கி.ரா- 97

நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற கி.ரா- 97 நிகழ்வில் கலந்து கொண்டேன். கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராவின் பிறந்தநாளை எல்லோரும் இணைந்து சிறப்பாகக் கொண்டாடினோம். குடும்பத்துடன் அவரிடம் ஆசி பெற்றேன்.

நிகழ்விற்கு அரங்கு நிரம்பிய கூட்டம். கி.ரா மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். நிகழ்வில்  கி.ராவின் சிறுகதைகள் பற்றிச் சிறிய உரையொன்றை நிகழ்த்தினேன்.

கி.ராவின் புறப்பாடு என்ற சிறுகதை அற்புதமானது.

கரிசல் விவசாயி நிலத்தின் மீது எவ்வளவு பிடிப்பு வைத்திருக்கிறான் என்பதற்கு இந்தக் கதையில் ஒரு நிகழ்வு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது வானுலகிலிருந்து உடலோடு சொர்க்கத்திற்கு அழைத்து வாருங்கள் என ஒரு கரிசல் விவசாயிக்கு அழைப்பு வருகிறது. அவன் வானுலகத்திற்குச் செல்வது மகிழ்ச்சியே. ஆனால் அங்கே தனக்கு எத்தனை ஏக்கர் கரிசல் நிலம் கிடைக்கும் என்று கேள்வி கேட்கிறான். வாழும் போது மட்டுமில்லை. வானுலகம் சென்றாலும் கரிசலின் மீதுள்ள பிடிப்பு போய்விடாது என்பதற்கு இக்கதை சிறந்த உதாரணம்.

மரணச்சடங்குகளை இக்கதை ஒரு ஆவணப்படம் போலத் துல்லியமாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகக் கயத்தாறு மேளம் பற்றி எழுதியுள்ளது மறக்கமுடியாதது.

தொண்டு என்ற இன்னொரு சிறுகதையில் கிராமத்து மனிதர்களின் உடற்பசியைப் போக்கும் ஒரு பெண்ணின் உயர்ந்த மனதைச் சித்தரிக்கிறார் கிரா.  பசித்த வயிறுக்கு உணவு தருவது போலவே உடற்தேவைக்கு தன் உடலை தருவதும் தானமே எனக்கருதும் ஒரு பெண்ணின் கதையது. மனைவியை இழந்தவர்களும், புகல் கிடைக்காத வயதானவர்களும் காமத்திற்காக ஏங்கும் போது அவர்களுக்கு தன் உடலைத் தந்து ஆற்றுப்படுத்துகிறாள் காமு எனும் காமம்மா. அதற்காக அவள் பணம் பெறுவதில்லை. எதையும் யாசிப்பதுமில்லை. தன்னால் முடிந்த உதவி அது என்று சொல்கிறாள்.  தமிழில் எழுதப்பட்ட அபூர்வமான கதை.

தென் தமிழகக் கிராம வாழ்க்கையைக் கி.ரா தன் எழுத்தில் முழுமையாகப் பதிவு செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார். தன் நிலத்தையும் அதன் மனிதர்களையும் வெகு நுட்பமாகப் பதிவு செய்துள்ள கி.ரா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறத்தகுதியானவர். அவரை நாம் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

நிகழ்வில் கிராவோடு ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. நல்ல நினைவாற்றலுடன் கிரா ஆனந்தமாகப் பேசினார். அவரது முகத்தில் மாறாத சிரிப்பு. பேச்சில் கிண்டலும் கேலியும் தெறிக்கிறது.  தான் 97 வயதில் எழுதியுள்ள புதிய நாவலான அண்டரண்டாபட்சியைப் பற்றிக் கிரா விளக்கினார்.

மனிதர்களின் மனதை அறிந்து சொல்லும் மரணமில்லாத பட்சியது. அந்தப் பட்சியின் வழியாக வாழ்க்கை அனுபவங்களை, தொன்மங்களை, அரசியலைப் பேசுவதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. இதன் முதற்பாகத்தை எழுதி முடித்திருக்கிறேன் என்றார் கிரா.

நான் அறிந்தவரை உலகில் வேறு எந்த எழுத்தாளரும் தனது 97 வயதில் ஒரு நாவலை எழுதியிருக்கவில்லை. அதற்காகவே கிராவை தமிழ் சமூகம் கொண்டாட வேண்டும்.

கிராவின் மனதில் மகாபாரதமும் நாட்டார் கதைகளும் புராணக்கதைகளும் நிரம்பியிருக்கின்றன. அவரது பேச்சில் அவை தெறித்து விழும் வேகத்தைக் கண்டு வியந்து போனேன்.

நிகழ்வில் புதுவை மொழியியில் பண்பாட்டுத் துறை செயலர் மற்றும் வழக்கறிஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன், ஆகியோர் உரையாற்றினார்கள். புகைப்படக்கலைஞர் இளவேனில் ,பத்திரிக்கையாளர் கோலப்பன், புதுவை சீனுதமிழ்மணி. பேராசிரியர் சுந்தர முருகன், பேராசிரியர் ரவீந்திரன், எழுத்தாளர் உமா மோகன். மற்றும் புதுவை வானொலி நிலைய இயக்குனர் என நண்பர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

மதியம் நண்பர் இளவேனில் எங்களை உணவிற்கு அழைத்துச் சென்றார். பின்பு கி.ராவின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். உடல்நலமற்றிருந்த கிராவின் துணைவியாரைச் சந்தித்து நலம் விசாரித்தேன்.

ஹிந்தியில் வெளியான கிராவின் சிறுகதைகள் நூலை கிரா காட்டினார். அவரது கையெழுத்துப் பிரதியில் நாவலையும் வாசித்துப் பார்த்தேன்.

கி.ராவின் மகன் புரபியின் அன்பான உபசரிப்பும் அக்கறையான பேச்சும் நன்றிக்குரியது. கி.ராவின் புதிய நாவல் அண்டரண்டாபட்சி ஜனவரி 2020ல் வெளியாகும் என்று தெரிவித்தார்.

கரிசல் நிலத்தில் பிறந்த மகாகவி பாரதியைப் புதுவை தான் அரவணைத்துக் காப்பாற்றியது. இன்று கரிசல் நிலத்தின் மாபெரும் கதைசொல்லி கிராவையும் புதுவை தான் அரவணைத்துக் கொண்டாடுகிறது. புதுவை அரசிற்கும், புதுவை இலக்கிய வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

••

பதிவு செய்த நாள் 17.09.2019

0Shares
0