இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட ஆங்கிலப்படம் BLACK NARCISSUS, 1947ல் வெளியானது. மைக்கேல் போவல் இயக்கியுள்ளார். சிறந்த கலையமைப்பு. ஒளிப்பதிவு என இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள இப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன்.
இமயமலையின் மோபு என்ற இடத்தில் கன்னியர் மடம் ஒன்றை உருவாக்க முயலும் கன்னியாஸ்திரிகளின் கதையே பிளாக் நார்சிசஸ். இளவரசன் திலீப் ராய் பயன்படுத்தும் வாசனைத்திரவியத்தின் பெயரது. மையக்கதையின் குறியீடாகவே அந்த வாசனை திரவியம் அடையாளப்படுத்தபடுகிறது.
இளமையின் அடையாளமாக உள்ள அந்த வாசனைதிரவியத்தின் மணத்தைக் கன்னியாஸ்திரிகள் விரும்புகிறார்கள். அதைப்பற்றிப் பேசிக் கொள்கிறார்கள் ஆனால் அவர்களின் துறவு வாழ்க்கை எதற்கும் ஆசைப்படக்கூடாது எனக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மறுக்கபட்ட ஆசைகளை நோக்கி கன்னியாஸ்திரிகளின் மனம் ஊசலாடுவதே கதையின் மையப்பிரச்சனை. நான்கு பெண்துறவிகளும் ஆளுக்கு ஒரு ஆசையில் சிக்கிக் கொள்கிறார்கள். வாழ்வியல் இன்பங்களிலிருந்து அவர்களால் விடுபடமுடியவில்லை. மலைஉச்சியும் இமயத்தின் இயற்கை அழகும் அதற்குக் காரணம் எனச் சுயசமாதானம் சொல்லிக் கொண்ட போதும் உண்மையில் வாழ்வின் மீதான பற்றுதலே ஆசைகளுக்கான காரணம் என்பது படத்தின் முடிவில் சுட்டிக்காட்டப்படுகிறது .
Rumer Godden எழுதிய BLACK NARCISSUS நாவலைத் தான் படமாக்கியிருக்கிறார்.கள் ரூமர் கோடன் ஆறுமாத குழந்தையாக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். அவரது பள்ளிபருவம் முழுவதும் இந்தியாவில் கழிந்திருக்கிறது. பின்பு இங்கிலாந்து சென்றவர் முதல் உலகப்போரின் போது மீண்டும் இந்தியா திரும்பியிருக்கிறார். கல்கத்தாவில் வசித்த தனது நினைவுகளை அவர் தனது எழுத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார். இந்நாவலும் அது போன்ற ஒரு கதையே.
டார்ஜிலிங்கை ஒட்டியுள்ள மோபு என்ற மலையுச்சியில் அரசருக்கு சொந்தமான பழைய அரண்மனை ஒன்றிருக்கிறது. ஒரு காலத்தில் அது அந்தப்புரமாக இருந்தது. ஆனால் தோடா ராயின் மகன் இறந்து போனபிறகு கைவிடப்பட்ட மாளிகையாக மாறுகிறது, அதனைக் கத்தோலிக்கத் திருச்சபை மடத்திற்காகத் தருகிறார் அரசர். அங்கே பள்ளியும் மருத்துவமனையும் அமைக்கத் திருச்சபை திட்டமிடுகிறது. இந்தப் பொறுப்புகள் இளம்பெண்ணான சிஸ்டர் கிளாடாவிடம் ஒப்படைக்கபடுகிறது,
மலைஉச்சியை நோக்கி சிஸ்டர் கிளாடாவும் ஐந்து கன்னியாஸ்திரிகளும் பயணிப்பதில் படம் துவங்குகிறது. இந்தியாவைப் பற்றிய படம் என்ற போதும் ஒரு காட்சி கூட இந்தியாவில் படமாக்கப்படவில்லை. இங்கிலாந்திலே அரங்கம் அமைத்து முழுபடமும் உருவாக்கபட்டிருக்கிறது. தேவைப்படும் காட்சிகளின் பின்புலத்தை ஒவியம் மூலம் வரைந்து உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே படத்தின் கலையமைப்பு அபாரமாக உள்ளது. குறிப்பாக மாளிகையின் உட்புறத்திலுள்ள சுவரோவியங்கள். மிகப்பெரிய மணி. மற்றும் கல்கத்தாவின் வகுப்பறை காட்சி போன்றவை அற்புதமாக வடிவமைக்கபட்டுள்ளன.
