர் நிதானமாக மியூசியத்தை முழுவதும் பார்வையிட வேண்டும் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும். அப்படி யார் விரும்பிப் பார்க்க போகிறார்கள். பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் என்பதால் ஒரு மணிநேரத்திற்குள் மொத்த மியூசியத்தைப் பார்த்துவிட்டு கேண்டியனுக்குள் நுழைந்துவிடுகிறார்கள்
எனக்கு ஒரு அவசரமும் இல்லை என்பதால் நிதானமாகக் கலைப்பொருட்களைப் பார்வையிட்டேன்.

சலார் ஜங் தலைமுறையின் வரலாறு மிக நீண்டது. சலார் ஜங் III ஏழாவது நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் ஆட்சியின் போது ஹைதராபாத்தின் திவானாக இருந்திருக்கிறார். சலார் ஜங்கின் தந்தைவழி குடும்பத்தில் ஐந்து தலைமுறையாகத் திவானாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலேயர்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அவர்கள் ஆதரவில் நடந்து கொண்டவர்கள். ஆங்கிலேயர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மற்றும் கடிதங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
யூசுஃப் அலிகான் சலார் ஜங் இங்கிலாந்தில் படித்தவர். உலகெங்கும் பயணம் செய்து அரிய கலைப்பொருட்களைச் சேகரித்திருக்கிறார். அந்தக் கலைப்பொருட்களை எப்படி இங்கே கொண்டுவந்திருக்கிறார் என்பதன் பின்னே எழுதப்படாத நிறையக் கதைகள் ஒளிந்திருக்கின்றன.

விதவிதமான கைத்தடிகளுக்கு என்றே ஒரு அரங்கிருக்கிறது. அங்குள்ள சில கைத்தடிகளில் கால் பாதம் போன்ற அமைப்பைச் செய்திருக்கிறார்கள். காலை கையில் பிடித்துக் கொண்டு செல்வது என்பது விநோதமாக இருக்கிறது. விதவிதமான நிறங்களில் வடிவங்களில் கைத்தடிகள். இந்தக் கைத்தடிகளுக்குப் பின்னே மேற்குலகின் பண்பாடும் உயர் வகுப்பு அந்தஸ்தும் மறைந்திருக்கிறது. அந்தக் கைத்தடிகள் அரங்கில் நின்றபோது கோணங்கி எழுதிய கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் என்ற கதை நினைவில் எழுந்தது . கைவிடப்பட்ட விவசாயி ஒருவர் மதுரை நகரில் ஊன்றுகோலுடன் சுற்றி அலைகிறார். அவரது வறுமையும் அவலமும் கதையில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த விவசாயி வைத்துள்ள கைத்தடி கேள்விகேட்பதாகக் கோணங்கி எழுதியிருப்பார். இங்கே சில விநோத கைத்தடிகளைக் காணும் போது அதைப் பயன்படுத்திய மனிதன் யாராக இருப்பார் என்ற கேள்வி தோன்றவே செய்தது

யானைத் தந்தத்தில் செய்த கலைப்பொருட்களையும் இந்திய ஓவியங்கள் மற்றும் நுண்ணோவியங்களையும் பார்ப்பதற்கு நிறைய நேரத்தைச் செலவிட்டேன். தந்ததால் ஆன மேஜை விளக்கு. பேப்பர் கட்டர், விலங்கு உருவங்கள் மற்றும் புத்த பிரதிமைகள் சிறப்பாக உள்ளன



ஒரு கூடம் முழுவதும் அபூர்வமான நுண்ணோவியங்கள் இடம்பெற்றுள்ளன. ரவிவர்மாவின் அசல் ஓவியங்களைக் காணுவதற்குத் தான் நிறையக் கூட்டம். மற்றபடி ராஜஸ்தானிய, மொகலாய மினியேச்சர்களைக் காணுவதற்கு ஆட்களே இல்லை. ஆனால் மிக அரிய நுண்ணோவியங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

பஹாரி நுண்ணோவியங்கள் 17-19 ஆம் நூற்றாண்டுகளில் ஜம்முவிலிருந்து கர்வால் வரை வளர்ந்து செழித்த ஓவியவகையாகும். இந்த ஓவியங்கள் ராஜபுத்திர மன்னர்களால் வளர்த்தெடுக்கப்பட்டன. ராமாயணம் மற்றும் ஜெயதேவாவின் கீத கோவிந்தக் காட்சிகளை மையப்படுத்திய இந்த நுண்ணோவியங்கள் புகழ்பெற்றவை.

