மாக்ஸ் ஓஃபுல்ஸ் (Max Ophuls) இயக்கிய ‘தி இயர்ரிங்ஸ் ஆஃப் மேடம் டி… திரைப்படம் 1953 ல் வெளியானது. இதன் கதை வியன்னாவில் நடக்கிறது.

1951-ல் வெளியிடப்பட்ட லூயிஸ் டி வில்மோரின் குறுநாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது
ஜெனரல் ஆண்ட்ரேயின் மனைவியான லூயிசா தனது சூதாட்டக் கடன்களை அடைப்பதற்காகக் கணவனிற்குத் தெரியாமல் விலை மதிப்புமிக்க வைரக் காதணிகளை ரகசியமாக விற்பனை செய்கிறாள். இந்தக் காதணிகளின் பயணமே படத்தின் மையக்கதை
ஆண்ட்ரே தனது மனைவிக்குத் திருமணப் பரிசாக அளித்த வைரக்காதணிகள் எப்படிக் கைமாறிப்போகின்றன என்பதையும், இதன் மூலம் கணவன் மனைவி இருவரும் எப்படி ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்கிறாரகள் என்பதையும் படம் அழகாக விவரிக்கிறது
காதணிகளை ரகசிய ஆசையின் அடையாளமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் மாக்ஸ் ஓஃபுல்ஸ்.

மேடம் டியாக டாரியக்ஸ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். சுய அழகில் மயங்கி பகட்டாகவும் சல்லாபத்துடனும் நடந்து கொள்ளும் பெண்ணாக அவரது நடிப்பு அபாரமானது. பல காட்சிகளில் அவரது முகத்தில் வெளிப்படும் மென்சோகம் அவரது மனதின் தவிப்பை அழகாக வெளிப்படுத்துகிறது.
படத்தின் துவக்கத்தில் லூயிசாவின் வசதியான வாழ்வும் அவளது சேகரிப்பிலுள்ள உடைகள். ஆபரணங்களும் காட்டப்படுகின்றன. அதில் எதைச் சூதாட்டக் கடனுக்காக விற்பது என முடிவுசெய்ய முடியாமல் தடுமாறுகிறாள்.
அவளது கணவன் ஆசையாகப் பரிசளித்த வைரக் காதணிகளை விற்பது என முடிவு செய்கிறாள். அந்த முடிவிற்கு வெளிப்படையான காரணம் சொல்லப்படுவதில்லை. ஆனால் அவர்கள் உறவில் ஏற்பட்ட விரிசலே காரணம் எனப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஜெனரல் அதிகார போதையிலே மிதப்பவர், அவருக்கும் ரகசிய காதலி இருக்கிறாள். நடனவிருந்தில் தனது மனைவி ஆண்களை மயக்கக்கூடியவள் என வெளிப்படையாகவே சொல்கிறார். அவளது தவறுகளை அறிந்தே ஏற்றுக் கொள்கிறார். அவரது பதவியைப் போலவே அழகான மனைவியும் அவரது அதிகாரத்திற்குத் தேவையானவர்கள்.
அவரைப் போலவே லூயிசாவிற்கும் ரகசியக் காதலிருக்கிறது.. தனது சூதாட்டக் கடனைப் பற்றிக் கணவனுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே வைரக்காதணிகளை விற்பனை செய்கிறாள்

இந்த விற்பனைக்கு நகைவணிகர் ரெமி உதவுகிறார். அவரிடம் இந்த ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது என்று லூயிசா உத்தரவிடுகிறாள். ஆனால் ரெமி உடனடியாக ஜெனரலிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். தனது மனைவி விற்பனை செய்த வைரக்காதணிகளை விலைக்கு வாங்கிய ஜெனரல் அதைத் தனது ஆசைக்காதலியான லோலாவிற்குப் பரிசாக அளிக்கிறார். அவள் அன்றிரவு கான்ஸ்டான்டினோபிள் புறப்படுகிறாள்.
ஓபராவிற்குச் செல்லும் போது தனது வைரக் காதணிகள் தொலைந்துவிட்டதாக லூயிசா கணவனிடம் பொய் செய்கிறாள்.
லோலாவிடமிருந்து அந்தக் காதணிகள் கை மாறுகின்றன இத்தாலியத் தூதராகப் பணியாற்றும் டொனாட்டி அவற்றை வாங்குகிறார். பாரிஸில், அவர் தற்செயலாக லூயிசாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவளது அழகில் மயங்கி அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அந்தக் காதலின் அடையாளமாக அவளுக்கு அதே வைரக்காதணிகளைப் பரிசாக அளிக்கிறார்
கணவன், காதலன் இருவரையும் ஏமாற்ற நினைக்கும் லூயிசா ஆளுக்கு ஒரு பொய்யைச் சொல்கிறாள். கணவனிடம் அந்த வைரக்காதணிகள் தனது உடைக்குள் மறைந்துகிடந்ததாகச் சொல்கிறாள். காதலனிடம் அந்த நகை பெயர் தெரியாத ஒரு உறவினரின் பூர்வீகச் சொத்து என்று தனது கணவரை நம்ப வைத்துவிட்டதாகச் சொல்கிறாள். இப்போது காதணிகள் ரகசிய காதலின் அடையாளமாக மாறுகின்றன