Jack Cardiffயின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பானது. வண்ணத்தை அவர் பயன்படுத்தியுள்ள விதம் தேர்ந்த ஒவியனை போலுள்ளது. குறிப்பாக இமயமலையை வெறித்துப் பார்த்தபடியே இருக்கும் துறவியின் முகத்தில் படரும் வெளிச்சமும், திலிப் ராய் காஞ்சி என்ற இளம்பெண்ணைச் சந்திக்கும் இடமும் ,மடத்தை விட்டு ரூத் தப்பிப் போகும் காட்சிகளும் வெகு நேர்த்தியாகப் படமாக்கபட்டுள்ளன
சிஸ்டர் கிளாடாவாக நடித்திருப்பவர் Deborah Kerr. காதலில் தோற்றுப்போய்க் கன்னியாஸ்திரியாக மாறிய கதாபாத்திரம். கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்டான டீனைச் சந்திக்கும் அவள் ஆசைகளால் சஞ்சலம் அடைகிறாள். அதே நேரம் தன்னை நம்பி பெரிய பொறுப்பு ஒப்படைக்கபட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கண்டிப்புடன் நடந்து கொள்கிறாள். மலைஉச்சியில் பள்ளியும் மருத்துவமனையும் அமைப்பது எளிதாகயில்லை. டீனின் உதவியோடு வகுப்பறைகளை உருவாக்குகிறார்கள். மொழிபுரியாமல் வகுப்பு எடுப்பது கன்னியாஸ்திரிக்குப் பிரச்சனையாகிறது. அவர்களுக்கு உதவுவதற்காக வருகிறான் ஜோசப் என்ற சிறுவன்.
கண்டிப்புடன் நடந்து கொள்ளும் கிளாடா மெல்லத் தனது இயல்பை மாற்றிக் கொள்கிறாள். அவள் மனதில் கடந்த காலக் காதல் நினைவுகள் கொப்பளிக்கின்றன. பிரார்த்தனையின் போது கூட அவள் மனது கடந்தகாலத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறது. இதற்காகத் தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறாள். அவளை ரூத் குற்றம்சாட்டும் இடத்தில் பதிலற்றுப் போய் அழுகிறாள். கிறிஸ்துமஸ் இரவில் அவள் நடந்து கொள்ளும் விதமும், ரூத் மடத்தை விட்டுவெளியேறும் போது அவள் அடையும் பதற்றமும். ரூத்தின் மரணத்திற்குத் தானே காரணம் என்பதை உணரும் விதமும் சிறப்பாகப் படமாக்கபட்டுள்ளது.
மலையுச்சியில் உள்ள அந்த மாளிகையில் அங்கு என்ற பணிப்பெண் வேலைக்கிருக்கிறாள். அவளுக்குக் கன்னியாஸ்திரிகளைப் பிடிப்பதில்லை. வேண்டாவெறுப்புடன் அவர்களுக்கு உணவு சமைத்துத் தருகிறாள். உதவிகள் செய்கிறாள். அம்மாளிகை மீண்டும் அந்தப்புரமாகவே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாள். இதன் காரணமாகவே காஞ்சிக்கும் திலீப்ராயிற்குமான காதலை அவள் ரகசியமாகக் கண்காணிக்கிறாள். சிறுகதாபாத்திரம் என்றாலும் அவள் முழுமையாக வடிவமைக்கபட்டிருக்கிறாள்
சிஸ்டர் பிலிப்பா இன்னொரு மறக்கமுடியாத கதாபாத்திரம். காய்கறித் தோட்டம் அமைக்கச் சொன்னதற்கு மாறாக அவள் விதவிதமான பூக்கள் கொண்ட அழகிய பூந்தோட்டத்தை உருவாக்குகிறாள். அது அவளது ஆசையின் வெளிப்பாடு. அதைக் கிளாடா புரிந்து கொள்கிறாள்
ஜோசப் என்ற சிறுவன் கதையின் முக்கியச் சரடு. மடாலயத்தின் நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி. இருள் கலையாத அதிகாலையில் அவன் கிளாடாவிற்குத் தேநீர் கொண்டு வந்து கொடுக்கும் போது பெரிய மனிதன் போல நடந்து கொள்கிறான். அவனிடம் உள்ள பொறுப்புணர்ச்சியே கிளாடாவை விழிப்படையச் செய்கிறது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த திலீப் ராயாக நடித்திருப்பவர் சாபு. இந்திய நடிகர். மைசூரில் யானைப்பாகனாக வேலை செய்தவர். கிரிபித்தின் ஹாலிவுட் படத்தில் நடித்துப் புகழ்பெற்று அமெரிக்காவில் குடியேறியவர்.
