மறையாத சிரிப்பு

புதிய சிறுகதை. மே 30 2026

காலையிலிருந்தே கையில் அந்த லட்டை வைத்துக் கொண்டு தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தான் முருகேசன்.

பனிரெண்டு வயது முடியப்போகிறது என்றாலும் எட்டு வயதுப் பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். ஒட்ட வெட்டிய கிராப். அரைக்கால் டவுசர். கட்டம் போட்ட சட்டை. காலில் ரப்பர் செருப்பு.

அவன் படித்த பள்ளிக்கூடத்தில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே யூனிபார்ம் அணிந்துவர வேண்டும். மற்ற நாட்கள் எந்த உடையும் அணிந்து கொள்ளலாம். அன்றைக்குச் சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கூடம் கிடையாது. காலையிலே கிரிக்கெட் விளையாடுவதற்காகப் பசங்களுடன் எல்.எம்.பி ஸ்கூல் கிரவுண்ட் போய்விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் ஒரு லட்டு அவனது திட்டத்தை மாற்றி விட்டது.

“ஏன் இந்த லட்டை வாங்கினோம். ஏன் அதனை உடனே தின்னாமல் வீட்டிற்குக் கொண்டு போனோம்“ என அவனுக்கு எரிச்சலாக வந்தது.

“லட்டு கொடுத்தவர்களிடம் திரும்ப ஒப்படைக்காமல் வீட்டிற்கு வரக்கூடாது“ என்று அம்மா கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள்.

லட்டு கொடுத்த ரசிகர் மன்றத்து வேனை எங்கே தேடியும் கிடைக்கவில்லை. ஒரு வேளை சினிமா தியேட்டர் பக்கம் இருப்பார்களோ என மூன்று தியேட்டர்களையும் பார்த்துவிட்டான். வேனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பேருந்து நிலையம். சின்ன மார்க்கெட். பெரிய மார்க்கெட், காந்தி சிலை. எஸ்எம்பி பார்க், ஆஞ்சநேயர் கோவில் பக்கம், ரயில்வே பீடர் ரோடு, பாரதி நகர், வேந்தர்நகர் என அலைந்து திரிந்து பார்த்துவிட்டான். கையில் வைத்திருந்த லட்டு வெயிலில் பிசுபிசுக்கத் துவங்கியிருந்தது. சாலையோரம் இருந்த பிச்சைகாரனிடம் அதனைக் கொடுத்துவிடலாமா என்று நினைத்தான். ஒருவேளை அது தெரிந்துவிட்டால் அம்மா நிச்சயம் காலில் சூடு போட்டுவிடுவாள் என்ற பயம் ஏற்பட்டது.

கையிலிருந்த லட்டு அப்பாவை அதிகம் நினைவுபடுத்தியது. அப்பா உயிரோடு இருந்திருந்தால் இப்படி அவனை அலையவிட்டிருக்க மாட்டார். அம்மா திட்டினால் கூட அவர் பேசி சமாளித்திருப்பார். பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி முருகேசன் மாட்டிக் கொள்ளும் போது அம்மா கோபத்தில் கத்துவாள். சண்டையிடுவாள். ஆனால் அப்பா சிரிப்பார். அது பொய்யை அனுமதிக்கும் சிரிப்பு. அப்போது அப்பா மிக அழகாக இருப்பது போல அவனுக்குத் தோன்றும்.

அப்பா ஏன் இப்படித் திடீரெனக் கொரோனாவில் இறந்து போனார். அதுவும் கொரோனா சரியாகிவிட்டது நாளை வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த இரவில் ஏன் இறந்து போனார். அவரது உடலை கூட அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. மருத்துவமனையே மயானத்திற்குக் கொண்டு போய்விட்டார்கள். அதைத் தான் அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நினைத்து நினைத்து பல நாட்கள் அழுதாள்.

