நவம்பர் மாதக் குளிரில் அஸ்தபோவ் (Astapovo)என்ற சின்னஞ்சிறிய ரயில்நிலையம் பத்திரிக்கையாளர்கள்,புகைப்படக்காரர்களால் நிரம்பப் பெற்றது. யார் இவர்கள், எதற்காக இப்படி வந்தபடியே இருக்கிறார்கள் என்று ரயில்வே ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஊரின் தந்திநிலையத்தில் தந்தி கொடுக்க நீண்ட வரிசை காத்திருந்தது.
பொதுவில் அந்த ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் குறைவு. அதன் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த இவான் ஆந்த்ரேயேவிச் ஒரே நாளில் தனது ரயில்நிலையம் இத்தனை பரபரப்பு அடைந்துவிட்டதைப் புரிந்து கொள்ளமுடியாமல் திகைத்துப் போயிருந்தார். தண்டவாளங்கள் கூட நடுங்கிக் கொண்டிருக்க கூடிய குளிர்காலமது. இந்த சிறிய ரயில்நிலையத்திற்கு யார் வரப்போகிறார்கள். என்ன மாற்றமது.
வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருக்கிறது . எந்த சுவாரஸ்யமும் இங்கே இல்லை. பனிக்காற்று மட்டும் தான் அலைந்துகொண்டிருக்கிறது என்று தன்மனைவி அன்னாவோடு என்று முந்தைய நாள் பேசிக் கொண்டிருந்தது ஸ்டேஷன் மாஸ்டருக்கு நினைவிற்கு வந்தது. அவரால் இப்போது தன்னை சுற்றி நடப்பதை நம்பமுடியவில்லை.
ஒரே நாளில் இந்த ரயில் நிலையத்திற்கு அத்தனை பேர்களையும் வரவழைத்துவிட்ட அந்த முதியவர் ஒய்வு அறையில் நோயாளியாக படுத்துகிடக்கிறார். அவரது கடைசி மூச்சு பனியில் கரைந்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் மிகப்பெரிய எழுத்தாளர் அவர் என்றார்கள். இவானுக்கு ரயில் நிலைய பணியை தவிர படிப்பதில் விருப்பமில்லை.
மாஸ்கோவின் தென்கிழக்கில் 120 மைலுக்கு அப்பால் இருந்த அந்த சிறிய ரயில்நிலையத்தில் நவம்பர் இரண்டாம் நாள் வந்து நின்ற ஒரு ரயிலில் இறங்கிய இளம்பெண் ஒருத்தி தனது தந்தை ரயிலில் நோயுற்றதால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறார். ஒருவேளை அவருக்கு நிமோனியா சுரம் கண்டிருக்ககூடும். இங்கே தங்கிக்கொள்வதற்கு ஏதாவது வசதி செய்து தரப்படுமா என்று கேட்டாள்.
ரயில் நிலையத்தில் அப்படி வசதியான தங்கும் அறைகள் எதுவும் கிடையாது அருகாமையில் மருத்துவர்களுமில்லையே என்று இவான் யோசித்தபோது எங்களுடனே மருத்துவர் இருக்கிறார் அவர் எனது தந்தையால் தொடர்ந்து பயணம் செய்ய முடியாது சற்று தங்கி ஒய்வு எடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறாரர். உடல் நலமானதும் நாங்கள் கிளம்பிவிடுவோம் என்று இளம்பெண் ஆதங்கமான குரலில் சொன்னாள். அவர் அந்த பெண்ணின் மீதான பரிதாபத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் அவர்கள் தங்கிக் கொள்வதற்கு அனுமதித்தார்.
தனது தந்தையை அந்த இளம்பெண் ரயிலில் இருந்து இறக்கி கூட்டி வருவதை இவான் கவனித்தார். ஆறடிக்கும் மேலான உயரமுள்ள முதியவர் ரயிலில் இருந்து இறங்கி மகளை பிடித்தபடியே நடந்து வருவதை பார்த்து கொண்டிருந்தார்.
