நவீன ரஷ்யக்கவிதையுலகின் தனிப்பெரும் கவியாக இருந்தவர் ஒசிப் மெண்டல்ஷ்டாம். அக்மேயிசம் ( Acmeism) என்ற கவிதைக்கோட்பாட்டினை உருவாக்கியவர். ஸ்டாலினைக் கிண்டல் செய்து கவிதை எழுதினார் என்று கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கபட்ட மெண்டல்ஷ்டாம் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்து மனச்சிதைவிற்கு உள்ளானார்.
அவரது கவிதைகளைப் பத்திரிக்கையில் வெளியிடுவது தடைசெய்யப்பட்டது. மெண்டல்ஷ்டாம் கவிதைகள் அத்தனையும் நினைவில் வைத்திருந்து நடமாடும் புத்தகமாகத் திகழ்ந்தவர் அவரது மனைவி நடாஷ்டா.
அவரது நினைவுகளில் இருந்த கவிதைகளே பின்னாளில் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்தன.
மெண்டல்ஷ்டாமின் சிறை அனுபவங்களைப் பற்றி வாசிக்கும் போது மனம் நெகிழ்ந்து போய்விடுகிறது.
••
ஒசிப் மெண்டல்ஷ்டாம் சிறையிலே கொல்லப்படக்கூடும் என அறிந்த நடாஷ்டா அவரை மீட்பதற்காகப் போராடினார். ஒசிப்பின் நண்பரான பாஸ்டர்நாக்கை தொடர்பு கொண்டு ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதச் செய்தார். மனச்சிதைவு முற்றிய நிலையில் இருந்த ஒசிப்பிற்கு முறையான சிகிட்சை அளிக்கப்படவில்லை. அவர் குளிராடைகள் கூட இல்லாமல் வருந்தினார். தன்னை கொன்றுவிடும்படி அதிகாரத்திடம் மன்றாடினார். இந்நிலையில் கணவரை மீட்க நடாஷ்டா உறுதியாகப் போராடினார்.
தனது காதல் வாழ்க்கையையும். மெண்டல்ஷ்டாமின் ஆளுமையையும். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட அவரை மீட்பதற்காக தான் மேற்கொண்ட இடைவிடாத போராட்டம் குறித்தும் நடாஷ்டா எழுதிய புத்தகம் Hope Against Hope. இது ஒரு இலக்கிய சாட்சியம்.
••
நடாஷ்டாவின் அம்மா ஒரு மருத்துவர். யூதக்குடும்பத்தைச் சேர்ந்தவர். மதக்கட்டுபாடுகளை மீறி புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டவர். நடாஷ்டாவின் அப்பா ஒரு வணிகர். அவர்கள் பிரான்ஸ், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி எனப் பல்வேறு தேசங்களில் வாழ்ந்துவிட்டுக் கடைசியாக ரஷ்யாவந்து சேர்ந்தார்கள்.
நடாஷ்டா கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலம் ஜெர்மன் இத்தாலி பிரெஞ்சு மொழிகளைக் கற்றிருந்தவர், சட்டம் படிப்பதற்காகச் மாஸ்கோ பல்கலைகழகம் சென்றார். அங்கே அவரது தோழியாக இருந்தவர் கவிஞர் அன்னா அக்மதோவா. நாடகக் குழுவினர்களுடன் இணைந்து செயல்பட்ட நடாஷ்டா ஒரு காபி ஷாப்பில் தான் ஒசிப்பை முதன்முறையாகச் சந்தித்தார்.
அப்போது ஒசிப் இளம்கவி. அவரது முதல்கவிதைத்தொகுப்பு ஸ்டோன் வெளியாகியிருந்தது. அதைத் தானே 600 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதைகள் ஒசிப்பிற்குத் தனிவாசகவட்டத்தை உருவாக்கியிருந்தது.
அன்னா அக்மதோவாவின் கணவரான குமிலேவ் குறியீட்டுகவிதைகளுக்கு எதிராக அக்மேயிசம் என்ற புதிய கவிதைக்கோட்பாட்டினை அறிமுகம் செய்தார். அது ஒசிப்பிற்கு ஏற்புடையதாக இருந்தது. அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இயக்கமாகச் செயல்பட்டு புதிய வகைக் கவிதைகளை எழுதினார்கள்.
