தனது என் சரித்திரம் நூலில் தமிழ்தாத்தா உ. வே. சாமிநாதையர் , தனது பாட்டனாரைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

வேங்கடாசலம் என்ற அந்தத் தாத்தா மரணத்தருவாயில் உ.வே.சாவின் அன்னையை அருகில் அழைத்து “ நீ எனக்கு எவ்வளவோ உபசாரம் செய்திருக்கிறாய் . நான் உன்னைப் பல சமயங்களில் கடிந்து பேசியிருக்கிறேன் . வருத்தப்படாதே. நீ நல்ல பெண் ” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய தலைமாட்டிலுள்ள சிறு மூட்டையை எடுத்து . அதில் போடப்பட்டிருந்த ஒரு முடிச்சை மெல்ல அவிழ்த்து இரண்டு பழைய ஊசிகளை எடுத்து அன்னையிடம் கொடுத்துவிட்டு . ** இவைகளை நான் நெடுநாளாக வைத்திருக்கிறேன் . எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. என்னுடைய ஞாபகமாக இவைகளை வைத்துக் கொள்“ என்றிருக்கிறார்.
அந்த ஊசிகளை அவரது அன்னை பக்தியோடு வாங்கிக் கொண்டதோடு அவற்றைப் பல வருஷங்களாகப் பாதுகாத்தும் வந்தார் என்றும் குறிப்பிடுகிறார்
இது வெறும் நினைவுக்குறிப்பில்லை.
ஒரு சிறுகதையைப் போல உருக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி.
தனது அன்பான மருமகளுக்கு மாமனார் கொடுத்த பரிசு இரண்டு பழைய ஊசிகள். அவர் தன்னுடைய வாழ்நாள் எல்லாம் அந்த ஊசிகளை வைத்துப் பயன்படுத்தியிருக்கிறார். இன்னும் பயன்பட வேண்டும் என மருமகளுக்கு அளித்துப் போகிறார்.
இந்த இரண்டு ஊசிகளுக்குள் எழுதப்படாத. சொல்லப்படாத நினைவுகள் மறைந்திருக்கின்றன.
தாத்தா ஏன் தனது கிழிந்த ஆடைகளைத் தைத்து தரும்படி வீட்டோரிடம் கேட்கவில்லை. அவராகத் தைத்துக் கொண்டது வைராக்கியத்தின் அடையாளமா.
தனது தாத்தா கத்திரிக்காய் துவையல் செய்து தரும்படி எப்படிக் கேட்பார் என்பதை உ.வே.சா விரிவாகப் பதிவு செய்திருப்பார். அதில் தாத்தாவின் ஆளுமை முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது
“தாத்தாவிடம் போய் இன்று என்ன சமையல் பண்ணுவதென்று போய்க் கேட்டு வா?” என்று அம்மா என்னை அனுப்புவார். நான் தாத்தாவைக் கேட்பேன் .
அவர் ஆர அமர யோசித்துவிட்டு ** கத்தாரிக்காய் இருக்கா ??? என்று கேட்பார் . அதற்கு ஒரு தடவை ஓடிப் போய்க் கேட்டு வந்து பதில் சொல்வேன் . “*பிஞ்சா இருக்கா“ என்று அடுத்தக் கேள்வி போடுவார் . அதற்கும் ஒரு முறை ஓடிப் போய் வருவேன் .
அந்தக் கத்தாரிக்காயைச் சுட்டுட்டு……?? சிறிது. நிறுத்துவார் .
தெரியறதா, அதை நன்னாச் சுட்டுத் தாளிச்சுக் கொட்டி……?” அவர் சொல்லும் வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஹுங்காரம் செய்து கொண்டே இருப்பேன் . இல்லா விட்டால் அவரது அவர் பேச்சு மேலே போகாது.
“தாளிச்சுக் கொட்டறப்போ உளுத்தம் பருப்பைப் போட்டுடுவா; அதைப் போட சொல்லாதே. எண்ணெயை அதிகமா விடச் சொல்லாதே.”*
அப்போது மேலெழும் கோபத்தால் சிறிது நேரம் மெளனம் ஏற்படும் . மறுபடியும் ஆரம்பிப்பார் :
“அதை அம்மியிலே வச்சு நன்னா ஓட்டி ஓட்டி ஓட்டி ஓட்டி அரைக்கணும் .”
அந்த * ஓட்டி? என்னும் சொல்லை அவர் பல முறை சொல்லுவார் . அப்படிச் சொல்லும்போது அவர் கைகளின் அபிநயத்தைப் பார்த்தால் உண்மையாகவே கத்தரிக்காய்த் துவையலை அரைப்பவர்கள் கூட அவ்வளவு சிரத்தை கொள்ள மாட்டார்களென்று தோன்றும். “
இப்படி ருசியாகச் செய்து சாப்பிட்டவர் தான் அவரது தாத்தா.
ஒரு முறை உ.வே.சாவும் அன்னையும் வெளியூர் போகிறார்கள். அங்கேயும் இது போல ஒரு வீட்டில் பெரியவர் உத்தரவுகளைப் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது அன்னை. **ஓகோ! அங்கேதான் இருக்கிறீரென்று நினைத்தேன் ; இங்கேயும் இருக்கிறீரா“ என்று சொல்லியிருக்கிறார்
என் தாயார் அப்போது கூறிய வார்த்தைகளுக்கு அந்த இளம் பருவத்தில் எனக்குப் பொருள் விளங்கவில்லை. பிறகு விளங்கியது. என உ,வே.சா எழுதியிருக்கிறார். அதில் வெளிப்படும் உண்மை வீட்டுக்கு வீடு இப்படி அதிகாரம் செய்யும் மாமனார் இருந்தார் என்பது தான்.
