அம்ரும் திரைப்படத்தில் ஹில்லே என்ற பெண் ஹிட்லர் இறந்த சேதியை ரேடியோவில் கேள்விப்பட்டு மிகுந்த துயரம் அடைகிறாள். கர்ப்பிணியான அவள் ஆழ்ந்த மன அழுத்தத்தில் மூழ்கி எதையும் சாப்பிட மறுக்கிறாள். தங்களைக் காக்க வந்த கடவுளான ஹிட்லர் எப்படி இறந்து போவார் எனப்புலம்புகிறாள். அவர் இறந்தாலும் அவர் முன்னெடுத்த போரைத் தொடர வேண்டும் என்கிறாள்.

ஆனால் அதே வீட்டிலுள்ள அத்தை ஈனா ஹிட்லரின் புகைப்படத்தை அடுப்பிலிட்டு எரித்து இனி நாம் விடுதலை அடைந்தோம் என்கிறாள். இந்த இருவருக்கும் இடையில் தடுமாறும் நான்னிங் போம் என்ற பனிரெண்டு வயதுச் சிறுவனின் பார்வையில் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளும் இறுதி நாட்களும் படத்தில் சித்தரிக்கப்படுகின்றன. 2025 ல் வெளியான ஜெர்மன் மொழித் திரைப்படம். இயக்கியவர் ஃபதிஹ் அகின்.
இரண்டாம் உலகப்போர் குறித்து நிறையத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதிலிருந்து மாறுபட்ட இப்படம் யுத்தம் ஒரு சிறுவனின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது. வயதுக்கு மீறிய செயல்களில் அவனை எவ்வாறு ஈடுபடச் செய்கிறது என்பதை விளக்குகிறது. வடக்கு ஜெர்மானியில் உள்ள அம்ரும் தீவில் கதை நடக்கிறது.
தீவு என்பது நிலப்பரப்பு மட்டுமில்லை. ஒரு வித மனநிலை. ஹில்லே குடும்பம் ஒரு தீவைப் போலவே சித்தரிக்கபடுகிறது.
உண்மை சம்பவத்திலிருந்து உருவாக்கப்பட்ட திரைக்கதை. ஹர்க் போம் என்ற திரைக்கதை ஆசிரியரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். அவரே இப்படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் உடல்நலமில்லாத காரணத்தால் படத்தின் திரைக்கதையை மட்டும் ஃபதிஹ் அகினுடன் இணைந்து எழுதியிருக்கிறார்.
கான்ஸ் திரைப்படவிழாவின் விருது பெற்றுள்ள ஃபதிஹ் அகின் சமகாலத் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர். இப்படத்தைத் தனது நண்பரின் நினைவிற்கான காணிக்கையாக உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் 1945 ஆண்டு அம்ரம் தீவிலிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் , பன்னிரண்டு வயதான நான்னிங் விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். குண்டுவீச்சு விமானங்கள் கடலில் தாக்கிவிட்டு செல்வதைக் காணுகிறான். அவனது நண்பனும் உடனிருக்கிறான். இருவரும் உருளைக்கிழங்கு பதியம் செய்ய உதவுகிறார்கள்.
நான்னிங் பள்ளி செல்வதோடு இது போன்று விவசாயப் பணிகளில் உதவி செய்வதால் கிடைக்கும் பால் மற்றும் பொருட்களை வீட்டிற்குக் கொடுத்து உதவுகிறான். அவனது அம்மா ஹில்லே ஹிட்லரின் தீவிர விசுவாசி. அவனது தந்தை நாஜி ராணுவத்தின் அதிகாரி. போர்முனையில் இருக்கிறார்.
கர்ப்பிணியான அவனது அம்மாவால் போர் முடிவிற்கு வந்துவிடும் என்ற செய்தியை கூடத் தாங்க முடியவில்லை.கோபப்படுகிறாள். போரில் ஹிட்லர் வெல்ல வேண்டும் என விரும்புகிறாள். ஆகவே தனது பையனையும் நாஜி இளம் சேவகனாக மாற்றியிருக்கிறாள்.
ஒரு நாளிரவு நான்னிங் அம்மாவைத் தேடி செல்லும் காட்சியில் கடற்கரையில் சிதைந்து அழுகிப்போன ஒரு போர் விமானியின் உடலைக் காணுகிறான். அந்தக் காட்சி அவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. தலைதெறிக்க ஒடுகிறான். தன்னைச் சுற்றிய சொர்க்கம் போன்ற அமைதியான, அழகான தீவில் இது போன்ற அதிர்ச்சிகளும் கலந்திருக்கின்றன என்பதை நன்றாக அறிந்து கொள்கிறான்.
தீவுவாசிகளில் பலர் ஹிட்லரை வெறுக்கிறார்கள். அமெரிக்கக் கனவில் திளைக்கிறார்கள். ஆகவே நான்னிங் குடும்பத்தை அவர்கள் உளவாளிகள் என நினைத்து வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பை அதிகம் நான்னிங் உணருகிறான். அதனால் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறான்.
ஒரு நாள் கர்ப்பிணியான ஹில்லே கோதுமை ரொட்டி, வெண்ணைய் மற்றும் தேன் சாப்பிட வேண்டுமென ஆசைப்படுகிறாள். அவற்றைப் பெற நான்னிங்கால் முடியவில்லை. போரின் காரணமாக அந்தத் தீவில் பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எதுவும் கிடைப்பதில்லை. ஆகவே நான்னிங்கால் தேனைப் பெற முடியவில்லை. கோதுமையை மருந்துப் பொருளாகக் கருதுகிறார் ஒரு மருத்துவர். அவரிடம் மாவு கடன் பெற்று அடுமனை ஊழியனிடம் ரொட்டி செய்து தரச் சொல்கிறான். . பண்டமாற்று மூலம், வெண்ணெய் மற்றும் சர்க்கரையைப் பெறப் போராடுகிறான்.

