திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறார் இலக்கிய முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடர்மழையின் காரணமாக நிகழ்ச்சியை நடத்த முடியாதோ எனத் தோணியது, ஆனால் சனி காலை முதல் ஞாயிறு மாலை வரை மழையில்லை.
முந்திய நாள் பெய்த மழையின் குளிர்ச்சியில் திருவண்ணாமலை குளிர்ந்து ஊட்டி போலாகியிருந்தது. காணுமிடமெல்லாம் தண்ணீர், குளிர்ச்சி, கோடையில் இவ்வளவு மழை என்பது அதிர்ஷடமே.
வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து கிளம்பும் போதே நல்ல மழை. சாலை தெரியவில்லை. காரில் திருவண்ணாமலைக்குப் போய்ச் சேர ஐந்து மணி நேரமானது. எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியின் விருந்தினர் விடுதியில் தங்கிக் கொண்டேன்
வேடியப்பனும் காலையிலே வந்து சேர்ந்திருந்தார், பவா, ஷைலஜா, இருவரும் ஜெயஸ்ரீ வீட்டில் இருந்தார்கள், முழுவதும் கல்லால் கட்டப்பட்ட அந்த வீடு அற்புதமானது, விருந்தினர்களை உபசரிப்பதில் பவா ஷைலஜாவிற்கு நிகர் யாரும் கிடையாது.
இருபத்தைந்து வருஷங்களுக்கு மேலாகத் திருவண்ணாமலைக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறேன், நானும் கோணங்கியும் பவா வீட்டிலே வாரக்கணக்கில் தங்கியிருக்கிறோம், பவாவின் அப்பா அம்மாவின் ப்ரியமும் அன்பும் போற்றுதலுக்குரியது, அது போலவே தான் பவா, ஷைலஜா, ஜெயஸ்ரீ உத்ரா, வம்சி மானசி என்ற அவர்களின் குடும்பம் நண்பர்களுக்காகச் செய்யும் உபசரிப்பும் அன்பும் நிகரற்றது.
திருவண்ணாமலையில் பவா எத்தனையோ இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார், நானே பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன் அதனால் இந்த முகாம் அவருக்குப் பெரிய விஷயமாகவேயில்லை, சொன்னதைப் போலவே ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார், கல்யாண வீட்டுச் சாப்பாடு போல விதவிதமான உணவு வகைகள், குதித்துக் குளிக்கக் கிணறு, மாந்தோட்டத்தினுள் வட்டமாக அமர்ந்து பேச ஏற்பாடு, கேப்பை அடை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள். சுவையான தேநீர்,
பவாவின் தோட்டத்தில் முழுமையாக இயற்கை விவசாயம் நடைபெறுகிறது, தோட்டத்தில் அழகான சிறிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார், நிறைய மாமரங்கள், பூச்செடிகள். மிக அமைதியான சூழல். அங்கிருந்து பார்த்தால் கோவில் கோபுரங்களும் மலையும் தெரிகின்றன.
ஜெயஸ்ரீ வீட்டு மாடியிலே திறந்த வெளி திரை அரங்கு, இதற்காக ஒரு திரையை வீடு கட்டும் போதே மாடியில் அமைத்திருந்தார்கள், இப்படி ஒரு வீடு தமிழ்நாட்டில் எங்கும் கிடையாது,
நண்பர்கள் வெள்ளி மாலையே வரத்துவங்கியிருந்தார்கள், முகாமிற்கு வருபவர்களுக்கு வழிகாட்டும் விதமாக ஒரு அறிவிப்பு பலகையைப் பிரதான சாலையில் வைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
மழை பெய்து குளிர்ந்து போயிருந்த சாலையில் பேசியபடியே நடக்கத் துவங்கினோம், இலக்கியம், இணையம், அரசியல் சினிமா, மொழிபெயர்ப்பு, எனப் பேச்சு நீண்டு கொண்டே போனது, திரும்பும் போது வழி தெரியாத இருட்டு. பூச்சிகளின் சப்தம். வெளிச்சத்தை நோக்கிப் பறக்கும் ஈசல்கள்
சூடான பிளாக் காபியோடு அமர்ந்து முகாமில் யார் எந்த வேலையைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள் என்பது பற்றி விவாதித்தோம், தோழர் சந்துரு, அமலதாஸ், கார்த்தி, பீனிக்ஸ், எனப் பலரும் இணைந்து வேலையைப் பகிர்ந்து கொண்டார்கள், சமையற்கலைஞர்கள், உதவியாளர்கள் அடுத்த நாளுக்கான ஆயுத்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள்
இரவு அறைக்குச் சென்ற போது பத்தாகியிருந்தது, தாமதமாக வந்து சேர்ந்தவர்களுக்குப் போனில் வழி சொல்லிக் கொண்டிருந்தேன், அடுத்த நாள் காலை அமர்வில் ஈசாப் கதைகள் பற்றிப் பேச வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு முறை அக்கதைகளை வாசிக்கத் துவங்கினேன்,
வெளியே மழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தது ஈசாப் இக்கதைகளைக் குழந்தைகளுக்காக எழுதவில்லை, மாறாகப் பேச்சாளர்களுக்குப் பயன்படுவதற்காகவே எழுதினார் என்ற வரி வியப்பூட்டியது.