அப்பா இறந்த பிறகு அம்மாவின் இயல்பு மாறிவிட்டிருந்தது. அதிகக் கோபமும் ஆவேசமும் கொண்டவளாக மாறினாள். அவனையும் அவனது தங்கை லட்சுமியையும் அற்பகாரணங்களுக்காகக் கூட அடித்தாள். எப்போதும் பதற்றமாக நடந்து கொண்டாள்.

அப்பா செய்து வந்த சைக்கிள் வியாபாரத்தை அம்மா தொடர ஆரம்பித்தாள். காலையிலே பெரிய மார்க்கெட் போய் வெங்காயம் சீனிக்கிழங்கு வாங்கிக் கொண்டு வீதி வீதியாகச் சுற்றி அதனை விற்று வந்தாள்.

சில சமயம் அவர்கள் பள்ளிக்கூடத்தைக் கடந்து அம்மா சைக்கிள் ஒட்டிச் செல்வதை அவன் பார்த்திருக்கிறான். அப்பாவைப் போல அவள் உரத்துக் கூவி விற்பதில்லை. சைக்கிளில் ஒரு வெண்கல மணி வாங்கிக் கட்டியிருந்தாள். தெருவில் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிச்சப்தம் எழுப்புவாள். அந்த ஓசை கேட்டு வருகிறவர்களிடம் விற்பனை செய்வாள். பலருக்கும் அவள் மாரிச்சாமியின் மனைவி என்று நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவே அவளிடம் பேரம்பேசுவதில்லை. கோவித்துக் கொள்வதில்லை.

காலை எட்டு மணிக்கு அம்மா வியாபாரத்துக்குக் கிளம்பிவிடுவாள் என்பதால் காலையிலே சோறாக்கி விடுவாள். மூன்று வேளையும் அதையே அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் வீடு பகலில் பூட்டப்பட்டிருக்கும். பள்ளி விட்டு வரும் போது பக்கத்து வீட்டு செல்வியக்காவிடமிருந்து சாவியை வாங்கி வீட்டைத் திறப்பான். அவர்கள் இல்லாத நேரத்தில் வீடு ஒரு பொம்மையைப் போலாகிவிடுகிறது. சில நாள் அம்மா வீடு வந்து சேர இரவு ஏழுமணியாகிவிடும்.

அன்றாட வருவாயிலிருந்து அம்மா தினமும் நூறு ரூபாய் என ஒரு சீட்டுக்கட்டி வந்தாள். அதற்காக மாலையில் ரத்னா சிட்பண்ட்ஸ் வரை போய் வர வேண்டியிருந்தது. சில நாட்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது கந்தவிலாசிலிருந்து பக்கோடாவும் பால்பன்னும் வாங்கி வந்து தருவதுண்டு. அதைத் தவிர வேறு தின்பண்டங்கள் எதையும் அம்மா வாங்கித் தர மாட்டாள்.

எப்போதாவது திருமண வீட்டிற்குப் போகையில் இலையில் லட்டு வைக்க மாட்டார்களா என ஆசையாகப் பார்த்துக் கொண்டிருப்பான். . பாயாசத்தை விடவும் அவனுக்கு லட்டே பிடித்திருந்தது. யாராவது ஒரு கூடை நிறைய லட்டு வைத்து வேண்டிய அளவு சாப்பிடச் சொல்ல மாட்டார்களா என ஏங்கியிருக்கிறான்.

அந்த ஆசை தான் இன்று அவனைக் கைநீட்டி லட்டு வாங்கச் செய்திருந்தது

அன்றைக்குக் காலை ஏழு மணிக்கு ஸ்பீக்கர் கட்டிய ஒரு வேன் தேரடியில் வந்து நின்றிருந்தது. வேனின் இரண்டு பக்கமும் நடிகர் ஒருவரின் பிறந்தநாள் வாழ்த்துப் பெரியதாக எழுதப்பட்டிருந்தது. முகப்பில் அவரது புகைப்படம் ரோஜா மாலையுடன் அலங்கரிக்கபட்டிருந்தது.