ஒசிப்பின் அம்மா இசை ஆசிரியர் என்பதால் சிறுவயது முதலே அவருக்கு இசையில் அதிக ஈடுபாடு இருந்தது,ஆகவே கவிதைகளைப் பாடக்கூடியவராக இருந்தார். பிரெஞ்சு இலக்கியம் படித்த ஒசிப் ஆரம்ப நாட்களில் பிரெஞ்சு கவிஞரான மல்லார்மேயின் சாயலில் கவிதைகள் எழுதினார். ஆனால் குமிலேவின் பாதிப்பில் அவரது கவிதைகள் உருமாறத்துவங்கியது.
புரட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார் எனப் பொய் குற்றம்சாட்டப்பட்டு ஒசிப் முதலில் கைது செய்யப்பட்டார். புக்காரின் உதவியால் வெளிவந்த போதும் அவர் தொடர்ந்து கண்காணிக்கில் வைக்கபட்டிருந்தார். இதில் ஆத்திரமான ஒசிப் ஒருநாள் நேரடியாகக் காவல்துறை உயரதிகாரியை சந்தித்து என் கவிதைகள் மீது சந்தேகம் கொள்வதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் இனிமேல் கவிதைகளை எழுதி நேரடியாக உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இதில் எவற்றை வெளியிடப்படலாம் என நினைக்கிறீர்களோ. அதைப் பத்திரிக்கைக்கு நீங்களே அனுப்பி வையுங்கள் என்று சண்டையிட்டு திரும்பினார்.
குமிலேவ் தனது 35 வயதில் சுட்டுக் கொல்லப்பட்டது ஒசிப்பை கலங்க செய்தது. இனிமேல் கவிதைகள் எழுதக்கூடாது என்று முடிவு செய்தார், ஆனால் அவரை ஆறுதல்படுத்தி மீண்டும் கவிதைகள் எழுத வைத்தவர் நடாஷ்டா. பொருளாதார நெருக்கடியும் மன அழுத்தமும் கொண்ட நாட்களாக அவையிருந்தன. வீட்டில் எந்த பொருளுமில்லை. சமையற்செய்யக்கூட எரிபொருள் இல்லை. ஆனால் நாங்கள் இருவரும் கவிதைகளை பரிமாறிக் கொண்டபடியே நாட்களை கழித்தோம் என்று தனது குறிப்பில் நடாஷ்டா பதிவு செய்திருக்கிறார்.
••
நடாஷ்டாவை காசநோய் தாக்கியது. சிகிட்சைக்காக சானிடோரியம் ஒன்றுக்குச் சென்ற போது அங்கே தன்னைப் போலவே காசநோய் சிகிட்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த தோழி அன்னா அக்மதோவாவை சந்தித்தார். இவரும் ஒன்றாக சிகிட்சை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் நடாஷ்டா உடல் நலம் தேறவில்லை. ஆகவே யால்டாவிற்கு இடம்மாற்றம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் முடிவு செய்தார்கள். மருத்துவமனையில் இருந்த நாட்களில் நடாஷ்டாவிற்கு ஒசிப் எழுதிய கடிதங்களில் அவரது பிரிவுதுயர் பீறிடுகிறது. அவள் இல்லாமல் தன்னால் ஒரு வரி எழுத இயலாது எனப்புலம்பியிருக்கிறார்.
ஸ்டாலினை விமர்சித்துக் கவிதை எழுதி அதை நண்பர்கள் மத்தியில் ஒசிப் வாசித்த போது அது ஒரு தற்கொலை முயற்சி. தயவு செய்து இக்கவிதையை வெளியிட வேண்டாம் என நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ஒசிப் வெளியிட்டே தீருவேன் எனப் பிடிவாதமாக இருந்தார்.
போலீஸ் உளவாளிகளில் ஒருவன் இலக்கிய ரசிகன் போல அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தான். அவன் அப்படியே முழுக்கவிதையையும் மனப்பாடம் செய்து காவல்துறை உயர்அதிகாரியிடம் போய் ஒப்புவித்தான். ஒசிப் மீதான முதல்குற்றமாக அது பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் ஸ்டாலினுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என அலெக்சி டால்ஸ்டாய் என்ற எழுத்தாளர் மீது கோபம் கொண்ட ஒசிப் பொது இடத்தில் அவர் கன்னத்தில் அறைந்ததோடு கடுமையான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார்.