காகம் நரிக் கதை, நகரத்து எலி கதை, தண்ணீர் குடிக்கக் கல்லை போட்ட காகம், நாயின் நிழல், கொக்கும் நரியும், என நாம் அறிந்துள்ள பல கதைகள் ஈசாப் சொன்னவை, அவை எப்படி எப்போது கிரேக்கத்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்தன, அதன் மாறுபட்ட கதைவடிவங்களை எப்படிக் கண்டறிந்து ஆராய்ந்தார்கள், பிராப் ( Vladimir Propp ) எப்படி இக்கதைகளின் வடிவம் குறித்து ஆய்வு செய்தார் (Morphology of the Folktale )என்பதை வாசித்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.
தமிழில் ஈசாப் கதையை யார் முதலில் மொழிபாக்கம் செய்தது, இதுவரை எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன என்பது பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இரவு இரண்டு மணிக்கு உறங்கச்சென்றேன்
உணவும் தங்குமிடமும் ஜெயஸ்ரீவீட்டில், முகாம் நடப்பது அதை ஒட்டிய தோட்டத்தில், சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஜெயஸ்ரீவீட்டிற்குப் போன போது முன்னதாகவே பலரும் வந்து காலை உணவு சாப்பிட்டு முடித்துக் கூட்டம் கேட்க தயாராகியிருந்தார்கள்,
நான் தான் தாமதம் என்பது போல அவசரமாகக் காலை உணவை முடித்துக் கொண்டு சென்றேன், ஐம்பது பேருக்கும் மேலாக அமர்ந்திருந்தார்கள், கடலூர் சீனு, செல்வா, விழியன், விஷ்ணுபுரம் சரவணன், சங்கீதா ஸ்ரீராம், ஐஐடி சசி, ஜி. குப்புசாமி, சித்ரா, என அறிந்த முகங்கள். உடல் என்ற நாடகத்திற்கான காலண்டிதழின் ஆசிரியர் அரிய நாயகம் தனது நண்பருடன் பிரான்சிலிருந்து வந்து கலந்து கொண்டிருந்தார், லண்டனில் இருந்து வந்திருந்த காயத்ரி தனது குழந்தைகளுடன் இரண்டாம் நாள் அமர்வில் கலந்து கொண்டார்
ஐம்பது முதல் அறுபது பேரை அனுமதிக்கலாம் என்பது தான் திட்டம், ஆரம்பத்தில் நூறு பேர் வரை அழைக்கலாம் என நினைத்திருந்தேன், சிலர் ஒரு நாள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றார்கள், அவர்களை அனுமதிக்கவில்லை, முழுமையாக இரண்டு நாட்கள் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் மட்டுமே அனுமதிக்ககப்பட்டார்கள்,
முதல் அமர்வு எனது பால்யத்தில் கேட்ட கதைகளில் துவங்கி ஈசாப் கதைகளாக விரிவடைந்தது இடைவெட்டாக, முல்லா கதைகள், தெனாலி ராமன் போன்ற கதைகள் எப்படி உருவாகின, விலங்குகள் கதைகளை ஏன் குழந்தைகள் விரும்பிக் கேட்கிறார்கள், பேய் பூதம் பற்றிய கதைகள் எப்படி வந்தன, பல்வேறு மாறுபட்ட கதை சொல்லும் முறைகள், தேவதை கதைகள், முட்டாள் கதைகள், திருடர்கள் பற்றிய கதைகள் எனக் கதைகளின் கிளைவழிகள் பற்றிப் பேசினேன், கால் முளைத்த கதைகள் என்ற தலைப்பில் நான் தொகுத்த குழந்தைகள் புத்தகம் பற்றியும் இயற்கை குறித்த சிறார் கேள்விகள், அதற்கான கதைகள் பற்றியும் விவரித்துச் சொன்னேன் இவை குறித்த விவாதம் நடைபெற்றது,
