புதிய சிறுகதை. ஜுன் 23. 2026
ஏழாவது செக்டார் முழுவதும் மரங்கள் நிரம்பியிருந்தன. அதுவும் கல்பனா ஸ்டோரை ஒட்டி வடக்காகத் திரும்பும் வீதியில் இரண்டு பக்கமும் மஞ்சள் கொன்றையும் வேம்பும் வாகையும் இருந்தன. பெரும்பாலும் தனிவீடுகள். விடிகாலை வெளிச்சத்தில் அந்த வீதியைப் பார்க்க வரையப்பட்ட சித்திரம் போலத் தோற்றமளிக்கும்.

அதற்காகவே நந்தகுமார் சூரிய உதயமானவுடன் நடக்க ஆரம்பிப்பார். அரசு எழுதுபொருள் விற்பனைக் கிடங்கில் பணியாற்றும் அவர் சமீபத்திலே அந்தப் பகுதிக்குக் குடிவந்திருந்தார். அவருக்குக் கடுமையான மூட்டுவலி மற்றும் சுகர் இருந்தது, அவரது மனைவி சுவேதா ஸ்கேன் சென்டர் ஒன்றில் வேலை செய்து வந்தாள். அதன் புதிய கிளை ஒன்றின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதற்காகவே அந்தப் பகுதிக்கு வீடு மாறி வந்திருந்தார்கள். அவரது இரண்டு மகள்களுக்கும் புதிய பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை.
பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது அவருக்குப் பிடிக்காது. கிளைவிடும் வீதிகளின் வழியாக நடந்து சுற்றி முடிவில் அகல்யா காபிஹவுஸிற்கு வந்து ஒரு பில்டர் காபி குடித்துவிட்டு வீடு திரும்புவதே வழக்கம்.
அன்றைக்கும் காலை ஆறு இருபதிற்கு நடக்கத் துவங்கியிருந்தார். இருபது நிமிஷ நடைக்குப் பின்பாக அவர் ஏழாவது செக்டாரினுள் நுழைந்தார். அன்றைய காலை வெயில் இளமஞ்சள் நிறத்திலிருந்தது. நடப்பதை நிறுத்திவிட்டுப் பொன்னொளியில் மின்னும் வீதியை ரசித்துப் பார்த்தார். வெயில் பெரிய சிறகுள்ள வண்ணத்துபூச்சியைப் போல அலைவுற்றது.
வெளியே இருந்து பார்க்கும் வீடும். உள்ளே இருந்து காணும் வீடு ஒன்றல்ல. ஒவ்வொரு வீடும் ஒரு புத்தகம். அதற்குள் எண்ணிக்கையற்ற கதைகள். அந்த வீதியில் விடிகாலையில் விழித்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் எட்டு மணிக்கு மேலாகவே வாசலில் உள்ள பாலை எடுக்க யாராவது வெளியே வருவார்கள். வீட்டின் கேட்டில் சொருகி வைக்கப்பட்டிருந்த நியூஸ் பேப்பர் அப்படியே இருந்தது, இன்னும் எரிந்து கொண்டிருக்கும் வாசல்விளக்குகள். கோலமிடாத வாசல். இரவுக்காவலாளியின் ஈரம்படிந்த காலி நாற்காலி. சோம்பல் முறிக்கும் சிறுமரங்கள். தெருநாய்களைக் கூட அந்த வீதியில் காண முடிவதில்லை.
தங்களுக்கும் அந்த வீடுகளுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருந்தன சாலையோர மரங்கள்.
ஒரு வீட்டின் பால்கனி விளிம்பின் மீது ஒரு வெண்புறா அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தது. திடீரெனத் தான் ஒணானை பார்த்து வருஷங்களாகி விட்டது நினைவிற்கு வந்தது. எப்போது கடைசியாக ஒரு ஒணானைப் பார்த்தோம். கிடாரிபட்டியிலுள்ள அவரது வீட்டின் பின்பக்கமிருந்த வேலிப்புதரில் ஒணான் ஒடியது நினைவில் வந்தது.
