கி.ராஜநாராயணனுக்கு விருது

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச் சாதனை சிறப்பு விருது 2016 வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மற்றும் தேர்வுக் குழுவினர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

தமிழ் இலக்கியச் சாதனை 2016 விருதுக் கேடயமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.

விருது விழா சென்னை, கவிக்கோ மன்றத்தில் 27 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக இந்த விருதை சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.. முஸ்தஃபா அவர்கள் வழங்குகிறார்.

நோபல் பரிசு பெறத்தகுதியான சிறந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். பத்துச் சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு குறுநாவல்களும், மூன்று முழு நாவல்களும், ஆறு கட்டுரை தொகுதிகளும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதை கடந்துவிட்ட கி.ரா. தற்போது புதுச்சேரியில் தன் மனைவி கணபதி அம்மாளுடன் வசித்துவருகிறார்

இந்த ஆண்டு அவருக்கு ஞானபீடம் விருது கிடைக்ககூடும் எனக் காத்திருந்த நிலையில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச் சாதனை சிறப்பு விருது கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

கி.ராஜநாராயணன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

0Shares
0