ஜப்பானின் புகழ் பெற்ற இயக்குனரான அகிரா குரசோவா தன்னுடைய படங்கள் குறித்தும் அதிகம் பேசியதில்லை. தன்னுடைய சமகால இயக்குனர்களை பற்றியும் அதிகம் பேசியதில்லை. குரசோவா படங்கள் பற்றி டொனால்டு ரிச்சி எழுதிய புத்தகம் மிகசிறப்பானது. ரிச்சி இதற்காக பல ஆண்டுகள் ஜப்பானிலே வாழ்ந்து ஜப்பானிய கலாச்சாரத்தை அறிந்து குரசோவா பற்றி எழுதியிருக்கிறார்
திரைப்படங்கள் இதயத்தால் உணரப்பட வேண்டியவை. அதை மதிப்பீடு செய்து தர நிர்ணயம் செய்ய தனக்கு தெரியாது என்று எப்போதுமே அகிரா ஒதுங்கியிருந்திருக்கிறார். ஆந்த்ரே தார்கோவெஸ்கி, ஜான் கசவாடேஸ், சத்யஜித் ரே அபாஸ் கிராஸ்தமி ஆகிய நால்வர் மட்டுமே அவரால் வெளிப்படையாக பாராட்டப்பட்டவர்கள். திரைப்பட விழாக்களிலும் நடுவராக கலந்து கொள்வதை பெரிதும் அகிரா குரசோவா விலக்கியே வந்தார்.
ஈரானின் புகழ்பெற்ற இயக்குனரான அபாஸ்கிராஸ்தமி 1993 ம் ஆண்டு ஜப்பானிய திரைப்பட விழாவிற்கு நடுவராக சென்ற போது அகிரா குரசோவாயை அவரது வீட்டில் சந்திக்க அனுமதி கிடைத்தது. அதைப்பற்றி அப்பாஸ் கிராஸ்தமி ஈரானிய சினிமா இதழில் எழுதியிருக்கிறார். அந்த கட்டுரையின் எளிய தமிழ்வடிவமிது.
**
டோக்கியோவில் உள்ள அகிரா குரசோவாவின் வீடு. அவரது மகள் கதவைத் திறந்து எங்களை வரவேற்றார். வீட்டின் ஒரு அறையினுள்ளிருந்து உயரமான , இளநீல உடையணிந்து அகிரா குரசோவா வெளிப்பட்டார். வயதான தோற்றம். வீட்டில் எப்போதும் அவர் விரும்பி அணியக்கூடிய டீசர்ட் அணியாமல் இன்று என்னை சந்திப்பதற்காகவே பவ்வியமான உடையை குரசோவா அணிந்திருப்பதாக தோன்றியது.
மாடியில் இருந்த தனது படிப்பறைக்கு அவர் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார். அந்த அறையில் அவர் வாங்கிய ஆஸ்கார் விருது ஒரு பக்கம் கண்ணில் பட்டது. அறையில் அதிக அலங்காரங்கள் இல்லை. அகிரா குரசோவாவின் மனைவியின் படம், ஜப்பானிய மரபு ஒவியம் மற்றும் பூவேலைப்பாடு கொண்ட ஈரானிய பித்தளை தட்டு ஒன்று சுவரில் மாட்டப்பட்டிருந்தது. நிசப்தமான சூழல்.
நான் உங்களை கான்ஸ் திரைப்படவிழாவிலே பார்த்திருக்கிறேன் என்று குரசோவா பேச்சை துவக்கி வைத்தார்.
நானும் சிரித்தபடியே உங்களது மதோதயா திரைப்படம் திரையிடும் போது அங்கேயிருந்தேன். ஒரே நேரத்தில் உங்களையும் உங்கள் படத்தையும் காணும் சிறப்பு எனக்கு கிடைத்தது. ஈரானில் உங்களுக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. நீங்களும் ஹிட்ச்காக்கும் தான் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று பேதமில்லாமல் மக்களை கவர்ந்த திரைப்பட இயக்குனர்கள்.
