Ode to My Father 2014ல் வெளியான கொரியப்படம். ஒரு தந்தையின் வாழ்க்கைப் போராட்டத்தை, வலியை மிகச்சிறப்பாகப் பதிவு செய்துள்ள நவீன காவியம் என்றே சொல்வேன்.
கொரிய சினிமா என்றாலே கொலை, போதை மருந்துகடத்தல், செக்ஸ், பேய், மாபியா என்ற பிம்பத்தை மாற்றி ஒரு மனிதனின் வாழ்க்கையை அவனது பத்துவயதில் துவங்கி முதுமை வரை அழுத்தமாகச் சித்தரிக்கிறது இத்திரைப்படம்.
டீக்-சோ என்ற கதாபாத்திரத்தின் வழியாக வட கொரிய அகதிகளின் கதையை நாம் அறிந்து கொள்ளத் துவங்குகிறோம். கிளாசிக்கல் நாவல் ஒன்றை வாசித்து முடித்த போது ஏற்படும் மனநிலைக்கு நிகரான அனுபவத்தைத் தருகிறது இப்படம்.
Yoon Je-kyoon இயக்கிய இப்படம் 126 நிமிஷங்கள் ஒடக்கூடியது. இந்த இரண்டு மணி நேரத்திற்குள் நாம் ஒரு தேசத்தின் வரலாற்றை, பெரும் காலமாற்றத்தை, மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் காணுகிறோம்.
படம் துவங்கும் போது யோன் டீக்-சோ முதியவராக இருக்கிறார். அவரது நினைவுகளே படமாக விரிவு கொள்கிறது.
கொரியா இரண்டாம் உலகப்போரின் இறுதிவரை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜப்பான் ராணுவத்தை எதிர்த்து சோவியத் யூனியன் சண்டையிட்டு கொரியாவை தன் வசமாக்க முயன்றது. இதே நேரம் கொரியாவை சோவியத்தின் பிடியில் அனுமதிக்க விரும்பாத அமெரிக்கப் படைகள் தெற்குப் பக்கத்தில் இருந்து ஜப்பானை எதிர்த்துப் போராடி அதைச் சரணடைய வைத்தன. இதனால் வடகொரியா சோவியத் சார்பாகவும், தென்கொரியா அமெரிக்கா சார்பாகவும் இரண்டாகப் பிளவு பட்டது.
அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யாவிற்கு இடையில் இருந்த பனிப்போருக்கு மையமாக விளங்கியது கொரியா. இரண்டு கொரியாவும் இணைய வேண்டும் என்று மக்கள் விரும்பிய போதும் வல்லரசுகளின் பனிப்போர் அதைத் தடுத்து வைத்திருந்தது. இச் சூழலில் இரண்டு கொரிய தேசங்களுக்கும் இடையில் கொரிய யுத்தம் 1950ல் உருவானது. இரணடாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிக மோசமான யுத்தமது.
அந்த யுத்தமும் அதைத் தொடர்ந்த அகதி வாழ்க்கையுமே இப்படத்தின் மையப்புள்ளி.
1950 ஆம் ஆண்டுத் தொடங்குகிறது படம். வடகொரியாவின் துறைமுக நகரமான ஹங்னம் பகுதியை தன்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தென்கொரியா. இதற்கு அமெரிக்கா உதவி செய்தது. இழந்த தங்கள் நிலத்தை மீட்க வடகொரியா தாக்குதலை நடத்த துவங்கியது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வடகொரியர்கள் புலம்பெயர்ந்து அகதிகளாகத் தென்கொரியாவிற்கும் வேறு தேசங்களுக்கும் சென்றார்கள்
கொரிய யுத்தம் துவங்கிய நாளில் ஹங்னம் பகுதி மக்கள் விமானத் தாக்குதலுக்குப் பயந்து தப்பியோடுகிறார்கள். அங்கே தான் யோன் டீக்-சோவின் (Yoon Deok-soo..) கதை துவங்குகிறது. அவன் பத்து வயது சிறுவன். அவனது தந்தை, தாய், சகோதர சகோதரிகள் எனக் குடும்பமே உயிர்தப்பி ஒடுகிறார்கள். கடற்கரை எங்கும் மனித தலைகள். உயிர்தப்பும் போராட்டம்.
