தபால்காரனின் நாட்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்ய சினிமாவில் புது இயக்குநர்கள் மிகச்சிறப்பான படங்களை உருவாக்கிவருகிறார்கள். ஹாலிவுட் சினிமாவிற்குப் போட்டியாகப் பிரம்மாண்டமான படங்கள் ரஷ்யாவிலும் உருவாக்கப்படுகின்றன. Gogol Viy (2018) என்ற படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். கோகல் எழுதிய திகில் கதையைப் பிரமாண்டமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

இது போலவே Mathilde (2017) என்ற படமும் நடனமும் இசையும் கலந்த சரித்திரக் கதையை விவரிக்கிறது. இப்படமும் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது

யதார்த்தப் படங்கள் ஒரு பக்கமும் மறுபக்கம் ஹாலிவுட் போன்று பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்களுமாக ரஷ்ய சினிமா சர்வதேச சந்தையை மையப்படுத்தி முன்னேறி வருகிறது.

Andrei Konchalovsky இயக்கிய “The Postman’s White Nights ஒரு தபால்காரனின் வாழ்க்கையை விவரிக்கிறது. 2014ல் வெளியாகி வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றுள்ள இப்படத்தில் ஒன்றிரண்டு கதாபாத்திரங்களைத் தவிர அத்தனை பேரும் உண்மையான கிராமவாசிகள்.

ஆர்காங்கெல்ஸ்க் பிராந்தியத்திலுள்ள கிராமம் ஒன்றுக்குச் செல்லும் தபால்காரனின் பயணமும் அவனது தனிமையான வாழ்க்கையுமே படத்தின் மையக்கரு.

தபால்காரன் தான் கிராம மக்களையும் உலகையும் இணைக்கும் பாலம்.

தனித்துவிடப்பட்ட அந்தக் கிராம மக்களுக்குத் தேவையான ரொட்டியிலிருந்து பல்ப் வரை தபால்காரன் வாங்கிக் கொண்டு போகிறான்.

பழைய புகைப்படங்களை வைத்துக் கொண்டு தனது கடந்தகாலத்தை நினைவு கொள்ளும் லிவோகாவிடமிருந்து படம் துவங்குகிறது

குடிகாரனாகத் தனிமையில் வாழும் தபால்காரன் லியோகா அதிகாலையில் படுக்கையில் பாதி உறக்கத்தில் இருக்கிறான். எழுந்து கொள்ள மனமில்லை. ஆனால் வேலைக்குக் கிளம்ப வேண்டும். மெதுவாகத் தனது நாளை துவங்குகிறான். படகில் சென்று தலைமை தபால் நிலையத்தை அடைகிறான் . அங்கே தான் விநியோகம் செய்ய வேண்டிய தபால்கள் மணியாடர்களைப் பெற்றுக் கொண்டு கிராமவாசிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு படகில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறான். கினாஜிரோ என்ற ஏரியில் படகு செல்கிறது. நீண்ட பயணத்தின் பிறகு சிறிய கிராமம் ஒன்றை அடைகிறான். இயற்கையோடு இணைந்து வாழும் சின்னஞ்சிறிய கிராமம். ஆள் நடமாட்டமில்லாத வீதிகள். வீசி எறியப்பட்ட தீப்பெட்டி போலச் சிதறிக்கிடக்கும் சிறிய வீடுகள். தபால் விநியோகிப்பதுடன் ஊர்மக்களின் அன்றாட விஷயங்களிலும் ஆர்வம் கொண்டு கலந்துரையாடுகிறான் லியோகா.

லியோகாவோடு பள்ளியில் படித்த இரினா அந்த ஊரில் வசிக்கிறாள்.. அவளது இளம் மகன் தீமோருடன் லியோகா நட்பாகப் பழகுகிறான். அவனுக்கு மீன்பிடிக்கக் கற்றுத்தருகிறான். அத்தோடு உருளைகிழங்கு எடுக்கவும் விவசாயம் செய்யவும் பழக்கித்தருகிறான். கணவன் இல்லாமல் வாழ்ந்து வரும் இரினா மீது ரகசியக் காதல் கொண்டிருக்கும் லியோகா அவளுக்குப் பல்வேறு விதங்களில் உதவிகள் செய்கிறான். அவளோ இந்த ஊரை விட்டு நகரத்திற்கு மாறிப் போக ஆசைக் கொண்டிருக்கிறாள்.

கிராமத்தில் வசிக்கும் முதியவர்களில் ஒருவர் காரணமேயில்லாமல் தனது மனம் சஞ்சலம் கொள்கிறது. சொல்லமுடியாத துக்கம் கொண்டிருக்கிறது. இது பணமோ, உடல்நலமோ சார்ந்த கவலையில்லை. வாழ்க்கை இவ்வளவு தானா என்பது போன்ற கவலை என்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்கிறான் லியோகா

இன்னொருவர் போதையில் தன் வீட்டிலிருந்து வெளியேறி திரும்பப் போக வழிதெரியாதவர் போலச் சுற்றிக் கொண்டிருக்கிறார். படத்தில் இடிந்த பள்ளிக்கூடம் ஒன்றை லியோகா பார்வையிடும் காட்சி மிகவும் மனதைப் பாதிக்கக் கூடியதாக இருந்தது.

