புதிய சிறுகதை. ஜுலை 8 2026
செபாஸ்டியன் தனியே சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார். அதுவும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் ஜேசி சாலையின் நடைபாதையில். ரயில் நிலையத்தின் தெற்குபக்கம் கிளைவிடும் சாலையது. அதன் வழியாகச் சென்றால் விக்டோரியா காம்ப்ளெக்ஸை அடையலாம் . அது தான் அந்தப் பகுதியின் அடையாளம். மிகப் பெரிய வணிக வளாகம்.

அந்தச் சாலையில் ரத்னா சலூனை ஒட்டிய நிழற்குடையினுள் அவர் அமர்ந்திருந்தார். அன்றாடம் வீட்டிலிருந்து மின்சார ரயிலில் பயணம் செய்து அங்கே வந்து சேருவார். அதுவும் சரியாகக் காலை பத்தரை மணிக்கு. அவரது நிழற்குடை மற்றும் இரண்டு நாற்காலிகள், மரஸ்டூல் யாவும் ரத்னா சலூனில் வைக்கபட்டிருக்கும். நிழற்குடையை சலூனை ஒட்டியே சாய்த்து வைத்திருப்பார்.
இரண்டாக மடித்து எடுத்துச் செல்லக்கூடிய சதுரங்கப் பலகை, காய்கள். அவற்றைக் கொண்டு வருவதற்கான லெதர் பை. அதில் அவரது மதிய உணவிற்கான சிறிய டிபன்பாக்ஸ். பிளாஸ்கில் வெந்நீர். கூடவே ஒரு ஆரஞ்சு பழம். கைதுடைப்பதற்கான சிறிய துணி. பச்சை நிற வாட்டர் பாட்டில் . இத்தனை வீட்டிலிருந்து கொண்டு வருவார்.
ரத்னா சலூனை நடத்தும் மகாலிங்கம் அவரது நண்பன். ஆகவே அவரது முகத்தைக் கண்டவுடன் வணக்கம் வைப்பான். அவர் தலையசைத்துக் கொண்டு மெலிதாகப் புன்னகை செய்வார். சில நேரம் லேட்டாகிருச்சி என்றும் சொல்லுவார்,
கடைவாசலில் சாய்த்து வைக்கபட்டிருந்த நிழற்குடையை விரித்துத் தரையில் ஊன்றுவார். மடித்து வைக்கபட்டிருந்த நாற்காலிகளை எடுத்து வந்து போடுவார். ஸ்டூலை இரண்டு நாற்காலிகளுக்கு நடுவில் வைப்பார். பின்பு தனது பையிலிருந்த சதுரங்க பலகையை வெளியே எடுத்து விரித்துக் கறுப்பு வெள்ளை காய்களைக் கட்டங்களில் அடுக்குவார். அவர் உட்காரும் நாற்காலி சற்றே முதுகு உயர்ந்தது. அதில் அமர்ந்து கொண்டு சதுரங்க காய்களைப் பார்த்து ரசிப்பார். பின்பு பரபரப்பான அந்தச் சாலையை வேடிக்கை பார்ப்பார்.
நடைபாதையில் செல்லும் எவரும் விருப்பமிருந்தால் அவருடன் சதுரங்கம் ஆடலாம். ஒரு நாளில் இரண்டோ மூன்று பேர்கள் அவருடன் சதுரங்கம் ஆடுவார்கள். அவரை எவரும் இதுவரை ஜெயிக்க முடிந்ததில்லை. வேகமாக ஆட்டத்தை முடித்துவிட மாட்டார். எதிராளி சில காய்களை வெட்டுவதற்கு அனுமதிப்பார். பின்பு சில நகர்வுகளில் ஆட்டத்தைத் தன்வசமாக்கிவிடுவார்.
தோற்றுப் போனவர்களில் ஒரு சிலரே அடுத்த ஆட்டம் ஆடுவார்கள். மற்றவர்கள் விரக்தியில் சிரித்தபடியே எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். தன் முன்னே அமர்ந்து ஆடும் எவரிடமும் செபாஸ்டியன் பெயரைக் கேட்டதில்லை. தனது பெயரை அறிமுகம் செய்து கொண்டதுமில்லை
யாரும் வராத நேரங்களில் அவரே இரண்டு பக்கமும் விளையாடுவார். தனது நகர்வுகளைத் தானே எதிர் நின்று கவனித்துச் செயல்படுவது என்பது ஒரு ஆன்மீக பயிற்சி. ஒருவகைத் தியானம். அதனை அவர் நன்றாக உணர்ந்திருந்தார்.