நோயுற்ற போதும் தளர்ச்சியடையாத நடை. நிச்சயம் இளவயதில் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் தோற்றம் தேவாலயங்களில் பிரசங்கம் செய்யும் மதகுருவை போலிருந்தது. அடர்ந்த நரைத்த தாடி. பழைய கறுப்பு மேல்கோட். பழமையான காலணிகள். களைத்து போன கண்கள். அகலமான பெரிய கைகள்.அந்த மனிதர் குளிரை பார்த்து பழகியரை போல முணுமுணுப்பின்றி நடந்து வந்தார். அவரது கண்கள் தன்னை யாரோ பின்தொடர்ந்து வந்துவிடுவார்களோ என்று சந்தேகப்படுவதை போலவே சுற்றிலும் பார்த்து கொண்டது. அவர் மெதுவாக நடந்து படுக்கையை நோக்கி சென்றார். மகள் அவரது உடைகளை மாற்றிவிட்டு ஒய்வாக படுக்கையில் கிடத்தினாள்.
ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி அந்த நோயாளி யார் என்று விசாரித்தாள். அவர் கவுண்ட் லியோ டால்ஸ்டாய் எனும் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் என்று சொன்ன ஸ்டேஷன் மாஸ்டர் அவருடன் மருத்துவரும் மகளும் வந்திருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு தேவையான சூப்பும் ரொட்டி துண்டும் தயார் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
டால்ஸ்டாய் படுத்திருந்த அறையில் மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. கண்ணாடி ஜன்னல்களை தாண்டி குளிர் நுழைந்து கொண்டிருந்தது. சிறிய அறை. ஒரு பக்கம் ரயில்வே நிலையத்தின் காகிதங்கள், தூசியடைந்து போன பொருட்கள் குப்பைகள் இருந்தன. மரக்கதவுகள், ஜன்னல்கள் இருந்த போதும் அறை கதகதப்பாகவே இருந்தது.
டால்ஸ்டாய் தன் மகளை அருகில் அழைத்து சாஷா நாம் வீட்டிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோமா என்று கேட்டார். அவள் பதில் சொல்லவில்லை. இந்த ரயில் நிலையத்தின் பெயர் என்னவென்று மறுபடியும் கேட்டார். அவள் அஸ்தபோவ் என்றாள். அப்படியொரு பெயரை தான் கேள்விப்பட்டதேயில்லை என்றபடியே அவர் உடனடியாக தான் விளாதிமிர் செர்ட் கோவை சந்திக்க வேண்டும். உடனே கிளம்பி வரச்சொல்லி தந்தி கொடுக்கவும் என்றார். நீங்கள் ஒய்வு எடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்றாள் சாஷா.
அவரோ எனது புத்தகங்களின் பதிப்புரிமை மற்றும் எனது உயில் குறித்து அவரோடு இறுதியாக விவாதிக்க வேண்டும். ஒருவேளை இதுவே எனது கடைசி நாளாக கூட இருக்ககூடும். உடனே செர்ட்கோவை வரச்சொல் என்றார். சாஷா ஒரு நிமிசம் யோசித்தாள். செர்ட்கோவால் தான் டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தான் அப்பாவின் ப்ரியத்திற்குரிய துணை. தோழர். ஆகவே அவருக்கு உடனே தந்தி கொடுத்தாள்.
செர்ட்கோவ் டால்ஸ்டாயின் தீவிர அபிமானி. அவர் டால்ஸ்டாய் குடும்பச் சொத்தல்ல. அவர் ஒட்டுமொத்த ரஷ்ய சமூகத்திற்கு சொந்தமானவர். அவர் ஒரு ஞானி. அவரது எண்ணங்களையும் எழுத்துகளையும் ரஷ்ய சமூகம் பின்பற்ற வேண்டும். அவரது எழுத்துகளை எந்தத் தனிநபரும் சொந்தம் கொண்டாடி முடக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். டால்ஸ்டாயின் பெயரால் அவர் ஒரு பண்ணை அமைத்து அங்கே இளைஞர்களை டால்ஸ்டாய்வாசிகளாக மாற்றிக் கொண்டிருந்தார்
டால்ஸ்டாயின் மனைவி சோபியா அவரது எழுத்துகள், சொத்துகள் யாவும் தனக்கும் தன்பிள்ளைகளுக்கு மட்டுமே சொந்தமானது. அவரால் தங்களுக்கு வேறு எவ்விதத்திலும் பயனில்லை. அவரது காலத்தின் பிறகு தங்களை காப்பாற போகிற ஒரே துணை அது மட்டுமே என்று அவரது எழுத்தின் முழுஉரிமையையும் தனதாக்கிக் கொள்ள முயன்றார். விவசாயிகளுக்கு நிலத்தை பிரித்து இலவசமாக தருவதற்கு டால்ஸ்டாய் முயற்சி செய்வதை தடுக்க போராடினாள்.