மெர்டித் விக்டரி என்ற அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று அவர்களை அகதிகளாக ஏற்றிக் கொள்ளச் சம்மதிக்கிறது. அக்கப்பலை நோக்கி மக்கள் ஒடுகிறார்கள். கயிற்று ஏணியில் தொற்றி ஏறுகிறார்கள். தடுமாறி விழுந்து சாகிறார்கள்.
தன் குட்டித்தங்கையை அணைத்துக் கொண்டு கயிற்று ஏணியில் ஏறும் டீக்-சோ எதிர்பாராமல் தன் தங்கையைப் பறிகொடுக்கிறான். மகள் கிழே விழுந்துவிட்டாள் என்று அவளைத் தேடி தந்தை கப்பலைவிட்டு கிழே இறங்குகிறார்.
கிழே இருந்தபடியே யோன் டீக்-சோவிடம் அவனது தந்தை நான் திரும்பி வரும்வரை நீ தான் குடும்பத்தின் மூத்த மகனாகப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார். அந்த வாக்குறுதி தான் படத்தின் குவிமையம்.
கூட்டத்திற்குள் யோன் டீக்-சோவின் தங்கையைத் தந்தையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் கப்பல் கிளம்புகிறது. துறைமுகமெங்கும் குண்டுவெடிப்பு நிகழ்கிறது. டீக்-சோவின் அம்மா கதறுகிறாள். டீக்சோ பரிதவிக்கிறான். கப்பல் புறப்படுகிறது
கப்பல் தென்கொரியாவை வந்து அடைகிறது. புசான் நகரில் யோன் டீக்-சோவின் அத்தை சிறிய துணிக்கடை நடத்திக் கொண்டிருக்கிறாள். அந்தக் கடைக்கு வந்து அடைக்கலமாகிறார்கள்.
யோன் டீக்-சோவின் பள்ளி வாழ்க்கை. அதில் ஏற்படும் கஷ்டங்கள். அவர்கள் குடும்பம் படும் இன்னல்கள். என பால்யகாலம் விரிகிறது
டீக்-சோ ஷு பாலீஸ் போடும் பையனாக வேலை செய்து சம்பாதிக்கிறான். அப்போது கப்பலில் கேப்டன் ஆக வேண்டும் என்று மனதில் ஆசை உருவாகிறது.
அந்த நாட்களில் அவன் தொடர்ந்து பலராலும் அவமானப்படுத்தபடுகிறான். ஒருமுறை தெருவில் அவனை மூன்று பேர் சேர்ந்து காலால் உதை உதையென உதைக்கிறார்கள். அடியும் உதையும் தந்த ஆறாத மனவலியோடு வளர்க்கிறான் டீக்சோ.
போர் முடிந்து போனாலும் இனி தாங்கள் ஊர் திரும்ப முடியாது என்ற நிலையை யோன் டீக்-சோ உணர்ந்து கொள்கிறான். அவன் குடும்பச்சுமையை ஏற்றுக் கொள்கிறான். தனது படிப்பை விடவும் சகோதரன் படிப்பு முக்கியம் என ஜெர்மனியில் உள்ள சுரங்க வேலைக்காக வெளிநாடு புறப்படுகிறான். உடன் அவனது நண்பனும் இணைந்து கொள்கிறான்.
நிலக்கரி சுரங்கத்தில் அவர்கள் படும் கஷ்டங்கள் ஏராளம். அங்கே எலும்புகள் நொறுங்கும் வேலை. தூரத்துக் குடும்பத்தை மனதில் நினைத்தபடியே உறக்கமற்றுக் கிடக்கிறான். ஒரு நாள் தற்செயலாக இளம் நர்ஸ் ஒருத்தி அறிமுகமாகிறாள். அவளும் கொரியாவைச் சேர்ந்தவள். அவள் எதற்காகவும் அழுவதேயில்லை. சோகத்தை மனதிற்குள் புதைத்தபடியே வாழுகிறாள். அவளுடன் நெருக்கமான நட்பு கொள்கிறான். அது காதலாக உருமாறுகிறது.