கணிதமும் மொழிகளும் கற்றுக் கொள்ளத் துறவியர் மடத்திற்கு வருகிறான் திலீப் ராய். அலங்காரமான பட்டாடையும் நகைகளும் அணிந்து வரும் திலீப்பை பற்றியே கன்னியாஸ்திரிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவன் மடத்தில் தஞ்சம் புகுந்துள்ள காஞ்சியைக் காதலிக்கத் துவங்குகிறான். காஞ்சி அடித்துத் துரத்தப்படும் போது அதைத் தடுத்து அவளை ஏற்றுக் கொள்கிறான். தேவதை கதைகளில் வருவது போலவே அந்நிகழ்வு நடைபெறுகிறது.
படத்தில் ஆரம்பத்தில் ரூத் தேவாலயத்தின் பிரம்மாண்டமான மணியை ஒங்கி அடிக்கத் துவங்குகிறாள். மணியோசை மலையில் பட்டு எதிரொலிக்கிறது. அதை ரசிக்கிறாள். மிஸ்டர் டீனை ரகசியமாகக் காதலிக்கிறாள் ரூத். ஆனால் அவன் கிளாடாவிடம் நெருங்கிப் பழகுகிறான் என அறிந்து கிளாடாவின் மேல் கோபம் கொள்கிறாள். தனது காதலைத் தெரிவிக்கக் கன்னியாஸ்திரி வாழ்க்கையை உதறி வெளியேறுகிறாள். அக்காட்சியில் அவளது முகபாவமும் நடத்தையும் வியக்கவைக்கின்றன.
மடத்தை விட்டு வெளியேறிவரும் அவளை டீன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவளது மரணம் துறவியர் மடத்தின் முடிவாக அமைகிறது.
கன்னியர் மடத்தை ஒட்டிய மரத்தடி ஒன்றில் அமர்ந்தபடியே மலையை வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கும் சாமியாரை சிஸ்டர் கிளாடா வெறுக்கிறாள். அந்த மனிதரை எதற்கு மக்கள் வழிபடுகிறார்கள் என எரிச்சல் அடைகிறாள். ஆனால் அவர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏதோவொரு காரணத்தால் துறவியாகிவிட்டார் என்பதை அறியும் போது திகைத்துப் போய்விடுகிறாள். படம் முழுவதும் துறவி அமைதியாக மலையை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறார். தன்னைச் சுற்றி நடக்கும் குழப்பங்கள். பிரச்சனைகள் எதுவும் அவரைப் பாதிப்பதில்லை. கடைசிவரை அவரைக் கன்னியாஸ்திரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் காஞ்சி அவரை வணங்குகிறாள். பிரிட்டீஷ்காரர்களால் ஒரு போதும் புரிந்து கொள்ளமுடியாத இந்தியாவின் குறியீடாகவே அந்தச் சாமியார் அடையாளப்படுத்தபடுகிறார்.