உங்கள் படங்களை மக்கள் தேடித்தேடி பார்க்கிறார்கள். நீங்களும் தார்கோவùஸ்கியும் மட்டுமே ஈரானிய மக்களின் அறநெறிகள் மற்றும் பொது நம்பிக்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்களை சந்திக்க நேர்ந்ததை ஈரானிய மக்களின் சார்பில் நான் மிகுந்த சந்தோஷமாக உணர்கிறேன் என்றேன்.
அதைக் கேட்ட அகிரா குரசோவா அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போல தலையசைத்துவிட்டு தார்கோவெஸ்கி எனது நண்பர். மாஸ்கோ சென்றிருந்த போது அந்த நட்பு துவங்கியது. அவர் இறந்து போகும் வரை நெருக்கமான நண்பராகவே இருந்தார் என்று நினைவு கூர்ந்தார். சில நிமிச மௌனம் உருவானது. பிறகு அதிலிருந்து மீண்டு பேச துவங்கினார்
என்னை ஈரானிய திரைப்பட விழாவிற்கு நடுவராக இரண்டு முறை அழைத்தார்கள். என்னால் திரைப்படங்களை பற்றி தீர்ப்பு கூற முடியாது. அத்துடன் இது போன்ற பயணங்களை நான் விரும்புவதுமில்லை. நீங்கள் எப்படி திரைப்பட விழாவின் நடுவராக பணியாற்றுகிறீர்கள் என்று கேட்டார்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவரை பார்த்து சிரித்தபடியே சொன்னேன்
நானும் ஒவ்வொரு முறையும் இனிமேல் நடுவராக பணியாற்ற கூடாது என்றே முடிவு செய்வேன். ஆனால் அடுத்த படவிழாக்குழுவினர் அழைத்தவுடன் பயணம் செய்ய இயலுமே என்பதற்காக ஒத்துக் கொள்வேன். ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து பயணம் செய்யவே விரும்புகிறேன்.அது என் இயல்பு என்றேன்
அதை புரிந்து கொண்டவரை போல சிரித்துக் கொண்டு அகிரா குரசோவா சொன்னார்.
அது உண்மை தான். ஆனால் உண்மையில் இது போன்ற விழாக்களில் நடுவராக பணியாற்ற ஒத்துக் கொண்டால் நீங்கள் எங்கும் சுதந்திரமாக செல்ல முடியாது. அவர்கள் காட்டும் இடங்களை பார்க்க வேண்டும். சொல்லும் நிகழ்ச்சிகளில் பொம்மை போல கலந்து கொள்ள வேண்டும். அது இயல்பாக இருக்காது. நான் ஈரான் வர உண்மையில் ஆசைப்பட்டேன். அங்கே நிறைய நல்ல இயக்குனர்கள் இருக்கிறார்கள். உங்களது படங்களின் எளிமையும், யதார்த்தமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. குறிப்பாக நீங்கள் குழந்தைகளை நடிக்க வைப்பதை கண்டு வியந்து போயிருக்கிறேன். அது எப்படி உங்களால் முடிகிறது என்றார் குரசோவா.
அது உங்களை போன்ற திரை ஆளுமைகளிடமிருந்து கற்றுக் கொண்டதே.தொழில் முறையில்லாத நடிகர்களால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை உங்கள் படங்கள் உணர்த்தியிருக்கின்றன. அதை பற்றி நீங்கள் பேசியதை கேட்டிருக்கிறேன். உண்மையை சொன்னால் அப்படி எந்த விசேச முறையும் பயன்படுத்தி நாங்கள் குழந்தைகளை நடிக்க வைப்பதில்லை. அவர்கள் இயல்பிலே இருக்க அனுமதிக்கிறோம். அதே நேரம் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதை புரிய வைக்கிறேன். மற்றபடி அதற்கு தனி முயற்சிகள் எடுப்பதில்லை.
விமர்சகர்கள் மேடையாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும் சரி அதை ஒரு புனிதவெளியாகவே கருதுகிறார்கள். அங்கே நடப்பது யாவும் கச்சிதமாகவும் அதிமுக்கியமாகவும் இருக்கவே விரும்புகிறார்கள். அது அபத்தமானது. இரண்டிலும் இயல்பான, யதார்த்தமான விஷயங்கள் நடக்க கூடும். நடிப்பு புனிதப்படுத்தபட வேண்டியதில்லை.