ஒருமுறை எரிவாயு வெடித்துச் சுரங்கத்தில் யோன் டீக்-சோ சிக்கிக் கொள்கிறான். மரணத்தை முத்தமிட்ட தருணத்தில் குடும்பப் பொறுப்புகள் நினைவில் கொப்பளிக்கின்றன. அவன் செய்யவேண்டிய கடமைகள் மீதமிருப்பது போல வாழ்க்கை அவனைக் காப்பாற்றுகிறது.
சக தொழிலாளர்களால் முயற்சியால் காப்பாற்றபட்டு உயிர் பிழைத்து ஊர் திரும்புகிறான். பின்பு தன்னைக் காதலித்த நர்ஸை டீக்-சோ திருமணம் செய்து கொள்கிறான். மணவிழாவில் நடக்கும் பாட்டுபோட்டி நல்ல நகைச்சுவை.
அதன்பிறகான நாட்களில் அவனது அத்தை இறந்து போகிறாள். அவளது கடையைத் தானே விலைக்கு வாங்க பணம் தேடி மீண்டும் வியட்நாம் யுத்த களத்திற்கு டீக்-சோ போகிறான். அங்கே நடைபெறுவது மறக்கமுடியாத நிகழ்வுகள்.
தன்னைப் போலவே வியட்நாம் மக்களும் அகதியாக்கபடுவதைக் காணும்போது கலங்கி விடுகிறான். தன் உயிரை பணயம் வைத்து அகதிகளைக் காப்பாற்றுகிறான். அதில் அவனது ஒரு கால் துண்டிக்கபடுகிறது..
ஒற்றைகாலுடன் யோன் டீக்-சோ ஊர் திரும்புகிறான். இப்படி உருக்குலைந்து நிற்கிறானே என்று அவனது நிலையைக் கண்டு மனைவி கதறி அழுகிறாள். அவளை ஆறுதல் படுத்துகிறான் டீக் சோ..
அத்தையின் கடையை விலைக்கு வாங்கி டீக்-சோவே நடத்த ஆரம்பிக்கிறான்.
காலம் மாறுகிறது. தென்கொரியாவின் KBS சேனல் போரில் பிரிந்த குடும்பங்களைத் தேடிக்கண்டுபிடித்து ஒன்று சேர்க்கும் பணியை துவக்குகிறது. அதில் கலந்து கொண்டு காணாமல் போன தனது தங்கை மற்றும் தந்தையைத் தேடத் துவங்குகிறான்.
அமெரிக்காவில் இருந்த தங்கை கண்டுபிடிக்கபடுகிறாள். KBS சேனல் அவனை நேரலையில் பங்குபெற அழைக்கிறது. பிரிந்த தங்கை நீண்ட பல வருஷங்களுக்குப் பிறகு ஒன்று சேருகிறாள். படத்தின் மிக முக்கியக் காட்சியது. மனதை உலுக்கிவிடுகிறது.
படத்தின் துவக்கத்தில் டீக் சோவின் பேத்தி ஞாபகம் என்றால் என்னவென்று கேட்கிறாள். சாலையோர சிலைகளைக் காட்டி இது போலப் பழைய வாழ்க்கையை அடையாளப்படுத்துவது என்கிறான் டீக்சோ
படத்தின் முடிவில் தனது தந்தையின் புகைப்படத்தின் முன்னால நின்று டீக்-சோ அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டேன். ஆனால் வாழ்க்கை ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று சொல்லி அழும் போது ஒரு தந்தையின் அன்பை பூரணமாக உணர்ந்து நாமும் கண்ணீர் விடுகிறோம்.
போரில் இழந்த தங்கையை மீட்கும் டீக்-சோ நம் காலம் வெறுப்பும், சுயநலமும் நிரம்பியதாக இருப்பதை உணருகிறான். இதற்குத் தானா இத்தனை போராட்டம், யுத்தம் என்று ஒரு இடத்தில் கேட்கிறான். அது ஒரு தேசத்தைப் பார்த்து தனிமனிதன் கேட்கும் கேள்வி என்றும் எடுத்துக் கொள்ளலாம்
குடும்பத்தின் பொருட்டு வாழ்ந்து கஷ்டங்களைத் தாங்கிக் கொண்ட யோன் டீக்-சோவும் அவனுக்கு உறுதுணையாக உள்ள அவனது மனைவியும், நண்பனும் மறக்கமுடியாத கதாபாத்திரங்கள்
இப்படி ஒரு கதாபாத்திரத்தின் முழு வாழ்க்கையைத் திரையில் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் கொரியாவில் வெளியான படங்களில் மிக அதிகமாக வசூலைப் பெற்ற படம் என்கிறார்கள். ஒரு தேசமே தன் கடந்த காலத்தை இப்படத்தின் வழியே திரும்பிப் பார்த்துக் கொண்டது என்பதே நிஜம். கொரிய சினிமாவின் அற்புதம் இதுவென்பேன்.