டால்ஸ்டாய் தனது குடும்பத்தை விட ரஷ்ய சமூகமே முதன்மையானது என்று தனது எல்லா படைப்புகளையும் நாட்டுடமையாக்கி கொள்ள அனுமதி தந்துவிடவே அது சோபியாவிற்கு தாங்க முடியாத அவமானத்தையும் கோபத்தையும் உருவாக்கியது. அவள் டால்ஸ்டாயோடு சண்டையிட்டாள். நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக மிரட்டினாள். செர்ட்கோவ் ஒரு ஏமாற்றுகாரன் என்று திட்டினாள். எதையும் டால்ஸ்டாய் கேட்டுக் கொள்ளவேயில்லை. தான் ஒரு ஏழ்மையுற்று ஒரு குடியானவப்பெண் போல ஆகிவிடக்கூடும் என்று சோபியா பயந்து போனாள். அவள் மனதில் குழப்பமும் கோபமும் பொங்கிவழிந்தது.
வீடு தன்னை நிம்மதியற்று போக செய்துவிட்டது என்று புலம்பியபடியே டால்ஸ்டாய் யாரும் அறியாமல் தனது 82 வது வயதில் வீட்டிலிருந்து வெளியேறி கண்காணாத இடத்தை நோக்கி பயணம் செய்ய துவங்கினார். ஆனால் மனச்சோர்வும் உடல்நலிவும் அவரை பாதியில் முடக்கிவிட்டது. அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய கட்டாயமானது.
டால்ஸ்டாய்க்கும் அவர் மகள்களுக்குமான உறவு மிக நெகிழ்வானது. அவர் தன் மகள் தொலைவில் திருமணம் செய்து கொடுத்தால் பார்க்க முடியாமல் போய்விடுமே என்று அருகாமையில் திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அதன்படியே ஒரு மகளை அருகாமையில் உள்ள பண்ணை முதலாளிக்கு திருமணம் செய்து தந்தனர். அவள் தினமும் தந்தையை வந்து பார்த்து போக வேண்டும் என்று உத்தரவிட்டார். என் செல்லமே என்று பிள்ளைகளை அழைப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.
டால்ஸ்டாய்க்கு பதிமூன்று பிள்ளைகள். இதில் முதல் குழந்தை செர்ஜி. அடுத்தவள் தன்யா. மூன்றாவது இலியா. நான்காவது லியோ. ஐந்தவாது மாஷா ஆறாவது பியோதர் அவன் பிறந்த பதினாலு மாதத்தில் இறந்துபோனான். அடுத்தவன் நிகோலய். அவனும் பத்துமாச குழந்தையாக மரணம் அடைந்தான். அடுத்தது வர்வேரா. பிறந்த சில மணி நேரத்தில் இறந்து போனாள். அடுத்தவன் ஆந்த்ரே. அவன் தம்பி மைக்கேல், அவனது தம்பி அலெக்சி இவன் நான்கு வயதில் நோயுற்று இறந்துபோனான். அவனுக்கு அடுத்தவள் சாஷா அடுத்து வனிஷ்கா. ஏழு வயதில் வனிஷ்காவும் இறந்து போனாள். இதில் வளர்ந்து பெரியவளாகி மாஷா தன் முப்பதாவது வயதில் நிமோனியா தாக்கி இறந்து போனாள். ஆகவே குழந்தைகளின் மரணம் டால்ஸ்டாயின் மனதில் நீங்காத துக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் கடைசிமகள் சாஷாவை அவர் தனது செல்லக்குழந்தையாக எப்போதும் நினைத்தார்.
