இரும்பின் ஆசி

புதிய சிறுகதை. ஜுன் 15. 2026

தனது வீட்டைக் கடந்து ஒரு போலீஸ் வேன் செல்வதை செல்லம்மாள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சயம் இன்றைக்கு பெரிய கலவரம் நடக்கப்போகிறது.  காலையிலிருந்தே தெக்கம்பட்டி பரபரப்பாகியிருந்தது.

கலெக்டர் வரப்போவதாகப் பேசிக் கொண்டார்கள்.  இரண்டு மூன்று அரசாங்க ஜீப்புகள் கிழக்கு  நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. செல்லம்மாவின் இளையமகன் முத்துக்காளை கூட வேடிக்கை பார்க்கப் போயிருந்தான்.

இத்தனை பேர் சேர்ந்து கொண்டு சின்னமாயனின் சாமியைப் பறிக்க முற்படுவது நியாயமில்லை. அவர்களா இத்தனை ஆண்டுகள் காவல் காத்தது. பூஜை வைத்தது.

யார் என்ன சொன்னாலும் அவள் சின்னமாயன் பக்கம் தான் நியாயமிருப்பதாக நினைத்தாள்.  

இத்தனை வருஷமாக அவர் சாமியாகக் கும்பிடுவதைப் பறித்துக் கொள்ளப் போகிறார்கள் என்றால் ஊர்மக்கள் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார்கள்.

சின்னமாயனின் இரண்டு பிள்ளைகளும் அவரது உறவினர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வேல்கம்பு, அருவாள் சகிதமாக தங்கள் நிலத்தில் ராத்தங்கிவிட்டார்கள். வெளியாட்கள் யாரும் நிலத்திற்குள் நுழையமுடியாமல் தடுப்பு வேலியும் அமைத்திருந்தார்கள்.  சின்ன மாயனிற்கு ஊரே துணையாக இருந்தது.

அரசாங்கம் எதற்காக இப்படி வரிந்துகட்டிக் கொண்டு சின்னமாயனோடு மோதுகிறது.  அப்படி என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார்.

தெக்கம்பட்டி சிறிய கிராமம். நூறு வீடுகளுக்கும் குறைவாகவே இருந்தது. அங்கே சின்னமாயனுச் சொந்தமாக ஐந்தரை ஏக்கர் நிலமிருந்தது. அதில் வாழை வைத்திருந்தார். கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்ச ஒரு மோட்டார் பம்ப்செட், சிமெண்டால் ஆன தண்ணீர் தொட்டி. அருகிலே ஒரு வேப்பமரம். அதன் நிழலில் ஒரு கயிற்றுக்கட்டில். சின்னமாயன் எப்போதும் அங்கேயே இருந்தார். மனைவி இறந்தபிறகு வீட்டிற்குப் போவது சாப்பிடுவதற்கு மட்டுமே.  

இரண்டு ஏக்கரில் வாழையும் மூன்று ஏக்கரில் கரும்பும் வைத்திருந்தார். அதைத் தவிர கிணற்றடியை ஒட்டிய நிலத்தில் கொஞ்சம் வெண்டைக்காய். கத்தரிக்காய். தக்காளி போட்டிருந்தார். மூத்தமருமகள் தங்கலட்சுமி.   காய்கறிகளைப் பறித்து விற்பனை செய்து வந்தாள்

மாயனின் வாழைத்தோட்டத்தினுள் ஒரு பீரங்கியிருந்தது.  வீரபாண்டிய கட்டப்பொம்மனோடு சண்டை போடுவதற்காக வெள்ளைக்காரர்களால் கொண்டு போகப்பட்ட பீரங்கி என்றார்கள். அது நிஜம் தானா எனத் தெரியவில்லை. ஆனால் அந்த ஊர்ப் பக்கம் பீரங்கி வருவதற்கு வேறு காரணம் எதுவுமில்லை.

அந்த பீரங்கி ஏன் நடுவழியில் நிறுத்தப்பட்டது என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் இருநூறு வருஷத்திற்கும் மேலாக பீரங்கி சின்னமாயனின் நிலத்தில் இருந்தது. பனிரெண்டு அடி நீளமுள்ள அந்த இரும்புப் பீரங்கி, இரண்டு டன் எடையிருக்கும் என்றார்கள். அது போன்ற பழைய பீரங்கிகளில் கற்குண்டினைப் பயன்படுத்துவார்கள்.  மாயன் நிலத்தில் கற்குண்டு எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை அது மண்ணில் புதையுண்டு போயிருக்க கூடும் என சின்னமாயன் நினைத்துக் கொண்டார்.

