Graphic Artist பூபதியை நேற்று புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். இவர் கலைவிமர்சகரான தேனுகாவின் பையன்.
மறைந்த கலைவிமர்சகர் தேனுகாவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அற்புதமான மனிதர். பூபதியைப் பார்த்த மாத்திரம் மனதில் தேனுகாவின் மலர்ந்த சிரிப்பும் வாஞ்சையும் பீறிட்டது.
பூபதி அகமதாபாத்திலுள்ள NIDயில் Graphic Design படித்து முடித்துவிட்டு தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். தனது கவிதை மற்றும் சிறுகதைகளை ஒவியத்துடன் சிறிய கிராபிக் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.
தனது இணையப்பக்கத்தில் இவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளும்படியாகவும் வைத்திருக்கிறார் பூபதி.
ilm noir படங்களைப் போல கறுப்பு வெள்ளையில் இவர் வரைந்துள்ள ஒவியங்கள் சிறப்பாகவுள்ளன. பூபதி மேற்கொண்டு வருவது போன்ற சின்னஞ்சிறிய கிராபிக் கதைகளே இன்றைய தேவை. இளந்தலைமுறைக்கு இந்த வகை புத்தகங்களை மிகவும் பிடிக்கும்.


உலகெங்கும் கிராபிக் நாவல்கள், கிராபிக் சிறுகதைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் தமிழில் ஒன்றிரண்டு முயற்சிகள் மட்டுமே நடந்துள்ளன. பூபதி முயன்றால் நிச்சயம் அவரால் சிறந்த கிராபிக் நாவல்களை உருவாக்க முடியும்.
தேனுகாவின் கனவுகளை பூபதி நிறைவேற்றிவருகிறார் என்பது சந்தோஷமாக இருக்கிறது .
பூபதிக்கு மிகச்சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. அவருக்கு என் அன்பும் வாழ்த்துகளும்