இந்த இரு நிகழ்ச்சியின் விளைவாக அவர் கைதுசெய்யப்படக்கூடும் என்ற வதந்தி பரவியது. தான் கைது செய்யப்படுவதற்குள் ஒருமுறை அன்னா அக்மதோவாவை சந்திக்க வேண்டும் என ஒசிப் விரும்பினார். இதற்காகவே பயணம் செய்து அன்னா அவரைச் சந்திக்க வந்திருந்தார்.
தான் செய்தது மனசாட்சி உரியவன் செய்கிற வேலை என்று உறுதியாகச் சொன்னார் ஒசிப். அவர்கள் எதிர்பார்த்தது போல ஒசிப் கைது செய்யப்பட்டார். சிறையில் கடுமையான முறையில் நடத்தப்பட்டார். சித்ரவதை தாங்கமுடியாமல் அவர் கை நரம்புகளைத் துண்டித்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் சாகவில்லை. இன்னொரு முறை தப்பியோட முயன்று தாவிக்குதித்து வலது தோள்பட்டையில் சரியான அடி.. வாழ்நாள் முழுவதும் இதனால் அவரால் வலது கையை முழுமையாகப் பயன்படுத்தமுடியவில்லை.
பாஸ்டர்நாக் தலையீட்டினால் வெளியே வந்த அவர் தற்காலிகமாக இடமாற்றம் வேண்டும் என்று சில காலம் ஆர்மீனீயப்பகுதியில் வசித்தார். குழந்தைகள் அற்ற தம்பதிகளாக இருந்த அவர்கள் ஆர்மீனீயச்சிறுவர்களை மிகவும் நேசித்தார்கள். ஒசிப்பின் கவிதைகளில் சிறுவர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளார்கள்.
மலைபிரதேசம் ஒன்றில் சில காலம் வாழ்ந்த ஒசிப் மீண்டும் கவிதைகள் எழுதத்துவங்கினார். மாஸ்கோ திரும்பிய அவர் மறுமுறை கைது செய்யப்பட்டார். இந்த முறை நடாஷ்டாவும் விசாரணைக்கு அழைக்கபட்டார். மிகமோசமான துன்பவியல் நாடகமாக அமைந்தது அந்த விசாரணை. முடிவில் பல்லாயிரம் அரசியல் கைதிகளில் ஒருவரைப் போல ஒசிப்பும் நாடுகடத்தப்பட்டார். குலக் எனப்படும் சைபீரிய கொடுஞ்சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த நாட்களில் ஒரு மில்லில் இரவு பணி செய்த நடாஷ்டா எங்கே தன் மனதில் இருந்த ஒசிப்பின் கவிதைகள் மறந்து போய்விடுமோ எனப் பயந்து இரவெல்லாம் தனக்குத் தானே கவிதைகளை முணுமுணுத்தபடியே இருந்தார். ஒருநாள் இயந்திரங்கள் திடீரென நிறுத்தபட்டதும் அவர் கவிதைப்பாடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் கேட்டது.
நிச்சயம் அதை யாராவது ஒரு உளவாளி அரசிற்குத் தெரியப்படுத்திவிடுவான் எனப் பயந்து அவர் இரவோடு ஊரை விட்டு தப்பியோடினார்.
ஒசிப் சைபீரியாவில் மிக மோசமாக நடத்தப்பட்டார். தனது எதிர்ப்பை தெரிவிக்க அவர் பட்டினியாகக் கிடந்தார். குளிர்தாங்கமுடியாமல் அவதிப்பட்டார். ஒசிப்பிற்கு என்ன ஆனது என அவர்களால் தெரிந்து கொள்ளவே முடியவில்லை. பின்பு ஒருநாள் ஒசிப்பின் சகோதருக்கு அவர் மாரடைப்பால் இறந்து போய்விட்டதாக ஒரு சான்றிதழை அரசு அனுப்பி வைத்திருந்தது. அது உண்மையில்லை என அவர்கள் உணர்ந்த போது வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.
தனது மனதிலிருந்த ஒசிப்பின் கவிதைகளைக் காகிதத்தில் பதிவு செய்து அதை ஒரு சூட்கேஸில் அடைத்து அன்னா அக்மதோவாவின் நண்பர் ஒருவரிடம் ரகசியமாக ஒப்படைத்து நாடுகடத்திவிட்டார் நடாஷ்டா. பின்னாளில் அதன் வழியாகவே அவரது கவிதைகள் புத்தகமாக அச்சிடப்பட்டன.