அந்தச் சாலையில் தினமும் ஒரு சிறுவணிகன் புதிதாகத் தோன்றுகிறான். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவன் கூழாங்கற்களைக் குவித்துப் போட்டு விற்பதைக் கண்டார். அதற்கு இரண்டு நாட்கள் முன்பாக ரப்பர் பாம்பு. ரப்பர் தவளைகளை ஒருவன் விற்பனை செய்து கொண்டிருந்தான். இன்னொரு நாள் சோப்புக் குமிழ்களை விற்பனை செய்பவன் மிகப்பெரிய சோப்புக் குமிழ் ஒன்றை ஊதி காற்றில் பறக்கவிட்டபடி இருந்தான். வணிகம் தான் நகரை இயக்குகிறது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. பரபரப்பான சாலையை வேடிக்கை பார்ப்பதன் மூலம் வாழ்க்கை எவ்வளவு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை அவரால் நன்றாக உணர முடிந்தது.
அவர் முன்னுள்ள சதுரங்க பலகையோ, அதில் உள்ள காய்களோ மாறவேயில்லை. நூற்றாண்டுகளாக அதே பலகை. அதே அதிகாரமுள்ள காய்கள். ஆனால் புதிய நகர்வுகள். புதிய உத்திகள், புதிய ஆட்டக்காரர்கள் மூலம் ஆட்டம் சலிப்பின்றிப் புதியதாகத் தொடர்கிறது. சில நேரங்களில் அந்தச் சதுரங்க காய்களைப் போலத் தானும் சிறியதொரு கட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் உணருவார். ஆனால் சதுரங்கம் முன்கூட்டியே ஒன்றை அறிந்து கொள்ளவும், திட்டமிடவும் விழிப்புணர்வு கொள்ளவும் வழிகாட்டுகிறது, அதில் அதிர்ஷ்டத்திற்கு இடமில்லை என்பதால் அதனை மிகவும் நேசித்தார்.
அவரது வீடு எங்கேயிருக்கிறது. எதற்காக இப்படி நாள் முழுவதும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கிறார் என்பதை யாருடனும் செபாஸ்டியன் பகிர்ந்து கொண்டதில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத் தற்செயலாக ஒரு நாள் ரத்னா சலூனிற்கு வந்து தான் எதிரேயுள்ள இடத்தில் சதுரங்கம் ஆட விரும்புவதாகவும் தனது நாற்காலி, குடையை இரவில் அங்கே வைத்துக் கொள்ள உதவி செய்ய முடியுமா என்று அவர் கேட்டபோது மகாலிங்கம் வியப்புடன் அவரைப் பார்த்தான்
சினிமா நடிகர் சீன் கானரியை நினைவுபடுத்தும் முகம். அடர்ந்த தாடி. வெள்ளை பேண்ட். வெள்ளை சட்டை .முதுமையை அறியமுடியாதபடியான உறுதியான உடற்கட்டு. அவர் கையில் வாட்ச் கட்டியிருக்கவில்லை. ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கென இருக்கும் உடல்மொழியைக் கொண்டிருந்தார்.
“அந்த இடத்துல ஒரு குடை ரிப்பேர் பண்ணுறவர் இருந்தார். அவருக்கு உடம்பு முடியாம போனதுல இருந்து வர்றதில்லை. நீங்க விளையாடுங்க சார“ என்றான்
“யார் வேணும்னாலும் என்னோட விளையாடலாம் “என்று சொன்னார் செபாஸ்டியன்
“எனக்குச் செஸ் விளையாட தெரியாது சார்“ என்றான் மகாலிங்கம்
“ஒரு நாள்ல கத்துகிடலாம்“ எனப் புன்முறுவலுடன் சொன்னார் செபாஸ்டியன். ஆசையிருந்த போதும் அவன் விளையாடவில்லை. ஆனால் பல நாட்கள் அவர் விளையாடுவதை வேடிக்கை பார்த்திருக்கிறான்.
அவனது சலூனுக்கு வந்து காத்திருக்கும் சிலர் அவருடன் சதுரங்கம் ஆடுவார்கள். மற்றபடி ஒன்றிரண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள். டைகான் நிறுவனத்தில் வேலை செய்யும் சிலர், பார்மசி கடையில் வேலை செய்யும் இளைஞன். கூரியர் கொண்டு வந்து தரும் நபர், ஒய்வூதியம் வாங்க வரும் முதியவர்களில் சிலர் எனப் பலரும் அவருடன் சதுரங்கம் ஆடியிருக்கிறார்கள். மழைநாளில் யாரும் விளையாட வராத போது சதுரங்கப் பலகையை மடித்து வைத்துவிட்டு அதே குடையினுள் அமர்ந்தபடி சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.