அந்த வீட்டில் சாஷா மட்டுமே தன்னை புரிந்து கொண்டவள் என்று அவளை கூடவே வைத்து கொண்டார். சாஷா டால்ஸ்டாயின் உதவியாளரை போலவே இருந்தார். அவருக்காக கடிதங்கள் எழுதுவது, அவரைக் குளிக்க வைப்பது. உணவு தருவது. அவரைச் சந்திக்க வரும் பார்வையாளர்களை முறைப்படுத்துவது. அப்பாவிற்காக படிப்பது என்று சாஷா டால்ஸ்டாயை மிகவும் நேசித்தாள். அது ஒரு தந்தை மகள் இருவருக்குமான அன்பு மட்டுமில்லை. தன் காலத்தின் மாபெரும் எழுத்தாளர், ஞானி என்று தந்தையை பற்றி அவளே சிறப்பாக குறிப்பிடுகிறாள்.
தான் பிறந்த அதே சோபாவில் தனது பையன் பிறக்க வேண்டும் என்று டால்ஸ்டாய் ஆசைப்பட்டார் அப்படி தான் அவரது முதல்பையன் செர்ஜி பிறந்தான். அந்த பெயர் கூட டால்ஸ்டாயின் சகோதரன் பெயரே. தனது தாய் தனக்கு முலைப்பால் ஊட்டியதை போல தன் பிள்ளையும் சோபியாவின் முலைப்பால் அருந்திவளர வேண்டும் என்றார். ஆனால் சோபியா குழந்தைகளை வளர்ப்பது தாதியின் வேலை. தனது உடல்நலக்குறைவால் குழந்தைகளுக்கு பாலூட்ட இயலாது என்று மறுத்துவிட்டதை டால்ஸ்டாயால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதைபற்றிய விவாதம் வீட்டில் வலுத்தது.
அந்த முட்டாள் விவசாயி டால்ஸ்டாயை உன்னால் திருத்த முடியாது. நீ அவனோடு சண்டையிடுவதை நிறுத்திக் கொள். அவன் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று சோபியாவின் தந்தை கடிதம் எழுதினார். அவர் ஒரு மருத்துவர். சோபியா தனது பால்சுரப்பிற்காக ஏதாவது மருந்து அனுப்பி தரவேண்டும் என்று அப்பாவை கேட்டு கொண்டதால் அவர் மருந்துகளை அனுப்பி தந்ததையும் குறிப்புகள் கூறுகின்றன.
சோபியா மரபான ரஷ்ய குடும்பத்தில் வளர்க்கபட்டவள். நாலாயிரம் ஏக்கர் நிலமுள்ள ஒரு நிலப்பிரபுவை திருமணம் செய்து கொள்கிறோம். அவர் ராணுவத்தில் பணியாற்றியவர். அவருக்கு சொந்தமாக பண்ணை வீடும் விளைநிலமும் உள்ளது என்பது மட்டுமே அவள் டால்ஸ்டாயை பற்றி அறிந்த உண்மைகள்.
திருமணமாகியதும் தானும் ஒரு சீமாட்டியை போல வாழப்போகிறோம் என்று கனவு கண்டாள். திருமணமாகி தனது வீட்டிற்கு வந்த சோபியாவிடம் டால்ஸ்டாய் தனது டயரியை தந்து தனக்கு திருமணத்திற்கு முன்பு எந்தெந்த பெண்களுடன் தொடர்பு இருந்தது என்பதை அவள் வாசித்து அறிந்து கொள்ளும்படியாக சொன்னதை அவளால் ஜீரணிக்கமுடியவில்லை. டால்ஸ்டாய் அவளிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை. அவளோ டால்ஸ்டாயை மோசமான மனிதன் என்ற பிம்பத்துடனே புரிந்து கொள்ளத் துவங்கினாள்.