எதற்காகக் காலையில் திடீரென ஒணான் நினைவிற்கு வருகிறது என்று அவருக்குப் புரியவில்லை. நகரம் என்பது புதிய புதிய காட்சிகளின், குரல்களின் இடம். கிராமத்தில் புதிய குரலைக் கேட்பது அபூர்வம். புதிய மனிதர்களைக் காணுவது அரிது. கிராமத்தின் மௌனமும் நகரின் மௌனமும் வேறுவேறு. மனது கிராமத்திலும் உடல் நகரத்திலுமாக அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.
நந்தகுமார் பெரிய வீடுகளின் உயரமான இரும்புக் கேட்டினை வெறித்துப் பார்த்தபடியே மெதுவாக நடந்தார். சக்கரை நோயின் பாதிப்பு அவரது நடையின் இயல்பை மாற்றியிருந்தது. இடதுகாலை ஊன்றும் போது வலித்தது. வீதியின் முடிவிற்கு வந்த போது தன்னைத் தவிர அந்த வீதியில் யாருமேயில்லை என்பதை உணர்ந்தார். எப்போதாவது தான் அப்படியான அனுபவம் கிடைக்கிறது. தண்ணீருக்குள் விழுந்த கல் குளிர்ச்சியில் திளைப்பது போலத் தெருவின் தனிமையில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தார்.
தெற்காக நடப்பதா அல்லது கிழக்காக நடந்து கடைசி வரை போய்ப் பின்பு அகல்யா காபி ஹவுஸ் நோக்கி போகலமா என்ற யோசனையோடு அவர் கிளை பிரியும் சாலைக்கு வந்த போது சற்றும் எதிர்பாராத விதமாகச் சைக்கிளில் வேகமாக வந்தவன் அவர் மீது மோதினான்.

எங்கிருந்து அவன் வந்தான். எதற்காக இவ்வளவு வேகத்தில் சைக்கிள் ஒட்டி வந்தான் என எதையும் அவர் புரிந்து கொள்வதற்கு முன்பாகத் தரையில் விழுந்து கிடந்தார். அவர் மீது சைக்கிள் சரிந்து கிடந்தது. சைக்கிளை ஒட்டியவனும் சாலையில் விழுந்து கிடந்தான்.
அவர் மீதிருந்த சைக்கிளை அவரால் அகற்ற முடியவில்லை. கிழே விழுந்ததில் புட்டத்தில் அடி. கையில் சிராய்ப்பு. தலை கிர்ரெனச் சுற்றுவது போலிருந்தது. ஒருவேளை ரத்தவேகம் அதிகமாகியிருக்கும். சைக்கிளில் வந்தவன் எழுந்து நின்று தனது கைகளை உதறிக் கொண்டபடி அவர் மீது கிடந்த தனது சைக்கிளைத் தூக்கினான்.
தன்னையும் கை கொடுத்துத் தூக்கிவிடுவான் என நினைத்தார். ஆனால் அவன் கோபத்துடன் “தொம்மை … பாத்துவர வேண்டியது தானடா“ என்றான்.
இதில் தனது தவறு எதுவுமில்லையே என நினைத்தபடியே அவர் எழுந்து கொள்ள முயன்றார். அவரது ஒரு செருப்புக் காலில் இருந்தது. மறுசெருப்பு கழண்டு சாலையில் கிடந்தது. அவர் எழுந்து தனது கையில் ஒட்டிய மண்ணைத் துடைத்தபடியே “பாத்துவர வேண்டியது தானே…. தம்பி“ என்றார்.
கியர் வைத்த சைக்கிளை ஒட்டி வந்தவனுக்குப் பதினாறு வயதிருக்கக் கூடும். விநோதமாகத் தலைமுடியை வெட்டியிருந்தான். வெளிறிய உதடுகள். பெரிய காதுகள். கறுப்பு பனியன், நீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். பொருத்தமில்லாமல் காலில் ரப்பர் செருப்பு. அந்தப் பையன் குனிந்து சாலையில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
அவர் தனது சட்டைபையில் இருந்த செல்போனை வெளியே எடுத்துப் பார்த்தார். ஸ்கிரீன் உடையவில்லை. அந்தப் பையன் தான் அணிந்திருந்த கறுப்புக் கூலிங்கிளாஸ் கிழே விழந்து கிடப்பதை எடுத்தான். கண்ணாடியின் ஒரு பக்கம் உடைந்து போயிருந்தது. அதனைச் சரி செய்ய முயன்றான். கண்ணாடி நிற்கவில்லை.