ஒரு முறை அவர் தனது டிபன்பாக்ஸை மடியில் வைத்துக் கொண்டு சாப்பிடுவதைக் கண்ட மகாலிங்கம் “கடைக்குள்ளே வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க சார்“ என்றான்
“பரவாயில்லை. இதுவே போதும் என டிபன் பாக்ஸில் இருந்த பிரெட் ஆம்லேட்டை அவர் பிய்த்துச் சாப்பிட்டார்
“இது என்ன சார் ஸ்கூல் பசங்க சாப்பிடுற மாதிரி சாப்பிடுறீங்க. பக்கத்துல செல்வம் மெஸ் இருக்கு. அங்க இருந்து சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லவா“ எனக்கேட்டான் மகாலிங்கம்
“சோறு சாப்பிட்டா தூக்கம் வந்துரும்“ என்று சொல்லி சிரித்தார் செபாஸ்டியன்
“தூக்கம் வந்தா உள்ளே வந்து பேப்பரை விரிச்சி போட்டு படுங்க சார். லஞ்ச் டைம்ல யாரு ஹேர்கட் பண்ண வரப்போறா“ என்றான் மகாலிங்கம்
“அதான் நைட் நல்லா தூங்கிடுறனே.. அது போதும்.. “
“கேட்கிறனேனு தப்பா எடுத்துகிடக் கூடாது. இந்த விளையாட்டை ஏதாவது ஸ்கூல்ல போய்ச் சொல்லிக் கொடுத்தா காசு கிடைக்குமில்ல“
“அது எனக்குப் பிடிக்கலை. “
“உங்களை யாரும் ஜெயிக்க முடியாதுனு காட்டுறதுக்காக விளையாடுறீங்களா, “
“அதெல்லாமில்லே.. நான் ஸ்கூல் பசங்க கிட்ட கூடத் தோத்துருக்கேன். “
“ஆனா நான் பாத்தவரைக்கும் எப்பவும் நீங்க தான் ஜெயிக்குறீங்க“
“அப்படி எல்லாம் இல்லை. என்னை விட அவங்க மோசமா ஆடி என்னை ஜெயிக்க வைக்குறாங்க “எனச் சிரித்தார்
“உங்க வீட்ல செஸ் ஆடுவீங்களா சார்“ எனக்கேட்டான் மகாலிங்கம். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். அந்தகேள்விக்கான பதிலை சொல்லாமல் மதனிடம் கேட்டார்
“உங்களுக்கு எத்தனை பிள்ளைக“
“ஒரு பொண்ணு. ஒரு பையன் “என்றான் மகாலிங்கம்
“அவங்களை ஒரு நாள் அழைச்சிட்டு வாங்க. நான் செஸ் விளையாட கத்துக்குடுக்குறேன்“
“அழைச்சிட்டு வர்றேன் சார். உங்களை மாதிரி ஒருத்தர் பார்க்கில உட்கார்ந்து செஸ் ஆடுவார். அவரும் நம்ம கஸ்டமர் தான். அவரை வரச்சொல்லவா, அவரோட கேம் ஆடுறீங்களா“
“அதெல்லாம் வேண்டாம். “
“எவ்வளவு வருஷமா சார் நீங்க செஸ் ஆடுறீங்க, “
“ஏழு வயசில கத்துகிட்டேன்“ என்றார். தற்போது என்ன வயது என்று சொல்லவில்லை. மகாலிங்கம் அவரது குடும்பம், மனைவி பிள்ளைகள் வேலை பற்றிக் கேட்க நினைத்தான். கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார் என உணர்ந்தவனாக அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். பாதிரொட்டியை பிய்த்து மரத்திலிருந்த காகத்தை அழைத்துப் போட்டார். மீதமான ஒரு துண்டை தெருநாயிற்குக் கொடுத்தார். பின்பு எழுந்து மரத்தடியில் போய்க் கைகழுவி வந்தார். பின்பு பாதியில் விட்ட சதுரங்க ஆட்டத்தைத் தொடரத் துவங்கினார்
மகாலிங்கம் சலூனிற்குள் போய் அமர்ந்து கொண்டு அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்

எப்படி ஒரு மனிதரால் நாள் முழுவதும் விளையாடிக் கொண்டேயிருக்க முடிகிறது. அப்படி அந்தச் சதுரங்கத்தினுள் என்ன இருக்கிறது. நீர்சுழலில் சிக்கிக் கொண்ட மனிதனைப் போலச் சதுரங்கப்பலகையினுள் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கிறாரோ.
ஒரு வேளை மனைவி இறந்து போய்ப் பிள்ளைகள் யாருமில்லை என்பதால் தனது தனிமையைக் கடத்துவதற்காக இப்படி வீதியில் வந்து சதுரங்கம் ஆடுகிறாரோ.
தோற்றத்தைப் பார்த்தால் ஒய்வு பெற்ற ராணுவ வீரரைப் போலிருக்கிறது. அதில் கிடைக்கும் ஓய்வூதியம் போதும் என நினைத்து ஜாலியாகச் சதுரங்கம் ஆடி நாட்களைக் கடத்துகிறாரா
இல்லை. இப்படிச் சதுரங்கம் ஆடுவது போல யாரையோ கண்காணிக்கும் போலீஸ் உளவாளியாக இருப்பாரோ,
இப்படிப் பல்வேறு எண்ணங்களை மனதில் ஒடவிட்டுக் கொண்டிருந்தான். அவனால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை.