டால்ஸ்டாயின் டயரியை போலவே சோபியாவின் டயரியும் இன்று வெளியாகி உள்ளது. அந்த டயரியில் அவள் தன்னுடைய வாழ்வில் என்னவிதமான ஏமாற்றங்களை அடைந்தேன் என்று விரிவாக எழுதியிருக்கிறாள். டால்ஸ்டாய் அவளுக்கு தனது மனதை புரிய வைப்பதற்காக எடுத்த முயற்சிகள் யாவும் வெற்று சண்டைகளாகவே முடிந்தன.
ஆனாலும் சோபியா தன் கணவனின் எழுத்தை ரஷ்ய தேசம் கொண்டாடுகிறது. அவன் மற்றவர்களை போல சாதாரண நிலப்பிரபு இல்லை என்று புரிந்து கொண்டதோடு அவர் எழுதுவதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்யவும் முன்வந்தாள். டால்ஸ்டாய்க்காக சோபியா படிப்பதும் கதைகளை நகலெடுத்து தருவதும், அத்தியாயங்களில் செய்யவேண்டிய மாற்றங்களை பற்றி விவாதிப்பதுமாக அவரது இலக்கிய துணையைப் போலவே மாறிக் கொண்டாள்.
டால்ஸ்டாயின் மனது குடும்பத்தின் வளர்ச்சி மீது எப்போதுமே அக்கறை கொள்ளவில்லை. அவரை சந்திப்பதற்காக வந்த எழுத்தாளர்கள், விமர்சகர்கள், இளைஞர்களை வரவேற்று உணவளித்து தன்னோடு தங்கச் செய்து நாளெல்லாம் விவாதித்து கொண்டு தன்னால் ரஷ்ய சமூகத்தை மாற்றிவிட முடியும் என்ற தீவிரமான செயல்பாட்டுடன் எழுதிக் கொண்டிருந்தார். பிள்ளைகளின் வளர்ச்சியை அவர் ஒரு போதும் முக்கியமாகக் கருதவேயில்லை. அதை தான் சோபியா பெரிய குற்றமாக அவர் மீது சுமத்த துவங்கினாள். டால்ஸ்டாய்க்கு சோபியா மீது கோபமிருந்தது. ஆனால் அவளை அவர் வெறுக்கவில்லை.
அத்தனை வருசம் அவள் தன்னையும் தன் பிள்ளைகளையும் அரவணைத்து காத்திருக்கிறாள். அவளது முன்கோபம் சில நாட்களில் தணிந்துவிடக்கூடியது என்று எப்போதுமே விட்டு கொடுத்திருக்கிறார். அவள் எல்லா நிலப்பிரபுக்களை போலவே மாஸ்கோவிற்கு இடம்மாறிவிட ஆசைப்பட்டாள். அதை டால்ஸ்டாய் விரும்பவில்லை. தனது வீடு மிக பழமையாதனாக இருக்கிறது. அதை மாற்றி கட்ட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டதை டால்ஸ்டாய் கடுமையாக மறுத்து அந்த வீடு அப்படியே இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
சோபியாவிற்கு டால்ஸ்டாய் மதத்தையும் மதநிர்வாகத்தையும் மறுப்பதையும் எதிர்ப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரை திருச்சபை விலக்கி வைத்தது. அதன் பாதிப்பு தன்மீதும் தன்பிள்ளைகள் மீதும் தீராத கறையாக படிந்துவிட்டது என்று கடுமையாக எதிர்த்தாள். டால்ஸ்டாயோ மதம் மனித அகவிடுதலைக்கானது. அது அவனை கட்டுபடுத்தி அடிமைபடுத்த கூடாது. அன்பை விட சிறந்த மதம் வேறு எதுவுமில்லை என்றார்.
டால்ஸ்டாய் காணவிரும்பிய சமூகமும் மனித அன்பும் அன்றைய சூழலில் பெரிதும் கற்பனையானது என்றே நினைக்கபட்டது. கேலி செய்யப்பட்டது. ஆனால் இளைஞர்கள் டால்ஸ்டாயை பின்பற்றினார்கள். இயற்கையோடு இணைந்து எளிமையாக வாழ்வது என்பதில் ஆர்வம் காட்டினார்கள். அதை டால்ஸ்டாய் வரவேற்று செயல்படுத்த துவங்கினார்.