ஆத்திரத்தில் அவரை நோக்கி கண்ணாடியை வீசினான். அவனது கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் “ஏன்பா எதிரே ஆள் வர்றது தெரியலையா“ எனக் கேட்டார்.
“உனக்கு கண்ணு எங்கடா போச்சு“ என அவன் கத்தினான்.
“நான் ஓரமா தானே வந்துட்டு இருந்தேன்“ என்றார்
“உன்னாலே தான்டா மயிரு.. என் கூலிங்கிளாஸ் போச்சு … என்ன முறைக்கே“ என்றபடியே எதிர்பாராமல் தனது கையை மடக்கி அவரது முகத்தோடு சேர்ந்து குத்தினான். அதனை நந்தகுமார் எதிர்பார்க்கவில்லை. தாடையில் பட்ட குத்தில் பொறி கலங்கிப் போனது. வலி தாங்க முடியாமல் அப்படியே சாலையில் உட்கார்ந்துவிட்டார்.
அந்தப் பையன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து யாருக்கு போன் செய்துவிட்டு தனது சைக்கிளை ஒட்டிக் கொண்டு கிழக்கே வேகமாகச் சென்றான்.
நந்தகுமாருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. வலி குறையவில்லை. தாடை உடைந்துவிட்டதா.. டாக்டரிடம் போக வேண்டுமா. டாக்டர் கேட்டால் என்ன சொல்வது. இல்லை அருகிலுள்ள காவல்நிலையத்தில் போய்ப் புகார் அளிக்க வேண்டுமா. குழப்பமாக இருந்தது.
இடது கையால் தனது தாடையைத் தடவிக் கொடுத்தார். பல்லிற்குள் கூட வலித்தது. இத்தனை வருஷ நகர வாழ்க்கையில் இப்படி எவரும் நடந்து கொண்டதில்லை. அந்தப் பையனுக்குத் தன் மீது என்ன கோபம். எதற்காக இப்படி நடந்து கொண்டான்.
பள்ளி வயதில் கூட அவர் ஆசிரியரிடம் அடி வாங்கியதில்லை. வீட்டில்,. பயணத்தில், பணியிடத்தில் எங்கும் ஒரு முறை கூட எவரும் அடித்ததில்லை.
அந்தப் பையனின் தந்தைக்குத் தனது வயது தானே இருக்கும். அவரிடம் இப்படித்தான் நடந்து கொள்வானா.. பொதுவெளியில் இப்படி நடந்து கொள்ளும் பையனை அவர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள். திடீரென அவரது கோபம் அந்தப் பையனின் பெற்றோர்கள் மீது திரும்பியது.
எதற்காக இப்படி முரட்டுதனமாகப் பையனை வளர்த்திருக்கிறார்கள்.அவர்களுக்கு இதில் பொறுப்பில்லையா.

அதிகாலையில் இவ்வளவு வேகமாக அவன் சைக்கிளில் எங்கே போகிறான். நண்பர்களைச் சந்திக்கவா. அதற்கு இவ்வளவு வேகமாகப் போக வேண்டுமா. தன்மீது மோதியது தவறு என்று கூட ஏன் அவன் உணரவில்லை. ஒருவேளை அது தவறேயில்லை என்று நினைக்கிறானா.
அந்தப் பையனின் பெயர் என்ன. எங்கேயிருக்கிறது வீடு. அவன் வைத்திருந்த சைக்கிள் விலை உயர்ந்தது. ஆகவே அவன் நிச்சயம் வசதியான வீட்டுபையனாகத் தானிருப்பான். யோசிக்க யோசிக்க அவருக்குக் குழப்பமாகவும் ஆத்திரமாகவும் இருந்தது.
தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை. எதுவும் நடக்காதது போல அகல்யா ஹாபி ஹவுஸிற்குப் போய்க் காபி சாப்பிட வேண்டுமா. இல்லை வீடு திரும்பி மனைவியிடம் நடந்தவற்றைச் சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமா.
தான் எதுவும் செய்ய மாட்டேன் என அந்தப் பையன் உறுதியாக நம்புகிறான். ஒருவேளை ஏதேனும் செய்ய முயற்சித்தால் தேடிவந்து இதைவிடப் பலமாக அடிப்பானோ.
அவர் சாலையில் இருந்து எழுந்து கொள்ள விரும்பினார். ஆனால் “உட்கார்ந்தே இரு“ என மனதிற்குள் ஒரு குரல் சொன்னது. எதற்காக உட்கார்ந்திருக்க வேண்டும். யாராவது பார்த்து என்ன நடந்து எனக் கேட்டு உதவி செய்வார்கள் என்பதற்காகவா. எதற்காக அப்படியான பரிதாபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.
இந்தப் பகுதிக்கு அவர்கள் வீடுமாறி வந்து இரண்டு வருஷமாகிறது. ஒரு முறை கூட இப்படிச் சாலையில் அமர்ந்ததில்லை. அப்படி உட்கார நேரிடும் என்று கூடக் கனவிலும் நினைக்கவில்லை. சாலையில் உட்கார்ந்த நிலையில் வீதியை காணும் போது அங்கிருந்த வீடுகள் விறைப்புடன் கருணையற்றதாகத் தோன்றியது. மரங்கள் அவரைக் கேலி செய்வது போல அசைந்தன.
அவர் எழுந்து நின்று கொள்ள வேண்டும் என முடிவு செய்தபடியே தாடையைத் தடவிவிட்டுக் கொண்டிருந்தார். ஒரு பைக் அவரைக் கடந்து போனது. பைக்கில் இருந்தவன் அவரைக் கண்டுகொள்ளவில்லை. இது போலவே அடுத்தச் சில நிமிஷத்தில் இரண்டு கார்கள் கடந்து போயின. அவர்களும் கண்டுகொள்ளவில்லை.
தானாக எழுந்து நின்று கொண்டார். திடீரென இந்த உலகிற்கு எதற்காக இவ்வளவு பிரகாசமான வெளிச்சம் என்று சூரியனின் மீது கோபம் வந்தது.
வீடு நோக்கி உடனே போகக் கூடாது. வழக்கம் போல நடக்க வேண்டும் என்று முடிவு செய்தபடியே கிழக்கே நீண்டு செல்லும் சாலையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.
அந்தப் பையன் எந்தப் பக்கமிருந்து வந்தான். ஏன் இவ்வளவு வேகமாக வந்தான் எதற்காகக் கூலிங்கிளாஸ் அணிந்திருந்தான் என்ற யோசனையிலிருந்து விடுபட முடியவில்லை.
அவனைப் போன்ற பையன்களை நகரில் பல இடங்களில் கண்டிருக்கிறார். ஒருமுறை அவரும் மனைவியும் சினிமா பார்க்க ராயல் மாலிற்குச் சென்ற போது புட்கோர்ட்டில் சமோசா வாங்கச் சென்றிருந்தார். அவரது மனைவி அவருக்காக ஒரு நாற்காலியில் தனது ஹேண்ட்பேக்கை போட்டு வைத்திருந்தாள். இருபது வயது இளைஞன் அந்த ஹேண்ட்பேக்கை தூக்கி தரையில் வீசி விட்டு நாற்காலியை எடுத்துச் சென்றான். அவள் கோவிக்கவே போடி எனப் பச்சையாகத் திட்டினான். அங்கிருந்த எவரும் அதனைக் கண்டிக்கவில்லை. வாங்கிய சமோசாவை சாப்பிடாமல் அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். படம் பார்க்கவும் பிடிக்கவில்லை.
ஒரு ஆங்கிலப் படத்தில் லிப்டில் ஒருவனுக்குத் திடீரெனப் பற்கள் வெளியே நீண்டுவிடும் அருகிலிருப்பவரைக் கடித்து ரத்தம் குடிப்பான். அது போல மாநகரப் பொதுவெளியில் யார். எப்போது டிராகுலாவாக மாறுவார்கள், என்று கண்டுபிடிக்க முடியவேயில்லை.