தேநீர் இடைவேளைக்குப் பிறகு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்களைக் குறித்த அறிமுகம் நடைபெற்றது, விழியன், விஷ்ணுபுரம் சரவணன் இருவரும் தாங்கள் குழந்தைகளுக்காகக் கதை எழுதுகிற அனுபவம் குறித்துப் பேசினார்கள், பரமார்த்த குரு கதைகள் எழுதப்பட்ட பின்புலம், அதன் உள்ளார்ந்த கேலி , விமர்சனம், கிறிஸ்துவப் பார்வைகள் குறித்தும் பேசப்பட்டது. குழந்தைகளுக்கான பாடல்கள் ஏன் புதிதாக எழுதப்படுவதில்லை என்பது குறித்துப் பேசப்பட்டது. ஆங்கிலத்தில் பாடப்படும் குழந்தைகளின் பாடல்களில் உள்ள அரசியல் தன்மை பற்றியும் பேசப்பட்டது
வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா, பெரியசாமி தூரன்,குழ,.கதிரேசன் போன்றோர் சிறார் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு பற்றியும் பகிர்ந்து கொள்ளப்பட்டது,
மதிய அமர்வில் மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி குட்டி இளவரசன் நூலை அறிமுகம் செய்து பேசினார். அதை ஒட்டி நான் ஆலீஸின் அற்புத உலகம் மற்றும் ஸ்விப்ட்டின் பேட்டில் ஆ புக்ஸ் மற்றும் மால்பா தாஹனின் எண்ணும் மனிதன், கலிவரின் யாத்திரை, டாம் ஷாயர் பற்றிப் பேசினேன், குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் நடைபெற்றது. சத்யஜித்ரேயின் பெலுடா கதைகள், மற்றும் ரஷ்ய கதைகளின் மொழிபெயர்ப்பு பற்றிப் பேசப்பட்டது மாங்கா மற்றும் ஜப்பானின் காமிக்ஸ் பற்றிய அறிமுகமும் தரப்பட்டது.
குழந்தைகள் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதில் விருப்பம் காட்டுகிறார்கள், அவர்களை எப்படிப் புத்தகம் படிக்க வைப்பது என்பது குறித்துப் பலரும் கருத்து தெரிவிவத்தார்கள்
மாலை அமர்வில் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள் குறித்தும் இயக்குனர் மியாசகி குறித்தும் அறிமுகம் நடைபெற்றது, பூச்சிகள் வண்டுகள் போன்ற நுண்ணுயிர்கள் குறித்த Minuscule – The Private Life of Insects – French-made series Hélène Giraud Thomas Szabo படத்தின் சில பகுதிகள் திரையிடப்பட்டன, அதன்பிறகு Naussaica: Valley of the Wind படம் திரையிடப்பட்டது
இரண்டாம் நாளின் காலையில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, அரபு நாடுகள், ரஷ்யா, ஸ்வீடன் நாடுகளில் குழந்தைகளுக்குச் சொல்லப்படும் சில கதைகளைப் பகிர்ந்து கொண்டேன்,
அதைத் தொடர்ந்து நண்பர் யுவகிருஷ்ணா தமிழ் காமிக்ஸ் பற்றிய சிறப்பான ஒரு அறிமுகத்தை வழங்கினார், நான் காமிக்ஸ் வரலாறு மற்றும் அதன் அரசியல், சமகாலத்தில் காமிக்ஸ் எப்படி உள்ளது, தடைசெய்யப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள், கிராபிக் நாவல்கள் பற்றிப் பேசினேன், தமிழில் மாங்கா மற்றும் கிராபிக் நாவல்கள் உருவாக வேண்டியதன் அவசியம் பற்றி விவாதித்தோம், ஹாரிபோட்டர், நார்னியா, லார்டு ஆப் தி ரிங்ஸ் பற்றியும் பேசப்பட்டது, இது குறித்து விரிவாகப் பேச நினைத்திருந்தேன், அந்த அமர்விற்கு நேரம் போதவில்லை.