வாழ்நாள் எல்லாம் அதிகாரம் செய்த தாத்தா தான் மரணப்படுக்கையில் இரண்டு ஊசிகளைப் பரிசாகக் கொடுக்கிறார். அத்தோடு நீ நல்ல பெண் என்று பாராட்டவும் செய்கிறார்.
“அந்தக் காலத்தில் பெண்களுடைய நிலை மிகவும் கஷ்டமானதாக இருந்தது. “ என இந்த நிகழ்ச்சியைப் பற்றி உ,வே.சா பதிவு செய்திருக்கிறார்.
அந்தக் காலத்து மனிதர்கள் விட்டுச் சென்ற மீதம் என்பது இது போல அற்ப பொருட்கள் தான் என்பதற்காகத் தான் இந்நிகழ்ச்சி நினைவுகூறப்பட்டுள்ளதா. இல்லை அவரது அன்னையின் இயல்பைக் காட்டுவதற்காகவா.
இந்த இரண்டு ஊசிகளால் மாமனார் தனது மருமகள் மீது காட்டிய பல நாள் கோபத்தைத் தைத்துவிட முடியுமா என்ன.
அந்த ஊசிகளை அவரது அன்னை திரும்பப் பயன்படுத்தினரா என்பது பற்றி உ.வே.சா எழுதவில்லை. நிச்சயம் அது வெறும் நினைவுப்பொருளாக மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். பாட்டனாரின் குடை. பாட்டனாரின் திருநீற்றுக் கிண்ணம் போல இந்த ஊசியும் அவரது நினைவின் மீதமே.
ஒருவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதும் இது போன்ற நுண் நிகழ்வுகளே அதைக் காலம் கடந்தும் ஈரமாக உணரச் செய்கின்றன.
இந்த நிகழ்ச்சி என்றோ உ,வே.சா வாழ்வில் நடந்திருக்கிறது. ஆனால் வாசிக்கும் போது பாட்டனாரின் நடுங்கும் கைகளும் கலங்கி நிற்கும் அன்னையும் கண்முன்னே தோன்றுகிறார்கள். தாத்தா கையிலிருநது அவரது அம்மா ஊசியை வாங்குவது கண்ணில் தெரிகிறது.
பொருளின் மீது அதைப் பயன்படுத்தியவரின் நினைவு படிந்துவிடும் போது அதை வெறும்பொருளாக இல்லாமல் உருமாறிவிடுகிறது. தனது கையிலிருந்த ஊசியைத் தாத்தா காலத்தின் கையில் கொடுத்துவிடுகிறார். அது எவ்வளவு காலம் பாதுகாக்கபடும் எனக் காலத்திற்கு மட்டுமே தெரியும்.
ஏன் அந்த ஊசிகளைப் பயபக்தியோடு அவரது அன்னை பாதுகாத்தார். தன்னை மாமனார் கடிந்து கொண்ட கடந்த கால நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ஏன் மறந்து போனார். ஒருவேளை அந்த ஊசியைத் தவிர அவரிடம் கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொண்டரா.
தலையருகே வைத்திருந்த துணி மூட்டையைப் பிரித்து அதனுள் இருந்த முடிச்சை அவிழ்த்தார் என்பது அந்தக் காலகட்ட வாழ்வின் அசலான சித்தரிப்பு. அப்படியான துணைமூட்டை பலரது தாத்தாவிடம் பாட்டியிடம் இருந்தன. அவற்றை அவர்கள் பாதுகாத்து வைத்திருந்தது நாம் பயனற்றது என நினைக்கும் எளிய பொருட்களே.
இந்த ஊசிகளைத் தனது மருமகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற முடிவை அந்தக் கிழவர் எப்போதோ எடுத்திருப்பார். அதனை நிறைவேற்ற காத்துக் கொண்டிருந்திருப்பார்.
ஒருவேளை அந்த ஊசிகளில் ஒன்று காணாமல் போயிருந்தால் அவரது அன்னை வருத்தப்பட்டிருப்பார். அந்தக் காலத்தில் ஊசியைப் பாதுகாப்பது கடினமானது. ஊசிதொலைந்து போய்த் தேடிய கதை எல்லோர் வீட்டிலும் நடந்திருக்கிறது. ஊசிகள்ளன் வந்து திருடிப் போய்விட்டதாகச் சொல்வார்கள். ஊசியைக் கடன்கொடுக்கக் கூடாது என்றும் சொல்வார்கள்.
இந்த நினைவை உ.வே.சா எழுதும் போது அவருக்கு எண்பது வயது. என்றோ தனது பால்யத்தில் கண்ட காட்சி அவருக்குள் மறையாமல் இருக்கிறது. காலம் எந்த நினைவுகளை மறையச் செய்யும். எந்த நினைவுகளை அழியாமல் பாதுகாக்கும் என எவராலும் அறிந்து சொல்லிவிட முடியாது.
உ,வே.சாவைப் போல அவரது அன்னை வாழ்க்கை வரலாற்றை எழுதவில்லை. எழுதியிருந்தால் அந்த ஊசிகளைப் பெற்றுக் கொண்டபோது தான் எப்படி உணர்ந்தேன் என்று எழுதியிருப்பார். ஒவ்வொரு சுயசரிதையிலும் எழுதப்படாத நிறைய உண்மைகள் ஒளிந்திருக்கின்றன. வாசகனால் அவற்றை நன்றாகவே உணரமுடிகிறது
••