எழுத்துலகின் சாமுராய்

இரண்டாம் உலகயுத்தம் ஜப்பானுக்கு ஏற்படுத்திய அடி மிகவும் வலிமையானது, அதன் பாதிப்பில் இருந்து இன்றும் அவர்களால் முழுமையாக விடுபடமுடியவில்லை, ஜப்பானிய இலக்கியத்திலும் யுத்தகாலத்திற்குப் பிந்தைய எழுத்தில் நிறைய மாற்றங்கள் உருவாகின, குறிப்பாக மிஷிமாவும் கவாபதாவும் கோபே அபேயும், புமிகோவும் முக்கிய நவீன எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள்,

இவர்களில் யாசுனாரி கவாபதா நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, யுகியோ மிஷிமா (Yukio Mishima) இரண்டு முறை நோபல் பரிசிற்கு சிபாரிசு செய்யப்பட்டவர், அரசியல் நிலைப்பாடு காரணமாகவே அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்,

மன்னர் மீதான தனது விசுவாசத்தை நிரூபிப்பதற்காக சாமுராய்களின் தற்கொலை முறையான செபுகுவை செயல்படுத்தி தன் அடிவயிற்றைத் தானே கிழித்துக் கொண்டு உயிர்விட்டவர் மிஷிமா,

மிஷிமாவின் வாழ்க்கை குறித்து பால் ஷெரடர் இயக்கிய Mishima: A Life in Four Chapters திரைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்னதாக பார்த்தேன்,

பால் ஷெரடர். டாக்சி டிரைவர் படத்தின் திரைக்கதை ஆசிரியர், மார்டின் ஸ்கார்சிசியோடு இணைந்து பணியாற்றிய முக்கியக் கலைஞர், மிஷிமா பற்றிய இந்த படம் கூட லூகாஸ், மார்டின் ஸ்கார்சிசி இணைந்தே தயாரித்திருக்கிறார்கள்

மிஷிமாவின் நாவல் போன்று Beauty, Art, Action, and Harmony of Pen and Sword. என நான்கு பகுதியாக உருவாக்கபட்டுள்ள இந்த  படம் 1970ல் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மிஷிமா ராணுவ உடையில் டோக்கியோ ராணுவமுகாமிற்கு சென்று அங்கே தாக்குதலில் ஈடுபட்டதை முதன்மைப்படுத்தி முன்பின்னாக அவரது பால்யநாட்கள், இளமை பருவம், ஒருபாலுறவு நாட்டம், எழுத்தில் புகழ்பெற்ற நாட்கள் ஆகியவற்றை விவரிக்கிறது,

மிஷிமா மரணத்தை எதிர்கொண்ட துணிச்சல் புதிரானது, ஏன் இப்படி தன்னைத் தானே அழித்துக் கொண்டார் என்பது குறித்து இன்னும் ஆராய்ந்து கொண்டேதானிருக்கிறார்கள்

சாவதற்கு முன்பாக death poem எனப்படும் மரணக்கவிதை ஒன்றினை எழுதி வாசித்துவிட்டே மிஷிமா தற்கொலை முயற்சியை துவங்கியிருக்கிறார், மிஷிமாவின் எழுத்துகளில் உக்கிரமாக வெளிப்படுவது விரக்தியின் உச்சநிலை, அதை அவர் குடியிலும் காமத்திலும் கலையிலும் தீர்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார், ஆனால் அவரது மனம் சாந்தமடையவேயில்லை, தீராத தவிப்பும் தனிமையும் அவரை ஆழமான மனச்சோர்விற்கு தள்ளியிருக்கின்றன,

அவரது ஒரே ஆறுதல் எழுதுவது மட்டுமே, ஒய்வேயில்லாமல் எழுதியிருக்கிறார்,

மிஷிமா ஒரு பாலுறவு நாட்டமுள்ளவர், அதன் காரணமாக பலராலும் விமர்சிக்கபட்ட போதும் அவர் தனது பாலுறவுநாட்டம் குறித்து எவ்வித குற்றவுணர்வும் கொண்டதில்லை, ஒரு பாலுறவு குறித்து தனது படைப்புகளின் தீவிரமாக எழுதியிருக்கிறார், இவரது Confessions of a Mask.  Forbidden Colors  போன்றவை ஒருபாலுறவு எழுத்து வகைமையை சார்ந்தவைகளே,

