மழையின் கறுப்புக் கோடுகள்

மாங்கா என்பது ஜப்பானின் புகழ்பெற்ற சித்திரக்கதை வடிவம். வயது வாரியாக மாங்கா வெளியிடப்படுகிறது. புகழ்பெற்ற மாங்கா நூல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன.

ஏன் ஜப்பானியர்கள் சித்திரங்களுடன் படிக்க விரும்புகிறார்கள். அது அவர்களின் பண்பாடு. வாசிப்பின் பிரதான முறை.

படக்கதை என்பதை ஆரம்ப வாசிப்பு என்றே இந்தியாவில் நினைக்கிறார்கள். அதனால் பெரியவர்கள் காமிக்ஸ் படிப்பதை ஒவ்வாத விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால் இப்போது படக்கதை என்பது தனி வகைமையாக உருக்கொண்டதோடு அதற்கான பெரிய சந்தையும் உருவாகியுள்ளது.

ஜப்பானில் மாங்கா வரைவதற்கும் எழுதுவதற்கும் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் படித்து வெளியே வரும் இளைஞர்கள் புதிய கருப்பொருளில் புதிய டிஜிட்டல் முறையில் ஓவியம் வரைகிறார்கள்.

ஜப்பானிய அனிம் மற்றும் மாங்கா உலக அளவில் தனிக்கவனம் பெற்றுள்ளது. ஹாலிவுட் அனிமேஷன் படங்களுடன் ஒப்பிடும் போது ஜப்பானிய அனிம் பல மடங்கு சிறப்பானது. ஹயாவோ மியாசாகிக்கு இணையாக ஹாலிவுட்டில் ஒருவரும் இல்லை.

ஜப்பான் தவிரப் பிற நாடுகளில் மாங்கா அவ்வளவு புகழ்பெறவில்லை. ஆனால் இதற்கு இணையாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கிராபிக் நாவல் மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகின்றன. கொண்டாடப் படுகின்றன.

காமிக்ஸ் அல்லது மாங்கா போன்றவை சிறார்களுக்கானது என்ற எண்ணம் இன்று மாறி வருகிறது. நீங்கள் எதைப்பற்றிப் படிக்கவிரும்பினாலும் அதன் சித்திர வடிவம் நூலாகக் கிடைக்கிறது.

ரகசியமாக ஒளித்து வைத்துப் படிக்கப்பட்ட பாலின்பக்கதைகள் கூடத் தனிவகை மாங்காவாக ஜப்பானில் வெளியிடப்படுகின்றன.

பெரியவர்களுக்கான GEKIGA மாங்கா வடிவத்தை உருவாக்கிய யோஷிஹிரோ தட்சுமியினைப் பற்றிய Tatsumi திரைப்படத்தைச் சிங்கப்பூரைச் சேர்ந்த இயக்குநர் எரிக் கூ உருவாக்கியுள்ளார்.

மாங்கா ஸ்டைலிலே முழுப்படத்தை உருவாக்கியுள்ளது சிறப்பு. திரையில் கோடுகள் உயிர்பெற்று அசைகின்றன. செபியா வண்ணம் கடந்தகாலத்தை நிஜமாக்குகின்றன.

ஒவ்வொரு கதையும் ஒருவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அன்றைய அச்சுமுறை, மாங்காவின் வண்ணத்தேர்வுகளை மனதில் கொண்டே இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

வான்கோவிடம் காணப்படும் உன்மத்தம் போலவே தட்சுமியிடமும் பித்து நிலை காணப்படுகிறது. அவரது கோடுகள் தனது கோபத்தையும் விரக்தியையும் தவிப்பையும் வெளிப்படுத்துகின்றன. பரவும் நெருப்பென கோடுகள் அலைபாய்கின்றன.

தட்சுமி புகழ்பெற்ற ஓவியரான ஒசாமு தெசூகாவின் தீவிர வாசகர். தெசூகாவின் பாதிப்பில் தான் ஓவியம் வரையத் துவங்கியிருக்கிறார்.

தட்சுமி ஒரு முறை ஒசாமு தெசூகாவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அந்த மறக்க முடியாத நிகழ்ச்சி படத்திலும் இடம்பெற்றுள்ளது.

தட்சுமியின் வாழ்க்கையினையும் அவர் எழுதிய ஐந்து சிறுகதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதே இப்படம்.

இப்படத்தின் ஆதாரநூல் A Drifting Life என்ற அவரது மாங்கா.

ஒசாமு தெசூகாவின் இறுதி ஊர்வலத்துடன் படம் தொடங்குகிறது. இனி மாங்காவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியைப் படம் எழுப்பி அதற்கான விடையாகத் தட்சுமியை முன்வைக்கிறது.