தன் கணவருக்கு என்ன நடந்தது. அவர் கொல்லப்பட்டாரா என அறிந்து கொள்வதற்காக நடாஷ்டா காத்துக் கொண்டிருந்தார். ஸ்டாலின் மரணத்திற்குப் பிறகு நாடு திரும்பி அவர் சைபீரியச்சிறையில் அடைப்பட்ட கைதிகளிடம் தன் கணவர் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொண்டார், அப்படி அவர் சேகரித்த செய்திகளை ஒழுங்குபடுத்தித் தனி நூலாக வெளியிட்டார். அரசும் ஒசிப்பின் கவிதைகள் மீது இருந்த தடையை விலக்கி அவரை முக்கியக் கவிஞராக அங்கீகாரம் செய்தது.
தன் கணவருக்கு முறையான இறுதி சடங்கு கூட நடக்கவில்லை. அவர் கொல்லப்பட்ட மனிதர்களில் ஒருவரைப் போலப் புதைகுழியில் தூக்கி எறியப்பட்டு மண் மூடப்பட்டுப் போனார் என்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தன் வாழ்க்கையை ஒசிப்பின் பெருமைகளை உலகிற்குச் சொல்வதற்காக முழுமையாக அர்பணித்துச் செய்து கொண்டார் நடாஷ்டா. ஆகவே தங்கள் மீதான விசாரணை எப்படி நடந்தது. ஒசிப் எப்படித் துன்புறுத்தப்பட்டார் என்பதைப் பற்றி விரிவாக Hope Against Hope. நூலில் விவரித்துள்ளார்.
அன்னா அக்மதோவாவிற்கும் ஒசிப்பிற்குமான நட்பை பற்றி அவர் விவரித்துள்ள பகுதிகள் அற்புதமானவை. இரண்டு பள்ளிசிறார்களைப் போலவே அவர்கள் காரணமேயில்லாமல் கோவித்துக் கொள்வதும், சிறிய விஷயங்களுக்குக் கூடப் பாராட்டிக் கொள்வதும் வேடிக்கை செய்வதுமாக வாழ்ந்திருக்கிறார்கள். கவிதை தான் அவர்களின் மையம். கவிதையைப் பற்றிப் பேசித்தீர்த்திருக்கிறார்கள். கவிதையின் வழியே உலகை வெல்லமுடியும் என நம்பியிருக்கிறார்கள். கவிதை மட்டுமே உலகிற்குப் போதுமானது என நம்பியிருக்கிறார்கள். கவிதையின் தேவதையைத் தோழமை கொண்டுவிட்ட நமக்கு மரணமில்லை என்று ஆர்பரித்திருக்கிறார்கள்.
அக்மதோவா ஒசிப்பின் வீட்டிலுள்ள சமையல் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு நடாஷ்டா இது தான் எனது சரணாலாயம் என்று சொல்லுவாராம். இருவரும் ஒன்றாகச் சமைத்தபடியே கவிதையின் எதிர்காலம் குறித்துப் பேசிக்கொண்டிருப்பார்களாம்.
ஒசிப் தனது கவிதை குறித்துப் பேசும் போது நாங்கள் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று மனைவியை உட்படுத்தித் தான் எப்போதும் பேசுவாராம்.
ஒசிப்பின் கவிதைகளையும் குறிப்புகளையும் முழுமையாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட நடாஷ்டா அதைப் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கும் முக்கியக் காரணமாகயிருந்தார். நடாஷ்டா போலவே அக்மதோவாவும் தனது மகனை கைது செய்து அடைத்துவிட்டதை எதிர்த்து அவனை மீட்பதற்காகப் போராடியிருக்கிறார்.
கவிஞனின் நிழலைப் போல வாழ்ந்த நடாஷ்டா கடைசிமுறையாக ஒசிப்பை காண முடியாமல் போய்விட்ட துயரத்தைத தாங்க முடியாதவராகவே இறுதிநாள் வரை வாழ்ந்திருக்கிறார்.
இந்த நூல் அரசியல் காரணங்களுக்காக இலக்கியவாதிகளை ஸ்டாலின் அரசு எப்படி ஒடுக்கியது என்பதன் ஆவணம். இன்னொரு பக்கம் கவிதையை நேசித்த ஒரு பெண் ஒருகவிஞனின் மனைவியாகி அவனையும் அவனது கவிதைகளையும் பாதுகாக்க மேற்கொண்ட முடிவற்ற போராட்டத்தின் சாட்சியம். இரண்டுவிதங்களிலும் இப் புத்தகம் முக்கியமானதாகவே உள்ளது
••
21.08.2016