கதைகளால் விரியும் இடக்கை

க.வை.பழனிச்சாமி

அக்கறையாக வாசிக்காது ஒரு புத்தகம் நம்மோடு உரையாடாது.அப்படியான மனம் ஜனித்த பின்புதான் புத்தகத்தை நெருங்க வேண்டும்.நமது உயிர் சற்றே வாழ்வதற்கு காத்திருக்கும் புதிய உடல் புத்தகம்.அதனால்தான் வாசிப்பு இன்னொரு வாழ்தலாகிறது.நேர்மையானப் படைப்பிற்கே இந்த விளைவுகள் உண்டு.வாசிப்பு ஒரு அற்புத நிகழ்வு. மறைக்கப்பட்ட பிரதேசத்தின் மீது வெளிச்சமாகப் படிகிறது ‘இடக்கை’.வாழ்வின் அடிப்படையான கேள்விகளோடு நகர்கிறது ராமகிருஷ்ணனின் புதிய நாவல்.

பாத்திரங்கள் குமிழ்களாகத் தோன்றி அதிர்கின்றன. கதையாடலின் முடிவில் உருவம் உடைந்துமீண்டும் நீரோட்டத்தில் கலந்துவிடுகின்றன.மன்னன் ஒளரங்கசீப் முதல் யமுனை ஆற்றில் படகோட்டித் திரிந்த சம்பு வரை எல்லாரும் வெற்றிடத்தில் மடிந்து போகிறார்கள்.நீரோட்டம் தொடர்கிறது. புதிய குமிழ்கள் தோன்றுவதும் உடைவதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன.

நிகழ்வின் உண்மையால் நாவலின் எழுத்து எல்லாக் காலத்துக்கும் பொதுவாகிறது.இன்றைய வாழ்வோடும் சமூக அனுபவத்தோடும் பொருந்துகிறது ‘இடக்கை’ நாவல். தேர்ந்த வாசகனுக்கு இப்படியான அனுபவம் சாத்தியம். தாஸ்தவெஸ்கி கரம்சேவ் சகோதரர்கள் நாவலில் கடவுளின் இடத்தை அறியத்துடித்தது போன்ற அதிர்வோடு விரிகிறது ‘இடக்கை’.

கதைகளால் நிரம்பி வழிகிறது நாவல்.நாவலில் கதை ஒரு சாக்குதான். ஆனால் கதை வழியாகத்தான் எழுத்தாளன் வாசகனை நெருங்கி உரையாட முடிகிறது.படைப்பாளியும் வாசகனும் இணைந்து உரையாடுகிற தளமாக விரியக்கூடியது நாவல்.கதை அதற்கு உதவுகிறது. அறிய முடியாத வாழ்வின் ரகசியங்களை அறிந்துகொண்டதாக நம்புகிற இடம்தான் கதை. கதை முடிகிறபோதும் அறியப்படாதவெளிதான் விரிகிறது.மீண்டும் மீண்டும் வாழ்வை அறியத் துடிக்கிற வெறி பற்றிக்கொள்கிறது. அணையாத இந்த நெருப்பு பற்றி எரிய வாசகனும் படைபாளியும் கதை நீரில் நனைந்துகொண்டேயிருக்கிறார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன் விரிக்கும் வசீகர கதைவெளியிலிருந்து வாசகன் விடுபடுவதே இல்லை. ‘இடக்கை’ அப்படியான நாவல். நிகழ் உலகின் பல அனுபவங்களைக் கிளறிவிடுகிற கதையாடல்.சமூக வாழ்வியல் பரப்பைத்தான் சமத்காரமாக தனக்கே உரிய மொழியில் பேசுகிறார் ராமகிருஷ்ணன். சொல்முறை அழகியல் இவரது தனித்த மொழி.

‘இடக்கை’ நாவலில்எது வாயில்?நாவலின் திறப்பு எங்கே இருக்கிறது? தூமகேதுதான் நாவலின் வாயில். இரண்டாவது அத்தியாயம் இப்படித் தொடங்குகிறது…..”முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் இறந்துபோன இரண்டாம் நாள், சத்கரில் ஆட்டுத்தோல் பதப்படுத்துபவனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையும் இடக்கைப் பழக்கம் கொண்டவனும் வறியவனுமான தூமகேது திருட்டுக் குற்றம் சுமத்திக் கைது செய்யப்பட்டான்.அதே இரவில் ஒளரங்கசீப்பின் அந்தப்புர பணியாளரும் அரவாணியும் மஹல்தாருமான அஜ்யா பேகம் அஹமது நகர் அரண்மனையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டாள்.”