தட்சுமி இரண்டாம் உலகப் போர் சூழலில் வளர்ந்தவர். அன்றைய ஜப்பானில் கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் நெருக்கடி நிலை இருந்தது. ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் ஏற்படுத்திய பாதிப்பு ஜப்பானை உலுக்கியது. அதன் தாக்கத்தைத் தட்சுமியின் படைப்புகளில் காண முடிகிறது.

படத்தின் முதல்கதை Hell ஒரு புகைப்படக்கலைஞரைப் பற்றியது., அவர் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நாளில் இறந்துகிடப்பவர்களையும் இடிபாடுகளையும் புகைப்படங்கள் எடுக்கிறார்.

ஒரு வீட்டில் அம்மாவிற்கு மகன் முதுகு பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறான். அந்த நேரம் அணுகுண்டு வீசப்பட்டதால் அவர்கள் உருவம் அப்படியே நிழலோவியம் போலச் சுவரில் பதிந்து போகிறது. இருவரும் கரிக்கட்டைகளாக எரிந்து கிடக்கிறார்கள்.

துயர நிகழ்வின் சாட்சியம் போன்ற நிழலோவியத்தைப் புகைப்படம் எடுக்கிறான். நீண்ட காலம் அந்தப் புகைப்படத்தை வெளியிடாமல் பாதுகாத்து வருகிறான். பின்பு தனது வறுமையின் காரணமாக அதைப் பதிப்பாளர் ஒருவரிடம் விற்றுவிடுகிறான்.

புகைப்படம் வெளியாகி ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அந்தத் தாயும் மகனும் யார் என்ற உண்மையைக் கண்டறிந்து வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நினைவுச்சின்னம் உருவாக்கப்படுகிறது.

இந்த நிலையில் இறந்து போனதாகக் கருதப்படும் மகன் ஒரு நாள் உயிரோடு வருகிறான். அவன் யாரும் எதிர்பாராத புதிய கதையைச் சொல்கிறான். அந்த அதிர்ச்சி புகைப்படக்கலைஞனை உறையச் செய்துவிடுகிறது

ஐந்து கதைகளில் ஓய்வு பெறப்போகும் நாளில் தனக்கு விருப்பமான பெண்ணுடன் இரவை கழிக்க முற்படும் வயதானவர் பற்றிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவரை இச்சை கொள்ள வைப்பது, இளமையாக உணர வைப்பது கைவிடப்பட்ட பீரங்கி. அதைக் கண்டே அவர் தனது இளமையை உணருகிறார். எந்தப் பெண்ணுடன் இரவைக் கழிக்க ஆசைப்பட்டாரோ அவளுடன் இரவைக் கழிக்கிறார். ஆனால் அந்தப் பீரங்கி எதன் குறியீடு என்ற உண்மையை அதன்பிறகு அறிந்து கொள்கிறார்

இது போல இன்னொரு கதையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவன் ஒரு குரங்கை வளர்க்கிறான். அந்தக் குரங்கு அவனது மனசாட்சியைப் போல அறையில் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. சுவரில் வரையப்பட்ட பெண் சித்திரத்துடன் பேசிக் கொண்டு இசை கேட்டுக் கொண்டு தனியாக வசிக்கிறான். ஆயினும் அவனால் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தொழிற்சாலையில் நடந்த ஒரு விபத்தில் அவனது ஒரு கை துண்டிக்கபடுகிறது. இதனால் வேலை பறி போகிறது. கையில்லாதவனுக்குப் புதிய வேலை கிடைக்கவில்லை. முடிவில் அவன் தான் வளர்த்த குரங்கை மிருகக் காட்சி சாலை ஒன்றில் கொண்டு போய்விடுகிறான். அங்கே நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஐந்து கதைகளிலும் அதிர்ச்சியான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. தனிமையை உணருகிறவர்களே முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் காமத்தால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மகிழ்ச்சியை தேடி அலையும் அவர்கள் கசப்பையே அருந்துகிறார்கள். குடும்பம் அவர்களை புரிந்து கொள்ளவில்லை. தனது வாழ்வின் அர்த்தம் என்பதே துயரங்கள் தான் என உணருகிறார்கள். படத்தில் ஹிரோஷிமாவின் மீது மழையின் கறுப்புக் கோடுகள் வந்து போவது , கீறல்கள் மற்றும் கறை படிந்திருக்கும் காட்சிகள். குரங்கு அமர்ந்துள்ள அறை, துண்டிக்கபட்ட கை உள்ளவனின் நாட்கள் என ‘பேரழிவின் சாட்சியமாகவே காட்சிகள் தோன்றி மறைகின்றன.

துப்பறியும் கதைகளையும் குற்றநிகழ்வுகளையும் முதன்மையாகக் கொண்ட காமிக்ஸ்களைப் படித்து வந்த நமக்கு தட்சுமி காட்டும் உலகம் வேறானது. உண்மைக்கு நெருக்கமானது. அதைப் படம் சரியாக அடையாளப்படுத்தியிருக்கிறது

0Shares
0