நடிகரின் உருவம் பதித்த டீ சர்ட் அணிந்த ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அனைவருக்கும் லட்டு விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு லட்டு வாங்கி வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் டப்பா டப்பாவாகத் திறந்து போகிற வருகிறவர்களை எல்லாம் லட்டு எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். சிலர் இரண்டு லட்டு எடுத்துக் கொண்ட போதும் இளைஞர்கள் கோவித்துக் கொள்ளவில்லை.

அந்த வேனிலிருந்து லட்டு வாங்கித் தின்றபடியே வந்த முருகேசின் பள்ளிநண்பனான குணா துவையல் அரைப்பதற்காகப் பச்சை மிளகாய் வாங்கப் போய்க் கொண்டிருந்த முருகேசனை கைநீட்டி அழைத்துச் சொன்னான்.

“வேன்ல லட்டு குடுக்குறாங்கடா. நான் ரெண்டு வாங்கித் தின்னுட்டேன்“.

“நிஜமாவா“.

“பூந்தி லட்டுடா.. செம டேஸ்டா இருக்கு“

முருகேசன் கையில் வைத்திருந்த மஞ்சள்பையை டவுசர் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு வேனை நோக்கி ஒடினான். அங்கே ஆண்களும் பெண்களும் முண்டியத்து லட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். முருகேசன் எக்கி நின்று தனது வலது கையை நீட்டினான்.

தாடி வைத்த ஒரு இளைஞன் ஸ்வீட் பாக்சிலிருந்து ஒரு லட்டை எடுத்து முருகேசன் கையில் கொடுத்தான். பொன்னிறமான லட்டை கையில் வாங்கியதும் வாயில் எச்சில் ஊறியது. ஆனால் சாப்பிடவில்லை. பல் விளக்காமல் எதையும் சாப்பிடக்கூடாது என்று அம்மா சொல்லியிருந்தாள், ஆகவே வீட்டிற்குப் போய்ப் பல்லை விளக்கிவிட்டுத் திங்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

அவசர அவசரமாகக் காய்கறிக் கடைக்குப் போய்ப் பச்சைமிளகாய் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஒடினான்.

வீட்டில் அவனது தங்கை லட்சுமிக்குத் தெரியாமல் லட்டை அலுமினிய மூடி ஒன்றில் வைத்து அதன் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து வைத்தான். நிச்சயம் லட்சுமியால் கண்டுபிடிக்க முடியாது.

பற்பொடியை கையில் தட்டிக் கொண்டு கைவிரலால் பல்லை விளக்குவதற்காக வீட்டின் பின்புறம் இருந்த சிமெண்ட் தொட்டியை நோக்கி சென்றான். அவன் பல்லை விளக்கிவிட்டு உள்ளே வருவதற்குள் லட்சுமி லட்டை கண்டுபிடித்திருந்தாள்

“யம்மா.. அண்ணே.. லட்டு வாங்கியிருக்கு“ என்றாள் லட்சுமி.

“லட்டா.. “ எனக்கேட்டபடியே அம்மா அடுப்பில் வெந்து கொண்டிருந்த சோற்றைக் கிளறிவிட்டுக் கொண்டிருந்தாள்.

“இங்க பாரும்மா லட்டு“ என லட்சுமி தன்னுடைய கையை நீட்டினாள்

“அவனைக் கூப்பிடு…. சொல்றேன்“ என்றபடியே அம்மா கண்ணில் வந்துவிழுந்த தலைமயிரை சரி செய்து கொண்டாள்

லட்சுமி சப்தமாக “யண்ணே. யண்ணே“ எனக் கூப்பிட்டாள். வாயில் வைத்திருந்த எச்சில் தண்ணீரை அவசரமாகக் கொப்பளித்தபடியே முருகேசன் வீட்டிற்குள் வந்தான்

தனது லட்டை லட்சுமி கையில் வைத்திருப்பதைக் கண்டதும் கோபத்தில் அவளை முறைத்தபடியே கேட்டான்