இந்த நிலை வளர்ந்தால் டால்ஸ்டாய் தன்னை விட்டு பிரிந்து துறவியாகிவிடுவார் என்பதை சோபியா உணர்ந்தேயிருந்தார். அது தான் அவரது பிடி இறுகுவதற்கான முதற்காரணமாக இருந்தது. முதுமை டால்ஸ்டாயின் இயல்பை மாற்றியிருப்பதை அவள் நன்றாக உணர்ந்தாள். அவர் தன் வாழ்நாள் முழுவதும் யாஸ்னயா போல்யானாவை விட்டு வெளியேறி போகவே மாட்டார் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். ஆனால் மனநெருக்கடி அவரை பிறந்த இடத்திலிருந்து வெளியேற்றியது. தனது சொந்த வீட்டை துறந்து டால்ஸ்டாய் வெளியேறி செல்லும்போது நிச்சயம் மனத்துயர் கொண்டிருப்பார் என்று சோபியா எழுதுகிறார்.
முதுமை டால்ஸ்டாய்க்கு நிம்மதியான காலமாக இருக்கவில்லை. அவர் விரும்பியது போன்ற வாழ்க்கையை அவரது பிள்ளைகள் எவரும் வாழவில்லை. அது அவரை கடுமையாக மனச்சோர்விற்கு உள்ளாக்கியது. தன்பிள்ளைகளின் நலனிற்காக தன்னால் பிராத்தனை செய்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றே நாட்குறிப்பில் எழுதுகிறார்.
மனைவியோடு சண்டையிட்டு 1910 வருசத்தின் அக்டோபர் 28ம் தேதி விடிகாலை டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். விடைபெறுவதற்கான காரணங்களை ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு வெளியேறிய அவருக்கு துணையாக டாக்டர் மக்கோவிட்ஸ்கி உடன்சென்றார். இருவரும் டால்ஸ்டாயின் சகோதரியான எண்பது வயது மரியாவை பார்ப்பதற்கான மடாலயம் ஒன்றில உள்ள கன்னியர் மடத்தை நோக்கி புறப்பட்டனர்.
முதிய வயதில் ஏன் டால்ஸ்டாய் தனது சகோதரியை காண விரும்பினார் என்று புரியவில்லை என்று மருத்துவர் கேட்டபோது அது தன் பால்ய காலத்தை மறுபடி பார்ப்பதை போலஇருக்க கூடும் என்று டால்ஸ்டாய் பதில் சொன்னார். ஒரு இரவு அந்த மடாலயத்தில் தங்கியிருந்தனர்.
அப்பாவின் பிரிவு கடிதத்தை கண்ட அம்மா அவமானத்தை தாங்க முடியாமல் அருகில் உள்ள குளத்தில் விழுந்து செத்துப் போக முயன்றதை அப்பாவிடம் தெரிவிக்க சாஷா வீட்டிலிருந்து உடனடியாக புறப்பட்டு அவரோடு வந்து சேர்ந்து கொண்டாள். அந்த பயணத்தில் டால்ஸ்டாய் மிகவும் மாறியிருந்தார். புனித யாத்திரை செல்லும் துறவிகளை போல தான் டால்ஸ்டாய் வெளியேறினார் என்கிறார் மருத்துவர் மக்கோவிட்ஸ்கி.
அவரை நினைவு கொள்ளும் செர்ட்கோவ் ரயில் நிலையத்தில் அவரை பார்க்கும் போது பூமிக்கு வந்த ஒரு புனிதரை போலவே எளிமையாக ஆனால் மாறாத ஒளியோடு அவர் தோன்றினார். அந்த முதியவரை கண்டபோது இவர் தானா இத்தனை கதைகளையும் எழுதியவர் என்று வியப்பாக இருந்தது. அவரது புன்னகையை போல பார்த்த மாத்திரத்தில் அடுத்தவரை கவர்ந்துவிடும் ஒன்றை வேறு யாரிடமும் கண்டதேயில்லை. ஆனால் அந்த ரயில் நிலையத்தில் கண்ட டால்ஸ்டாயின் முகத்தில் புன்னகையில்லை. கலக்கம் மட்டுமே மிஞ்சியிருந்தது. அவரது கண்கள் தனது கடமையை முடித்துவிட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தன என்கிறார்.