ஒரு நாள் லியோகாவின் படகில் இருந்த மோட்டார் திருடு போய்விடுகிறது. படகு இல்லாமல் தன்னால் தபால்களை விநியோகம் செய்யப்போக முடியாது. வேறு மோட்டார் வாங்குவதற்கும் தன்னிடம் பணமில்லை என்கிறான் லியோகா. இதனால் அவனது வேலை பாதிக்கபடுகிறது. அர்த்தமற்ற நாட்களை ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற வெறுமையை உணருகிறான்.

ஒவ்வொரு நாளும் இரவில் எங்கிருந்தோ ஒரு மர்மப்பூனை தன் மீது வந்து அமர்வதாகக் கற்பனை செய்கிறான். அந்தப் பூனை மரணத்தின் தூதுவன் போலவே இருக்கிறது.

இதற்கிடையில் ஊரை விட்டு வெளியேறிப் போவது என இரினா முடிவு செய்கிறாள். முடிவில் தபால்காரனின் வாழ்க்கை என்னவானது என்பதைச் சுற்றி படம் முடிகிறது

தபால்காரனின் வழியாகத் தொலைதூர கிராமம் ஒன்றின் பரபரப்பில்லாத வாழ்க்கை நமக்கு அறிமுகமாகிறது. எளிமையான வாழ்க்கை வாழும் மனிதர்கள் அறிமுகமாகிறார்கள். படகைத் தவிர வேறு வாகனங்கள் இல்லை. செய்தி தாள்கள் கூடத் தபால்காரன் தான் கொண்டுவந்து தருகிறான். உண்மையில் அவர்கள் வேறு ஒரு காலத்தில் வாழுகிறார்கள்.

படத்தின் ஒரு காட்சியில் ஒரு கிழவி இறந்து போய்விடவே அவளுக்கு இறுதிக்காரியங்கள் செய்ய ஊர்மக்கள் ஒன்று கூடுகிறார்கள். இயந்திரப் படகில் அவள் உடலைக் கொண்டு போகிறார்கள். அந்தக்காட்சி மறக்கமுடியாதபடி படமாக்கப்பட்டிருக்கிறது

ஏரியில் படகு செல்லும் காட்சிகளும் பனிக்காலத்து கிராமப்புறக்காட்சிகளையும் மிகச்சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் தபால்காரனாக நடித்திருப்பவர் Aleksei Tryapitsin என்ற உண்மையான தபால்காரனே.

இது போலவே Postmen in the Mountains என்ற சீனத்திரைப்படத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பாகப் பார்த்திருக்கிறேன். அதுவும் தபால்காரரைப் பற்றியதே. மேற்கு ஹுனான் மாகாணத்தின் மலைப்பகுதியில் உள்ள மலைக்கிராமம் ஒன்றுக்குத் தபால் கொண்டு செல்லும் ஒருவரின் கதையது. முதுமையால் மலையேற முடியாத அவர் தன் மகனுக்குத் தபால் பணிகளைக் கற்றுத்தருவதற்காக உடன் அழைத்துக் கொண்டு செல்கிறார். அதன்பிறகு இளம் தபால்காரன் ஒரு நாயுடன் மலையில் புதிய தபால்காரனாகப் பயணிக்கிறான். அவனது பயணத்தின் வழியே தந்தை அந்த மலைக்கிராம மக்களின் அன்பைப் பெற்றிருப்பதை உணர்ந்து கொள்கிறான். மிக அற்புதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட படமது.

Il Postino என்ற படமும் தபால்காரனைப் பற்றியதே. ஆனால் இப்படம் கவிஞனாக உருமாறும் ஒரு தபால்காரனின் வாழ்க்கையை விவரிக்கிறது. கவிஞர் பாப்லோ நெரூதா தலைமறைவாக வாழ்ந்த நாட்களில் அவருக்கு வரும் தபால் பையைத் தூக்கிக் கொண்டு வரும் தபால்காரனின் வாழ்க்கையைப் பற்றியது இப்படம். தபால்காரனை நெரூதா எப்படிக் கவிஞராக உருமாற்றுகிறார் என்பதை அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள்.

The Good Postman என்ற ஆவணப்படம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பல்கேரிய கிராமப்புறத்தில் வாழ்ந்த தபால்காரனின் வாழ்க்கை நெருக்கடிகளை விவரிக்கிறது.

இப்படித் தபால்காரனை மையப்படுத்தி நிறையத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

The Postman’s White Nights முதன்மைப்படுத்துவது தபால்காரனின் வேலையை அல்ல அவனது தனிமையை. உலகிலிருந்து துண்டித்து வாழும் கிராமவாசிகளின் தனிமையை மட்டுமில்லாமல், குடியில் சிக்கி மீண்டுவரும் தபால்காரனின் தனிமையையும் படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அதுவே இப்படத்தைச் சிறந்த கலைப்படைப்பாக மாற்றுகிறது

••

0Shares
0