தனது தங்கையுடன் கப்பலில் ஏற முற்படும் டீக்-சோ முகத்தில் காணப்படும் பயம் நிஜமாகவுள்ளது. தங்கையின் உடை கிழிந்து அவள் கிழே விழுந்தவுடன் அறுபட்ட துணியைக் கையில் வைத்தபடியே அவன் கதறும் போது அந்த வலி நம்மையும் பற்றிக் கொள்கிறது.
தன் மகளை மீட்பதற்காகத் தன்னையே பலிகொடுத்தும் டீக்-சோவின் தந்தையில் துவங்கி குடும்பத்திற்காகத் தனது ஆசைகளை, கனவுகளைப் பலி கொடுத்துக் கொள்ளும் டீக்-சோ வாழ்க்கை வரை நாம் காணுவது குடும்பத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் மனிதனின் நிகரற்ற அன்பையே.
டீக்-சோ சந்தோஷமாக இருப்பது அவன் ஜெர்மனியில் வேலை பார்க்கும் நாட்களில் தான். கடினமான சுரங்கப்பணியில் வேலை செய்த போதும் காதல் அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. ஒரு இரவு தன் காதலியின் கைகளைத் தொட்டுவிட்ட சந்தோஷத்தில் வீதியில் உற்சாகமாகச் செல்கிறான் டீக்-சோ, அதுவே அவன் அடைந்த உச்சபட்ச மகிழ்ச்சி.
அது போலவே டீக்-சோ ஊர் திரும்பும் நாளில் தாயும் சகோதர சகோதரிகளையும் ஆசையோடு அவனை வரவேற்கும் போது அவர்கள் முகத்தில் உண்மையான சந்தோஷம் பீறிடுகிறது. அந்தக்காட்சியில் யோன் டீக்-சோ தன் தாயை முதுகில் தூக்கிக் கொண்டு சுமக்கிறான். ஒடுகிறான். அவனது தாயும் அவனுக்கு ஒரு பிள்ளை போலத் தான் என்பது போலவே அக்காட்சியிருக்கிறது. டீக்-சோ செய்யும் காரியங்கள் வயதை மீறி அவனுக்கு ஒரு முதிர்ச்சியைத் தருகின்றன. யோன் டீக்-சோவின் நண்பன் அவனுக்குத் தொடர்ந்து ஆறுதல் தருகிறான். ஆலோசனைகள் சொல்கிறான். அவர்களின் நட்பு அற்புதமானது.
அதுபோலவே முதுமையில் இத்தனை நாட்கள் நடத்தி வந்த கடையை மூடிவிடும்படி பிள்ளைகளே வலியுறுத்தும் போது டீக்-சோ கொள்ளும் கோபமும் ஆதங்கமும் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.
டீக்-சோவின் தாய் பிள்ளைகளின் பொருட்டு மட்டுமே உயிர்வாழுகிறாள். அவளது மனவுறுதியும், அன்பை வெளிப்படுத்தும் விதமும், கண்களில் துயரத்தை மறைத்துக் கொண்டு வாழுவதும், பிரிந்து போன மகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கதறி அழுவதும் மறக்கமுடியாத திரைஅனுபவத்தை தருகிறது.