king with Ladies ஓவியத்தில் அரசன் அணிந்துள்ள பச்சை நிற உடையும் சிவப்பு கம்பளமும் அருகில் அமர்ந்துள்ள பெண்ணின் இளஞ்சிவப்பு வண்ண ஆடையும் பணிப்பெண்ணின் அடர்நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ண பார்டரும் அத்தனை அழகாக வரையப்பட்டுள்ளன. 1780ல் வரையப்பட்ட ஓவியமிது. இது போலவே இன்னொரு ஓவியத்தில் அரசனும் அரசியும் அமர்ந்து கூக்கா படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா லாக்டவுன் காரணமாக நீண்டகாலம் மூடப்பட்டு இருந்த காரணத்தால் இந்தியச் சிற்பங்கள் உள்ளிட்ட சில பகுதிகள் பராமரிப்பிற்காக மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பிய கலைக்கூடத்தில் நகலெடுக்கப்பட்ட சிற்பங்களே நிறைய உள்ளன. இங்குள்ள ரெபேக்கா சிலை மிகவும் புகழ் பெற்றது. 1876 ஆம் ஆண்டில் பென்சொனி என்னும் இத்தாலியச் சிற்பியால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டது. சல்லாத்துணியால் முக்காடு போட்டிருக்கும் ரபேக்காவின் முகத்தை மிக நுணுக்கமாக வியப்பூட்டும் வகையில் உருவாக்கியிருக்கிறார் பென்சோனி.

சீன மற்றும் ஜப்பானியக் கலைப்பொருட்களைக் கொண்ட காட்சிக்கூடத்தில் அபூர்வமான கலைப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக நீலக்குவளைகள். தேநீர்கலன்கள். வேலைப்பாடு கொண்ட அலங்கார தட்டுகள். பௌத்த ஓவியங்கள். சிற்பங்கள். மரநாற்காலிகள். குறுவாட்கள். குடுவைகள். மற்றும் செவ்வக கண்ணாடிகள் நுட்பமான கைவேலைப்பாட்டுடன் காணப்படுகின்றன.

மியூசியத்தினுள் ஒரு அரிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பெர்சிய கவிதைகள் நூலில் மொகலாய அரசர் ஜஹாங்கீர் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அக்பருக்குப் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. இது போலவே ஷாஜகானின் மகள் ஜஹனாரா பேகம் கையெழுத்திட்ட உமர்கயாம் கவிதைகளின் ஏடு இங்கே காணப்படுகிறது.
சலார் ஜங் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆங்கிலக் கனவான் போலவே நடந்து கொண்டார். அவரது அரண்மனை ஆங்கில பாணியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது பகட்டான விருந்தோம்பல் ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. 1877ல் டெல்லி தர்பாரில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய ஒரே இந்தியர் இவர் மட்டுமே. ஹைதராபாத்தில் கொலை கொள்ளை அதிகமாக இருந்த காலத்தில் அவற்றை ஒடுக்கியவர் இவர் என்கிறார்கள்.
நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் மற்றும் மாவட்டங்களுக்காகத் தனிப் போலீஸ் படை இவரால் உருவாக்கப்பட்டது ஹைதராபாத்தில் இவர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவினார், மேலும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் கல்லூரி துவங்க ஆதரவு கொடுத்திருக்கிறார். இறுதிவரை ஆங்கிலேயர்களின் தீவிர விசுவாசியாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனாலும் ஆங்கிலேயர்கள் இவரையும் ஒரு கட்டத்தில் கைவிட்டு அவரது அதிகார வரம்பை கட்டுப்படுத்தினார்கள். கசப்பான அனுபவங்களுடன் அவரது இறுதி நாட்கள் கழிந்திருக்கின்றன.
திரும்பி வரும் போது சுல்தான் பஜாரைக் கடந்து வந்தேன். சுல்தான் பஜாரில் சுதந்திரதினம் அன்று கொடி ஏற்ற முயன்ற இளைஞன் பற்றி அசோகமித்திரன் சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். மிகச்சிறந்த கதையது.
சுதந்திரத்திற்கு முந்தைய ஹைதராபாத் பற்றி அசோகமித்திரன் எழுதியுள்ள நினைவுகளும் புனைவும் முக்கியமானது. இப்படித் தெலுங்கில் கூட எழுதியிருப்பார்களா எனத் தெரியவில்லை.
•••