காலை முதல் மாலை ஆறரை வரை சதுரங்கம் ஆடும் செபாஸ்டியன் இருட்டத் துவங்கியதும் சதுரங்க காய்களை ஒரு சுருக்குப் பையில் எடுத்துப் போடுவார். சதுரங்க பலகையை மடித்து வைப்பார். அப்போது அவரது முகத்தில் இனம் புரியாத வேதனை படிந்திருக்கும். எதையோ மறைத்துக் கொள்வதற்காகத் தான் அவர் சதுரங்கம் ஆடுகிறாரோ எனத் தோன்றச் செய்யும்.
நாற்காலியை விட்டு எழுந்து நின்று சோம்பல் முறிப்பார். வீட்டிற்குக் கொண்டு செல்லவேண்டியவற்றைப் பையில் போட்டு மூடுவார். நிழற்குடையை மடித்துச் சலூன் ஒரமாகச் சாத்தும் போது மகாலிங்கம் “என்ன சார் கிளம்பீட்டீங்களா “எனக் கேட்பான். அவர் பதில் அளிக்க மாட்டார். அமைதியாக ரயில் நிலையம் நோக்கி நடந்து செல்வார்
ஒருநாள் அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து போய் அவரது வீட்டை கண்டுபிடிக்க வேண்டும் என மகாலிங்கம் விரும்பினான். அவர் சொல்ல விரும்பாத ஒன்றை தான் எதற்காகக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவன் மனதில் தோன்றவே அந்தப் பின்தொடரலை மேற்கொள்ளவில்லை.
பகல்நேரத்தில் அவர் தெருவின் கடைசியில் இருந்த பொதுக்கழிப்பறைக்குப் போன நேரத்தில் அந்த நிழற்குடையின் கீழே சதுரங்க பலகையும் காய்களும் காலியான இரண்டு நாற்காலிகளும் இருப்பதைக் காணுவது விநோதமாக இருக்கும். அவரைப் போலத் தானும் அமர்ந்து விளையாடிப் பார்க்க மகாலிங்கத்திற்கு ஆசையாக இருக்கும். ஆனால் முயற்சிக்க மாட்டான். அதற்குப் பதிலாக எவரும் அந்த நாற்காலியை, சதுரங்க பலகைளை திருடிப் போய்விடாமல் பார்த்துக் கொள்வான்.
ஒரு நாள் மதியம் செபாஸ்டியன் தான் கொண்டு வந்திருந்த சாண்ட்விட்ச்சை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது முப்பது வயதுள்ள ஒரு பெண் எதிரே வந்து நின்று கேட்டாள்

“நான் உங்க கூட விளையாடலாமா சார்“
ரொட்டியை மென்றபடியே தலையாட்டினார்
“நீங்க சாப்பிட்டு முடிங்க நான் வெயிட் பண்ணுறேன் என்றபடி அவள் எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அதன் பின்பு அவரால் டிபன் பாக்ஸில் இருந்த ரொட்டிகளைச் சாப்பிட முடியவில்லை. அவற்றை நாயிற்குப் போடுவதற்காக எழுந்து கொண்டார்
“சார்.. எனக்குக் குடுங்க. நான் இன்னும் சாப்பிடலை“ என்று கேட்டாள் அந்தப் பெண்
“இது நல்லாயிருக்காது “என்றார் செபாஸ்டியன்
“நீங்க செஞ்சதா.. சும்மா குடுங்க“ என அவரது டிபன்பாக்ஸை வாங்கிக் கொண்டு சாண்ட்விட்ச்சை எடுத்துக் கடித்தாள்.
“பெப்பர் போட்டுக் கேரட் கேஸ்பிகம் பிரை பண்ணி வெஜ் சாண்ட்விட்ச் பண்ணியிருக்கீங்க. சூப்பரா இருக்கு.. “
சிறுமியைப் போல அவள் ஆசையாகச் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். வயலட் நிற புடவை. ஒடுங்கிய முகம். கையில் ஒரேயொரு வளையல்.. கழுத்தில் மெல்லிய தங்கச் செயின். நிறம் மங்கிய மஞ்சள் கயிறு. காதில் கவரிங் ரிங்.
செபாஸ்டியன் கைகளைக் கழுவி கொண்டு வந்தார். அவள் அவரது தண்ணீர் பாட்டிலை வாங்கிக் குடித்துவிட்டுச் சேலையில் கையைத் துடைத்துக் கொண்டாள்.
“அரை மணி நேரம் எங்களுக்கு லஞ்ச் பிரேக். அதுக்குள்ளே நாம ஒரு கேம் ஆடலாம்“
அவர் தலையாட்டிக் கொண்டார்.