படம் முழுவதும் சிறுவனின் முகபாவம் மற்றும் உடல்மொழி அபாரமாகவுள்ளது. அவன் நடிப்பதாகவே நமக்குத் தோன்றுவதில்லை. ஜாஸ்பர் பில்லர்பெக் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். அவனது கண்களில் அச்சமும் பொறுப்புணர்வும் அன்பும் திகைப்பும் அற்புதமாக வெளிப்படுகின்றன.
கடலில் வைத்து தியோ மாமாவின் காதல் மற்றும் நாஜிக்களால் கொல்லப்பட்ட அவரது காதலி பற்றிய கடந்தகால உண்மையை அவன் அறிந்து கொள்ளும் போது, தனது பெற்றோர்கள் அப்படித் தவறாக நடந்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறான். அப்போது அந்தச் சிறுவனின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சி நிகரற்றது.
இரண்டு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து முயலை வேட்டையாடும் காட்சியும். கிடைத்த முயலை எப்படி அறுத்தெடுப்பது என அவன் கற்றுக் கொள்ளும் காட்சியும் அவனது முதிர்ச்சியான நடவடிக்கையின் காட்சிகள்.
வாத்து முட்டையைத் திருடும் போது ஒரு முட்டையை வாத்திற்கே அவன் விட்டுவிட நினைக்கிறான். அப்போது நான்னிங் சிறுவனாக நடந்து கொள்கிறான். ஆனால் வாத்துமுட்டையில் குஞ்சு செத்துக்கிடப்பதைக் காணும் போது அது தனது குற்றமில்லை என்பது போலத் தலையாட்டும் போது பெரியவனாக நடந்து கொள்கிறான்

நான்னிங் சைக்கிளுடன் சக்கரை வாங்குவதற்காகச் செல்லும் காட்சியும். தண்ணீர் உயர்ந்து கொண்டேயிருக்கும் சூழலில் சக்கரைடப்பாவை கையில் ஏந்தியபடி அவன் நீருக்குள் போராடி நடப்பதும் மிகச் சிறப்பான காட்சிகள். வெகு நேர்த்தியான ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் கார்ல் வால்டர் லிண்டன்லாபின் ஓவியம் போன்ற கவித்துவமான ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
படத்தின் ஒருகாட்சியில் நான்னிங் வீட்டு நூலகத்திலிருந்து மோபிடிக் நாவலை பள்ளி தோழன் ஹெர்மன் கடனாகப் பெற்றுச் செல்கிறான். இன்றைய சூழலில் யார் மோபிடிக் அவர்கள் என விவாதிக்கிறார்கள். ஆஹாப் ஹிட்லரைப் போலவும், , திமிங்கலம் கடவுளைப் போலவும் இருக்கலாம் எனப் பேசிக் கொள்கிறார்கள். மோபிடிக் என்பது படத்தில் முக்கியக் குறியீடாக மாறுகிறது.
நான்னிங் அப்பாவிதனத்தை இழப்பதும் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஊசலாடுவதும் படத்தின் முக்கியச் சரடுகள். அம்மா ஒரு உலகை நம்புகிறாள். வெளியுலகம் ஒரு வாழ்க்கையைக் காட்டுகிறது. அறிந்தவர்கள் நண்பர்கள் வேறு வாழ்க்கையை விவரிக்கிறார்கள். இதில் எது நிஜம். எது தவறு. நான்னிங்கின் மனசாட்சி மெல்ல உதயமாவது தான் படத்தின் சிறப்பு.
படத்தில் வரும் ஆண்கள் கடந்தகாலத்தின் நினைவுகளால் வழிநடத்தப்படுகிறார்கள். ஆனால் விவசாயம் செய்யும் பெண் மற்றும் ஹில்லே போன்றவர்கள் எதிர்காலத்தை நோக்கியே நடக்கிறார்கள். டெரன்ஸ் மாலிக்கின் திரைப்படம் போலவே பல காட்சிகள் உருவாக்கபட்டிருக்கின்றன.
பள்ளி கற்றுத்தராத பாடத்தை வாழ்க்கைச் சூழல் நான்னிங்கிற்குக் கற்றுத்தந்து விடுகிறது. அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களைக் காணவும் பங்கேற்கவும் செய்கிறது. உருவத்தில் அவன் சிறுவனாகவும் மனதளவில் இளைஞனாகவும் மாறிவிடுகிறான். களங்கமில்லாத அவனது முகத்தில் நிறையக் கேள்விகள் மறைந்துள்ளன. அதனைப் பார்வையாளர்கள் ஆழ்ந்து உணரச் செய்வதே படத்தின் வெற்றி.