சாஷா அப்பா சொன்னபடியே அவரது இலக்கிய தோழருக்கு மட்டும் தந்தி கொடுக்கவில்லை. அப்பா உடல்நலமற்று போய் அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கிறார் என்று தன் அம்மா சோபியாவிற்கும் தந்தி கொடுத்திருந்தாள். அடுத்த ரயில் ஏறி சோபியா வந்து சேர்ந்துவிட்டாள். ஆனால் அவளுக்கு டால்ஸ்டாயை நேர்கொண்டு காண்பதில் தயக்கமிருந்தது. அவர் தன்னை சந்திக்க மறுத்துவிட்டால் என்னவாவது என்று உள்ளுற நடுங்கி கொண்டேயிருந்தாள். அம்மாவிற்கு துணையாக வந்திருந்த தன்யா அம்மாவை ஆறுதல்படுத்தி இன்னொரு அறையில் காத்திருக்க சொன்னாள்.
மதிய நேரம் தன் மூத்தமகள் தன்யா தன்னை பார்க்க வந்திருப்பதை அறிந்து கொண்ட டால்ஸ்டாய் அவளை அழைத்துவரும்படியாக செர்ட்கோவிடம் சொன்னார். அப்பாவிற்கும் மகளுக்குமான அந்த சந்திப்பு கண்ணீரும் வலியும் நிரம்பியதாக இருந்தது. உன் அம்மாவை தனியே விட்டு ஏன் வந்தாய். நான் இல்லாத போது அவளை நீங்கள் அல்லவா பார்த்து கொள்ள வேண்டும் என்று டால்ஸ்டாய் அவளிடம் சோபியா பற்றியே ஆதங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த அறையில் அம்மா காத்திருக்கிறாள் என்று தன்யா அப்பாவிடம் சொல்லவேயில்லை.
டால்ஸ்டாய் தன் மகளின் கைகளைப் பிடித்து கொண்டு அம்மாவையும் பண்ணைவீட்டையும் அவள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தாழ்ந்த குரலில் கூறினார். தன்யா அழுதாள். பேச இயலாமல் அப்பாவின் கைகளை பிடித்து கொண்டு சிறுமி போல விம்மி விம்மி அழுதாள். டால்ஸ்டாய் அவளை தேற்றியபடியே அம்மாவின் உடல்நலத்தில் நீ அதிக அக்கறை கொள்ள வேண்டும். நான் இல்லாமல் போனால் அவள் உடைந்து போய்விடுவாள் நீங்கள் தான் அவளது துணை என்று சொன்னார். தன்யா மறுபடியும் விம்மினாள். சிறிய கைக்குட்டையால் அவள் முகத்தை துடைத்து கொள்ளும்படியாக சொன்ன டால்ஸ்டாய் அவள் பயணத்தில் சிரமம் இருந்ததா என்று பொதுவாக விசாரிக்கத் துவங்கினார். வெளியே சாஷா காத்துக் கொண்டிருந்தாள்
அப்பாவின் இறுதி நிமிசத்திற்காக பிரார்த்தனை செய்ய வந்த பாதிரியை அனுமதிப்பதா இல்லை வெளியே அனுப்பிவிடுவதா என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. பாதிரியார் கனிவான குரலில் திருச்சபை அவரை விலக்கி வைத்த போதும் சீமாட்டி சோபியாவின் ஏற்பாட்டில் தான் வந்திருப்பதாக சொல்லி கடைசி நிமிச பாவமன்னிப்பிற்கு டால்ஸ்டாய் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரை காத்திருக்கும்படியாக சொல்லிய சாஷா அப்பாவை காண்பதற்காக அறைக்குள் சென்றாள்
அப்பா தன் சிறிய நோட்டு ஒன்றில் எதையோ குறித்து கொண்டிருப்பதை கண்டாள். சிறுவயதில் இருந்து தன் மனதில் தோன்றிய அத்தனையும் எழுதி வைத்துக் கொள்வதே டால்ஸ்டாயின் பழக்கம். அவர் இதற்காக சிறிய குறிப்பு நோட்டுகளை தனியே வைத்திருந்தார். அதில் தன்னை பாதித்த சம்பவங்கள்,குடும்ப நிகழ்வுகள் படித்தவை. பார்த்தவை என யாவையும் குறித்து வைத்திருந்தார். அத்துடன் தினசரி நடப்புகளை தவறாமல் டயரி எழுதுவதும் செய்தார். இந்த பழக்கம் அவரிடம் துவங்கி வீட்டில் அனைவருக்கும் தொற்றிக் கொண்டது.