மன்னனின் தனிமை மனப்போராட்டம் என்று தொடங்கும் நாவல் மன்னனை ஒதுக்கிவிட்டு இப்படி மக்களிடம் நகர்கிறது.வரலாறு சுட்டாத, பதிவு செய்யாத தனி மனிதர்களின் வாழ்க்கையைப் பேசத் தொடங்குகிறது. நாவல் முடிகிறபோது தூமகேதுவின் வலி மக்களின் வலியாக மாறுகிறது. தூமகேது கைது செய்யப்படுகிறபோது அவனது தந்தை நடுங்கும் குரலில் சொல்கிறார்….”தூமகேது அரசாங்கத்துடன் வாதம் செய்யாதே. அரசை ஒரு போதும் எதிர்க்காதே. நீ குற்றமற்றவன் என்றால் உனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.கடவுள் உனக்கு வழி காட்டுவார்.”மொத்த நாவலையும் இந்த எளிய மனிதனின் வார்த்தைகளால்தான் சந்திக்க வேண்டும்.

பிஷாடனின் கொடுமன ஆட்சியில் இந்த வார்த்தைகள் சருகுகளாய் விழுந்து மண்ணோடு மண்ணாகப் மக்கிப்போகிறது.கடவுளின் செவியில் கொட்டிய பல்லாயிரம் மக்களின் வலிமிகுந்த வார்த்தைகள் முடிவில்லாதவெளியில் இன்றும் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன.நாவல் முழுவதும் மக்கள் பிஷாடனின் சொற்களால் மடிந்த வண்ணம் இருக்கிறார்கள். தூமகேதுவின் தந்தை டோலுவின் வார்த்தைகள் நாவல் முடிந்த பிறகும் ஒலிப்பது ஏன்?ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு பதில் இருக்கிறது. நாவல் எழுப்பும் பல கேள்விகளுக்கு பொதுவான பதில் இல்லை. இந்த அதிர்வே நாவலின் எழுத்து.

தூமகேது வழியாகத் திறக்கப்படுகிற ஜன்னலுக்கு வெளியேதான்ஒளரங்கசீப், அஜ்யா, பிஷாடன், நளா, மெஹருணிச்சா, சம்பு எனப் பலரும் அதிர்கிறார்கள்.தூமகேதுவின் வலியும் அலைக்கழிப்பும் நாவலின் அனைத்துப் பாத்திரங்கன்மீதும் படிகின்றன.நாவல் முடிகிறபோது தூமகேது மக்களின் குறியீடாகிறான். இறுதியில் எல்லாப் பாத்திரங்களும் வெற்றிடத்தில் ஓசையற்று மடிந்து போகின்றன.வரலாற்றின் பெருவெளியில் நாவலின் எழுத்து எளிய மக்களின்மீது படிகிறது. நாம் கடந்து வந்த வாழ்க்கைத் தீண்டி பதறுகிறது மனம். எழுத்தில் ஜனிக்கும் கதைசொல்லியின் குரல் மந்திர உச்சாடணம்போல மனதில் இறங்குகிறது.கதைகளின் அடுக்குகளில் வாசகன் பல முறை ஏறி இறங்கி வாழ்வின் மறைவெளிகளைப் பார்த்து திகைக்கிறான்.

முக்கியப் பாத்திரங்கள் தனித்து இயங்குகின்றன.ஒளரங்கசீப், பிஷாடன், தூமகேது, சம்பு நால்வரும் யாரும் யாரையும் சந்திப்பதில்லை. ஒளரங்கசீப்புடன் அஜ்யாவுக்கு தொடர்பிருந்தாலும் நாவலின் மற்றப் பாத்திரங்கள் அஜ்யாவை அறிந்திருக்கவில்லை. ஒரு கதை இன்னொரு கதைக்கு அருகில் இருக்கிறது.இந்தக் கதைகளை இணைக்கும் கண்ணிதான் இதை நாவலாக்குகிறது.கதை நிகழும் காலம்தான் கண்ணி. ஒரு காலவெளியின் பல்வேறு நிகழ்வுகளைப் பார்க்கும்படியான உச்சியில் வாசகனைக் கூட்டி நிறுத்துகிறது’இடக்கை’.