“நீங்க என்னைப் பாத்துருப்பீங்க. ஜெராக்ஸ் கடைல வேலை செய்றேன். என் பேரு சுலோச்சனா. “ என்றாள்
அவர் அதைக் கேட்காதவர் போலச் சதுரங்க காய்களை வரிசையாக வைத்தார். அவள் வெள்ளைக் காய்கள் தனக்கு வேண்டும் என்றாள். சதுரங்க பலகையை மாற்றி வைத்தார். சதுரங்கம் விளையாடத் தெரியாதவள் போலக் காய்களை நகர்த்தினாள். அது ஒரு பாவனை எனப் புரிந்து கொண்டவரைப் போல அவரும் காய்களை நகர்த்தினார். சில நகர்வுகளுக்கு அப்புறம் அவள் தாக்குதல் ஆட்டத்தைத் துவங்கினாள். அதை ரசித்தபடியே அவரும் காய்களை நகர்த்தினார். அடுத்த ஆறு நகர்வுகளில் அவள் மிகத் திறமையாக விளையாடுவதை உணர்ந்தார்.
அவர் அடுத்த நகர்வுகளை குறித்து யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் பேசிக் கொண்டிருந்தாள்
“எங்க ஸ்கூல்ல செஸ் கத்துக் குடுத்தாங்க. அப்போ நல்லா ஆடுவேன்“
“இப்பவும் நல்லா தான் ஆடுறீங்க “என்றார்
“டச் விட்டு போச்சு… இந்தப் பக்கம் போகும் போதும் வரும் போதும் உங்களைப் பாத்துருக்கேன். நாமளும் ஒரு கேம் ஆடணும்னு ஆசையா இருக்கும். ஆனா.. டைம் கிடைக்காது. இன்னைக்கு ஓனர் இல்லை. அதான் வந்துட்டேன்“
அன்றைய விளையாட்டில் அவர் எளிதாக அவளைத் தோற்கடித்தார். தோற்போம் என அறிந்தவள் போல மகிழ்ச்சியாகச் சிரித்தபடியே கேட்டாள்
“நான் தோத்ததுக்கு ஏதாவது குடுங்க“
அவர் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ஆரஞ்சு பழத்தை அவளிடம் கொடுத்தார்.
“ஜெயிச்ச உங்களுக்கு நான் ஐந்து ரூபாய் தரணும். அதைக் கணக்குல வச்சிக்கோங்க“ என்றபடியே தனது ஜெராக்ஸ் கடையை நோக்கி நடந்து சென்றாள்.
சதுரங்கப் பலகையைப் பார்த்தபடியே அவராகச் சிரித்துக் கொண்டார். நன்றாக விளையாட தெரிந்த பெண். வேண்டுமென்றே கவனமில்லாமல் விளையாடுகிறாள். வேடிக்கையாகப் பேசுகிறாள். திடீரென மழை பெய்த மதியத்தைப் போல அந்த நாள் குளிர்ச்சியானது. அன்று மாலை வரை வேறு எவரும் அவருடன் விளையாட வரவில்லை. ஆனால் அவள் எதிரில் அமர்ந்து விளையாடுவதாக நினைத்துக் கொண்டு அவளுக்காக அவரே காய்களை நகர்த்தி விளையாடினார்.
அதன் மறுநாளும் அந்தப் பெண் சதுரங்கம் விளையாட வந்திருந்தாள். அன்றைக்கு அவள் வீட்டிலிருந்து எக் ரோல் தயாரித்துக் கொண்டு வந்திருந்தாள். அவரிடம் நீட்டியபடி சொன்னாள்
“எனக்கு ரெண்டு…. உங்களுக்கு ஒண்ணு. “
சிரித்தபடியே வாங்கிக் கொண்டு கேட்டார்
“அப்போ நான் கொண்டுவந்த உப்புமாவை யார் சாப்பிடுறது“
“அதை எனக்குக் குடுத்துருங்க. ஈவினிங் சாப்பிட்டுகிடுறேன். ஐந்து மணிக்கு தான் ரொம்பப் பசிக்குது“ என்றாள்
அன்றைக்கு அவளாகச் சதுரங்க பலகையில் காய்களை அடுக்கினாள். வெள்ளை சிப்பாயை e4-க்கு நகர்த்துவதன் மூலம் ஆட்டத்தைத் துவக்கினாள். அவர் கறுப்பு சிப்பாயை c5-க்கு நகர்த்தினார். அதைக் கண்டு அவள் சிரித்துக் கொண்டபடி தனது குதிரையை நகர்த்தினாள். இருபது நிமிஷத்திற்குள் ஆட்டத்தைக் கைப்பற்றி அவரைத் தோற்கடித்துவிட்டாள். அவளைப் போல அவரும் சிரித்தபடியே கேட்டார்
“தோத்துப் போனதுக்கு ஏதாவது தரணுமே“
“நேத்து நான் வச்ச கடன் சரியாகப் போச்சு.. நீங்க தோத்து போனதுக்காக நான் ஒரு டீ வாங்கித் தர்றேன். நாம டீ குடிக்கலாமா“