நிகழவில் கலந்து கொள்வதற்காக நண்பர் சிவராமனும் யுவகிருஷ்ணாவும் சென்னையில் இருந்து பைக்கில் வந்ததாகச் சொன்னார்கள், மழைக்குள்ளாகப் பயணித்து வந்து முகாமில் கலந்து கொண்ட இருவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றி
கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகரும் ஆரண்ய காண்டம் ஜிகிர்தண்டா போன்ற படங்களில் நடித்தவருமான சோமசுந்தரம் ஒரு மணி நேரம் விளையாட்டின் வழியே சிறப்புப் பயிற்சிகள் தந்தார், இதன் மூலம் மனத்தடைகள் விலகும், கதை சொல்வதிலும், படிப்பதிலும் ஆர்வம் கொள்வார்கள் என்றார் சோமசுந்தரம். அவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றி
நண்பர் எஸ்கேபி கருணா நிகழ்விற்கு வந்து கலந்து கொண்டு இணையத்தைப் பயன்படுத்திச் சிறுவர்களுக்கான புத்தகங்கள், இலக்கியங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றிப் பேசினார்,
அத்துடன் யூடியூப்பில் சிறார்களுக்கான கதைகளைப் பதிவு செய்து வெளியிடுவது, குழந்தைகளுக்காகத் தமிழில் புதியதொரு இணையதளம் உருவாக்குவது போன்ற எனது புதிய திட்டங்களுக்குத் தனது உதவிகள் எப்போதும் உண்டு என அறிவித்தார்.
சிறுவர்களுக்காகக் கதை எழுதும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் முகாமில் விவாதிக்கபட்டது, குழந்தைகளுக்காக எழுதப்பட்ட புத்தகங்களை எப்படி வெளியிடுவது என்பது குறித்து நண்பர் பவா தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மதிய உணவிற்குப் பிறகே மழை வரப்போவது போல மேகம் இருள ஆரம்பித்திருந்தது இறுதி அமர்வில் குழந்தைகள் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் குறித்த சிறிய அறிமுகமும் பரிந்துரை பட்டியலையும் பகிர்ந்து கொண்டேன், மாலை தேநீருடன் கூட்டம் நிறைவு பெற்றது,
ஜெயஸ்ரீ வீட்டில் தேநீர் அருந்தி முடித்து நண்பர்கள் கிளம்ப ஆரம்பித்த போது மழை கொட்டத் துவங்கியது, இடிமின்னலுடன் இரவெல்லாம் கொட்டித் தீர்த்த மழையது, அறைக்கு வந்து சேர முடியாதபடி மழை சீறியது,
முகாம் சிறப்பாக முடிந்துவிட்டது என வேடியப்பனும் விடைபெற்று கிளம்பினார், விருந்தினர் விடுதிக்கு வந்து சேர்ந்து மழையை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தேன், இரவெல்லாம் மழை விடவில்லை மின்சாரம் போய் வந்தபடியே இருந்தது, அதற்குள் முடிந்துவிட்டதே என ஏக்கமாக இருந்தது
முகாம் சிறப்பாக நடக்கக் காரணமாகயிருந்த நண்பர்கள் வேடியப்பன், பவா, ஷைலஜா, ஜெயஸ்ரீ, உத்ரா, வம்சி, மானசி, தோழர் சந்துரு, பீனிக்ஸ், கார்த்திக், அமலதாஸ், சசி, உணவு தயாரித்தவர்கள், பரிமாறியவர்கள், உதவியாளர்கள் என அத்தனை பேருக்கும் மனம் நிரம்பிய நன்றி
இரண்டு நாட்களின் சந்தோஷம் மனதில் நிரம்பியிருக்கிறது, தொடர்ந்து எழுதவும் செயல்படவும் இந்த உத்வேகம் போதும்
மே 23ல் மதுரை பிரேம் நிவாஸ் ஹோட்டலில் எனது சிறுகதைகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது, அங்கே சந்திக்கலாம் நண்பர்களே
•••,