அதிகாரமற்றவர்களின் குரல் துக்கம் தோய்ந்த ஈரத்தோடு வாசிப்பில்தொடர்ந்து ஒலிக்கிறது.இந்தக் குரலின் ஓசை வாசகனின் அனுபவத்தில் கலந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின்குரலாகப் பிரதிபலிக்கிறது.மறுக்கப்பட்ட நீதிதான் வாசக மனதில் பிம்பமாக அதிர்கிறது.ஒளரங்கசீப்பை மக்களுக்கு தெரியும்.அவர் காலத்து மக்களின் வாழ்வெளி தெரியாது.பிஷாடன் போன்ற மன்னர்களின் வாழ்க்கையை வரலாற்றில் படிக்க முடியும்.தூமகேதுவின் குடும்பம் சிதைந்த வாழ்வை வரலாற்றில் காண முடியாது.

பிஷாடன் நினைத்தால் ஒரு பெண்ணைக் குரங்கிற்கும் கட்டிவைக்க முடிகிறது.நாய்களையும் மனிதர்களையும் அவனால் ஒரே மாதிரி வெட்டிச் சாய்க்க முடிகிறது.குற்றவாளியாக காலாவில் அடைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவனும் ஒரு கதையாக நாவலுக்குள் விரிகிறார்கள்.காலா கதைக் கூடமாக மாறுகிற நிகழ்வு வலியின் விளைவுதானே. துயரத்தை மறக்கவே காலாவில் கதைகள் பிறக்கின்றன. காலாவில் தூமகேது கேட்கிற சிகிரிகளின் கதை ஒரு அதீத கதைவெளி. சிறையின் விளிம்புகளை முடிவிலிக்கு நகர்த்தும் விநோதமான கதைகள் காலாவில் அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன.பில்வன் கதைகள் அங்குள்ளவர்களைச் சிரிக்கவைத்துக்கொண்டே இருந்தன. ”குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பது ஒன்றுதான் ஆறுதலானது” என்கிறார் ராமகிருஷ்ணன்.

இலக்கியம்தான் மக்களின் அன்றாடத்தை வாசிப்பு வெளிக்கு கொண்டு வருகிறது.ஒளரங்கசீப் என்ற மாமன்னன் தனிமையில் புலம்புகிற உரையாடலை ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளியால்தான் எழுத முடிகிறது.ஒளரங்கசீப் என்ற வரலாற்று நாயகனை கையளவு நீர்கூட கொண்டு வர முடியாத இடத்தில் எறிந்து வேடிக்கைப் பார்க்கிறார்.மன்னர்கள் எப்போதும் மரணபயத்திலேயே வாழ்கிறார்கள். மரணம் எப்படி நிகழும் என அறிந்துகொள்ள சூபி ஞானி முகைதீனை ஒளரங்கசீப் சந்தித்து உரையாடுகிற இடம் நாவலின் அதிர்வை முன்கூட்டியே உணர்த்துகிறது.

யானைக் காலில் மிதித்துக் கொன்ற தாதி அனாரின் முகம் வயதானக் காலத்தில் தோன்றி அவரை அவரே அருவருக்கும்படிச் செய்கிறது. இப்படியான அதிகாரத்தின் செயல்கள் பலவும் அவரைச் சூழ்ந்துகொண்டு உறக்கம் கெடுக்கின்றன.மன்னன் நிம்மதியாக இல்லை என்பது வாசிப்பில் ஆறுதல் தருகிறது.