அதைக்கேட்ட அகிரா குரசோவா சிரித்தபடியே சொன்னார் .
சரியான உண்மை. தொழில்முறை நடிகர்களை கையாளுவது பெரிய சிரமம். அவர்கள் தாங்களாக ஒருபிம்பத்தை உருவாக்கி கொண்டுவிடுகிறார்கள். அதிலிருந்து அவர்களை வெளியே வர வைப்பது எளிதானதில்லை அவர்களிடம் நல்ல நடிப்பு திறனிருக்கிறது. ஆனால் அவர்கள் புதிதாக இல்லை.அவர்களை உருமாற்றி நடிக்க வைப்பது ஒரு சவால். நீங்கள் தொழில் முறை நடிகர்களை பயன்படுத்தியிருக்கிறீர்களா?
எனது முந்தைய படத்தில் ஒரு தொழில்முறை நடிகரை பயன்படுத்தினேன். அவரிடமிருந்து ஒன்றை வாங்குவது எளிதானதில்லை. அவர் தனது நடிப்பிற்கு பழகியிருக்கிறார். அவரை புதிதாக்க நடிக்க வைப்பது பெரிய சவால்
அதை கேட்ட குரசோவா சொன்னார். குழந்தைகள் உங்கள் படங்களில் மிக இயல்பாக வீட்டில் இருப்பது போல இருக்கிறார்கள். என்படங்களில் அப்படியிருப்பதில்லை. ஒளிந்து கொண்டு யாரோ நம்மை பார்ப்பது போல உணர்கிறார்கள். இந்த இயல்பான நடிப்பை எப்படி சாத்தியமாக்குகிறீர்கள் என்று கேட்டார்
நீங்கள் குரசோவா என்பதை குழந்தைகள் கூட உணர்ந்திருப்பது தான் முக்கிய காரணம். நான் குழந்தைகளோடு படப்பிடிப்பிற்கு முன்பாக பழகுகிறேன். ஒன்றாக விளையாடுகிறேன்.அவர்கள் என்னை கண்டு ஒரு போதும் பயம் கொள்வதில்லை என்றேன்.
பேச்சு திரும்பவும் தொழில்முறை நடிகர்களை பற்றி திரும்பியது.
தொழில்முறை நடிகர்களின் முக்கிய பிரச்சனை. இரண்டு நடிகர்கள் ஒன்றாக நடிக்கும் போது ஒருவருக்கு மற்றவர் பிடிப்பதில்லை. ஒருவர் சரியாக செய்தால் மற்றவருக்கு அது இயலாமல் போகிறது. அதனால் காட்சிக்கு தேவையான நடிப்பு சீராக கிடைப்பதில்லை. இதில் களைப்படைந்து போய்விடுவோம்.
இதற்காகவே நான் நாலைந்து கேமிராக்களை பயன்படுத்துகிறேன். லாங்ஷாட்டாகவே அதிகம் எடுக்கவும் செய்வேன். நடிகருக்கு தன்னை எந்த காமிரா அண்மையில் படமாக்குகிறது என்று தெரியக்கூடாது. அப்படியான நிலை இருந்தால் அவர் கேமிரா மீதிருந்த கவனம் விலகி இயல்பாக நடிப்பார்.
இன்றைய நடிகர்களின் முக்கிய பிரச்சனை அவர்கள் தன்னோடு சேர்ந்து நடிப்பவர் சொல்லும் வசனங்களை காது கொடுத்து கேட்பதேயில்லை. தனது அடுத்த வரிக்கு மனதை கொண்டு போய்விடுகிறார். இதனால் நடிகரின் உணர்ச்சிகள் முழுமையாக வெளிப்படுவதில்லை. அதை சரி செய்வதன் வழியே தான் ஒரு நல்ல நடிகரை உருவாக்க இயலும் என்றார் அகிரா குரசோவா.
