நண்பர் அருண்மொழியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட எனது சிறுகதையை மையமாகக் கொண்ட நாடகம் ஒன்றை நிகழ்த்துவதாகச் சொல்லி அதைக் காணுவதற்காக அழைத்தார். வெளியூரில் இருக்கிறேன். வர இயலவில்லை என்றேன். தொலைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அருண்மொழியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். அவர் இயக்கிய காணி நிலம், ஏர் முனை போன்ற படங்கள் நிறையத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளன.
சினிமா பயிலரங்குகள் நிறைய நடத்தியிருக்கிறார். திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். சினிமா சினிமா என்று எப்போதும் மாற்றுசினிமா பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.
உலகத் திரைப்படவிழாவிற்காக டெல்லி போகும் நாட்களில் அவருடன் இணைந்து சென்றிருக்கிறேன். டெல்லியில் ஒரு வார காலமும் ஒன்றாகத் தங்கியபடி வெளிநாட்டுப் படங்களைப் பாரத்து ரசித்திருக்கிறோம்.
அருண்மொழி எப்போதும் இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறவர். தனியாக அவரை நான் பார்த்ததேயில்லை. நண்பர்கள் சகிதமாகவே வருவார்.
சில மாதங்களுக்கு முன்பு எனது மகன் ஹரி பிரசாத் இயக்கிய மைடியர் செகாவ் குறும்படத்தில் நடிப்பதற்காக வந்திருந்த போது தினமும் அவருடன் பேசி மகிழ்ந்தேன். அந்தக் குறும்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். .
ஒரு திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார் என்பது மனதை வேதனை கொள்ளச் செய்கிறது. அருண்மொழியின் வழியே நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். உதவி செய்வதற்கு அவரைப் போல ஒடியலைபவர் எவருமில்லை.
அவரது இழப்பு மனதைத் துவளச் செய்துவிட்டது. அருண்மொழியின் மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
••