எந்த சண்டைக்குப் போன பீரங்கி எனத் தெரியாத போதும் அது தனது நிலத்தில் நிறுத்தப்பட்டதால் தனக்கு கிடைத்த பரிசாகவே  சின்னமாயனின் முப்பாட்டன் செல்லாண்டி மகிழ்ச்சி அடைந்தார்.

அந்த பீரங்கியை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதினார். காரணம் அந்த பீரங்கி வந்த பிறகே செல்லாண்டி கிராமத்தின் கர்ணமாக நியமிக்கபட்டார். அது போலவே அவர் கல்வீடு கட்டியதும், கூண்டு வண்டி  வாங்கியதும், மேற்கு புஞ்சை வாங்கியதும்  நடந்தேறியது. ஆகவே செல்லாண்டி குடும்பம் தலைமுறையாக அந்த பீரங்கியைச் சாமியாக வழிபட்டு வந்தார்கள்.

அவர்கள் மட்டுமின்றி பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயிகளும், கூலி வேலைக்கு வரும் பெண்களும் கூட பீரங்கியை வணங்கினார்கள். அதனிடம் வேண்டுதல் போட்டார்கள்.

எல்லா தெய்வங்களுக்கும் படையல் வைப்பது போலவே ஆண்டிற்கு ஒருமுறை பீரங்கிசாமிக்கும் சக்கரைப்பொங்கல் வைத்து சேவற்பலி கொடுத்தார்கள்.

வெள்ளைக்காரப் பீரங்கி என்பதால் பிராந்தி படைக்க வேண்டும் என்றார் சின்னமாயன். அதுவும் படையலில் சேர்ந்து போனது.

வாழைத்தோப்பின் உள்ளே இருந்த பீரங்கியின் மீது கண்திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக சின்னமாயன்  எப்போதும் ஒரு கிழிந்த வேஷ்டியைப் போட்டு வைத்திருப்பார். விளையாட்டுச் சிறுவர்கள் அதன் மீதேறி நடக்க முயல்வதைக் கண்டால் கோபம் பொத்துக் கொண்டு பீறிடும். பொய்யாக அடிப்பதற்குக் கையை ஒங்கியபடி கத்துவார்.

“யோவ் ஓட்டப்பீரங்கி “ எனப் பையன்கள் பதிலுக்கு சப்தமிடுவார்கள்.

ஒருமுறை ஊரில் பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சாவு அதிகமான  போது இதே பீரங்கியின் மீது படிந்திருந்த மண்ணைக் கரைத்து கொடுத்து நோவு நீக்கினார்கள் என்றொரு கதையும் இருக்கிறது.

பிறந்த குழந்தைக்கு தைரியம் வர வேண்டும் என்பதற்காக பீரங்கி முன்பாக சேலையை விரித்து அதில் குழந்தையை படுக்கவைத்து வழிபடுவதும்  அங்கு நடந்தேறியிருக்கிறது. 

ஊருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ஒரு இளம்ஜோடி பீரங்கியின் முன்னால் மாலை மாற்றித் திருமணம் செய்திருக்கிறார்கள். ஒரு முறை பின்னிரவில் அந்த பீரங்கியிலிருந்து அலை அலையாக வெளிச்சம் வந்ததாக காவற்கார ரத்னம் சொன்னார்.  இப்படி அந்த பீரங்கியைப் பற்றி நிறைய கதைகள், நம்பிக்கைகள் ஊரில் பரவியிருந்தன.

அவரை ஊர் மக்கள் பீரங்கி மாயன் என்றே அழைத்தார்கள். கோவில் திருவிழாவில் வரி போடும் போது கூட பீரங்கியார் வீடு என்றே வரிக்கணக்கை எழுதினார்கள். அதில் சின்னமாயன் பெருமை கொண்டிருந்தார்.

சின்னமாயன் சிறுவயதில் இருந்தே அந்த பீரங்கியை தொட்டுத்  தடவி விளையாடியிருக்கிறார்.  ஆகவே அதன்மீதான அவரது பற்று ஆழமானது.