முதன்முறையாக அவர் தன்னோடு சதுரங்கம் ஆடிய ஒருவருடன் தேநீர் குடிப்பதற்காகச் சென்றார். பக்கத்து டீக்கடையில் அவளே இரண்டு ஜிஞ்சர் டீ ஆர்டர் செய்தாள். பிறகு அவரிடம் சிரித்தபடியே சொன்னாள்
“நீங்க தோத்துடுவீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்“
“எப்படி“
“நான் ஜெயிக்கணும்னு நீங்க நினைச்சது உங்க கண்ணுல தெரிஞ்சது“
“அதெல்லாமில்லே“
“நீங்க சரியா விளையாடலே. இல்லாட்டி உங்களை ஜெயிக்க முடியாது“
“அதெல்லாம் நீ ரொம்ப நல்லா விளையாடினே. “
“எனக்கு தெரியும்.. நான் ஸ்கூல்ல விளையாடினப்போ.. எல்லாக் கேம்மையும் நோட்டில எழுதி வச்சிருப்பேன். அந்த நோட்டு என் வீட்ல இப்பவும் இருக்கு. “
“உன்வீடு எங்க இருக்கு.. “
“ சேலையூர். “
“ அங்கேயிருந்தா இங்க வேலைக்கு வர்றே“
“ இவங்க ஜெராக்ஸ் கடை சேலையூர்ல இருக்கு.. அங்கே மூணு வருஷம் வேலை செய்தேன். ஒரு பிரச்சனையாகியிருச்சி. அதான் இங்கே மாத்திவிட்டாங்க. தினம் எலக்ட்ரிக் டிரைன்ல வந்துட்டு போயிடுறேன். “
“ நானும் டிரைன்ல தான் வர்றேன்“
“ உங்க வீடு எங்க சார் இருக்கு“
அவர் பதில் சொல்லவில்லை. மாறாக அவளிடம் டீ தயாராகிவிட்டதைக் காட்டினார்
அவர் பதில் சொல்ல விரும்பாததைப் புரிந்து கொண்டதைப் போல அவள் கேட்டாள்
“ நான் உங்க கிட்ட செஸ் கத்துகிடவா சார்“
“ ஏன் நீ நல்லாதானே ஆடுறே“
“ இன்னும் நல்லா ஆடணும் சார். ஆனா நேரம் கிடைக்க மாட்டேங்குது“
“உனக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ வா. விளையாடுவோம்“
“அதுக்குத் தான் உங்க வீடு எங்கேயிருக்குனு கேட்டேன்“
அப்போதும் அவர் பதில் சொல்லவில்லை. அவளாகச் சிரித்தபடியே சொன்னாள்
“நாளைக்கு நான் தோத்தா,, நீங்களும் இப்படி டீ வாங்கித் தரணும்“
“டீயில்லை. பூஸ்ட் வாங்கித் தர்றேன்“
அதைக் கேட்டு அவள் சிரித்தபடியே சொன்னாள்
“பூஸ்ட் எனக்குப் பிடிக்காது டீ போதும். ஆனா. பூஸ்ட்க்கு குடுக்கிற காசை என்கிட்ட குடுத்துருங்க“
அதைக் கேட்டு அவரும் சிரித்தார்.
அன்று அவர்கள் ஒன்றாகத் திரும்பி வருவதை மகாலிங்கம் பார்த்துக் கொண்டிருந்தான். அதை உணர்ந்தவர் போலச் செபாஸ்டியன் அவசரமாகத் தனது இடத்தை நோக்கி நடந்தார்.
அவள் எடுத்துக் கொள்வதாகச் சொன்ன உப்புமா உள்ள டிபன் பாக்ஸை கொண்டு போய் ஜெராக்ஸ் கடையில் கொடுத்துவிட்டு வரவேண்டுமா எனக் குழப்பமாக இருந்தது. வேண்டாம் என முடிவு செய்து உப்புமாவை நாயிற்கு அளித்தார்.
சதுரங்க பலகையை அடுக்கி தான் எப்படித் தோற்று போனோம் என்பதை ஒவ்வொரு நகர்வாக மறுபடி நகர்த்தித் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார். தவறான நகர்வுகளே காரணம். எதனால் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டது என அவருக்குப் புரியவில்லை.
அந்த இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு அவள் செஸ் விளையாட வரவேயில்லை. ஒரு நாள் மதியம் அவராக ஜெராக்ஸ் கடைக்குப் போனார். அங்கே சுலோச்சனா இல்லை. வேறு ஒரு பெண் இருந்தாள். அவளிடம் சுலோச்சனாவைப் பற்றிக் கேட்டதற்கு அவள் வேலையை விட்டு நின்று விட்டதாகச் சொன்னாள்.