“எதுக்குடி லட்டை எடுத்தே “

“ஏதுண்ணே இந்த லட்டு “எனக்கேட்டாள் லட்சுமி

“கிடைச்சது. யாரோ குடுத்தாங்க.. நீ ஏன் அதை எடுத்தே“ என அவள் கையிலிருந்த லட்டைப் பிடுங்க முயன்றான்

“யாருடா உனக்கு லட்டு குடுத்தா“ எனக்கேட்டாள் அம்மா

“ரசிகர் மன்றத்துல இருந்து குடுத்தாங்க. இன்னைக்குச் சினிமா ஸ்டாரோட பிறந்த நாளாம். “

“நீ ரசிகர் மன்றத்துல இருக்கியா “எனக் கோபத்துடன் கேட்டாள் அம்மா

“இல்லம்மா… எல்லாருக்கும் லட்டு குடுத்தாங்க. நானும் வாங்கினேன்“

“அடி செருப்பாலே.. எவனாவது எதையாவது குடுத்தா வாங்கித் தின்னுருவியா.. ஏன் நாம வக்கத்து போயிட்டமா.. மான ரோசம் அத்துப் போச்சா.. வீட்ல திங்குறது போதாதா“

“டம்ளரை வச்சி லட்டை ஒளிச்சி வச்சிருந்தான்மா“ என்றாள் லட்சுமி

“கைநீட்டுறதுமில்லாம திருட்டு புத்தியும் வந்துருச்சா.. சொல்றா“ என்றாள் அம்மா

பதில் பேசாமல் தலையைக் கவிழ்ந்து நின்றிருந்தான். அம்மா எழுந்து பிடி நீண்ட தோசைக் கரண்டியை உருவியெடுத்து அவனை அடித்தாள். முதலடி அவனது இடது தோளில் விழுந்தது.

“எங்கேயும் போயி கையை நீட்டாதேனு எத்தனை தடவை படிச்சி படிச்சி சொல்லியிருப்பேன். புத்திவரலையா“ என ஆங்காரத்துடன் தோசைகரண்டியால் அவனை அடித்தாள்

“யம்மா. வலிக்கி.. அடிக்காதே“ என உடம்பை வளைத்து நெளித்தான் முருகேசன்.

“அன்னைக்கே உங்க அப்பாவோட நானும் செத்துப் போயிருந்தா.. நீங்க ரெண்டு பேரும் தெருவுல பிச்சை எடுத்துட்டுகிட்டு தான் நின்னுருப்பீங்க . நான் வேகாத வெயில்ல தெருத்தெருவா சுற்றி சம்பாதிச்சி போடுறது எதுக்கு.. உங்களுக்குத் தானே. அந்த நினைப்பு இருந்தா கையை நீட்டி லட்டை வாங்கியிருப்பியா.. உன்னைப் பாத்து தானே இவளும் வருவா.. வீட்ல கேக்க ஆள் இல்லேனு நினைச்சயா“ எனக் கோபம் கொப்பளிக்க மறுபடியும் அடிக்கக் கரண்டியை ஒங்கினாள்.

“இனிமே வாங்க மாட்டேன்மா“. என முருகேசன் குரல் நடுங்க சொன்னான்.

“இந்த புத்தி ஏன் முன்னாடி வரலை.. நாக்கு நமநமத்தா.. மண்ணை அள்ளி திண்ணுடா. இல்லை ரோட்டில கழுதவிட்ட கிடக்கும். பொறுக்கி தின்னு…“ என அவனது தலைமயிரை பிடித்து ஆட்டு வைத்தாள்.

