நெதர்லாந்து அரசாங்கம் தேசிய புத்தகத்தினத்தைக் கொண்டாடும் விதமாக அன்று ரயிலில் பயணிகள் டிக்கெட்டிற்குப் பதிலாக ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது புத்தகம் படிக்கிறவர்களுக்கு ரயில் பயணம் இலவசம்.
1932 முதலே நெதர்லாந்து அரசாங்கம் புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இலக்கிய நிகழ்வுகள், புத்தக வாசிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில நூல்களை அரசே அச்சிட்டு இலவசமாகவும் வழங்கி வருகிறது.
டச்சு இலக்கியங்களை கொண்டாடும் விதமாக பத்து நாட்கள் புத்தக வாசிப்பு தினங்களாக கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி தேசமெங்குமுள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுகிறார்கள். இந்த புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புகழ்பெற்ற ஒரு எழுத்தாளரை அரசே புதிய நாவல் ஒன்றை எழுத வைத்து அதை இலவசமாக அச்சிட்டு தருகிறார்கள்.
இது மட்டுமின்றி முக்கிய இலக்கிய விழாக்கள். கருத்தரங்குகளை ரயில்வே நிர்வாகமே ஸ்பான்சர் செய்து ஆண்டு முழுவதும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தனது வாசிப்பு அனுபவத்தைப் பலரும் பகிர்ந்து கொள்ளும்படியான போட்டிகளையும் நடத்தி வருகிறது.
புத்தகப்பரிசு கொடுப்பதை ஊக்கப்படுத்தும் விதமாகப் பல்வேறு புத்தகக் கடைகள் சிறப்புச் சலுகைகளையும் பரிசுக்கூப்பன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன.
இளந்தலைமுறையை வாசிக்க வைப்பதற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை முன்வைத்துச் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய அமைப்பு. ஆனால் இது போன்ற செயல்கள் எதையும் அவர்கள் மேற்கொண்டதில்லை.
ரயில் நிலையங்களில் ரீடிங் ரூம் அமைப்பது, ரயிலில் நூலக வசதி செய்து தருவது. ரயில்வே நிர்வாகம் முன்வந்து இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது, எழுத்தாளர்களின் பயணங்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தருவது என்று இந்திய ரயில்வே நிர்வாகம் நினைத்தால் வாசிப்பையும் இலக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
செய்வார்களா என்பது பகற்கனவு காண்பது போன்றதே