சேலையூரில் போய் அவளைத் தேடிக் காண வேண்டும் போலிருந்தது. ஆனால் போகவில்லை. சதுரங்க ஆட்டம் என்பதே எதிர்பாராத நகர்வுகள் தானே. அதை நன்றாக உணர்ந்திருந்தவர் போல அதன்பிந்திய நாட்களிலும் தனது சதுரங்க பலகையை விரித்து வைத்துக் கொண்டு யாராவது ஆடுவதற்காக வர மாட்டார்களா எனக் காத்திருக்கத் துவங்கினார்.
நாட்களும் மாதங்களும் கடந்து போயின. ஒவ்வொரு நாளும் பகலை வெல்லும் இரவின் வருகை அவரை வேதனைப்படுத்தியது. பகல் நீண்டு சென்றபடியிருக்கக் கூடாதா என ஏங்கினார்.
ஒரு முறை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அவர் சதுரங்கமாட வராத போது மகாலிங்கம் கவலைப்பட்டான். யாரிடம் விசாரிப்பது எனவும் தெரியவில்லை. அடுத்தத் திங்கள்கிழமை அவர் வந்திருந்தார்.
என்ன சார். உங்களைக் காணோமேனு ரொம்பக் கவலைப்பட்டுட்டேன். உங்க போன் நம்பர் கூட என்கிட்ட இல்லை“.
“ வைரல் பீவர்.. நடக்கக் கூட முடியலை. படுத்தே இருந்தேன்“ என்றார்
“ அத்தோட ஏன் சார் வந்துட்டீங்க. ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே“
“ வீட்ல இருந்தா.. பழைய நினைப்பு ஜாஸ்தியாகிருது.. அது நோயை விட ரொம்ப வேதனைப்படுத்து“
“ வீட்ல உங்க ஒய்ப் இல்லையா சார்“ எனக்கேட்டான் மகாலிங்கம்
“ அவ இறந்து போய் ஆறு வருசமாச்சி. பையன் வீட்ல இருக்கேன். அவன் சரியில்லை. மருமகளுக்கு என்னைப் பிடிக்கலை. வீட்ல எனக்கு வேண்டியதை நானே சமைச்சிகிடுறேன். என்னை ஒல்டு ஏஜ் ஹோம்ல கொண்டு போய் விடணும்னு சொல்லிட்டு இருக்காங்க. அது பிடிக்கலை. எனக்குப் புதுசு புதுசா ஆட்களைப் பாக்கணும். பழகணும்.. அதான் தினம் இப்படி வெளியே விளையாட வந்துருறேன். தூங்குறதுக்குத் தான் வீட்டுக்கு போவேன்.. “ என்றார் மகாலிங்கம்
“ உங்க பையன் என்ன வேலை பாக்குறார். வீடு எங்கே“ எனக்கேட்டான் மகாலிங்கம்
வழக்கம் போல அவர் பதில் சொல்லவில்லை. தனது நிழற்குடையை எடுத்துக் கொண்டு நடந்தார்.
இன்னொரு நாள் அவர் ஒரு பள்ளிமாணவனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது “ E6 மூவ் பண்ணு“ என ஒரு குரல் கேட்டது. சுலோச்சனா நின்றிருந்தாள். அந்தப் பையன் அவளை முறைத்தபடி தான் விரும்பிய நகர்வை மட்டுமே செய்தான்.
அடுத்தச் சில நகர்வுகளில் அவன் தோற்றுவிட்டான்.
“ நான் சொன்னா கேட்க மாட்டியா“ என அந்த மாணவனிடம் கேட்டாள் சுலோச்சனா
“ எனக்கே விளையாடத் தெரியும்“ என்றபடி அவன் சாலையில் எச்சிலை துப்பினான்.
“ நீ ஒரு கேம் ஆடுறயா“ எனக்கேட்டார் செபாஸ்டியன்
“ நேரமில்லை. சும்மா உங்களைப் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்“ என்றாள்
“ நான் தோத்தா ஒரு டீ கிடைக்குமேனு பாத்தேன்“
“ நீங்க தோக்காமலே நாம டீ சாப்பிடலாம் “ என்றாள் சுலோச்சனா
அவர் நாற்காலியை விட்டு எழுந்து கொண்டார். பாத்திரக் கடையைத் தாண்டி நடக்கும் போது கேட்டார்
“ வேலையை விட்டு நின்னுட்டதா கேள்விப்பட்டேன்“
“ ஜெராக்ஸ் கடைக்குப் போயிருந்தீங்களா“
“ சும்மா விசாரிச்சேன். “
“ அது பெரிய கதை.. நீங்க என்ன தேடுனீங்களா“
“ அப்படிச் சொல்ல முடியாது. காணோமே என்ன ஆச்சுனு தெரியலையேனு விசாரிச்சேன். “
“ உங்க வீடு எங்க இருக்குனு எனக்குத் தெரியும். “
“ எப்படி. “
“ அப்படித் தான். கண்டுபிடிச்சிட்டேன். நீங்க பயப்படாதீங்க. நான் உங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டேன்“
“ நீ எப்போ வேணும்னாலும் வரலாம்“
“ அப்படின்னா.. உங்க் வீடு எங்கேயிருக்குனு முன்னாடியே சொல்லியிருப்பீங்களே.. “
“ அது வீட்ல உள்ளவங்களுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதுனு சொல்லலை“
“ நீங்க இங்க வர்றது செஸ் ஆடுறதுக்கு இல்லேனு எனக்குத் தெரியும் “
அவர் மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்
“ நான் உங்க கூடச் செஸ் ஆடி ஜெயிச்சத என் ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னேன். அவர் என்ன கேட்டார் தெரியுமா“
“ என் வயசு என்னனு தானே“
“ கரெக்ட்.. நான் 75 வயசுனு சொன்னேன்“.