மரணம், காமம், விரக்தி, தனித்திருத்தலின் துயரம் இவையே அவரது எழுத்துகளில் திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றன, மிஷிமாவை வாசிக்கின்ற போது காப்காவின் சாயல் இருப்பது போல உணர முடிகிறது, ஆனால் காப்காவிடம் காணப்படுவது போன்ற இருண்ட மனநிலையை இவரிடம் காணமுடிவதில்லை,

மிஷிமாவிடம் தேசியபெருமிதம், சாகசம் செய்வதில் ஆர்வம், மரபின் தொடர்ச்சியை நிறுவ வேண்டும் என்ற வேட்கை இவையே அதிகமாகக் காணப்படுகின்றன, ஆனால் காப்காவிடம் இது போன்ற தன்மைகளை நாம் காணமுடியாது,

வீட்டோருடன் காப்கா நடந்து கொண்ட முறை, அவரது முறிந்த காதல், மற்றும் நண்பர்களுடன் உள்ள கசப்பான உறவு அப்படியே மிஷிமா விஷயத்திலும் ஒன்று போலவே காணப்படுகிறது

காப்கா தனது எழுத்துகளை தீ வைத்து எரித்துவிடச் சொன்னார், மிஷிமாவோ சாவதற்கு முந்திய மணித்துளி வரை ஒயாமல் எழுதிக் கொண்டேயிருந்தவர், இருவருக்குள்ளும் பொதுவாக இருப்பது எதிலும் நிலைகொள்ளாத மனதேயாகும்.

கபூகி , நோ வகை நாடகம், சினிமா,  நாவல், சிறுகதை, குறுநாவல், நடிப்பு,  இதழியல் கட்டுரைகள் என்று  பன்முக ஆளுமை கொண்ட இவர் நாற்பத்தைந்து வருட வாழ்க்கைக்குள் 34 நாவல்கள் 50 நாடகங்கள்,25க்கும் மேற்பட்ட சிறுகதை தொகுதிகள், 35 கட்டுரை தொகுதிகளை எழுதியிருக்கிறார், மிஷிமாவின் எழுத்து ஜப்பானிய இலக்கிய உலகில் தனிவகையாக கருதப்படுகிறது

பெற்றோருடன் சேர்ந்து வசிக்காமல் பாட்டியால் வளர்க்கபட்ட மிஷிமா சிறுவயதிலே தீவிரமான தனிமையால் பீடிக்கபட்டார், நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடந்த பாட்டியின் அருகாமையில் இருந்த ஒவ்வொரு நாளும் தான் மரணத்தின்  வாசனையை நுகர்ந்ததாக நினைவு கூறும் மிஷிமா, தனது பாட்டி தன்வயதை ஒத்த மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட தன்னை அனுமதிக்கவேயில்லை, அதைவிடவும் சூரிய வெளிச்சமே வராத இருட்டறையில் தன்னை வளர்த்த காரணத்தால் தனக்கு சூரியனையே பிடிக்காமல் போய்விட்டது எனறு வருத்தப்பட்டுள்ளார் மிஷிமா,

பள்ளி வயதில் கதைகள் எழுத துவங்கிய மிஷிமாவின் முதற்கதை Forest in Full Bloom  அவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது,

ராணுவத்தில் சேர்ந்து போர்களத்திற்குப் போய் சண்டை போட வேண்டும் என்று ஆசைப்பட்ட மிஷிமா இதற்காக ராணுவப் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்தார், மருத்துவத் தேர்வின் போது அவருக்கு காசநோய் இருக்கிறது என்று மருத்துவர் கணித்த காரணத்தால் ராணுவப் பணியில் சேர முடியாமல் போனது,

இந்த ஏமாற்றம் அவரை வாழ்நாள் முழுவதும் பின்தொடர்ந்தது,  எப்படியாவது தான் போர்களத்திற்குச் சென்று சண்டையிட்டு மடிய வேண்டும் என்று தீவிரம் கொண்ட மிஷிமா, இதற்காக தனிப்பயிற்சி எடுத்துக் கொண்டதும், போர்கலைப் பயின்ற மாணவர்களை ஒன்று திரட்டி மன்னருக்கான பாதுகாப்பு படை ஒன்றினை உருவாக்கி தானே அதன் தளபதியாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்

அந்த படையினர் நான்கு பேருடன் இணைந்து தான் அவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார், மன்னருக்கு ஏன் விசுவாசமாக  இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட விளக்கவுரை ஒன்றினை எழுதியிருக்கிறார், அதில் மன்னர் என்பவர் ஜப்பானிய மரபின் அடையாளம், அவர் மீது தான் கொண்டுள்ளது மாறாத நம்பிக்கை, அதை  மெய்ப்பிக்கவே தான் சாவதற்கு தயாராகியிருக்கிறேன் என்கிறார்,