ஒரு காட்சியில் முதுமை அடைந்து விட்ட டீக்-சோவின் மனைவி பிள்ளைகளின் முன்னால் தங்கள் விருப்பத்தைக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று கணவனை முதுகில் அடித்துத் தடுக்கிறாள். விடுமுறைக்காகத் தங்களிடம் விட்டுப் போன பேரப்பிள்ளைகளை ஆசையாக அரவணைத்துக் கொள்கிறாள். இத்தனை ஆண்டுகள் தன்னோடு வாழ்ந்தும் கணவனின் கனவுகளை அறிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்று கலக்கம் கொள்கிறாள். அவளது பாத்திரப்படைப்பும் மிக அழகாக உருவாக்கபட்டுள்ளது
என்றோ தந்தைக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை முன்னிட்டு இன்றும் அந்தக் கடையை அப்படியே டீக் சோவ் காப்பாற்றி வருவதும். தன் தந்தை நிச்சயம் தங்களைத் தேடி வருவார் என்று நம்பிக்கை கொள்வதும் அவனை ஒரு காவியநாயகனைப் போல உருமாற்றுகிறது. உண்மையில் போரில் இறந்து போன தந்தை தான் டீக்-சோவாக உருமாறியிருக்கிறார். தந்தை என்பதே நற்செயல்கள் தானே.
சிறுவயதில் டீக்-சோ வந்தேறி என்று கேலி செய்யப்படுகிறார். துரத்தப்படுகிறார். வட கொரியாவை சேர்ந்தவர் என்பதாலே கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டப்படுகிறார். கஷ்டப்பட்டு வேலை செய்து பிழைத்தாலும் வடகொரியர்கள் இரண்டாம் தர பிரஜையாகவே நடத்தப்பட்டார்கள் என்பதை படம் அழுத்தமாக முன்வைக்கிறது.
ஒரு காட்சியில் டீக்-சோ தன் காதலிக்குப் பிடித்த கொரிய வகை உணவுகளைத் தயாரித்துக் கொண்டு வந்து அவளுக்குத் தருகிறான். அவள் ஆசையாக அதைச் சாப்பிடுகிறாள். அப்போது அவள் முகத்தில் தெரியும் சந்தோஷம் தான் எத்தனை அழகாக உள்ளது. பின் ஒரு காட்சியில் மருத்துவமனையில் நலம் பெறும் அவனிடம் தனக்காக உணவு சமைத்துக் கொடு என்று உரிமையோடு கேட்டு சிரிக்கிறாள்
இது போலவே சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் டீக்-சோவின் கரிபடிந்த கைகளை அவள் இறுக்கமாக பற்றிக் கொள்கிறாள். டீக்-சோவின் ஒரு கண் லேசாகத் திறந்து அதைக் கவனிக்கிறது. இனி தான் பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை அவனுக்கு உருவாகிறது. மிகக் கவித்துவமாக உருவாக்கபட்ட காட்சியது.
வியட்நாம் போரின் போது அகதிகளாகத் தங்களையும் படகில் ஏற்றிக் கொள்ளச் சொல்லி ஒரு பாட்டி கெஞ்சுவதும், குறைந்தபட்சம் இந்தக் குழந்தைகளை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என்று அவள் கேட்பதும் அப்படியே டீக்-சோ வாழ்வின் மறுபக்கமாக உள்ளது
யோன் டீக்-சோவின் வாழ்க்கையில் தான் எத்தனை துயரங்கள். வீழ்ச்சிகள். நெருக்கடிகள். அவன் மனவுறுதியோடு அவற்றைச் சந்திக்கிறான். வீழ்ச்சி அடைந்தபோதும் எழுந்து நிற்கிறான். குடும்பத்தின் தேவைகள் அத்தனையும் நிறைவேற்றுகிறான்.
இது கொரிய மொழிப்படம் என்ற போதும் அந்த வாழ்க்கைக்கும் தமிழ் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை. எனக்கு தெரிந்த பல தந்தைகள் நினைவில் வந்து போனார்கள்.
படம் முடியும் போது மறக்கமுடியாத ஒரு தந்தையாக மனதில் ஒளிரத் துவங்குகிறான் டீக்-சோ.
டீக்-சோவின் அகன்ற சிறகுகள் தன் பிள்ளைகளை, சகோதர சகோதரிகளைத் தாயை அணைத்துக் கொள்ளவே பயன்பட்டிருக்கின்றன. தன் சிறகுகளைக் கொண்டு அவன் வானில் பறந்து சந்தோஷம் கொள்ளவேயில்லை.
தந்தை எப்போதுமே பிறர் அறியாமல் தனிமையில் தான் அழுகிறார்.
உலகெங்கும், அது தான் தந்தையின் இயல்பு போலும்.
••