புத்தகம் வாசிப்பவர்கள்

புத்தகம் வாசிப்பதை பல முக்கிய ஒவியர்களும் ஒவியமாகத் தீட்டியிருக்கிறார்கள். இதில் கார்ல் ஸ்பிட்ஸ்வெக் (Carl Spitzweg) முக்கியமான ஒவியர். இவர் புத்தகம் வாசிக்கும் படிப்பாளிகள் பற்றி நிறைய ஒவியங்கள் வரைந்திருக்கிறார். இதில் மிகச்சிறந்த ஒவியம் புத்தகப்புழு.

கார்ல் ஸ்பிட்ஸ்வெக் 1808 ஆம் ஆண்டில் ம்யூனிச் நகரில் பிறந்தார். கவிஞரான இவர் சுயமுயற்சியால் ஒவியம் வரைய கற்றுக் கொண்டார். இவரது தந்தை ஒரு மருந்துக்கடை வைத்திருந்தார். ஆகவே கார்ல் ஸ்பிட்ஸ்வெக்கும் அதே தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் புத்தகம் வாசிப்பது மிக முக்கியமான பண்பாட்டு செயல்பாடாகக் கருதப்பட்டது. படித்த ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு புத்தகம் வாசித்தார்கள். வார மாத இதழ்களின் வெளியீடு பெருகியது

நூலகங்களுக்குப் போவதும் அரிய நூல்களைத் தேடிப்படிப்பதும் அறிவார்ந்த செயல்பாடாகக் கருதப்பட்டது. மகிழ்விடங்களில் படித்த புத்தகங்களைப் பற்றிப் பேசிக் கொள்வதும் விவாதிப்பதும் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கதைகளை மக்கள் முன் நின்று வாசித்தார்கள். அதைக் கேட்பதற்குப் பெருவாரியான கூட்டம் திரண்டது.

இளம் பெண்கள் நாவல் வாசிக்கக் கூடாது. வாசித்தால் கெட்டுப்போய்விடுவார்கள் என்று திருச்சபை கண்டனம் தெரிவித்தது. வால்டர் ஸ்காட், ஜுல்ஸ் வெர்ன். சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற நாவலாசிரியர்கள் பெரும் புகழ்பெற்றார்கள். புதிய நாவல்கள் வெளியாகும் நேரத்தில் புத்தகக் கடைகளின் முன்பாக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து புத்தகங்களைப் பெற்றுப் போனார்கள். வெளியில் செல்லும் போது கையில் புத்தகம் ஒன்றுடன் இருப்பது கௌரவமாகக் கருதப்பட்டது.

ராணுவ வீரர்கள் போர்களத்திலும் வாசிக்கப் புத்தகம் கேட்டார்கள். புத்தக வாசிப்பு பெரும் அலை போல ஐரோப்பாவினை ஆட்கொண்டிருந்தது. இந்தப் பின்புலத்தோடு தான் கார்ல் ஸ்பிட்ஸ்வெக்கின் ஒவியத்தை அணுக வேண்டும்.

இந்த ஒவியத்தில் ஏணியில் நிற்கும் மனிதர் ஒரு நூலகர் என்கிறார். இல்லை படிப்பாளி ஒருவரே நிற்கிறார் என்றும் கூறுகிறார்கள. எப்படியிருப்பினும் இந்த ஒவியம் அக்காலத்தைய அறிவாளியின் நிலையைக் கேலி செய்வதாகவே உள்ளது.

இதே ஒவியத்தின் மூன்று மாறுபட்ட வடிவங்களைக் கார்ல் வரைந்திருக்கிறார். முதல் ஒவியம் 1850ல் வரையப்பட்டது. அதன் பெயர் நூலகர். அதன் திருத்தப்பட்ட வடிவத்தை 1852லும் இறுதி வடிவத்தை 1884லும் வரைந்திருக்கிறார்.

புத்தகப்புழுவான ஒரு வயதான படிப்பாளி உயரமான நூலக ஏணியின் மீது நின்று கொண்டிருக்கிறார். அவரது காலிடுக்கில் ஒரு புத்தகம், இடது கையில் ஒரு புத்தகத்தை முகத்தை நேராக நீட்டிக் கொண்டிருக்கிறார். வலது கையில் திறந்த நிலையில் ஒரு புத்தகம். இடது கையிடுக்கில் இன்னொரு புத்தகம். இடது கையிலுள்ள புத்தகத்தை ஆழ்ந்து நோக்குகிற பார்வை. நரைத்த தலை. புத்தகங்கள் உயரத்திற்கு அவர் வளர்ந்து நிற்கிறார் என்றும் சொல்லலாம். அவரைச்சுற்றிலும் நான்கு வரிசைகளில் புத்தக அடுக்குகள். அலங்கார வேலைப்பாடு கொண்ட அலமாரிகள். படிப்பாளியின் கவனமற்றுச் சொருகியுள்ள கைக்குட்டை,

ஒவியத்தின் இடது ஒரம் ஒரு பூமி உருண்டை. தன்னுடைய உலகம் புத்தகங்களுடன் மட்டுமே. வெளியுலகம் தனக்குத் தேவையில்லை என்பது போன்றிருக்கிறது அவரது தோற்றம். “Metaphysics” என்ற பிரிவில் அந்த மனிதர் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய நூலகமது என்பது புத்தக அடுக்குகளைக் காணும் போது தெரிகிறது. பழமையான புத்தகங்கள் அடுக்கி வைக்கபட்டிருக்கின்றன. மேலிருந்து ஒரு பொன்னிற வெளிச்சம் அந்த மனிதர் மீது விழுகிறது.

