வதனம் இலக்கிய அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற சிறுகதை கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மதுரையில் அக்னி நட்சத்திர வெயில் கொதிக்கிறது. இதில் யார் கூட்டத்திற்கு வருவார்கள், தேதியை மாற்றிவிடுங்கள் எனச் சில நண்பர்கள் ஆலோசனைகள் சொன்னார்கள்.ஆனால் நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். மதுரையில் இலக்கியத்திற்கென எப்போதும் தனிவாசகர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என உறுதியாக நம்பினேன்
ஒரு மாத காலமாகவே நண்பர் ஆத்மார்த்தி மிகுந்த ஈடுபாட்டுடன் இதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.
திருவண்ணாமலை சிறார் இலக்கிய முகாமை முடித்துக் கொண்டு பயணம் செய்து மணிமுத்தாறு அருவிக்குக் குளிக்கச் சென்றேன், அங்கிருந்து கன்னியாகுமரி, திற்பரப்பு திருநெல்வேலி என மூன்று நாள் சுற்றிவிட்டு வெள்ளி மாலை மதுரை திரும்பினேன்.
தோழர் எஸ்.ஏ.பெருமாள் வீட்டில் தங்கியிருந்தேன். காலை ஏழு மணிக்கெல்லாம் வெளியூர் நண்பர்கள் மதுரை வந்து இறங்கி போனில் அழைக்கத் துவங்கியிருந்தார்கள்,
ஒன்பதரை மணிக்கு அரங்கிற்குச் சென்ற போது இருபது பேர்களே இருந்தார்கள், பத்தரை மணிக்குத் துவங்கலாம் என முடிவு செய்தோம். அடுத்த அரைமணி நேரத்திற்குள் அரங்கு நிரம்பியது. இருநூறு பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
நண்பர் கடங்கநேரியான் வரவேற்புரை நிகழ்த்தினார், தீபாநாகராணி அறிமுகவுரை வழங்கினார், தலைமையேற்று தோழர் எஸ்.ஏ-பெருமாள் புதுமைபித்தன் முதல் இன்றுவரை தொடரும் தமிழ் சிறுகதைகளின் பல்வேறு எழுத்துமுறைகளை, சாதனைகளைத் தொட்டுப் பேசினார். குறிப்பாக லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் வருகை, ரஷ்ய எழுத்தாளர்களின் பாதிப்பு என உலக இலக்கியத்தோடு ஒப்பிட்டு விரிவாக உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து காந்தி கிராமப் பல்கலைகழகத் தமிழ்துறை தலைவரான டாக்டர் பிச்சை காந்தியோடு பேசுவேன் சிறுகதை தொகுப்பை முன்வைத்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதி வந்திருந்தார். அதன் சில பகுதிகளை எடுத்துப் பேசினார்,
இன்றைய படைப்பாளிகள் காந்தியை எப்படிப் பார்க்கிறார்கள், எப்படி எழுத்தில் பதிவு செய்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அத்துடன் காந்தி குறித்துப் பல்வேறு சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன, அவற்றைத் தொகுத்து ஒரு தனி நூலாகக் கொண்டுவர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்
கவிஞர் மனுஷ்யபுத்திரன் எனது சிறுகதைகளின் மையம் எது, எதைப் புனைவாக மாற்றுகிறேன், அவமானமும் புறக்கணிப்பும் காத்திருப்பும் எப்படிக் கதைகளில் தொடர்ந்து இடம் பெறுகிறது, கதைமொழியும் கதை சொல்லும் முறையிலும் உள்ள தனித்துவங்கள் எவையென்பதைப் பற்றிப் பல்வேறு சிறுகதைகளை எடுத்துக்காட்டி நுட்பமாகப் பேசினார். குறிப்பாக இருபது வயதின் அவமானங்கள் கதையை அவர் அணுகிய விதமும் அதிலிருந்து எடுத்துச் சொன்ன விஷயங்களும் அபாரமாக இருந்தன.
அதைத் தொடர்ந்து நான் மூவரின் சார்பாக முன்வைக்கபட்ட கேள்விகள், அது தொடர்பான சில கூடுதல் செய்திகள், எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன்.
இரண்டாவது அமர்வினை நண்பர் அருணாசலம் ஒருங்கிணைப்புச் செய்தார். அதில் கவிஞர் கலாப்ரியா பதினெட்டாம் நூற்றாண்டின் மழை குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதி வந்திருந்தார். அதை வாசித்து எனது கதைகளின் கவித்துவ மொழி மற்றும் புனைவின் விசித்திரம் பற்றிச் சிறப்பாக எடுத்துக்காட்டி பேசினார்
தாவரங்களின் உரையாடல் சிறுகதை தொகுப்பை தான் நூறு முறைகளுக்கும் மேல் வாசித்து விட்டேன் எனத் தனது உரையைத் துவக்கிய எழுத்தாளர் சந்திரா அத்தொகுப்பின் முக்கியச் சிறுகதைகளைப் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தையும் அவை தனது எழுத்திற்கான உந்துதலாக இருந்ததையும் பற்றி உரையாற்றினார்
வெயிலைக் கொண்டு வாருங்கள் தொகுப்பு குறித்த தனது கட்டுரையை முருகேச பாண்டியன் அனுப்பியிருந்தார், அவருக்குப் பல்கலைகழகத்தில் முக்கியப் பணி இருந்த காரணத்தால் வர இயலவில்லை, ,இந்தக் கருத்தரங்கில் அளிக்கபட்ட அவரது கட்டுரை உள்ளிட்ட முக்கியக் கட்டுரைகள் எனது இணையதளத்தில் வெளியாக உள்ளன.
விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அரை மணி நேரத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டு மணிக்கு மூன்றாவது அமர்வு துவங்கியது. இதில் எழுத்தாளர் ஷாஜகான் மிகுந்த நகைச்சுவையோடு பேசத்துவங்கி எனது மழை மான் தொகுப்பின் முக்கியக் கதைகளை எடுத்துச் சொல்லி அரங்கினை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்
எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித்தின் உரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, சிறுகதைகளின் செவ்வியல் தன்மைகள் பற்றி அவர் எடுத்துச் சொன்ன விதம் அற்புதமானது, அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது தொகுப்பில் உள்ள கதைகளின் செவ்வியல்தன்மைகள் பற்றியும் விசித்திரம் எப்படிப் புனைவாக உருமாறுகிறது என்பதைக் குறித்தும் நுட்பாகப் பேசினார்
கவிஞர் யவனிகா ஸ்ரீராம் நகுலன் வீட்டில் யாருமில்லை குறுங்கதைகளின் தொகுப்பை முன்வைத்து காப்கா, கால்வினோ, போர்ஹே போன்றவர்களின் குறுங்கதைகளுடன் ஒப்பிட்டு எனது குறுங்கதைகளின் தனிச்சிறப்புகளை விளக்கிக் கூறினார்.
எனது சமீபத்திய கதைகளை முன்வைத்து ஆத்மார்த்திப் பேசியது நன்றாக இருந்தது, குறிப்பாக ஆத்மநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி சிறுகதையைப் பற்றிய அவரது வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விதம் உணர்ச்சிபூர்வமாக இருந்தது
ஜீவலட்சுமி நீரிலும் நடக்கலாம் தொகுப்பிலுள்ள பெண்களை முதன்மைபடுத்திய சிறுகதைகளை விரிவாக எடுத்துக் காட்டி அவளது வீடு சிறுகதையில் பெண்ணின் அகவுலகம் எப்படித் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வியந்து பாராட்டினார்
அதைத் தொடர்ந்து இலக்கிய விமர்சகர் மணிமாறன், புத்தனாவது சுலபம் சிறுகதை தொகுப்பை பற்றிய தனது உரையை வழங்கினார், குறிப்பாக ஜன்னலை தட்டாதே அஷ்ரப் கதை உலகத்தின் மிகக்சிறந்த கதைகளில் ஒன்று எனப் பாராட்டி அது குறித்து விரிவாக்ப் பேசினார்
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான நண்பர் கார்த்திகை பாண்டியன் எனது படைப்புகள் வழியே அவர் அடைந்த அனுபவத்தையும் அதன் வழியே உருவான உத்வேகத்தில் தான் எழுத துவங்கியதையும் பற்றிப் பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது, அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்
இறுதியாக எனது கதைகளின் உலகம் பற்றி ஏற்புரை வழங்கினேன், காலை பத்தரை மணி முதல் மாலை ஆறரை வரை பார்வையாளர்கள் கவனம் சிதறாமல் ஒருமித்த மனதுடன் நூறு சதவீத ஈடுபாட்டுடன் கலந்து கொண்டதை காண்பது இதுவே முதல்முறை.
நிகழ்வு முழுவதும் ஒடியோடி தண்ணீர் கொடுத்துக் கொண்டும் தேநீர் வழங்கிக் கொண்டுமிருந்த நண்பர் முருகன் மிகுந்த பாராட்டிற்குரியவர்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகப் பெங்களுர், கோவை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, தஞ்சை எனப் பல ஊர்களில் இருந்தும் வாசகர்கள் வந்திருந்தது சந்தோஷம் அளித்தது. கவிஞர் சமயவேல், தோழர் நன்மாறன், ராஜபாளையத்திலிருந்து கவிஞர் ஆனந்தி, உமாசங்கர், மதுரை சரவணன், கருணாகரப்பாண்டியன்,சோழ ,நாகராஜன், எழுத்தாளர் அர்ஷியா, திண்டுக்கல் அருண், பாவை மலர் வான்மதி, ஹேமலதா, செல்வி, வசந்தா அக்கா, சாத்தூர் தியாகராஜன், எனது அண்ணன் டாக்டர் வெங்கடாசலம் மற்றும் மாற்றுமருத்துவ இயக்க நண்பர்கள் பலரும் இதில் கலந்து கொண்டார்கள்,
நண்பர் வேடியப்பன்,இந்நிகழ்வில் கலந்து கொண்டு நூறு சிறந்த சிறுகதை தொகுப்பின் இரண்டாவது பதிப்பு வெளி வர உள்ளதால் அதற்கான சலுகை விலை முன்பதிவு குறித்து அறிவித்தார், இது குறித்து விரிவான தகவலை நாளை அளிக்கிறேன்
நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றி.
வதனம் இலக்கிய அமைப்பின் நண்பர்களுக்கும் கவிஞர் ஆத்மார்த்திக்கும் எனது அன்பும் பாராட்டுகளும்
**