Kitchen Chronicles: 1001 Lunches with J.Krishnamurti என்ற புத்தகம் படித்தேன்.

1970களில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரோனென் மெய்தேடலின் காரணமாக இந்தியா வந்திருக்கிறார். அப்போது ஒரு நாள் சென்னையில் நடைபெற்ற ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவு ஒன்றைக் கேட்கிறார். அதில் மயங்கி அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தானும் பயணம் செய்து அவரது உரைகளைத் தொடர்ந்து கேட்கத் துவங்குகிறார். இந்தப் பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதையே இந்த நூல் விவரிக்கிறது.
ஜே.கிருஷ்ணமூர்த்தி அமைப்போடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த க்ரோனெனிற்குக் கிருஷ்ணமூர்த்தியின் உறைவிட முகாம் ஒன்றில் உடன் தங்கியிருக்கவும் அங்கே சமையல் கலைஞராகப் பணியாற்றவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்த நாட்களில் கிருஷ்ணமூர்த்தியோடு உரையாடியது, அவரைப் புரிந்து கொண்டதைப்பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்
சென்னையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரைக்கு முன்பாக எம்.எஸ். சுப்புலட்சுமி பாடல் பாடியதையும் அவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வணங்கி ஆசி பெற்றதையும் க்ரோனென் குறிப்பிடுகிறார். எவரும் தன்னை வணங்குதல் கூடாது எனும் கிருஷ்ணமூர்த்தி எம்.எஸ். மீதான அன்பால் அதை அனுமதித்திருக்கக் கூடும் என்றும் சொல்கிறார்
கிருஷ்ணமூர்த்தியின் உரை கேட்க வருகிறவர்கள். அவர்கள் கேள்வி எழுப்பும் விதம். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நகைச்சுவை உணர்வு. அவரது நடைப்பயிற்சி என ஜேகேயின் உலகைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். இதில் நாம் காணும் ஜேகே புதியவர்.
1943 ஜெர்மனியில் பிராங்ஃபர்ட் அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்தவர் க்ரோனென். 1960களில் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருக்கிறார், பௌத்தம், தாவோயிசம் மற்றும் இந்து மதம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமான க்ரோனென் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறார். தனது மெய் தேடலின் பயணத்தில் இந்தியா வந்திருக்கிறார்.., 1970ல், சென்னையில் ஜேகேயுடன் குழு விவாதத்திற்கு அழைக்கப்படும் நபர்களில் ஒருவராக அவரை அழைத்திருக்கிறார்கள். அந்தச் சந்திப்பில் துவங்கி ஜேகே சென்ற இடங்களில் எல்லாம் நிழல் போல சென்றிருக்கிறார்
இந்தப் பயணத்தின் போது ஆலன் தம்பதிகளின் அறிமுகம் கிடைக்கிறது. ஆலன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜே கிருஷ்ணமூர்த்திக்காகச் சமைத்திருக்கிறார். சைவ சமையல் பற்றி ஒரு நூலும் புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
1975 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக க்ரோனின் வேலை செய்து கொண்டிருந்த போது ஓஜாயில் ஜேகிருஷ்ணமூர்த்தி ஒரு சிறிய பள்ளியைத் தொடங்க விரும்புவதாக, ஆலனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அங்கே சென்று இணைந்து கொண்டவர் தற்செயலாகவே சமையல்வேலைகளைத் துவங்கியிருக்கிறார். .
பள்ளி ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் சைவ உணவை எவ்வாறு தயாரிப்பது என்று ஆரம்பத்தில் கற்றுக் கொண்டிருக்கிறார். சமையலில் சற்று தேர்ந்த பின்பே ஜேகேயிற்கு உணவு சமைத்துக் கொடுத்திருக்கிறார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது விருந்தினர்களுக்குச் சமைப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது, அதில் ஆலன் தம்பதிகள் பெரிதும் உதவினார்கள். சமையல் ஒரு கலை வடிவம் என்பதை அந்த நாட்களில் கண்டுபிடித்ததாக க்ரோனின் கூறுகிறார்
பொதுவாகக் கிருஷ்ணமூர்த்தி தனது உணவில் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவதில்லை. அவர் ஆரோக்கியமான உணவை விரும்பினார். ஆனாலும் சில வேளைகளில் அவர் இத்தாலிய உணவுகளை விரும்பி சாப்பிட்டிருக்கிறார். அவருக்குச் சில உணவுக் கட்டுப்பாடுகள் இருந்தன
குறிப்பாக கொழுப்பு, எண்ணெய்கள் மற்றும் பால் பொருட்களை மிகக் குறைவாகவே சமையலில் பயன்படுத்த வேண்டும்.. அது போலவே வெண்ணெய், கிரீம், சர்க்கரை பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடுவார். மசாலாப் பொருட்களையும் அவர் விரும்பவில்லை. அவர் சூப்களை விரும்பினார், குறிப்பாக ஏழு வெவ்வேறு வகையான பீன்ஸ் வகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் அவருக்கு மிகவும் பிடித்தமானது என்கிறார் க்ரோனின்.
சில சமயம் பப்பாளி, அன்னாசிப்பழம், வாழைப்பழம் சேர்த்து ஃப்ரூட் சாலட் செய்தால் அதை விரும்பி சாப்பிடுவார் என்கிறார். நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் ஜேகேயிற்கு விருப்பம் அதிகமிருந்தது. அவர் நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தார். அவரது உணவுவேளை ஒரு கலாச்சார சந்திப்பு போலவே நடந்தேறுவது வழக்கம். சில நாட்கள் உணவு தயாராகும் வரை அமைதியாக காத்திருப்பார். உலகின் பார்வையில் ஞானியாக உள்ளவர் நெருக்கத்தில் சிறந்த நண்பரைப் போலவே பழகினார் என்றும் விவரித்திருக்கிறார்.
ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய இந்த நினைவுக்குறிப்புகள் அவர் மீது கூடுதல் நெருக்கத்தையே ஏற்படுத்துகின்றன.