“ அதுக்கு என்ன சொன்னாரு“
“ கிழவனை ஏமாத்தி காசு பிடுங்குனு சொன்னாரு“.
“ அது எப்படி முடியும்“
“ நான் கேட்டா நீங்க பணம் குடுக்காம போயிருவீங்களா… அப்படித் தான்“
“ நீ ஏன் கேட்கலை“
“ உங்களை ஏமாத்த விரும்பலை“
“ அதான் ஏன். “
“ உங்க கூட விளையாடும் போது எங்க அப்பா கூட விளையாடுறது மாதிரி இருந்துச்சி“
“ உங்க அப்பா செஸ் ஆடுவாரா“
“ நல்லா ஆடுவார். அவரை ஜெயிக்கவே முடியாது. எங்கம்மாவுக்கு நாங்க செஸ் ஆடுறது பிடிக்காது.. அது திட்டிகிட்டே இருக்கும். எங்கப்பா எலக்ட்ரீசன். குடி ஓவர். அவர் நிறையக் கடன் வாங்கியிருந்தார். அதைக் கட்ட முடியல. அதனாலே நிறைய நாள் வேலைக்குப் போகாமல் வீட்லயே கிடப்பார். அப்போ தனியா செஸ் ஆடிட்டு இருப்பார். அம்மா வேற வேலைக்குப் போகச் சொல்லிப் பாத்தது அப்பா கேட்லை. ஒரு நாள் அம்மா ரொம்பக் கேவலமா பேசிருச்சி. அன்னைக்கு நைட் அப்பா வீட்டுக்குள்ளே தூக்கு போட்டு செத்துப் போயிட்டார். நாங்க எல்லாம் அவர் செத்துப் போனது தெரியாம இன்னொரு ரூம்ல தூங்கிட்டு இருந்தோம். அத்தோட நான் செஸ் ஆடுறதை விட்டுட்டேன். “
“ இப்போ ஏன் என்னோட செஸ் ஆடுனே“
“ நானும் இப்போ நிறையக் கடன்ல இருக்கேன். ஜெராக்ஸ் கடைல இருந்து நிறையப் பணத்தை எடுத்துட்டேன். “
“ அதான் வேலை போயிருச்சா“
“ சேலையூர்ல வேலை போனதுக்கும் அதான் காரணம். கொஞ்ச நாள் நான் திருந்தியிருந்தேன். இப்போ முடியலை. கடைப் பணத்துல ஒரு லட்சத்துக்கு மேல எடுத்துச் செலவு பண்ணிட்டேன். அதைத் திரும்பக் கட்ட முடியலை. வேலை விட்டு நின்னுட்டேன். “
“ இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றே“
“ செஸ் ஆடுறவங்க கிட்ட ரகசியத்தைச் சொன்ன அது வெளியே போகாது“
இப்போது அவளைக் காண வேடிக்கை பெண்ணாக இல்லை. விநோதமாகத் தோன்றினாள். சதுரங்க நகர்வை விட அவளது செயலின் நகர்வு தீர்மானிக்க முடியாததாக இருந்தது.
எப்போதும் போல அவளாக டீ ஆர்டர் செய்தாள். இருவரும் டீ குடித்து முடிக்கும் வரை பேசிக் கொள்ளவில்லை.
அவர் தனது விளையாடும் இடத்திற்கு வந்த போது அவளிடம் கேட்டார்
“ இப்போ உனக்கு ஏதாவது பணம் வேணுமா“
“ அடுத்தத் தடவை நான் உங்களை ஜெயிக்கிறதுக்கு இப்போ நூறு ரூபா அட்வான்ஸா குடுப்பீங்களா“
அவர் தனது பர்ஸை திறந்து நூறு ரூபாய் தாளை வெளியே எடுத்து நீட்டினார்
அவள் அதை வாங்கிக் கொண்டு “ கணக்குல வச்சிக்கோங்க சார். விளையாடி கழிச்சிருவேன்“ என்றாள்
அவர் சிரித்துக் கொண்டார். வெயிலேறிய சாலையில் அவள் சதுரங்க ராணி நடந்து போவது போலக் கம்பீரமாகச் சாலையைக் கடந்து போய்க் கொண்டிருந்தாள்.
•••
.