அவரை சீண்ட நினைப்பவர்கள் கேலியாகச் சொல்வார்கள்

 “ராவோடு ராவா உன் பீரங்கியை கொண்டு  போகப்போறன் பாரு“

அப்போது கைகளை உயர்த்திக் கொண்டு சின்னமாயன் சப்தமாகச் சொல்வார்

  “அது நடக்காது மாப்ளே. எவனாலயும் இம்மி அசைக்க முடியாது. இந்த பீரங்கியை நகட்டணும்னா யானை வரணும்.  யானைய கொண்டுட்டு வர்றதுக்கு இங்கே எவன்கிட்ட துப்பு இருக்கு.. சொல்லு “

அவர் சொல்வது உண்மையே. இத்தனைஆண்டுகளாக அந்தப் பீரங்கி இருந்த இடத்தை விட்டுத் துளி கூட அசையவில்லை. மழையிலும் வெயிலிலும் நின்று பீரங்கியின் நிறம் மாறியிருந்தது. ஆனால் அதன் உறுதி குறையவில்லை.

சில நாட்கள் தண்ணீர் பாய்ச்சிவிட்டு வரும் மாயன் ஈரக்கையோடு பீரங்கியைத் தொட்டுப் பார்த்துக் கொள்வார்.  ஆசையாக அணைத்துக் கொள்வார். ஒரு மழைநாளில் அந்த பீரங்கியின் மீது ஒரு தவளை ஏறி நின்றிருப்பதைக் கண்டார். ஏனோ அது அவரை மகிழ்ச்சிப்படுத்தியது.

ஒருமுறை மலைப்பட்டி ஜோதிடர் அந்த பீரங்கியைபார்த்துவிட்டு சின்னமாயனிடம் சொன்னார்

“சாமியாப் பாத்து குடுத்த பொருளுப்பா.. பத்திரமா வச்சிக்கோங்க. உங்க தலைமுறைக்கும் இதனாலே யோகம் இருக்கு “

“அதான் பீரங்கியப்பனைச் சுத்தி செங்கச்சுவர் கட்டிரலாமானு ஒரு யோசனை “ என்றார் சின்ன மாயன்.

“அப்படி செய்யாதே. வானம் பாத்து இருக்கணும். அப்போ தான் அதுக்கு சக்தி  “என்றார் ஜோதிடர்

அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்ட மாயன் பீரங்கியை அப்படியே விட்டுவைத்து அதனைச் சுற்றியும் வாழை வைத்தார். வாழைத் தோட்டத்தின் பசுமையான நிழலில் பீரங்கி இளைப்பாறுவது போல உணர்ந்தார்.

சில நாட்கள் வாழைதோப்பினுள் அமர்ந்தபடி அந்த பீரங்கியை யார் கொண்டு வந்தார்கள், எந்த ஊரிலிருந்து கொண்டு வந்திருப்பார்கள் என்று யோசிப்பதுண்டு.

தெக்கம்பட்டியில் பழைய வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் உயிரோடு இல்லை. அந்தப் பக்கம் இருந்த நெடும்பாதை வழியாக வெள்ளைக்காரப் படைகள் போனதாக சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறார். அதனை உறுதி செய்வது போல பூங்குளத்தை அடுத்து நடுக்காட்டில் ஒரு சத்திரம் இருக்கிறது. அது இரவில் படைகள் தங்கும் சத்திரம் என்றார்கள். அந்த சத்திரத்திலும் ஒரு கிணறு இருந்தது. ஒருவேளை அந்த சத்திரம் நோக்கிப் போனவர்கள் தான் பீரங்கியை இங்கே விட்டுப் போய்விட்டார்களோ என்று நினைத்துக் கொள்வார்

 ஒருமுறை இந்த பீரங்கியை ஊர் மைதானத்தை ஒட்டியிருந்த காளியம்மன் கோவில் முன்பாக கொண்டு போய் வைத்துவிடலாம் என ஊர் பஞ்சாயத்தில்  முடிவு செய்தார்கள்.