படத்தின் திரைக்கதை நேர்கோட்டுத்தன்மை கொண்டது. புதிய கதாபாத்திரங்களின் வருகையே கதையை முன்னெடுத்துப் போகிறது. திலீப்ராயின் வருகையும் காஞ்சியின் வருகையும் இரண்டு முக்கியக் கோடுகள். அவர்கள் காதலித்துக் கொள்ளப்போகிறார்கள் என்பதை நாம் எளிதாக உணர்ந்துவிட முடிகிறது என்றாலும் காதலிக்கும் சூழலும் நிகழ்வுகளும் சுவாரஸ்யமாகச் சித்தரிக்கபட்டுள்ளது
மலையுச்சிக்கு கன்னியாஸ்திரிகள் சேவை செய்வதற்காகப் பயணிக்கும் போது மலைவாழ் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் உருவாகப்போகிறது என்றே நாம் யூகிக்கிறோம். ஆனால் படத்தில் புறஉலகை விட அகஉலகமே முக்கியப் பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது.
அந்தபுரமாக இருந்த மாளிகை துறவியர் மடமாக மாற்றப்படுகிறது என்பது தான் முரண். அதைப் பணிப்பெண் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறாள். படத்தின் துவக்க காட்சியில் வரும் மன்னர் பணிப்பெண்ணை எச்சரிக்கை செய்தே கட்டுப்படுத்தி வைக்கிறார்.
கன்னியர்மடத்தில் நடக்கும் பள்ளியும் மருத்துவமனையும் கன்னியாஸ்திரிகள் அமர்ந்து சாப்பிடும் காட்சியில் சிலுவை போலத் தோன்றும் காட்சிக் கோணமும் நீர்வண்ண ஒவியங்கள் போலவே Jack Cardiffஆல் படமாக்கபட்டுள்ளன.
கிளாடாவின் பகல்கனவுகள் அவளைப் புனிதக் கடமைகளிலிருந்து தவற செய்கிறது. அவள் தன்னை அறியாமல் காதலின் நினைவுகளால் அலைக்கழிக்கபடுகிறாள். கிறிஸ்துமஸ் இரவில் குடித்துவிட்டு வரும் டீனிடம் அவள் கடுமையாக நடந்து கொள்வதும், அவனை நினைத்து அழுவதும் உணர்ச்சிபூர்வமாகச் சித்தரிக்கபட்டுள்ளன.
கன்னியர் மடத்தின் கதவுகளில் வந்து மோதும் காற்றின் சப்தம் கிளாடாவை எரிச்சல் அடைய செய்கிறது. அந்தக் காற்றைத் தடுத்து நிறுத்திவிடமுடியாதா எனக் கோபம் கொள்கிறாள். ஆனால் காற்று ஒய்வதேயில்லை. படத்தின் இறுதிகாட்சியிலும் காற்று வேகமாக அடித்துக் கொண்டுதானிருக்கிறது. அது ஆசைகளின் அடையாளம் போலவே தோன்றுகிறது
இயற்கையுடன் நெருங்கி வாழும் போது வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கவே மனது ஆசைப்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்தி கட்டுபாட்டிற்குள் வைக்க முயன்ற கிளாடே தனது தோல்வியை முடிவில் ஒப்புக் கொள்கிறாள். கன்னியாஸ்திரிகள் தன்னை அறிந்து கொள்வதற்கு இந்தப் பயணம் ஒரு பாடமாகிறது.
“ When she was angry nowadays, she could not help what she did or what she said, because she did not know. It felt like something dark and wet, flooding into her brain, like blood “ என ரூத்தைப் பற்றி ஒரு வசனம் இடம்பெறுகிறது.
குருதியினுள் கரைந்துவிட்ட ஆசைகள் தான் ரூத்தை அலைக்கழிக்கின்றன. அதே ரத்தவேகம் கிளாடாவிடமும் இருக்கிறது. ஆனால் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள். இமயத்தில் ஒலிக்கும் மணியோசையைப் போல ஆசைகளின் எதிரொலிப்பு அவள் மனதில் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது. அதை மறைத்துக் கொள்ள வேண்டிய இயலாமையே அவளை அதிகம் வருந்தச் செய்கிறது
••