இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார்

கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவல் 1894 இல் ஸ்வீடனில் வெளியாகியிருக்கிறது.
மதகுரு நாவலைப் பலமுறை வாசித்திருக்கிறேன். காவியத்தன்மை கொண்ட நாவல். மகாபாரதத்தில் வருவது போலவே சூதாடி பெண்ணைத் தோற்கும் நிகழ்ச்சி இதிலும் இடம்பெற்றிருக்கிறது. தனது மகளைச் சூதில் இழக்கிறார் சிங்களேர்.

அபூர்வமான இந்த நாவலை எப்படி க.நா.சு கண்டுபிடித்து மொழியாக்கம் செய்தார் என்று வியப்பாகவே இருக்கிறது

நாவலில் வரும் ஏக்பி பண்ணையும் அதன் சீமாட்டி மார்கரீடாவும் அவளது பண்ணையில் தங்கி வாழும் உல்லாச புருஷர்களும் விசித்திரமானவர்கள். Pensioners என்பதை உல்லாச புருஷர்கள் என்று க.நா.சு மொழிபெயர்த்திருப்பது வெகு சிறப்பு. இந்த உல்லாச புருஷர்கள் ஆடல்பாடலில் தேர்ந்தவர்கள். தனித்திறமை கொண்டவர்கள். ஏக்பி சீமாட்டியை மகிழ்விப்பதே இவர்களின் பணி.
நாவலைப் படிக்கும் நாமும் உல்லாசபுருஷர்களில் ஒருவராக ஆசைப்படுவோம். இந்த உலகம் இன்பங்களை அனுபவிப்பதற்கு மட்டுமேயானது என நம்புகிறார்கள் உல்லாசபுருஷர்கள். இவர்களை ஏக்பி சீமாட்டி தேர்வு செய்து அழைத்து வந்து இன்பங்களை அனுபவிக்க வைக்கிறாள்.
மார்கரீடா இளமையில் ஒருவனைக் காதலிக்கிறாள். ஆனால் அவளது பெற்றோர் வசதியான மேஜர் ஒருவனுக்கு அவளைத் திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். அந்த வாழ்க்கையை அவளுக்குப் பிடிக்கவில்லை.

சில ஆண்டுகளில் அவளது காதலன் நிறையப் பணம் சம்பாதித்து அருகிலுள்ள பண்ணையை விலைக்கு வாங்குகிறான். அவனுக்கும் மார்கரீடாவிற்கும் மீண்டும் காதல் மலருகிறது. அவர்களின் காதல்உறவை மேஜர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஊர் அவளைப் பற்றித் தவறாகப் பேசுகிறது. இதை அறிந்த மார்கரீடாவின் அம்மா ஒரு நாள் அவளைத் தேடி வருகிறாள்.
அம்மாவிடம் உன் மகள் என்றோ இறந்து போய்விட்டாள். இப்போது இருப்பது மேஜரின் மனைவி மட்டுமே என்கிறாள் மார்கரீடா.
அம்மா அவளது கள்ள உறவைப் பற்றி விமர்சனம் செய்து திட்டுகிறாள். இதில் ஆத்திரமான மார்கரீடா அம்மாவை வெளியே துரத்துகிறாள். கோபத்தில் அம்மா அவளை அடித்துவிடவே பதிலுக்குத் தானும் அம்மாவை அடித்துவிடுகிறாள் மார்கரீடா
மகளால் அவமானப்படுத்தப்பட்ட தாய்ப் புறப்படும் போது மகளுக்குச் சாபம் கொடுக்கிறாள். தன்னைத் துரத்தி அவமானப்படுத்தியது போல ஒரு நாள் அவளையும் அந்தப் பண்ணையிலிருந்து துரத்தி அடிப்பார்கள். அவள் பிச்சைக்காரி போலக் கையேந்தி வாழும் நாள் வரும் என்கிறாள்.
செல்வச்சீமாட்டியான மார்கரீடா அம்மாவின் சாபத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் காலமாற்றத்தால் அம்மாவின் சாபம் பலிக்கிறது. அவள் பண்ணையை விட்டுத் துரத்தப்படுகிறாள். சாலையோரம் பிச்சைக்காரியாக வாழுகிறாள். எந்த உல்லாச புருஷர்கள் அவளைப் புகழ்ந்து பாடினார்களோ அவர்களால் அவமானப்படுத்தப்படுகிறாள்.
நாவலில் வரும் தாயின் சாபமும் அது பலிக்கும் விதமும் காவியத்தன்மை கொண்டதாகயிருக்கிறது
மார்கரீடா தனக்குப் பிடிக்காத திருமணத்தினால் தான் இறந்து போய்விட்டதாகவே நினைக்கிறாள். இப்போது இருப்பவள் ஒரு நடைப்பிணம். இந்த நிலைக்குக் காரணம் தனது பெற்றோர் என நம்புகிறாள். ஆனால் பெற்றோர்களோ மகளுக்கு நல்ல இடத்தில் வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது தங்களின் கடமை என்கிறார்கள்.
தாயிடம் மார்கரீடா கோபம் கொள்ளும் காட்சியைச் செல்மா லாகெர்லவ் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
தாயின் சாபம் பலித்துவிடும் என்ற நம்பிக்கை உலகெங்குமிருக்கிறது.எந்த தாயும் தன் பிள்ளைகள் அழிந்து போகட்டும் எனச் சாபம் கொடுப்பதில்லை. ஆனால் அப்படியான ஒரு நிலை வந்தால் அந்தச் சாபம் பலித்துவிடும் எனப் பயப்படுகிறார்கள்
மார்கரீடாவின் முகத்தில் அறையும் அவளது அம்மா தவற்றை உணரவைக்கவே முயலுகிறாள். ஆனால் அந்தச் செயல் மார்கரீடாவின் குற்றவுணர்வை அதிகப்படுத்திவிடுகிறது. அம்மாவின் பிடரியைப் பிடித்து வெளியே தள்ளியதோடு தன் கோபத்தினைக் காட்டிக் கொள்ள அம்மாவின் முகத்தில் அறையவும் செய்கிறாள்.