அதைக் கேட்டவுடனே பீரங்கி மாயனிற்குக் கோபம் கொப்பளித்தது

“என் பீரங்கியப்பன் மேல கையை வச்சிப் பாருங்க தெரியும். அது எங்க பாட்டன் பூட்டன் காலத்து சொத்துப்பா.. “

“அது ஒண்ணும் நீங்க செஞ்ச பீரங்கியில்லையே.. ஊர்ச் சொத்து தானே “ என்றார் முத்துசாமி பூசாரி

“அது எப்படி ஊர் சொத்தாகும் . எங்க நிலத்துல கிடைச்சது. எங்களுக்குத் தானே சொந்தம் “

“நாளைக்கு வெள்ளைகாரன் வந்து கேட்டாலும் இப்படித் தான் சொல்வீங்களா “ எனக்கேட்டார் முத்துசாமி

“எவன் வந்து கேட்டாலும் தர மாட்டேன். மீறி எவனாச்சும் தொட வந்தா அவன் கையை வெட்டிப்புடுவேன் பாத்துக்கோங்க “ என்றார் மாயன்

அவரது சீற்றம் அப்படிச் செய்வார் என பூசாரியை நம்ப வைத்தது. அதன்பிறகு பீரங்கியை இடம் மாற்றுவதைப் பற்றி எவரும் யோசிக்கவில்லை.

செல்லம்மாள் மாயன் தோட்டத்தில் வேலைக்குப் போன நாட்களில் பீரங்கியைப் பார்த்திருக்கிறாள். அதனை வைத்து தான் யுத்தம் செய்வார்கள் என்று அவளால் நம்ப முடியவில்லை. இரும்பில் செய்த துதிக்கையை போல பீரங்கி தோற்றமளித்தது.

சின்னமாயன் வணங்குவதைப் போல அவளும் அந்த பீரங்கியப்பனை வணங்கிக் கொண்டாள். எந்த உருவத்தில் இருந்தாலும் நமது நம்பிக்கை தானே தெய்வத்தை உருவாக்குகிறது. என நினைத்துக் கொண்டாள்.

 செல்லம்மாள் தனது குடும்பக் கஷ்டங்களை பீரங்கியப்பனிடம் முறையிட்டாள்.  அவளது பிரார்த்தனையை கண்ட சின்னமாயன் சொன்னார்

“சொல்லிட்டேயில்லே. இனி ஒரு குறையும் இருக்காது. பீரங்கியப்பன் பாத்துக்கிடுவார். “

“எந்த சாமி உதவி செய்தாலும் நல்லது தானே “ என்றாள் செல்லம்மா.

அவளது பிரார்த்தனைக்கு பீரங்கிசாமி  உடனே செவி சாய்த்துவிட்டது போல குடும்ப பிரச்சனை ஒன்று இரண்டு நாளில் சரியானது. அதன்பிறகு அவளுக்கு பீரங்கியப்பன் மீது முழு நம்பிக்கை வந்துவிட்டது.  அவள் மட்டுமில்லை. களை எடுக்கப் போகும் பெண்களும் கூட பீரங்கியப்பனை வணங்கினார்கள்.

ஆறு மாதங்களுக்கு முன்பாக தம்புராஜ் என்ற தினத்தூது நாளிதழின் பத்திரிக்கையாளர் பீரங்கியிருப்பதைக் கேள்விபட்டு போட்டோகிராபர் ஒருவரை அழைத்துக் கொண்டு தெக்கம்பட்டி வந்திருந்தார்.

சைக்கிள் வியாபாரி  அழகர் அவர்களை பீரங்கி மாயனின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது சின்னமாயன் வாழைத் தோட்டத்தில் இல்லை. முக்குரோடு வரை போயிருந்தார்.

தம்புராஜால் அந்த பீரங்கியை நம்ப முடியவில்லை. எவ்வளவு பெரிய பீரங்கி.

கட்டபொம்மனுடன் சண்டையிடக் கொண்டு போன  பீரங்கி என தான் கேட்டிருந்த பழைய கதையை சொல்லிக்கொண்டிருந்தான் அழகர்

 இதற்குள் விஷயம் கேள்விபட்ட மாயன் பதற்றமாக தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார்

தம்புராஜ் அவருக்கு வணக்கம் வைத்தபடியே  “அய்யா இப்படி வந்து நில்லுங்க. உங்களையும் பீரங்கியோட சேர்த்து ஒரு போட்டோ பிடிச்சிக்கிடுறேன் “ என்றான்