சைக்கிள்காரன் தன்மீது காட்டிய கோபம் வேறு எவரிடமோ வெளிப்படுத்த வேண்டியது. அதைத் தன்னிடம் காட்டுகிறானா. இல்லை. அந்த விஷம் நிரந்தரமாக அவனிடம் ஊறுகிறதா.
ஒருவேளை இரவு முழுவதும் சைக்கிளில் சுற்றி அலைந்துவிட்டு அவன் வீடு திரும்புகிறவனாக இருக்கக் கூடும். அவனது கண்கள் சிவந்திருந்தன. இரவில் எங்கே போயிருப்பான். அந்த நகரின் இரவிற்கு ஆயிரம் ரகசிய கதவுகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு உலகிற்குள் நுழைவதற்கான வாசல்.
சாலையில் நடந்ததை அவன் நிச்சயம் வீட்டில் போய்ச் சொல்லமாட்டான். இவ்வளவு கோபத்துடன் ஆவேசமாக நடப்பவன் அதை ஏன் தனது வீட்டில் மறைக்கிறான்.
தன் மீது சைக்கிளில் மோதியதை கூட விபத்து என எடுத்துக் கொள்ளலாம். எதற்காக முகத்தில் குத்தினான். அது தவறில்லையா. அவனுக்கு என்ன தண்டனை தருவது. யார் கொடுப்பது. கடவுளிடம் அந்தப் பொறுப்பை விட்டுவிட வேண்டுமா. கடவுள் இதற்குத் தண்டனை அளிப்பாரா.
திடீரென அவருக்கு அந்தப் பையனுக்குச் சாபம் கொடுக்கலாம் என்று தோன்றியது. தான் சாபம் கொடுத்தால் பலிக்குமா. இவன் வயது பையன்களுக்குச் சாபம் என்றால் என்னவென்று தெரியுமா. ஏதேனும் சாபத்தைப் பற்றி அறிந்திருப்பார்களா. சாபம் இந்தக் காலத்திலும் நடக்கக் கூடியது தானா. அவருக்கே சந்தேகமாக இருந்தது.
அத்தோடு என்ன சாபம் கொடுப்பது என்றும் அவருக்குத் தெரியவில்லை. திடீரென அவருக்குத் தோன்றியது சிறிய தவறுக்குச் சாபம் கொடுப்பது பெரிய தண்டனையில்லையா. அந்தப் பையனை ஏன் தான் மன்னிக்கக் கூடாது.
அப்படி மன்னித்துவிட்டால் இது போன்ற செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்வதோடு அதைத் தனது உரிமை என்றும் நினைத்துக் கொள்வானே. அதற்கு என்ன பதில் எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்
உடல்நலத்தின் மீதான அக்கறை என்பதைவிடவும் காரணமற்ற அச்சம், மரணபயம் தான் பலரையும் காலையில் நடைபயிற்சி செய்ய வைக்கிறது. பூங்காவில் பலரும் ஒன்றாக நடப்பதற்குக் காரணம் இது போன்ற தாக்குதல் குறித்த பயம் தானா.
அவரது நடையை விடவும் யோசனை வேகமாக இருந்தது. அன்றைய காலை திடீரெனச் சுழித்துக் கொண்டுவிட்டது. அந்தப் பையன் தன்மீது மோதுவற்கு முன்பு வரை அழகாக இருந்த காலைப் பொழுது சட்டென சாம்பல் நிற காலையாக மாறிவிட்டது.
ஒரு நாளை மகிழ்ச்சியோடு துவங்குவதும். அந்த மகிழ்ச்சியை நாள் முழுவதும் காப்பாற்றிக் கொள்வதும் எளிதானதில்லை. நகரம் மகிழ்ச்சியற்றவர்கள் அதிகமுள்ள இடம். பல நூறு சோப்புக்குமிழ்கள் ஒன்றாகப் பறப்பது போல மனிதர்கள் நகரில் இயங்குகிறார்கள். கொதிக்கும் எண்ணெய்யை போல நகரம் மாறிவிட்டிருக்கிறது. எண்ணெய்யில் படும் தண்ணீர் என்ன ஆகும். அப்படியே தன்னை போன்றவர்களின் வாழ்க்கை மாறியிருப்பதாக உணர்ந்தார்.