முடிவில் கணவன் மற்றும் காதலன் இருவரும் நேரடியாக மோதிக் கொள்கிறார்கள். முடிவு என்னாவாகிறது என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
வைரக்காதணிகள் காதலின் அடையாளம் மட்டுமில்லை. ரகசிய இச்சையின் அடையாளமும் அதுவே. படத்தின் முதல் பாதியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு இரண்டாம் பாதியில் அதன் எதிர் அர்த்தம் வெளிப்படுத்தப்படுவது சுவாரஸ்யமானது.
லூயிசா அடிக்கடி மயக்கமடைகிறாள். ஆண்களுடனான அவளது சல்லாபங்களைப் போலவே அவளது மயக்கமும் ஒருவகைக் கவனஈர்ப்பே
ஒரு நடனவிருந்தில் டொனாட்டியுடன் இணைந்து லூயிசா நடனமாடுகிறாள் . பிரியவே கூடாது என நினைக்கும் இளம் காதலர்களைப் போல அவர்கள் நடந்து கொள்கிறார்கள். நேரம் கடந்து செல்கிறது. தன்னை மறந்து ஆடுகிறார்கள் இசையும், அவர்களின் தடையற்ற நடன அசைவுகளும் தொடர்கின்றன. நடன அரங்கம் வெறுமையாகிறது, இசைக்குழுவின் உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்கிறார்கள். ஒரு வேலையாள் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளை அணைக்கிறான். அரங்கிலிருந்த இசைக்கருவி மீது கறுப்பு துணி போர்த்தப்படுகிறது . ஆனாலும் அவர்களின் நடனம் முடியவில்லை. காதல் மயக்கம் கலையவில்லை. படத்தின் மிகச்சிறந்த காட்சியது
டொனாட்டியாக இயக்குநர் விட்டோரியோ டி சிகா நடித்திருக்கிறார். தனது காதலை வெளிப்படுத்த முயலும் வேடிக்கையான நிகழ்வுகள். காதலில் மயங்கி நடந்து கொள்ளும் விதம் என டிசிகா மிகச்சிறப்பாக நடித்துள்ளார்

ஒளிப்பதிவாளர் கிறிஸ்டியன் மாட்ராஸ் கேமிராவை நிழல் போல நகரச் செய்கிறார். கேமிரா கதாபாத்திரங்களுடன் இணைந்து கூடவே பயணிக்கிறது. குறிப்பாக வைரக்காதணிகளை விற்பதற்காக மேடம் டி நகைவியாபாரியை சந்திக்க வரும் காட்சியில் அவளைக் கேமிரா பின்தொடர்கிறது. அவள் சுழல் படிக்கட்டுகளில் மேலேறுவதைக் காட்டுகிறது. அங்குமிங்கும் சுழலும் கேமரா அவளது அமைதியின்மையைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இது போலவே கடிதத்துண்டுகளை அவள் கிழித்து எறியும் போது அவைபறந்து பனித்துகளாக மாறும் காட்சியும் அழகானது. இது போன்றதே நடன அரங்கக் காட்சியும். படத்தின் ஒளிப்பதிவு விசேசமானது. கவித்துமானது. நிகரற்றது. இசையும் ஒளிப்பதிவும் கைகோர்த்து மாயத்தை உருவாக்குகின்றன.
உலகின் மிகக்சிறந்த படங்களில் ஒன்றாகத் ‘தி இயர்ரிங்ஸ் ஆஃப் மேடம் டி… கொண்டாடப்படுகிறது.
ஒரு திரைப்படத்தின் கதைக்கு ஒரு ஜோடி காதணி போதும் என்ற மிகப்பெரிய பாடத்தைத் திரைக்கதை ஆசிரியர்களுக்குப் போதிக்கிறது இப்படம்.