“அதெல்லாம் வேணாம்பா. நீ எதுக்கு எங்க சாமியப் போட்டோ பிடிக்குறே “ எனக்கேட்டார்

“அதிசயமா ஒரு பீரங்கியை வச்சிருக்கீங்க. அது ஊரு உலகத்துக்கு தெரியணும்லே “

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். தேவையில்லாத தொரட்டு வந்து சேரும் “ என மறுத்தார் மாயன்

“அப்படி ஒண்ணும் வராது. நீங்க பீரங்கியை சாமியா கும்பிடுறீங்க. அதை போயி நான் கெடுப்பனா.. உங்க சாமி  பெருமையை நல்லவிதமா எழுதுவேன். என்னை நம்புங்க “ என பீரங்கியை கையெடுத்து கும்பிட்டு வணங்கினான் தம்புராஜ்.

அரைமனதோடு அவர் பீரங்கியின் அருகில் நின்றார். அந்தப் புகைப்படம் தினத்தூது நாளிதழில் வெளியாகியிருந்தது. அதன் சில தினங்களில் யார் யாரோ வந்து அந்தப் பீரங்கியை பார்த்தார்கள். புகைப்படம் எடுத்துப் போனார்கள்

ஒரு மாத காலத்தின் பின்பு ஒரு நாள் அரசாங்க ஜீப் ஒன்று அவரது நிலத்தினை நோக்கி வந்து சேர்ந்தது. அதிலிருந்து மூன்று அலுவலர்கள் கையில் ஒரு பைலுடன் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர் சின்னமாயனை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினார்.

சின்னமாயனின் மூத்தமகன் ராஜேந்திரன் வந்திருந்தான். அவனிடம் அரசாங்க அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டார்கள். அப்போது ஒரு அதிகாரி கேட்டார்

“இது மேஜர் பானர்மேன் கொண்டு போன பீரங்கி தெரியுமில்லே…. இந்த பீரங்கி மட்டும் தான் கிடைச்சதா. இதோட குண்டு. பழைய துப்பாக்கி. கத்தி எதுவும் கிடைக்கலையா . “

“அப்படி எதுவும் கிடைக்கலைங்க“ என்றான் ராஜேந்திரன்

“இது அரசாங்க சொத்து. இத்தனை வருஷமா நீங்க வச்சிருந்தா எப்படி. உடனே  இதை எங்க கிட்ட ஒப்படைக்கணும்“ என்றார்  கண்ணாடி அணிந்த அதிகாரி

“அதெல்லாம் முடியாதுங்க. இது எங்க முப்பாட்டன் காலத்துல இருந்து இங்கே தான் இருக்கு, எங்க சாமிங்க. “

“பீரங்கி எப்படிப்பா சாமியாகும். புரியாம பேசாதே இதெல்லாம் ஹிஸ்டாரிகல் மெட்டீரியல் “ என்றார் அரசாங்க அதிகாரி

“எதுவாயிருந்தாலும் குடுக்க முடியாதுங்க“ என்று மறுத்தான் ராஜேந்திரன்

“ஒரு மரியாதைக்காக உங்க கிட்ட கேட்குறோம். இல்லேன்னா.. அரசாங்க சொத்த எப்படி கைப்பத்துறதுனு எங்களுக்குத் தெரியும்“ என்றார் அதிகாரி

“எங்களை மீறி இதுல கை வைக்க முடியாது பாத்துக்கோங்க“ என்றான் ராஜேந்திரன்

“இவனோட எதுக்கு வீண் பேச்சு. நாம டீடெயில்ஸ கலெக்டர்கிட்ட குடுத்துருவோம். அவர் ஆக்சன் எடுக்கட்டும்“. என்றார் மூத்தஅதிகாரி

உடனே அவர்கள் அந்த பீரங்கியை இன்ஞ்டேப் வைத்து அளந்தார்கள். கண்ணாடி அணிந்தவர்  பீரங்கியில் ஏதேனும் எழுத்து பொறிக்கப்பட்டிருக்கிறதா எனத்தேடி கிரீடம் போன்ற முத்திரை மறைந்து போயிருப்பதைக் கண்டுபிடித்தார்.

“இது காசிப்பூரில் இருந்த பிரிட்டீஷ் துப்பாக்கி தொழிற்சாலையில் செஞ்ச பீரங்கி. அதோட மார்க் இருக்கு பாருங்க“ என்றார்

ராஜேந்திரன் அவர்கள் காட்டிய இடத்தில் வட்டமுத்திரை இருப்பதைக் கண்டான்.

