இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் துவக்க நாள் முதல் இறுதி நாள் வரை அத்தனை நாட்களும் கலந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் புதிய புதிய அனுபவம். வித விதமான வாசகர்கள். புத்தகங்களின் கடலுக்குள்ளாக நாளெல்லாம் நீந்தியபடியே இருந்தது மிகுந்த மனவெழுச்சி தந்தது.ஊடகங்கள் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு தந்த முக்கியத்துவம் மிகுந்த பாராட்டிற்குரியது. அன்றாடம் ஸ்ருதி டிவி மூலம் நேரலையில் புத்தகக் கண்காட்சி குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். நிறைய நூல்களைப் பரிந்துரை செய்தேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கினேன். ஐந்து புத்தக வெளியீடுகளில் கலந்து கொண்டேன்.
நிறைய வாசகர்கள் எனது புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாகவே அதைக் காண்கிறேன்
புத்தகக் கண்காட்சியில் என்னை சந்தித்த வாசகர்களுக்கும், சக படைப்பாளிகளுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், ஸ்ருதி டிவிக்கும், 42 புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்திய பபாசிக்கும் எனது மனம் நிரம்பிய நன்றிகள்
புத்தகக் கண்காட்சி செய்திகளை தினமும் முழுப்பக்கம் வெளியிட்டு சிறப்பு செய்த தமிழ் இந்து நாளிதழுக்கும், நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அவர்களுக்கும் மிகுந்த நன்றி. இது போலவே தினமணி, தினந்தந்தி. தினமலர் ,நியூஸ் 18, சன்நியூஸ், கலைஞர் செய்திகள், புதிய தலைமுறை, நியூஸ் செவன், ஆகியவை புத்தகக் கண்காட்சி குறித்து சிறப்பாகச் செய்திகளை வெளியிட்டார்கள். சில நேரலைகள், விவாதங்களில் நான் கலந்து கொண்டேன். அவர்களுக்கும் மனம் நிரம்பிய நன்றி
நிறைய நண்பர்கள் இணையத்திலும் முக நூலிலும் தேசாந்திரி அரங்கு பற்றியும் எனது புத்தகங்கள் குறித்தும் எழுதினார்கள். அவர்களுக்கும் நன்றிகள்என்னையும் எழுத்தையும் நேசிக்கும் வாசகர்கள் என்றும் அன்பிற்கும் நன்றிக்கும் உரியவர்கள்
••
(நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் )