அசதியான நடையின் முடிவில் அவர் அகல்யா காபி ஹவுஸிற்கு வந்திருந்தார்.. சக்கரை இல்லாத காபி கேட்டுவிட்டு உட்கார நாற்காலி கிடைக்காதா எனத் தேடினார். மூலையில் ஒரு இடமிருந்தது. அங்கே உட்கார்ந்து கொண்டார்.
பக்கத்தில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த வயதானவர் அவரிடம் “உங்க உதடு ஓரமா ரத்தம் இருக்கு“ என்றார்.
“கவனிக்கலை“ என்றபடி கையால் அதனைத் துடைத்துக் கொண்டார்.
தனக்கான காபியை பெற்றுக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கத் துவங்கிய போது கன்னம் வலித்தது. தனக்குப் பதிலாக இப்படி ஒரு சம்பவம் வேறு யாருக்கோ நடந்தால் தான் என்ன மாதிரியான அறிவுரைகள் சொல்வோம் என்று யோசித்தார். நிறைய எண்ணங்கள் மனதில் வந்து போயின.

அப்போது அந்தக் காபி ஹவுஸிற்குள் இளம்காதல்ஜோடி வருவதைக் கண்டார். இருபது வயது இளைஞன், அதே வயது இளம்பெண். அந்த இளைஞன் லினன் பேன்ட் வெள்ளை நிற டீசர்ட் அணிந்திருந்தான் இளம் பெண் மெரூன் டாப். ஒயிட் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அவள் கையில் வைத்திருந்த செல்போனின் கவரில் சிறிய பொம்மை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
இருபது வயதின் அழகு வேறு எப்போதும் வராது. ஒரு நாளின் காலையைக் காதலோடு துவங்குகிறார்கள். அந்தப் பெண் இளைஞனிடம் ஏதோ சொல்ல அவன் சப்தமாகச் சிரித்தான். இருவரும் காபி வாங்கிக் கொண்டார்கள்.
அந்தப் பெண் ஒரு கராச்சி பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிப் பிரித்து அவனிடம் நீட்டினாள். அவன் ஒரு பிஸ்கட்டை எடுத்து அவளது காபியில் முக்கிச் சாப்பிட்டான். அது போலவே அவள் தனது பிஸ்கட்டை அவனது காபியில் முக்கி சாப்பிட்டாள். அதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
திடீரென அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை அருகில் நின்றிருந்த பெரியவரை நோக்கி நீட்டி எடுத்துக்கோங்க என்றாள். அவர் வேண்டாம் என மறுத்தார். ப்ளீஷ்.. சார் என்றாள் அந்தப் பெண். அந்தப் பெரியவர் ஒரு பிஸ்கட் எடுத்துக் கொண்டார். உடனே அவள் மீதமிருந்த பிஸ்கட்டுகளைப் பலரிடம் நீட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னாள். அந்தக் கை நந்தகுமார் முன்பாகவும் வந்து போனது. அவர் பிஸ்கட்டை எடுக்கவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக உணர்ந்தார். அடிபட்ட வலி மறைந்துவிட்டதைப் போலிருந்தது.
அப்போது காபி குடிப்பதற்காக ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வந்திருப்பதைக் கவனித்தார். அவரிடம் தன்னை ஒரு சைக்கிள்காரன் தாக்கியதாகப் புகார் சொல்லலாமா என யோசித்தார்
கான்ஸ்டபிள் சூடான காபியை ஆற்றிக் குடித்தபடி யாருடனோ செல்போனில் பேசியபடி இருந்தார். உறக்கமில்லாத கண்கள். இரவுப்பணி முடிந்து வீடு திரும்புகிறாரோ என்னவோ. புகார் சொல்லாவிட்டாலும் அவரிடம் ஏதாவது பேச வேண்டும் போலிருந்தது. என்ன பேசுவது என்று தெரியவில்லை.