நாவலில் வருகிற பெண்கள் தனித்து சுடர்கிறார்கள். லகியா, நளா, மெஹருணிச்சா, காதம்பரி, குலாபி, ஜாபரின் மனைவி அஸ்மா இவர்கள் எல்லோருமே வாழ்வின் ரகசியங்களின்மீது வெளிச்சமாகப் படிகிறார்கள். நாவலின் சக்தி இங்குதான் இருக்கிறது. இந்தப் பெண்கள் குறித்து உரையாடுவதே தனிப் பிரதியாகிவிடும்.இரண்டரை அடி உயரமுள்ள காதம்பரி வேசை குலாபியின் பணிப்பெண்.தனக்கான ஒரு ஆணை அடையமுடியாது தவிக்கிறாள். அத்தியாயம் 38 ல் விவரிக்கிற காதம்பரியின் ஆசைதான் எவ்வளவு ஒழுக்கமானது.காதம்பரியின் அப்பழுக்கிலாத அந்தரங்கம் எழுத்தாளனின் கருணைவெளி.

மெஹருணிச்சா நாவலில் இசையாக ஒலிக்கிறாள். மகளாக இருந்தாலும் தான் விரும்பாததைச் செய்ய அனுமதிப்பதில்லை. மக்பி சொல்கிறாள்…. ”பாதுஷாவின் கட்டளைக்கு வேலையாட்கள் அடிபணிவார்கள். காற்று ஒருபோதும் அடிபணியாது” என்று. கவிதையை மறுப்பதைவிட மரணத்தை ஏற்கிறாள். ஒளரங்கசீப் இறுதியில் உறவுகளின் நிழல் கூட தீண்டாது மடிந்துபோகிறான்.

போல்வாரின் இரவுச் சந்தையில் ஆபோகிகளின் குடிக் கொண்டாட்டத்தின்போது ஒருவன் தனது மனைவி லகியாவின் கதை சொல்கிறான். இந்தக் கதை அதீத கதையாக முதல் வாசிப்பில் தெரியலாம்.ஆனல் லகியா வரலாறு பேசாதப் பல கோடிப் பெண்களின் பிம்பமாக அதிர்கிராள். லகியா மண்ணால் செய்யப்பட்டவள்.கணவனை மகிழ்விப்பதே வாழ்வின் கடமையாகக் கருதுகிறாள். தன்னையே கரைத்து மதுபாணம் தயாரித்து தருகிறாள். அவளது மண் உடல்தான் போதை வஸ்து என்று அறிந்த பின்பும் கணவன் மீண்டும் மீண்டும் கேட்டு அதைப் பருகுகிறான்.இறுதியில் முற்றாக கரைந்து வடிவம் இழந்து மடிந்து போகிறாள். அந்தப்புரத்தின் ஆயிரம் ஆயிரம் பெண்கள், போரில் ஆண்களின் வக்கிரத்தில் சிதைந்த எண்ணற்ற பெண்கள், வீட்டின் சமையல் அறையிலேயே வாழ்வை முடித்துக்கொண்ட பெண்கள் எல்லாரும் மண்ணால் செய்யப்பட்ட லகியாதான்.ஆண்களுக்காக வாழ்ந்து மடிந்தவர்கள் என்ற உண்மைத் தீண்டிப் பதறுகிறோம்.

புனைவு நெருங்காத ஒரே பாத்திரம் நளாதான்.வாழ்க்கையின் அதீத துயரத்தை நேரடியாகச் சந்திக்கிற பாத்திரம். தூமகேதுவின் மனைவியாகி வறுமையே வாழ்வாகிச் சிதைகிறாள். ஒன்பது பிளைகள் பெற்றவள். தூமகேதுவின் வயதானத் தந்தையின் பாரம்.ஒருபோதும் வெளியேற முடியாத காலா சிறையில் கணவன்.நளாவின் அன்றாடம் ஒவ்வொரு கணமும் மலையச் சுமப்பதாகிறது.நளா தன் மகனோடு உரையாடுகிற இடம் வறுமையின் பெரு வலி. ”உனக்கு வெட்கமாக இல்லை. உன் ஒருவனுக்கு மட்டும்தான் வயிறு பசிக்குமா?” என்று விருந்தில் ஆசை ஆசையாக உண்டு வயிறு பெருத்த பிள்ளையிடம் கேட்கிறாள். அடுத்த கணமே தன் இழி மனதை வெறுக்கிறாள். மகன் மஞ்சாவின் தீரா பசியை தாய் உள்ளம் சட்டென்று உணர்ந்து வருந்துகிறது.ஆனாலும் அவளால் இப்படித்தான் பேச முடிகிறது.

