குற்றமும் காதலும்.

லத்தீன்அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் எர்னெஸ்டோ சபதோ (Ernesto Sábato ) முக்கியமானவர். அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவரைப் போர்ஹேயின் முன்னோடி என்கிறார்கள்.

எர்னெஸ்டோ சபதோ இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அர்ஜென்டினாவில் நடைபெற்ற மல்வினாஸ் போரில் காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் பற்றி விசாரிக்க உருவாக்கபட்ட மனித உரிமைக் கமிஷனின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

இவரது The Tunnel நாவல் அளவில் மிகக்சிறியது. ஆனால் அதன் தாக்கம் மிகப்பெரியது.

நாம் பொதுவில் மற்றவர்களின் குற்றங்கள் குறித்து எளிதாகத் தீர்ப்பு எழுதுகிறோம். ஆனால் அதே குற்றம் நம்முடையது என்றால் அதற்கான காரணகாரியங்களை விளக்கி நியாயப்படுத்தவே முயற்சிக்கிறோம். உண்மையில் ஒருவன் தனது குற்றத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக ஒத்துக் கொள்வது விடுதலை உணர்வின் அடையாளம் என்கிறார் எர்னெஸ்டோ சபதோ. அதுவே இந்நாவலின் மையக்கருத்து.

இந்நாவலை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஆல்பெர் காம்யூ இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்று எனக் கொண்டாடுகிறார். அவரது முயற்சியின் காரணமாக இந்நாவல் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட பத்து மொழிகளில் இந்நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எர்னெஸ்டோவின் இன்னொரு முக்கிய நாவல் The Angel of darkness.

யுவான் பாப்லோ கேசில் என்ற ஒவியன் மரியா என்ற இளம்பெண்ணைக் கொலைசெய்த குற்றத்திற்காகச் சிறையில் வசிக்கிறான். அவனது நினைவுகளின் வழியே ஏன் இந்தக் கொலையைச் செய்தான் என்பதையும், இருண்ட மனநிலை கொண்ட அவனது அகவுலகத்தையும் எர்னெஸ்டோ சபதோ சித்தரிக்கிறார்.

நாவலின் சிறப்பு சின்னஞ்சிறு வாக்கியங்களின் மூலம் ஒற்றை உணர்ச்சிநிலையை அடர்த்தியாக விவரிப்பதாகும். அதீதமான கற்பனையும் மனக்கொந்தளிப்பும் கொண்ட ஒருவன் எப்படி ஒரு இளம்பெண்ணிடம் நடந்து கொள்வான் என்பதற்குக் கேசில் ஒரு உதாரணம். தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் காப்காவின் நாவல்களில் வரும் கதாநாயகனின் சாயலில் தான் கேசிலும் உருவாக்கபட்டிருக்கிறான். அவன் தனது குற்றத்தை மறைப்பதில்லை. மாறாக இந்தக் குற்றம் எந்த மனநிலையில் உருவானது என்பதையும், அந்த மனநிலை தனக்குள் என்னவெல்லாம் செய்தது என்பதையுமே முதன்மைபடுத்துகிறான்.

ஒருவகையில் இது ஒப்புதல் வாக்குமூலம் போல எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தனது கொலையைக் காதலின் வெளிப்பாடாகக் கேசில் கருதுவதே இதன் தனித்துவம்.

நாவலின் துவக்கத்தில் யுவான் சொல்கிறான்

புகழ்பெற்ற பிறகு மனிதர்கள் அடக்கமாக நடந்து கொள்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அது ஒரு நடிப்பு. அடக்கமாக இருப்பது என்பது இயல்பானதில்லை. தற்பெருமையை மறைத்துக் கொள்ளும் முயற்சி. நான் தற்பெருமை கொள்ள விரும்புகிறவன். உண்மையில் அது ஒன்றும் தவறான செயலில்லை.

நாம் எல்லாவற்றின் மீதும் அடக்கத்தைத் திணித்து அதன் இயல்பை மாற்றிவிடுகிறோம். இந்த உலகம் கருணையற்றது. குரூரமானது. நாஜிகளின் யூதவதை முகாமில் ஒரு இசைக்கலைஞன் பசியோடு இருக்கையில் உயிருள்ள எலியொன்றைத் தின்னும்படியாக அவனைக் கட்டாயப்படுத்தியதாக ஒரு செய்தியைப் படித்தேன். இப்படிபட்டது தான் உலகம். என அவன் கூறுவது அதிர்ச்சியூட்டுகிறது

குற்றத்தின் கதையைத் தெரிந்து கொள்வதில் எப்போதும் மனிதர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். நானும் என் குற்றத்தின் கதையைத் தான் சொல்லப்போகிறேன். இது என் கதையில்லை.  என் குற்றத்தின் கதை

நான் மரியாவை கொன்றதை பற்றிப் பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. ஆனால் நான் எப்படி எங்கே மரியாவை சந்தித்தேன். அவளுக்கும் எனக்கும் எவ்விதமான உறவு இருந்தது. ஏன் அவளைக் கொலை செய்தேன் என்பது என்னைத் தவிர உலகில் யாருக்கும் தெரியாது.

