நேற்று புத்தகக் கண்காட்சியில் ஒரு இளைஞரைச் சந்தித்தேன். சென்னை ஓவியக்கல்லூரியில் பயில்வதாக அறிமுகம் செய்து கொண்டு தான் வரைந்துள்ள கோட்டோவியத்தை என்னிடம் காட்டினார்.
அதில் நானும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் தஸ்தாயெவ்ஸ்கியும் இருந்தோம்.
வியப்போடு அந்த ஓவியம் பற்றிக் கேட்டேன்
நீங்கள் விருதுநகர் புத்தகக் கண்காட்சிக்கு உரையாற்ற வந்ததைப் பற்றி வரைந்திருக்கிறேன். நீங்கள் விருதுநகருக்கு ரயிலில் வந்து இறங்குகிறீர்கள். உங்கள் பேச்சில் எப்போதும் கி.ராவை, சுந்தர ராமசாமியை உயர்வாகச் சொல்கிறீர்கள் ஆகவே அவர்களும் உங்களுடன் வருவதாகக் கற்பனை செய்து கொண்டேன். உங்களுக்கு முன்பாகத் தஸ்தாயெவ்ஸ்கி விருதுநகருக்கு வந்து இறங்கிவிட்டார் என்று சிரித்தபடியே சொன்னார்.
தஸ்தாயெவ்ஸ்கி விருதுநகருக்கு வந்திருப்பதாகக் கற்பனை செய்துள்ளது பிடித்திருக்கிறது என்று அவரது ஓவியத்தைப் பாராட்டினேன்.
நேற்றைய நாளின் அபூர்வப் பரிசு இதுவே.