இயற்கையை விவரிப்பதன் வழியே வாழ்க்கைப் புரிந்து கொள்ள வைக்கும் ஜென் கவிதைகளைப் போல இயற்கையின் ஊடாக மிஷிமாவின் வாழ்க்கை காட்சிகளை அரங்கேற்றுகிறார் பால் ஷெரடர்,

மிஷிமாவின் ஆளுமை படத்தில் முழுமையாக வெளிப்படுத்தபடுகிறது, குறிப்பாக பாட்டியோடு வளர்ந்த அவரது பால்யநினைவுகள், பள்ளியில் ஏற்பட்ட அனுபவங்கள் நிழலும் ஒளியும் கலந்த கவிதையாக உருவெடுத்துள்ளது, எப்போதும் ஒரு சவாலைச் சந்திக்க ஆசைப்பட்ட சிறுவனாகவே மிஷிமா இருந்திருக்கிறார்,

பிளாஷ்பேக் காட்சிகள் கறுப்பு வெள்ளையிலும் The Temple of the Golden Pavilion பகுதி பச்சை மற்றும் பொன்னிறத்திலும், கியோகோ வீடு பகுதி பளுப்பு மற்றும் இளநீல நிறங்களாலும், Runaway Horses பகுதி ஆரஞ்சு வண்ணத்திலும் சமகால காட்சிகள் அடர்வண்ணங்களிலும் உருவாக்கபட்டுள்ளது இப்படத்தின் தனிச்சிறப்பாகும், இதற்கான இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பு விருது பெற்றிருக்கிறார்

மிஷிமா ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்துமணி நேரம் எழுதக்கூடியவர், பெரும்பான்மையான நாட்கள் இரவு முழுவதும் எழுதிக் கொணடிருப்பது அவரது வழக்கம், அதனால் தான் அவரால் நூற்றுக்கும் மேலான புத்தகங்களை எழுத முடிந்திருக்கிறது,

எழுத்தாளன் பந்தயக்குதிரையைப் போல இருக்க வேண்டும், ஒடிக்கொண்டிருக்கும் வரை தான் அவனுக்கு மரியாதை, அவன் தனது சக்தியை முழுமையாக வெளிப்படுத்தும் தருணமே அவனது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது என்கிறார் மிஷிமா

மிஷிமா தற்கொலை செய்து கொள்வதற்கு புறப்பட்ட நாளில் கூட தனது நாவலை முடித்து பதிப்பகத்தில் வெளியிட கொடுத்துவிட்டே சாவை எதிர்கொண்டிருக்கிறார்,

1966ல் யுகியோ மிஷிமா இயக்கிய குறும்படம் ‘Rites of Love and Math’. பல ஆண்டுகாலம் இந்தப் படம் தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது அது வெளியாகி இருக்கிறது. தான் கண்டுபிடித்த ஒரு பார்முலாவைக் கொண்டு உலகை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்று நம்பும் ஒரு விஞ்ஞானி அதைத் தனது காதலியின் முதுகில் பச்சை குத்துவதன் வழியே நிரந்தரமாகப் பதிவு செய்துவிடுகிறார். காதலையும் கணித சூத்திரத்தையும் பற்றிய இப்படம் 26 நிமிடங்கள் ஓடக்கூடியது. இரண்டே நாட்களில் மிஷிமா இதைப் படமாக்கியிருக்கிறார்.

மிஷிமாவின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது The Sailor Who Fell from Grace with the Sea , இது திரைப்படமாகவும் வெளியாகி உள்ளது.

இன்று ஜப்பானில் பிரபலமாக உள்ள எழுத்தாளர் ஹருகி முராகமியை யுகியோ மிஷிமாவின் வாரிசு என்றே இலக்கிய  விமர்சகர்கள் கூறுகிறார்கள், காரணம் முராகமி எழுத்திலும் விளையாட்டு, ஜாஸ் இசை, காமம் மற்றும் தனிமையே பிரதான கருப்பொருளாகப் பேசப்படுகிறது

மிஷிமாவின் சிறுகதைகளில் சில தமிழில் வெளியாகி உள்ளன, சி.மோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்

Yukio Mishima Interview

https://youtu.be/DPAZQ6mhRcU

***

0Shares
0