கான்ஸ்டபிள் காபியை குடித்துவிட்டு எழுந்து கொள்ளும் போது நந்தகுமார் அவரிடம் கேட்டார்
“ சார் நீங்க மதுரையா“
கான்ஸ்டபிள் தலையசைத்தபடியே சொன்னார்
“ஆமா.. நீங்க மதுரையா“
“ஆமாம்.. கோரிபாளையம்“ என்றார்
“நான் வில்லாபுரம். இங்க வந்து முப்பது வருஷமாச்சி“
“நீங்க போன்ல பேசிகிட்டு இருந்ததைக் கேட்டேன். டிவிஎஸ்ல ஏதோ ஹெல்ப் கேட்டமாதிரி இருந்துச்சி“
“ஆமா சார். ஒரு சின்ன உதவி தேவை“
“என்னோட ரிலேடிவ் அங்கே வேலை பாக்குறார். என்ன ஹெல்ப் வேணும் சொல்லுங்க“
“உங்க நம்பர் சொல்லுங்க சார். வீட்ல வந்து பாக்குறேன். எங்க வீடு“
“செகண்ட் செக்டார். ஜெயகிருபா அபார்ட்மெண்ட். “
“இங்கே உங்களை நிறையத் தடவை பாத்துருக்கேன். ஆனா பேசினதில்லை“..என்றார் கான்ஸ்டபிள்
“அதுக்கு நேரம் வரணும்லே“ என்று பொய்யாகச் சிரித்தபடி தனது செல்போன் நம்பரை கான்ஸ்டபிளுக்குச் சொல்ல ஆரம்பித்தார். அதைத் தனது செல்போனில் பதிவு செய்து கொண்ட கான்ஸ்டபிள் ஒரு மிஸ்டுகால் கொடுத்தார்
“இது என் நம்பர்.. எடுத்துக்கோங்க சார்.. நைட் எட்டு மணிக்கு வந்தா நாம பேசலாமா“ எனக்கேட்டார் கான்ஸ்டபிள்
“வரலாம். நான் பத்து மணிக்கு வரைக்கும் டிவி பாத்துகிட்டு தான் இருப்பேன்“.
“ரொம்பத் தேங்ஸ் சார்“ எனக் கான்ஸ்டபிள் புறப்பட்டார்.
எதற்காகத் தான் இப்படி முன்பின் தெரியாத ஒரு கான்ஸ்டபிளின் போன் நம்பரை வாங்கிக் கொண்டோம். தானாக உதவி செய்ய முன்வந்தோம். அந்தப் பையன் தன்னைத் தாக்கியது தான் காரணமா.
வீட்டிற்கு வந்து சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கும் காலையில் நடந்த சம்பவத்தைக் கான்ஸ்டபிளிடம் சொல்லலாமா. அவர் எப்படி அந்தப் பையனை கண்டுபிடிப்பார். என்ன தண்டனை பெற்று தருவார். இதற்காகத் தன்னைக் கோர்ட்டிற்கு அழைப்பார்களா. கொதிக்கும் தண்ணீரைப் போல யோசனைகள் ஒன்றின் மீது ஒன்றாகக் குமிழ்விட்டபடி இருந்தன.
நடந்த நிகழ்வை விடவும் அதைப் பற்றிய நினைவு அதிகம் வேதனை தருவதாக இருந்தது.. இதைப்பற்றி நினைக்கக் கூடாது. உடனடியாக மறந்துவிட வேண்டும் என நினைத்தபடியே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது சாலையின் இடதுபுறத்தில் ஒருவர் லாப்ரடார் நாயுடன் வாக்கிங் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார். நாமும் இப்படி ஒரு நாயை வாங்கிக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.
இந்த நாய் என்ன விலையிருக்கும். அதற்கு எப்படிப் பயிற்சி கொடுப்பது என்ற யோசனைகளுடன் நடக்க ஆரம்பித்தார். நாயுடன் நடந்து செல்வதைப் பற்றிய கற்பனை அவரது தாடை வலியை தற்காலிகமாக மறக்க செய்திருந்தது
••