அந்த மனிதர் எதையோ கண்டுவியந்தவரை போலப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது மூக்கு எவ்வளவு நுட்பமாக வரையப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். அவரது காலணிகளையும் உடையையும் கவனித்தால் அவர் கனவான் என்பது தெரியவருகிறது..

இந்த ஒவியம் எனக்கு ஸ்பெயின் எழுத்தாளரான மிகுவல் டீ செர்வான்டீஸ் எழுதிய டான் குயிக்ஸாட் நாவலின் கதாநாயகன் குயிக்ஸாட்டை நினைவுபடுத்துகிறது. அவன் புத்தகங்களுக்குள்ளே வாழுபவன். புத்தகங்கள் வழியாகவே உலகை அறிந்தவன். உண்மையான சாகசத்தைத் தேடி அவன் ஒரு நாள் வீட்டை விட்டுப் புறப்படுகிறான். அப்போது நிஜஉலகின் உண்மையான முகத்தைத் தெரிந்து கொள்கிறான். புத்தகம் உருவாகிய மனிதன் என்பதற்கு அடையாளமே குயிக்ஸாட்.

இந்த ஒவியத்தில் இருப்பவர் குயிக்ஸாட் போன்ற ஒருவரே. ஒவ்வொரு வாசகனும் புத்தகம் வழியாக ஒன்றை கண்டுபிடிக்கிறான். சந்தோஷம் கொள்கிறான். புத்தகம் தனக்கு ஏற்படுத்திய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவே உலகை நோக்கி வருகிறான். ஒரே நிலவை பல்லாயிரம் பேர் பல்லாயிரம் விதமாக ரசிப்பது போலத் தான் வாசிப்பும். பௌர்ணமி நாளில் அதைக் காண சிலர் கடற்கரைக்குப் போய்க் காத்திருக்கிறார்கள். சிலர் மலையுச்சியில் நின்று காத்திருக்கிறார்கள். சிலரோ ஜன்னலில் நிலா ஒளிரும் போது அதைக் கவனிப்பதில்லை. புத்தக வாசிப்பும் அப்படிப் பட்டதே.

ஒவியத்தில் மரஏணியில் நிற்கும் மனிதர் ஏன் இப்படிப் புத்தகத்தில் லயித்துப் போயிருக்கிறார். உண்மையில் புத்தகத்திடம் அப்படி என்னதான் இருக்கிறது. ஒரு புத்தகம் என்பது சொற்களின் பிரபஞ்சம். அதற்குள் நுழையும் ஒருவனை அந்த உலகின் வசீகரமும் வியப்பும் பீடித்துக் கொள்ளவே செய்யும். புத்தகத்தின் வழியாகவே காலவெளியை கடந்து இன்னொரு உலகிற்கு ஒருவனால் பிரவேசிக்க முடிகிறது. உலகை அடையாளம் காட்டுவதுடன் வாசிப்பவனின் அகத்தையும் புத்தகமே அடையாளம் காட்டுகிறது. புத்தகங்களின் வழியாகவே ஒருவன் சுயபரிசோதனையை மேற்கொள்கிறான்.

புத்தகப்புழு ஒவியத்தின் தொடர்ச்சியைப் போலக் கார்ல் ஸ்பிட்ஸ்வெக் வரைந்த இன்னொரு ஒவியத்தில் அதே மனிதன் தரையில் நின்று படித்துக் கொண்டிருக்கிறான். அதே உலக உருண்டை ஒரமாக இருக்கிறது. எங்கும் புத்தகங்கள் சிதறிக்கிடக்கின்றன

கார்ல் ஸ்பிட்ஸ்வெக் வரைந்த புத்தகம் படிக்கும் மனிதன் என்ற வேறு ஒவியத்தில் கண்முன்னே விரிந்திருக்கும் இயற்கையைக் கவனம் கொள்ளாமல் ஒருவன் புத்தகத்தினுள் ஆழ்ந்து போயிருக்கிறான். இன்னொரு ஒவியத்தில் பாதையைக் கவனிக்காமல் புத்தகத்தினுள் தனக்கான வழியைத் தேடுகிறான் இன்னொருவன். இப்படி ஒவ்வொரு ஒவியத்திலும் தன்னை மறந்து புத்தகத்தில் லயிக்கும் மனிதரையே கார்ல் ஸ்பிட்ஸ்வெக் வரைந்திருக்கிறார்.

நீங்கள் புத்தகம் வாசிப்பதை யாராவது ரகசியமாக வீடியோ எடுத்து உங்களிடம் காட்டினால் அப்போது தெரியும் நீங்கள் எவ்வளவு ஆழ்ந்து லயித்துப் போயிருக்கிறீர்கள் என்பது. உங்கள் முகபாவத்தின் வழியே சொற்கள் ஏற்படுத்திய வியப்பும் நெகிழ்வும் மகிழ்ச்சியும் கடந்து போவதை நீங்களே காண முடியும்.

இதே உணர்வைத் தான் கார்ல் ஸ்பிட்ஸ்வெக் ஒவியங்களும் அடையாளப்படுத்துகின்றன.

••

0Shares
0