கொலை பற்றிய செய்தியை வாசிக்கும் மனிதர்கள் முட்டாள்தனமான கேள்விகளையே எப்போதும் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகள் அர்த்தமற்றவை. அவர்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியாது.

என்னை ஒரேயொருவரால் மட்டுமே நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும் என நம்புகிறேன். அந்த ஒருவர் நான் கொலை செய்த மரியா என்கிறான் யுவான்.

••

யுவான் தனது ஒவியக்கண்காட்சி ஒன்றில் கடற்கரையில் தனித்துநிற்கும் பெண் ஒருத்தியின் ஒவியத்தை மரியா உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறான், அதுவே மரியாவோடான முதற்சந்திப்பு.

அவள் ஒவியத்திலுள்ள பெண்ணைப் போல இந்த உலகை மறந்து நின்றிருந்தாள். அவளுக்கு ஒவியப்பெண்ணின் தனிமையைப் புரிந்து கொள்ள முடிந்தது போலத் தோன்றியது. யுவான் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். திடீரென அவள் கூட்டத்தில் கலந்து மறைந்துவிடுகிறாள். அவளைப் பின்தொடர வேண்டும் என்ற உந்துதல் யுவானிற்கு அதிகமாகிறது.  தேடிப் போகிறான். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை

அன்றிரவு அவன் மிகவும் குழம்பிப் போகிறான். நடுக்கமும் பதற்றமும் தொற்றிக் கொள்ள மரியாவை எப்படியாவது திரும்பப் பார்க்க வேண்டும் என விரும்புகிறான். ஆனால் அவள் ஒரு போதும் ஒவியக் கண்காட்சிக்கு வரவேயில்லை.

பின்பு ஒருநாள் அவளைத் தற்செயலாக வீதியில் கண்டுபிடிக்கிறான் பின்தொடருகிறான். ஆனால் பேசுவதற்குத் தயங்குகிறான்.. அன்றிரவு அவளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான். உறக்கமில்லை. அவளிடம் பேச வேண்டும், உங்களுக்கு ஒவியத்தில் விருப்பம் அதிகமா எனக் கேட்க வேண்டும் என மனதிற்குள் முடிவு செய்து கொள்கிறான். ஆனால் அச்சம் தடுக்கிறது.

இன்னொரு நாள் மரியாவைப் பின்தொடர்ந்து போய் அலுவலகம் ஒன்றில். அவள் ஒரு லிப்டில் ஏறும் போது இது தான் டி கம்பெனியா எனக்கேட்கிறான். அவள் தலையை ஆட்டி ஆமாம் என்கிறாள்.

இதையா அவளிடம் கேட்கவிரும்பினேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் எனத் தன்மீதே ஆத்திரப்படுகிறான் அவள் யுவானை விநோதமாகப் பார்க்கிறாள். கூச்சத்துடன் விலகி வீடு திரும்புகிறான்

படுக்கையில் கிடந்த போது ஆழமான மனச்சோர்வை அடைகிறான் அடுத்தமுறை அவளுடன் நேரடியாகப் பேசிவிட முடிவு செய்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசுகிறான். இயல்பாக அவளைக் காபி ஷாப்பிற்கு அழைத்துப் போகிறான் ஆனால் அவளிடம் தன்னை எப்படி அறிமுகம் செய்து கொள்வது, எதற்காக அவளைப் பின்தொடர்வதாகச் சொல்வது என்பது குழப்பமாக இருக்கிறது

யுவானின் இப்படியான மனநிலை தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலில் வரும் நாயகன் மனநிலையைப் போன்றேயிருக்கிறது. காப்காவின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட காதல் நிகழ்வுகளும் இது போன்ற குழப்பமான மனநிலையின் வெளிப்பாடே. வெண்ணிற இரவுகள் நாவலில் வரும் கதாநாயகனுக்குப் பெயர் கிடையாது. அவன் ஒரு அடையாளம் மட்டுமே. யுவான் அந்த அடையாளத்தின் மறுவடிவம் போலிருக்கிறான்.