இந்த நிகழ்வு நாவலில் ஆழமான வடு போலச் சித்தரிக்கப்படுகிறது. மார்கரீடாவின் கடந்தகாலம் தான் அவள் ஏக்பி பண்ணையை இப்படி உல்லாச உலகமாக உருமாற்ற வைத்திருக்கிறது
இந்த நிகழ்வின் மறுபக்கம் போல மாவு விற்கப் போன சிறுமியை ஏமாற்றிக் குடித்துவிடும் கெஸ்டா அவளுக்கு ஏக்பி சீமாட்டி உதவி செய்து படிக்க வைப்பாள் என்ற ஒரே காரணத்திற்காகவே உல்லாச புருஷர்களில் ஒருவனாக மாறுகிறான்
குற்றவுணர்வு தான் அவனையும் இயக்குகிறது.
கெஸ்டாவிடம் சூதில் தோற்ற சிங்களேர் தனது மகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறான். கொட்டும் பனியில் வீட்டுவாசலில் நின்று உள்ளே அனுமதிக்கும்படி மன்றாடுகிறாள். ஆனால் அவளது தந்தை கதவைத் திறப்பதில்லை. கதவைத் திறக்க முற்படும் அவளது அம்மாவிற்கும் அடி கிடைக்கிறது. தந்தையைத் தண்டிக்கப் பனியில் வெட்டவெளியில் படுத்து கிடக்கிறாள் மரியாள். அவளை மீட்கிறான் கெஸ்டா. அப்போது தான் அவள் மீது காதல் உருவாகிறது
சிங்களேரின் மனைவியும் மார்கரீடாவின் அம்மாவும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள்.
வார்ம்லாந்தில் உள்ள ஏக்பி பண்ணைiய செல்மா லாகர்லெவ் தேர்ந்த ஓவியரைப் போலத் துல்லியமாக விவரித்திருக்கிறார். குறிப்பாக அந்த ஏரியின் விஸ்தாரணத்தையும் பனிக்காலத்தில் அது உறைந்துவிடும் அழகினையும் அற்புதமாக எழுதியிருக்கிறார்.
மதகுருவான கெஸ்டா பெர்லிங் வாழ்க்கையில் ஏன் இத்தனை மாற்றங்கள். வீழ்ச்சிகள். சாத்தானின் மறுவடிவமாக வரும் ஸிண்ட்ரோமின் வருகையும் கிறிஸ்துமஸ் இரவும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது
இந்த நாவலில் சாபமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் வேறுவேறு விதமாகத் தொடர்ந்து வருகிறது. மேஜிகல் ரியலிச நாவலாக இன்று கொண்டாடப்படும் படைப்புகளுக்கு இதுவே முன்னோடி என்பேன். செல்மா லாகர்லெவ் தான் கேட்டு அறிந்த கிராமப்புற கதைகள். நம்பிக்கைகள். சடங்குகள், தொன்மங்கள் யாவையும் இந்த நாவலில் ஒன்று கலந்திருக்கிறார். வியப்பூட்டும் கதாபாத்திரங்கள். விசித்திரமான நிகழ்வுகள்.
நெருக்கடி அதிகமாகும் போது தன்னை முழுமையாக ஒருவன் வெளிப்படுத்திக் கொள்வான் என்பதற்குக் குடிகார மதகுரு தேவாலயத்தில் ஆற்றும் சொற்பொழிவே சாட்சி.

இந்த நாவலை வாசித்தபோது Death Comes for the Archbishop நாவலில் வரும் பாதிரி கலேகோஸ் கதாபாத்திரம் நினைவில் வந்து போனது. பாதர் கலேகோஸ் உல்லாசமாக வாழுவதற்குச் செய்யும் தந்திரங்களும் பூர்வ குடி மக்களை ஏமாற்றும் விதமும் நினைவில் வந்து போனது.
Gösta Berling believed in fate; fate had mastered them: no one can resist fate. என்றொரு வரியை நாவலில் செல்மா எழுதியிருக்கிறார். இது தான் நாவலின் மையப்புள்ளி. விதிவசமான மனித வாழ்க்கையை அதன் விசித்திரங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது நாவல். நாம் விரும்புவதற்கும் நமக்குக் கிடைத்திருப்பதற்குமான வாழ்வின் இடைவெளியைப் பேசுவதால் இன்றும் இந்த நாவல் மிக முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது
மதகுரு நாவலைப் பற்றிய இந்தக் குறிப்பு போல நாலைந்து சிறு குறிப்புகள் தொடர்ந்து எழுத நினைத்திருக்கிறேன்.
•••