அவர்கள் பைலில் வைத்திருந்த இன்னொரு பீரங்கியின் புகைப்படத்தை ராஜேந்திரனிடம் காட்டினார்கள். விருப்பமேயில்லாமல் அதையும் ராஜேந்திரன் பார்த்தான். அளவில் சிறியதாக இருந்தது. மலைப்பாம்பும் நீர்பாம்பும் ஒன்றாகிவிடுமா என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“கலெக்டர் ஆர்டர் போட்டதும் இதை ஷிப்ட் பண்ணிடுவோம்.  அது வரைக்கும் நீங்க எதுவும் பண்ணக்கூடாது புரிஞ்சதா“ என எச்சரித்தபடி அவர்கள் ஜீப்பில் கிளம்பினார்கள்

அன்றிரவு அரசாங்கத்து உத்தரவை அறிந்து கொண்ட சின்னமாயன் எங்கே தன்னை மீறி பீரங்கியைக் கொண்டு போய்விடுவார்களோ என்ற பயத்தில் இருட்டிற்குள் நடந்து போய் பீரங்கி அருகில் படுத்துக் கொண்டார். காலையில் ராஜேந்திரன் தனது உறவினர்களுடன் ஒன்று திரண்டு நிலத்திற்கு வந்து சேர்ந்தான்

“அரசாங்கம் கேட்டா உடனே தூக்கி குடுத்திடணுமா. இது நம்ம சொத்துப்பா.. நம்ம சாமி “ என்றார் ராஜேந்திரனின் மைத்துனர் சிவகுரு.

“எவனோ நமக்கு எதிரா இவங்களை கிளப்பிவிட்டிருக்கான். இதை நாம சும்மாவிடக்கூடாது.  ரெண்டுல ஒண்ணு பாத்திடணும்“ என்றார் செல்லையா.

சின்னமாயன் உறுதியான குரலில் சொன்னார்

“நாம ஒத்துமையா இருந்தா நம்மளை மீறி எவனும் இதைக் கொண்டு போயிற முடியாதுப்பா.  நம்ம சாமிய நாம தான் காப்பத்தணும் “

அதன்பிறகான நாட்களில் அவர்கள் பகலிரவாக அந்த பீரங்கியைக் காவல் காக்கத் துவங்கினார்கள். அந்தப் பீரங்கியை பார்வையிட வந்த அரசாங்க அலுவலர்களை விரட்டி அடித்தார்கள்.

ஒரு நாள் இரவில் ஊர் கூடி சின்னமாயனிடம் உள்ள பீரங்கியை அரசாங்கம் கொண்டு போவதை நாம் அனுமதிக்க கூடாது, அது நம்ம சாமி என்று முடிவு செய்தார்கள். 

அடுத்த சில நாட்களுக்கு ஊரில் வெளியாட்களின் நடமாட்டமில்லை. அரசாங்கம் இதனைக் கைவிட்டுவிட்டதாக அவர்கள் நம்பினார்கள். ஆனால் காவல்துறை உதவியோடு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் புதன்கிழமை காலை அந்தப் பீரங்கியை கொண்டு போகப்போவதாக பஞ்சாயத்து தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கபட்டிருந்தது. அதே கடிதம் சின்னமாயனுக்கும் வந்து சேர்ந்திருந்தது.  

அவர் அவசரமாக வக்கீல் கணேசனைப் பார்க்க நகருக்குச் சென்றார். கணேசன் அரசாங்கக் கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு சொன்னார்

“அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. கோர்ட்ல நாம ஸ்டே வாங்கிடுவோம். அது பீரங்கியில்லப்பா… சாமி. அது மேல யாரும் கையை வைக்க முடியாது “

ஆனால் கோர்ட் தடையாணை தர மறுத்ததோடு வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பீரங்கியை உடனே அரசாங்கம் கைப்பற்றி மதுரை மியூசியத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அதனை சின்ன மாயன் எதிர்பார்க்கவில்லை.

பீரங்கியப்பனிடம் உத்தரவு கேட்பது என முடிவு செய்து சிறப்பு பூஜை ஒன்றை ஏற்பாடு செய்தார். அன்று ஒன்பது சேவல்கள் பலி கொடுக்கபட்டன. பூசாரி அருள் வந்து ஆடி “என்னைப் போகவிட்டா உன் குடும்பம் அழிஞ்சி போயிடும் மாயா“ என்று சப்தமிட்டார்.