பின்னொரு நாள் மரியா ஒரு கடிதம் ஒன்றை எழுதி அவனிடம் ஒப்படைக்கிறாள், அந்தக் கடிதத்திலுள்ள அவளது கையெழுத்தைக் கொண்டு அவளும் தன்னைப் போலவே பதற்றமாகயிருக்கிறாள் எனக் கற்பனை செய்து கொள்கிறான்.

அதன் பிறகான நாட்களில் யுவானின் மனநிலை மேலும் அதிகமாக ஊசலாட ஆரம்பிக்கிறது. அவளுக்காக ஒரு கடிதம் எழுதி அதைத் தபால் நிலையத்தில் சேர்க்கிறான். ஆனால் திடீரென அந்தக் கடிதம் அவளுக்குப் போய்ச் சேரக்கூடாது என முடிவு செய்து தபாலில் சேர்த்த கடிதத்தைத் திரும்ப வாங்குவதற்கு போராடுகிறான். மரியா மீது தீவிரமான காதல் கொண்ட போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ள அவனால் முடியவேயில்லை.

ஒரு சந்திப்பின் போது அவள் உன்னைப் பற்றிச் சொல்லு எனக் கேட்கிறாள். தன்னைப் பற்றி எதையும் அவளிடம்  சொல்லமுடியவில்லை. இதனால் அவள் எரிச்சல் அடைகிறாள். அவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவளுக்குத் திருமணமாகிவிட்டதை அறிந்து கொண்ட போதும் காதலைக் கைவிட யுவானால் முடியவில்லை. கண்தெரியாத ஒருவனை ஏமாற்றுவதைப் போலக் காதலின் பெயரால் தன்னை ஏமாற்றுகிறாள் மரியா என வருந்துகிறான் யுவான்.

ஒருவரைக் காதலிப்பது என்றால் அந்த உணர்ச்சியிலே ஆழ்ந்து கிடப்பது என யுவான் நம்புகிறான். குடிவெறியில் ஒரு நாளிரவு அவனை மீறி மரியாவின் வீட்டுவாசலில் போய் நிற்கிறான். அவளது படுக்கை அறையில் உறங்க வேண்டும் என ஆசைப்படுகிறான். ஆனால்  மனதில் துணிச்சலில்லை. தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு வீடு திரும்புகிறான். துர்கனவுகள் வருகின்றன. தான் மரியாவின் நினைவுகளால் அலைக்கழிக்கபடுவதைத் தாங்கமுடியாமல் வேதனை கொள்கிறான். ஒவியம் வரைவதில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை. காதல் அவனைக் கொந்தளிக்க வைக்கிறது.

நாவலின் ஒரு இடத்தில் ஹன்டர் என்ற கதாபாத்திரம் வழியாகக் கரமசோவ் சகோதரர்கள் நாவல் பற்றிய உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதில் ரஷ்ய நாவல்களை என்னால் வாசிக்கவே முடியவில்லை. ஒரு நாவலில் எவ்வளவு கதாபாத்திரங்கள். ஒன்றின்பின் ஒன்றாக நாவல் முழுவதும் கதாபாத்திரங்கள் நிரம்பிவழிகிறார்கள். துயரமும் வேதனையும் விரக்தியும் வெறுமையும் கொண்ட அந்தக் கதையுலகத்தைத் தாங்கமுடியவில்லை. இதற்குப் பதிலாக எளிய துப்பறியும் நாவல்ளே எனக்குப் போதுமானதாகயிருக்கிறது என ஒரு கதாபாத்திரம் கூறுகிறது.

யுவான் காதலின் பெயரால் ஏமாற்றப்பட்டவனாகத் தன்னை உணருகிறான். அதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் கொலை செய்கிறான். தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலின் கதாநாயகன் ரஸ்கோல்நிகோவ் ஒருவேளை வட்டிக்கடைக்காரியைக் கொலை செய்யாமல் தனது காதலியைக் கொன்றிருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பானோ அது போலவே இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது

நாவலின் துவக்கத்தில் கேசில் சொல்கிறான்.

Criminals are the most decent and least offensive people among us

நாவலின் முடிவு இதற்கான நியாயத்தையே முன்னிறுத்துகிறது.

••

மிகச்சிறிய அத்தியாயங்கள். 90 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நாவல் வாசிப்பில் நமக்குள் புதிய சாளரங்களைத் திறந்துவிடுகிறது என்பதே நிஜம்

••

0Shares
0