உங்கள் படங்களின் நடிப்பு சற்று மிகையாக இருப்பதாக விமர்சகர்கள் சொல்கிறார்களே என்று கேட்டதும் அகிரா குரசோவா மறுத்தபடியே அது எங்கள் ஊரில் இயல்பானது. விமர்சகர்கள் ஜப்பானிய கலாச்சாரத்திலிருந்து இந்த நடிப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
அத்துடன் எனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் எவரும் அமெரிக்க சினிமாவை காண்பதில்லை. அவர்களாகவே புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் எப்போதுமே சொல்வது நல்ல சினிமா என்பது இதயத்தால் உருவாக்கபட்டு இதயத்தால் உணரப்பட வேண்டியது என்பேன். மனிதாபிமானமிக்க திரைப்படங்கள் என்று அடையாளப்படுத்தும்படியாக இருக்க வேண்டும். அதீத வன்முறை மற்றும் ஆபாசம் இன்றைய சினிமாவின் முக்கிய பிரச்சனை. சினிமா ஒரு தேசத்தின் கலாச்சார மேம்பாட்டிற்கு துணை செய்ய வேண்டும். ஆசிய நாடுகளில் இன்று தரமான திரைப்படங்கள் உருவாக்கபடுகின்றன. அந்தந்த தேசிய கலாச்சார கூறுகளை படங்களில் காணமுடிகிறது.
ஈரான் படங்கள் எனக்கும் பிடித்திருக்கிறது. ஜப்பானிய மக்களுக்கும் அதிகம் பிடித்திருக்கிறது. ஆனால் இன்றுள்ள பெரும்பான்மை ஜப்பானிய படங்கள் வெறும் வணிக லாபங்களுக்காக உருவாக்கபடுபவை. அதில் எனக்கு உடன்பாடில்லை.
என்னுடைய படங்கள் பற்றியே பல நேரங்களில் விமர்சகர்கள் கேட்கும் போது நான் எந்த காரணத்தால் அப்படியொரு காட்சியை வைத்தேன் என்று எனக்கும் தெளிவாக விளக்கி சொல்ல முடிவதில்லை. சினிமா உருவாக்கவத்தில் அதிக காரணங்கள், விளக்கங்கள் இல்லை. மனஉணர்ச்சியும், தூண்டுதல்களுமே காட்சிகளை உருவாக்குகின்றன. இன்று பொது ரசனை சீரழிக்கப்பட்டுவருகிறது. அதற்கு திரைப்பட இயக்குனர்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது.
பேச்சு குரசோவாவின் மதோதயா மற்றும் கிராஸ்தமியின் வேர் இஸ்மை ப்ரண்ட்ஸ் ஹோம் இரண்டின் துவக்ககாட்சிகளும் ஒன்று போலிருப்பதை பற்றி நீண்டது. அகிரா குரசோவா ஆதங்கத்துடன் சொன்னார். ஒவ்வொரு படமும் ஒரு போராட்டமே.
ஒரு படம் முடியும் போது அதன் முக்கிய கதாபாத்திரத்திடமிருந்து விடைபெறுவது மிக துக்கமான நிகழ்வு. அதன் பிறகு அவனுக்கும் நமக்குமான உறவு முறிந்து போய்விடுகிறது. அந்த இழப்பு எனக்கு மிகப்பெரிய வலி தரக்கூடியது என்று ஏதோ யோசனையில் ஆழ்ந்து போனார்.
குரசோவாவின் மகள் தேநீர் பரிமாறினார். தேநீர் பருகியபடியே சொன்னார் எனது ஒவிய ஆசிரியர் அடிக்கடி சொல்வார் உலகத்தை காணும் போது இரண்டு கண்களில் ஒன்று மூடிக்கொண்டு ஒற்றை கண்ணால் பார். அப்போது தான் அதன் தனித்துவமும் குவியமும் புலப்படும் .
அகிரா குரசோவாவின் ஆரோக்கியம் பற்றிய அக்கறையை பகிர்ந்து கொண்படியே அங்கிருந்து விடைபெற்றேன்.
இன்னொரு முறை இது போன்ற சந்தர்ப்பம் திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கம் அப்போதே துவங்கியிருந்தது.
**