மைக்கேல் சிமினோ இயக்கிய ஹெவன்ஸ் கேட் 1980ல் வெளியான அமெரிக்கத் திரைப்படம். பிரமிப்பூட்டும் காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படம் வெளியான காலத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இன்று ஹாலிவுட்டின் நிகரற்ற திரைக்காவியங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

ஆஸ்கார் விருது வென்ற ‘தி டீர் ஹண்டர்’ படத்திற்குப் பிறகு மைக்கேல் சிமினோ இயக்கிய படம். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வயோமிங்கில் உள்ள ஜான்சன் கவுண்டியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
வெஸ்டர்ன் திரைப்படங்களின் முன்னோடி இயக்குநர் ஜான் போர்ட். அவர் திரையில் உருவாக்கிக் காட்டிய நிலக்காட்சிகள் ஹாலிவுட் சினிமாவிற்குப் புதிய அழகியலை உருவாக்கியது. அதன் அடுத்தக் கட்ட சாதனையாக செர்ஜியோ லியோனைக் குறிப்பிடலாம். அவர் பெயரற்ற நாயகன் வழியாக புதிய திரைமொழியினை உருவாக்கினார். அந்த வரிசையில் இடம்பெறக்கூடியது இத்திரைப்படம்.
மரபான வெஸ்டர்ன் திரைப்படங்களின் பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் இப்படம் கவனம் கொள்ளும் மையம் வேறு. சித்தரிக்கும் உலகம் வேறு. ஏழைகளை ஒடுக்கும் பணக்காரர்களின் கதை தான் என்றாலும் இரண்டு நண்பர்கள் மோதிக் கொள்ளும் புள்ளியாக அதனை சிமினோ மாற்றுகிறார். எதிரெதிர் திசையில் அவர்கள் பயணிக்கிறார்கள். தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள்.

ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து நிலத்தையும் கால்நடைகளையும் தன்வசப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என குடியேறிகள் மீது பணக்கார நிலஉரிமையாளர்களுக்கு கோபம் ஏற்படுகிறது. குடியேற்றத்தை தடுப்பதுடன் இது போன்ற நிகழ்வுகளை நிரந்தரமாக தடுப்பதற்காகவும் அவர்கள் வன்கொலையை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள். இதற்காக ஒரு குற்றக்கும்பல் உருவாக்கபடுகிறது. அவர்கள் தாக்குதலை நிகழ்த்துகிறார்கள்.
படத்தின் துவக்க காட்சியில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. .1870-ல் ஹார்வர்ட் கல்லூரியில் பட்டம் பெறும் இளைஞர்களின் அணிவகுப்பு நடக்கிறது. அதைத் தொடர்ந்து சிறப்புரை. பட்டமளிக்கும் நிகழ்வு. வளாக கொண்டாட்டங்கள் எனப் படம் விரிவாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இவ்வளவு சிறப்பாக, உற்சாகமாக இன்று வரை எந்தத் திரைப்படத்திலும் பட்டமளிப்பு விழா இடம்பெற்றதில்லை.
முன்னோக்கிச் செல்லுங்கள், இதயங்களே, துணிவுடனும் உண்மையுடனும். என துவக்க காட்சியில் ஒருவசனம் இடம்பெற்றுள்ளது. அது தான் படத்தின் திறவுகோல்.

கனவுகளுடன் வாழ்க்கையைத் துவங்கும் இளைஞர்களைக் காணுகிறோம். அவர்களின் கொண்டாட்டம். மிதமிஞ்சிய உற்சாகம் பின்வரக்கூடிய கதைக்கு எழுதப்பட்ட முன்குறிப்பாகும். இந்தக் கனவுகளுக்கும் யதார்த்த வாழ்க்கைக்குமான இடைவெளியை, அதைச் சந்தித்து மீளும் மனிதர்களின் வாழ்க்கை போக்கினை படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது
இன்றிருப்பது போலத் தொழில்நுட்ப வசதிகள். கிராபிக் காட்சிகள் எதுவுமின்றி, நூற்றுக்கணக்கான துணை நடிகர்களைக் கொண்டு ஒவ்வொரு காட்சியினையும் சிமினோ எடுத்திருக்கிறார்.
படப்பிடிப்புத் தளத்தில் விலங்குகளை மோசமாக நடத்தினார் எனப் படத்தைத் தடை செய்யும்படி விலங்குகள் நல வாரியம் குரல் எழுப்பியது. அதிகமான பொருட்செலவு மற்றும் பொருத்தமற்ற நடிகர்கள் எனக் கடுமையான விமர்சனத்தைப் படம் சந்தித்தது. இன்று நாம் காணும் அதன் மூன்றரை மணி நேரக் காட்சிகள் இந்த விமர்சனங்களைத் தாண்டிப் பிரமிக்க வைக்கின்றன. தனது கதை சொல்லலில் சிமினோ கொண்டிருந்த நம்பிக்கை. மற்றும் ஆழ்ந்த கலைவெளிப்பாடு இதனை நிகரற்ற படமாக்கியிருக்கிறது.
215 ஐரோப்பிய குடியேறிகளைக் கொலை செய்யத் திட்டமிடுவதைத் தடுக்க ஃபெடரல் மார்ஷலான ஜிம் பல்வேறுவிதங்களில் முயலுகிறார். இடையில் அவருக்கு காதல் ஏற்படுகிறது. கதாபாத்திரங்களின் மனநிலையைக் காட்சிப்படுத்துவதில் தான் சிமினோ அதிகம் கவனம் கொண்டிருக்கிறார். ஆகவே திரைக்கதை நிதானமாக வளர்ந்து உச்சத்தை அடைகிறது. அன்றைய ஹாலிவுட் பார்வையாளர்களின் பரபரப்பிற்குச் சிமினோ இடம் கொடுக்கவில்லை. திட்டமிட்டு இந்தப் படத்தைத் தோற்கடித்தார்கள் என்கிறார் திரைவிமர்சகர் கிரிஸ் எட்வர்ட்

வில்மோஸ் சிக்மாண்டின் ஒளிப்பதிவு அபாரமானது. குறிப்பாகக் காஸ்பரின் ரயில் நிலையக் காட்சிகள்; அலைபாயும் பொன்னிறப் புல்வெளிகள். பனிச்சறுக்கு மைதானக் காட்சி; மற்றும் கூலிப்படையால் குடியேறிகள் மீது நடத்தப்படும் இறுதித் தாக்குதல் மிக நேர்த்தியாகப் படமாக்கபட்டுள்ளன. ரெம்பிராண்டின் ஓவியம் போன்ற ஒளிரும் காட்சிகளாலும், சீரான லயத்துடன் இயங்கும் கேமரா இயக்கத்தாலும் படம் உயிரூட்டப்படுகிறது. டேவிட் மான்ஸ்ஃபீல்டின் சிறப்பான பின்னணி இசை பாராட்டிற்குரியது
புதிய கனவுகளுடன் வாழ்க்கையை துவங்கிய ஒருவரின் மீது காலமும் அனுபவங்களும் ஏற்படுத்தும் விளைவுகளை படம் உண்மையாகச் சித்தரிக்கிறது. அதுவே இப்படத்தைக் கொண்டாடச் செய்கிறது