“அடிக்காதம்மா. திரும்பக் குடுத்துருறேன்“

“வழியில லட்டை தின்னுட்டு பொய் சொன்னே.. உன் நாக்கு அழுகிப் போயிரும் பாத்துக்கோ.. “

“அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்மா“

“உன் வயிற்றுக்குள்ளே லட்டு இருந்தாலும் கண்டுபிடிச்சிருவேன். நான் உன்னைப் பெத்தவ. என்னை ஏமாத்த முடியாது“

“திங்க மாட்டேன்மா“

“நான் உழைச்சி கொண்டு வந்து போடுறதை மட்டும் தான் சாப்பிடணும். நாயி மாதிரி நாக்கை தொங்க போட்டுகிட்டு அலைஞ்சே. நாக்கை அறுத்து போட்ருவேன் பாத்துக்கோ“

“என்னை மட்டும் சொல்றே. அன்னைக்கு லட்சுமி கூடத் தான் கோவில்ல சக்கரப் பொங்கல் வாங்கித் தின்னுச்சி“

“அதுவும் இதுவும் ஒண்ணா.. பாவம் சின்னபுள்ளை.. பிரசாதம் வாங்கியிருக்கும். “

“இந்த லட்டும் அப்படித் தாம்மா குடுத்தாங்க“

“குடுத்தவன் யாருடா. உனக்கு எதுக்கு லட்டுக் குடுக்கிறான்.. அதைச் சொல்லு“

“எல்லோருக்கும் குடுத்தாங்க. நானும் வாங்கினேன்“

“உங்க அப்பா உசிரோட இருந்திருந்தா.. தோலை உரிச்சிருப்பார்.. அந்த மனுசன் போன பிறகு நான் வம்பாடு பட்டு உங்களை வளர்த்தா.. கண்டவன் முன்னாலே கையை நீட்டச் சொல்லுதா… சூடு சொரணை இருந்தா வாங்கியிருப்பியா. “

“அப்போ நீ லட்டு வாங்கிக் குடு. “. என்றான் முருகேசன்

“உன் நாக்கை நீட்டு சொல்றேன். அதுல சூடு வச்சா.. லட்டு கேட்காது“ என அவனை அடிக்க அருகில் இழுத்தாள்

“அடிக்காதம்மா.. நான் திரும்பக் குடுத்துருறேன்“ எனக் கண்ணீர் வழிய சொன்னான் முருகேசன்

“சொல்லிகிட்டே நிக்குற நேரத்துல அந்தக் கருமத்தை குடுத்துட்டு வந்துருக்க வேண்டியது தானே.. ஏன் நிக்குறே.. ஒடு“

“அவங்க இந்நேரம் போயிருப்பாங்க“

“நீ எங்க போயி தேடுவியோ எனக்குத் தெரியாது. திரும்பக் குடுத்துட்டு வந்தா மட்டும் வீட்டுக்கு வா. இல்லே அப்படியே போயிடு. “

போவதா வேண்டாமா என்ற தயக்கத்துடன் முருகேசன் நின்று கொண்டிருந்தான். பிறகு ஏதோ யோசனை செய்தவன் போலச் சொன்னான்

“லட்டை வேணும்னா காக்காவுக்குப் போட்ரலாம்மா . “

“சொன்னதைச் செய்டான்னா.. மயிராண்டி..காக்காவுக்குப் போட போறானாம். “ என அவிழ்ந்த கூந்தலை முடிந்தபடியே மீண்டும் அடிப்பதற்குக் கையை ஒங்கினாள்

முருகேசன் லட்டை கிழிந்த பழைய நியூஸ் பேப்பர் ஒன்றில் சுற்றி மடித்துக் கொண்டு டவுசர் பாக்கெட்டில் வைக்க முயன்றான். லட்டு உடைந்துவிடும் போலிருந்தது. அப்படியே திரும்பக் கொடுக்க வேண்டும் என்றால் கையில் தான் வைத்துக் கொள்ள வேண்டும். ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை எங்கே போய்த் தேடுவது. திரும்பக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா எனக் குழப்பமாக இருந்தது.

கையில் லட்டுடன் அவன் தேரடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வீதியில் கடந்து போகிறவர்கள் தன்னை விசித்திரமாகப் பார்ப்பது போல உணர்ந்தான். தன்னைப் போல வேறு எவரும் இப்படி ஒரு லட்டை திரும்பிக் கொடுக்கப் போகமாட்டார்கள்.

