மதுரையில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் கர்ணன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். இவரது படைப்புகள் கல்கி, அமுதசுரபி, கலைமகள், தீபம், தாமரை, தினமணிக்கதிர் விகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. இதுவரை 14 சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாத தன்னைக் கல்கியின் எழுத்துகளே எழுத்தாளன் ஆக்கின என்கிறார்.
மதுரையில் சிறிய டெய்லர் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வறுமையான வாழ்க்கைச் சூழலிலும் தீவிரமாக இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் நேசித்தவர் கர்ணன். இன்று தனது 75 வயதில் மதுரை செல்லூரில் கைவிடப்பட்ட மனிதரைப் போலத் தனியே வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் தினமணிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் வாழ்க்கை எப்போதும் வறுமையில் தான் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு. ஆரம்பத்தில் எழுதியபோது கிடைத்த சொற்ப வருவாய் கூடத் தற்போது கிடைப்பதில்லை அகவை முதிர்ந்த தமிழறிஞர் நிதியுதவியில் வரும் இரண்டாயிரம் ஆயிரத்தில் வாழ்க்கையை ஒட்டுகிறேன் எனக் குறிப்பிடுகிறார்.
கர்ணன் எழுதியுள்ள கி.வா.ஜ முதல் வண்ணதாசன் வரை என்ற தமிழ் படைப்பாளிகள், படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். மிகச் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட கட்டுரைகள். ஒவ்வொரு எழுத்தாளரையும் தான் எங்கே, எப்போது பார்த்தேன், அவர்களுடன் பழகியது எப்படி என்ற அனுபவத்தை அழகாக விவரித்திருக்கிறார் கர்ணன்.
அவர் சந்தித்த இலக்கியவாதிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள், அவர்களின் மன இயல்பு, உரையாடும் விதம், விருப்பமான விஷயங்கள். கடிதத்தொடர்புகள் எனத் தான் அறிந்து கொண்ட விஷயத்தைச் சுருக்கமாக, அதே நேரம் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். அந்த வகையில் இதுவொரு இலக்கியச் சாட்சியம். இதில் இருபது கட்டுரைகள் உள்ளன. நர்மதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
இக்கட்டுரைகளில் கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. நடைபாதை இதயன். கி.ராஜநாராயணன், ஜீவா ஆகியோரைச் சந்தித்த அனுபவக் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிக்கை உலகம், அதன் ஆசிரியர்கள், அவர்கள் கதையைத் தேர்வு செய்யும் முறை, எழுத்தாளர்களுக்குக் கிடைத்த ஊதியம், எழுத்தாளர்கள் மீது வாசகர்கள் கொண்டிருந்த அன்பு எனக் கர்ணன் தனது நினைவுகளைத் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.
படிப்பறிவில்லாத கர்ணனின் அம்மா தங்கள் வீடு தேடி வந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் அக்கறையோடும் அன்போடும் உணவளித்து உபசரித்த விதம் பற்றி வாசிக்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
லா.ச.ராவின் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்த கர்ணன் ஒருமுறை மதுரையிலிருந்த பேராசிரியர் சி.கனகசபாபதி வீட்டிற்கு லா.ச.ரா வந்துள்ளதை அறிந்து அவரைக் காணப் புறப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஜி. நாகராஜனும் உடன் வந்திருக்கிறார். அவர்கள் இலக்கிய விவாதம் செய்ய உற்சாகமாக லா.ச.ராவை தேடிப்போயிருக்கிறார்கள். அவரோ கனகசபாபதி வீட்டின் சமையல் அறையில் காய்கறிகளை நறுக்கிக் கொண்டு புதுவிதமான உணவு ஒன்றை சமைக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்
இவரிடம் இலக்கியம் பேச வந்தால் மனிதர் சமைத்துக் கொண்டிருக்கிறாரே. இவருக்கு எதற்கு வேண்டாத வேலை என நாகராஜன் ஆதங்கப்பட்டிருக்கிறார். அதை அறிந்த லா.ச.ரா வெறுங்கையுடன் சந்தித்துப் பேசுவதை விடவும் நல்ல விருந்து சமைத்துத் தருகிறேன், சாப்பிட்டு பேசலாமே எனச் சொல்லியிருக்கிறார்.
லா.ச.ரா சமைத்த புதுமாதிரி உணவை அவர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள், அதன்பிறகு நாகராஜன் எரிச்சலான மனநிலையில் சுவாரஸ்யமற்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார். லா.ச.ராவும் சுருக்கமாகப் பதில் தந்திருக்கிறார். அன்று சாப்பாடும் சரியில்லை. உரையாடலும் ருசியாக அமையவில்லை என்கிறார் கர்ணன்.
இப்படி ஒளிவுமறைவின்றித் தனது அனுபவத்தைப் பகிர்ந்து தந்திருக்கிறார் கர்ணன் .அதுவே இந்நூலின் தனிச்சிறப்பு
சி.சு.செல்லப்பா முதல் வண்ணதாசன் வரை பலரும் அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறார்கள். இவர்களின் நட்பும் எழுத்துமே தன் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கின்றன. எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமில்லை அவர்களின் வாழ்வும் இலக்கியம் தான் எனக் கூறுகிறார் கர்ணன். அதனால் தான் எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்த சின்னஞ்சிறு நிகழ்வுகளைக் கூடக் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கர்ணன் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படைப்பாளி. முதுமையில் அவர் மிகுந்த வறுமையில் கஷ்டப்படுகிறார். அவரை ஆதரிக்கவும் அன்பு செலுத்தவும் வேண்டியது நமது கடமை.