”அய்யோ நான் ஏன் இப்படி புத்திகெட்டுப் போய்ப்பேசுகிறேன்.பசி என்னையும் பைத்தியம் ஆக்கிவிட்டதா? டேய், மஞ்சா, தெரு நாயே, உன் இஸ்டம்போல கண்டதை நக்கிவிட்டு வந்து இங்கே பெருமை அடிக்கிறாயா? உன்னை இன்றைக்கு அடித்துக் கொள்கிறேனா இல்லையா பார்” விறகுக் கட்டையை எடுத்து பாய்கிறாள். தூமகேதுவின் தந்தை கிழவன் டோலு சொல்கிறான்….”அவனை அடித்துக் கொன்றுவிடு.தனியே நெய்யும் பாயாசமும் சாப்பிட்டு வந்திருக்கிறான். நெய்யை என் வாழ்நாளில் ஒருமுறைதான் சாப்பிட்டு இருக்கிறேன்.என்ன ருசி, என்ன ருசி.’

மஞ்சாவை துரத்தி ஓடுகிற நளா பிறகு அவனைப் பிணமாகத்தன் பார்க்கிறாள். அத்தியாயம் 25 ல் எஸ் ரா’வின் கதை மொழியில் வறுமையின் உச்ச வலி அதிர்கிறது. நாவலின் ஆகச் சிறந்த உரையாடல் மஞ்சாவும் அவன் நண்பன் கின்பத் இருவரும் பேசிக்கொள்வதே. தமிழ் நாவல்வெளியில் 25 வது அத்தியாயம் ராமகிருஷ்ணனை ஆகச் சிறந்த கதை சொல்லியாக நிறுத்துகிறது. சொர்க்கத்தில் நெய் கிடைக்கும் என்ற வார்த்தைகளை சிறுவன் மஞ்சாவின் மனம் வாங்குகிற இடத்தின் வலி வாசகனை உறங்கவிடாது.முழு உரையாடலையும் மனம் வலிக்காமல் படிக்க முடியாது.நளா அதிகாரமின்மையின் ஆயுதமாக மாறுகிற இடம் வலிமையாக உள்ளது.தாணியத்தைக் கொள்ளை அடிப்பது நாவலுக்குள்ளிருக்கும் ஒரே எதிர் குரல்.

கதை என்பதே ஒருவனின் அடையாளத்தை மாற்றுவது என ஒரு வரி நாவலில் வருகிறது.படகோட்டி சம்பு நாவலில் வேறு வேறு அடையாளங்கள் பெறுகிறான். யமுனை ஆற்றில் படகோட்டியாக அறிமுகம் ஆவதற்கு முன்பு திருவிழாவில் காணாதுபோன சிறுவனாக முகம் காட்டுகிறான். யமுனை வாழ்க்கையே போதுமானதாக உணர்ந்து பெற்றோரைத் தேடிபோக மறுக்கிறான். அதே ஆற்றில் பெரும் செல்வம் கொண்ட பொக்கிஷத்தை அடைகிறான். சேர்க்கச் சொன்ன இடத்தில் சேர்க்காமல் வணிகனாக வாழ்கிறான்.தள்ளிவிட்டப் பிணம் அவனைத் துறத்துகிறது.

யமுனை ஆற்றைப் பார்க்கப் பயந்து கடல் வணிகம் செய்கிறான். ஆருடம் சொல்கிறவன் குறித்ததுபோல அவனும் விற்பனைக்குக் கொண்டுபோன யானைகளும் அலைகளால் தூக்கி எறியப்பட்டு கடலில் மூழ்கி மடிகிறார்கள்.மரணிப்பதற்கு முன்பு கடலில் அதே பிணத்தைப் பார்க்கிறான். சம்புவின் மீது வேறு வேறு அடையாளங்கள் பதிந்து இறுதியில் கதையாக எல்லாரும்போல நாவலுக்குள் கரைந்து போகிறான்.