ஒரு லட்டு வாங்கியதற்காக அம்மா ஏன் இவ்வளவு கோவித்துக் கொள்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அதே நேரம் அதனை வெறும் கோபம் என்று நினைக்கவும் முடியவில்லை. அப்பா உயிரோடு இல்லை என்பதை அம்மா உணரச் செய்கிறாள். ஆசைகள் தான் அப்பாவை அதிகம் நினைவுபடுத்துகின்றன.

அப்பா உயிரோடு இருந்த நாட்களில் அவர்களை வாரம் ஒரு நாள் ராவுத்தர் பரோட்டா கடைக்கு அழைத்துச் செல்வார். பொறித்த பரோட்டாவும் சிக்கனும் வாங்கித் தருவார். சில நேரம் அவன் முட்டை தோசை கேட்பான். அப்பா கோவித்துக் கொள்ள மாட்டார்.

சில நாட்கள் அப்பா காலையிலே இனிப்பு வடை வாங்கி வந்து அவனையும் லட்சுமியையும் எழுப்பிச் சாப்பிட வைப்பார். எப்போது வெளியூர் போய்வந்தாலும் மறக்காமல் தின்பண்டங்கள் வாங்கி வருவார். அவர்களைச் சாப்பிட வைத்துப் பார்ப்பது அப்பாவிற்குப் பிடித்திருந்தது.

“கண்டதையும் வாங்கிக் குடுத்து பிள்ளைகளைக் கெடுக்காதீங்க“ என்பாள் அம்மா

“அப்படி என்ன பெரிசா வாங்கிக் குடுத்துட்டேன். பிள்ளைகள எதுக்கும் ஏங்க விடக்கூடாது. அது மனசிலயே நின்னுரும். “ என்பார் அப்பா

ஒரு முறை ஞானதுரை மாமா கல்யாண வீட்டிற்கு அவர்களை அழைத்துப் போயிருந்த போது பந்தியில் நிறையக் கூட்டம். சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர்களைப் பந்தி முடிந்துவிட்டது என்று அவசரமாக எழுந்திருக்கச் சொன்னார்கள். அதெல்லாம் முடியாது. என் பிள்ளைகள் சாப்பிட்டு முடியும் வரை இந்த வரிசையில் வேறு இலை போடக்கூடாது என அப்பா கோபமாகச் சண்டையிட்டார். அத்தோடு அவர்களிடம் “நீங்க மெதுவா சாப்பிடுங்க. பாயாசம் சாப்பிட்டு முடியும் வரை அப்பா இருக்கேன்“ என்றார். அம்மா கூடப் பாதியில் இலையை மூடிவைத்துவிட்டாள். ஆனால் அப்பா அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை எவரையும் பந்தியில் உட்கார விடவில்லை

அந்த வரிசையில் இருவர் மட்டும் நிதானமாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மற்றவர்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பா வேண்டுமென்றே இன்னொரு அப்பளம் கொண்டுவர செய்து பாயாசத்தில் உடைத்து போட்டு அவனைச் சாப்பிடச் செய்தார். சாப்பாட்டை விடவும் அப்பா நடந்து கொண்ட விதம் இனிப்பாக இருந்தது.

வீதியில் லட்டுடன் நடக்கும் போது பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகக் குமிழ்விடத் துவங்கின.

நீண்ட நேரமாகக் கையில் வைத்துக் கொண்டு சுற்றச் சுற்ற லட்டின் எடை கூடிக் கொண்டிருப்பது போல உணர்ந்தான். திடீரென இனிமேல் இனிப்பே சாப்பிடக் கூடாது என்ற எண்ணம் மனதில் தோன்றியது. அந்த எண்ணம் அடுத்த நிமிஷமே கலைந்து லட்டை சாப்பிட்டுவிட்டு ரயிலேறி எங்காவது ஒடிப்போய்விடலாமா என்றும் நினைத்தான்

அம்மா தேடுவாள். அம்மா அழுவாள். லட்சுமி அழுவாள். அப்பா இருந்திருந்தால் நிச்சயம் அப்படி நடந்திருக்காது என்று அம்மா நினைத்து நினைத்து அழுவாள்.