அதை ஊர் மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  பீரங்கியை கைப்பற்றும் நாள் அன்று கிராமத்தில் கலவரம் ஏற்படக் கூடும் எனச் சிறப்பு காவல்படை  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது போலவே பீரங்கியை பெயர்த்து எடுப்பதற்கான பொக்லைன் இயந்திரமும், பீரங்கியை கொண்டு போவதற்கான லாரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

சின்னமாயன் முந்தைய நாளின் இரவில் பீரங்கியப்பனுக்கு சாமந்தி மாலை சாத்தி பூஜை வைத்தார். கற்பூரம் காட்டிய போது அவருக்குக் கண்கலங்கியது. அன்றிரவு ஐம்பதுக்கும் மேலான ஆட்கள் நிலத்திலே காவல் இருந்தார்கள்
அந்த இரவில் மாயன் உறங்கவில்லை. அவர் நோயுற்ற குழந்தையின் அருகில் படுத்துக் கொள்ளும் தகப்பனை போல படுத்திருந்தார். பீரங்கி பறிபோய்விடுமோ என்ற அச்சம் அவருக்குள்ளிருந்தது.

மறுநாள் காலையில் பீரங்கியைக் கொண்டு போவதற்காக அரசாங்க அதிகாரிகள் தெக்கம்பட்டிக்குள் நுழைந்தார்கள். ஊர் மைதானத்தைக் கடந்து செல்ல முடியாதபடி அவர்களை மக்கள் தடுத்து நிறுத்திக் கூச்சலிட்டார்கள். சிறப்பு காவல்படையினர் வேனிலிருந்து இறங்கி கையில் லத்தியோடு மக்களை மிரட்டினார்கள்.

பீரங்கியை நகர்த்தி லாரியில் ஏற்றுவதற்கான பொக்லைன் இயந்திரம் ஊருக்குள் வந்து சேர்ந்தது. மக்கள் அதனை நோக்கி கல்வீசினார்கள். ஆனால் காவல்துறையினரின் லத்தியடி காரணமாக மக்கள் சிதறியோடினார்கள்.

சின்னமாயன் நிலத்தை நோக்கி வரும் இயந்திரத்தை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது ஆட்கள் தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள்.  அரசாங்க அதிகாரிகள் அவர்களிடம் பீரங்கியை ஒப்படைக்கும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்கள். முடியாது என சின்ன மாயன் ஆவேசமாக கையை ஆட்டினார்.

சிறப்பு காவல்படையின் வீரர்கள் வாழைதோட்டத்தை நோக்கி துப்பாக்கி ஏந்தியபடி நடந்தார்கள். பலத்த கூச்சலும் கோபமுமாக மோதல் வெடித்தது. இரண்டு பக்கமும் ஆவேசமாக தாக்கிக் கொண்டார்கள். துப்பாக்கி சூடு நடந்து சிலர் கொல்லப்பட்டார்கள். காலில் குண்டடிபட்டு  சின்ன மாயன் ரத்தம் வழிய மண்ணில் கிடந்தார். வாழைமரங்களை சாய்த்துக் கொண்டு பொக்லைனின் அகன்ற இரும்புக்கரம்  பீரங்கி நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

பொக்லைனின் கை பீரங்கியை மண்ணை விட்டுப் பெயர்த்து எடுத்தது.  பீரங்கியின் அடியில் இருந்த மண்ணிலிருந்து சில மண்புழுக்கள் வெளியே வந்து என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தன்போக்கில் ஊர்ந்து போகத் துவங்கின.

வெற்றிகரமாக பீரங்கியை லாரியில் ஏற்றி கொண்டு போன போது என் சாமி.. என் சாமி என ஒலமிட்டபடியே  மரண ஊர்வலத்தின் பின்னால் ஒடிவரும்  சிறுவனைப் போல சின்னமாயன் ரத்தம் வழியும் காலுடன் தடுமாறி ஒடிக் கொண்டிருந்தார்.

நூற்றாண்டுகளைக் கடந்த பீரங்கி நகரம் நோக்கி அமைதியாகச் சென்று கொண்டிருந்தது

•••

0Shares
0