காலா விசாரணைக் கைதிகளின் கூடாரம் மட்டுமல்ல. பிஷாட மன்னனின் வக்கிர பூமியாகவும் காட்சி தருகிறது. மரணத்தின் எல்லைவரையிலும் விசாரணைக்குக் காத்திருக்கிறார்கள். காலாதான் இனி அவர்களின் உலகம். தூமகேது அங்குதான் அடைக்கப்பட்டிருக்கிறான்.தூமகேது அங்கிருந்து வெளியேறுவது கதையாடலின் அற்புதவெளி.வாசிப்பில் மறைந்திருக்கும் புதிர் கதைசொல்லியின் வெற்றி. கதைகளால் வெளியேறுகிற தூமகேது, மனைவி மக்கள் காணாது வெற்றிடம் தீண்டி அலைகிறான்.ஒரு இடத்தில் காணாதுபோகிற அவன் மீண்டும் கதைகளால் ஜனித்து வாசகனுக்கு புதுப்புது வெளிகளைக் காட்டிக்கொண்டே இருக்கிறான். தூமகேது பல இடங்களில் தோன்றித் தோன்றி மறைகிறான்.ஒவ்வொரு இடத்திலும் ஒரு கதையாக மலர்கிறான். ஒரு கதையின் வாசம் முகர்ந்து தீர்வதற்குள் இன்னொரு கதையாக மலர்கிறான்.

ஜோயா என்ற பெயரில் ஒரு கிராமம். 200 வீடுகளே உள்ள கிராமம்.அங்கே வெளியிலிருந்து வரும் முதல் மனிதனாக தூமகேது நுழைகிறான்.மொத்த ஊரும் ஒரு குடும்பமாக வாழ்கிறது.சண்டை, சச்சரவு, பொறாமை எதுவும் இல்லாத கிராமம். இப்படி ஒரு ஊர் இருக்க முடியுமா என்பது போலிருந்தது என்று நாவல் பேசுகிறது.பிஷாடனைக் கேலி செய்வதற்காகப் படைக்கப்பட்ட ஊராக இருக்கலாம்.படைப்பாளியின் கருணயில் தோய்ந்த புனைவின் ஊர் என்றும் சொல்லலாம்.வறுமையும் வெறுமையும் மன வலியும் மட்டுமே வாழ்தலாகப் பார்த்த தூமகேதுவை மடியில் போட்டுக் கொண்டாடுகிறது ஜோயா.கதையின் கருணையில் சற்றே ஓய்வுகொள்ளும் தூமகேது மீண்டும் வாழ்வின் வெறுமைக்குத் தள்ளப்படுகிறான்.

மதுரா கலவரத்தில் கையில் கத்தியோடு அலைவதும், பிச்சைகாரன் ஏதோ யோசனைக்கு பிறகு ஒளரங்கசீப்பின் தொப்பியைத் தூமகேதுவை நோக்கி எறிவதும், யாத்ரிகர்களில் ஒருவன் சாமந்தி மாலையை எறிவதும், மாலையால் சிறுவயதில் அவமானப்பட்டவன் அந்த மாலையைக் கழுத்தில் போட்டுக்கொள்வதும் வாசகனிடம் சொல்ல விழைவது என்ன? கேள்விகளுக்கான விடைகளை நோக்கி எந்த நாவலும் நகராது.வாசக மனதைச் சற்றே கலைத்துப் போட்டுவிட்டு மௌனமாகப் பார்த்துக்கொண்டிருப்பதே நாவலின் வினை. வாசிப்பதற்குள் பல முறை வாசகனைக் கலைத்துப் போடுகிறது நாவலின் முடிவிலா கதையாடல்.

காலாவிலிருந்து வெளியில்வந்த தூமகேது குழந்தைகளை மனவியை தந்தையைத் தேடிப்போகிறபோது யாருமற்ற வெளியில் மோதிக்கொள்கிறான். மனம் கேட்கிறது ”இவ்வளவுதானா வாழ்க்கை?”.நாவலில் ஜனித்து அடையாளமற்று இறந்துபோகிற எண்ணற்ற மக்களின் கேள்வியும் அதுதான். நாவலின் சாரமே அதிகாரமற்றவர்களின் வாழ்வெளியை வாசக மனதில் அதிரவிடுவதுதான். நாவலின் எல்லாக் கதைகளும் இந்தக் கண்ணியில்தான் இணைக்கப்பட்டிருக்கிறது.

**

நன்றி : தீராநதி. ஜுலை 2016

0Shares
0