நாம் வீட்டைவிட்டு ஒடக்கூடாது. அப்பாவை எரித்த மயானத்திற்குப் போய் அங்கே இந்த லட்டை வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.

ஆனால் மயானத்திற்குத் தனியாகப் போகப் பயமாக இருந்தது. அவன் கேட்டிருந்த பேய் கதைகள் யாவும் மனதில் வந்து போயின. ஆனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மயானத்திற்குச் சென்றான்.

பின்மதிய நேரத்து மயானம் பேரமைதி கொண்டதாக இருந்தது. அங்கிருந்த வேப்பமரங்கள் விநோதமாகத் தோற்றம் தந்தன. காற்றில் அசையும் இலைகளும் அதன் சப்தமும் பயத்தை உருவாக்கின. ஒருவரையும் அங்கே காணவில்லை. மயான மேடையின் அருகில் சில எலும்புத்துண்டுகள் சிதறிக் கிடந்தன. காய்ந்த மாலைகள். உடைந்த மண் கலயம். கிழிந்த துணிகள்.. காய்ந்த வறட்டி துண்டுகள். காலியான பிராந்தி பாட்டில். உலர்ந்த சருகில் மிதித்து நடப்பது கூட அச்சம் தருவதாகவே இருந்தது.

மயான மேடையின் மீது கையில் வைத்திருந்த லட்டை வைத்தான். அதுவும் விநோதமான பொருளாக மாறியது.

சில நிமிஷங்களுக்குப் பின்பு லட்டை குனிந்து எடுத்து அவசரமாகத் தின்றான். வாயெல்லாம் இனித்தது. உதட்டை துடைத்துக் கொண்டு மயானத்தைத் திரும்பிப் பார்த்தான். அதன் மீது படிந்திருந்த பயம் கலைந்து போனது.

அம்மா கேட்டால் லட்டை திரும்பக் கொடுத்துவிட்டதாகச் சொல்லிவிடலாம் என முடிவு செய்து கொண்டபடி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சாலையில் அந்தி வெயில் கரைந்தோடிக் கொண்டிருந்தது. அம்மா அன்று வியாபாரத்திற்குப் போகவில்லை. வீட்டிலிருந்தாள்.

வீட்டிற்குள் சென்ற போது அம்மா தலையைச் சீவிக் கொண்டிருந்தாள். அவளது இடது கையில் கண்ணாடியிருந்தது. அவனிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவனாக “லட்டை கொடுத்துவிட்டேன் “என்று பொய் சொன்னான். அம்மா தனது புருவத்தை அழுத்தித் தடவியபடியே கேட்டாள்.

“மத்தியானம் சாப்பிடாம எங்க போயி தொலைஞ்சே“

“நீ தானே லட்டை குடுத்துட்டு வரச்சொன்னே“ என்றான் முருகேசன்

“நீயும் லட்சுமியும் நைட் போயி ராவுத்தர் கடையில பரோட்டா சாப்பிட்டு வாங்க. அதுல இருநூறு ரூபா வச்சிருக்கேன்“ என்றாள் அம்மா.

அப்போது அம்மாவிடம் நடந்த உண்மையைச் சொல்லிவிடலாமா என நினைத்தான். ஆனால் சொல்லவில்லை. எச்சில் விழுங்குவதைப் போல உண்மையைத் தனக்குள் விழுங்கிக் கொண்டான். சாமி படத்தின் அடியில் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளைத் தொட்டுப் பார்க்கும் போது மனதில் அப்பாவின் சிரிப்புச் சப்தம் கேட்டது.

பரோட்டா சாப்பிடும் ஆசையில் முருகேசன் இரவு வருவதற்காகக் காத்திருக்கத் துவங்கினான்.

•••

..

0Shares
0