சில வேளைகளில் அவர் தனது பிள்ளைகளுடன் பேசுவதற்கு கூட எழுதி தந்துவிடுவதையே வழக்கமாக்கி கொண்டிருந்தார். அன்றும் தனது குறிப்பு நோட்டில் அவர் எதையோ பென்சிலால் கிறுக்கி கொண்டிருப்பதை சாஷா பார்த்தாள். இதே போல வெளியே செர்கடோவும் தனது குறிப்பு நோட்டில் அங்கு நடப்பதை எல்லாம் கவனமாக குறிப்பு எழுதி கொண்டுவருவதை கண்டிருந்தாள். அது ஏனோ நினைவிற்கு வந்தது.
தான் சந்திக்க விரும்பிய ஒவ்வொருவருக்காக தந்தி கொடுத்தாகிவிட்டதா என்று சாஷாவிடம் கேட்டுக் கொண்ட டால்ஸ்டாய் தனது தந்தி வாசகம் மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கிறதா என்று அடிக்கடி விசாரித்து கொண்டார். ஒரு எழுத்தாளன் தந்திவாசகத்தை போல குறைந்த சொற்களுக்குள் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டுவிட வேண்டும் என்று அந்த நிலையிலும் சாஷாவிடம் பகடியான குரலில் சொன்னார் டால்ஸ்டாய்.
அத்துடன் தந்தி கொடுப்பதற்காக சாஷா தனது பணத்தில் இருந்தே செலவழிக்க வேண்டும் இதற்காக அவள் செர்ட்கோவிடம் இருந்து பணம் வாங்க கூடாது என்று எச்சரித்ததோடு தனது சிறிய பர்ஸில் உள்ள பத்து ரூபிள் நோட்டை அவள் எடுத்து கொள்ளவும் அது போதாது என்றால் பர்ஸின் உட்பக்கமுள்ள சிறிய உறையில் தனியே ஐம்பது ரூபிள் இருக்கிறது அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும் என்று தெரிவித்தார்.
அவரது உடலை பரிசோதிக்க மருத்துவர் உள்ளே வந்தார். ரஷ்ய விவசாயிகள் எப்போதுமே தங்கள் ஆறாத துயரத்தோடு தான் இறந்து போவார்கள். நானும் என் பாவங்களுடன் இறந்து போக போகிறேன் என்று மனம் ததும்ப சொன்னார் டால்ஸ்டாய்.. அதை கேட்ட மருத்துவர் உங்களை சுற்றி அன்பும் நட்புமே நிறைந்திருக்கிறது. நீங்கள் திரும்பி பாருங்கள். எத்தனை நண்பர்கள். அன்பானவர்கள். டால்ஸ்டாய் நீங்கள் அதிகம் அன்பை சம்பாதித்திருக்கிறீர்கள் என்றார்.
அதை மறுத்த டால்ஸ்டாய் இந்த உலகில் டால்ஸ்டாய் என்ற ஒரேயொரு மனிதன் மட்டும் வாழவில்லை. எதற்காக அவனை பற்றி இவ்வளவு புகழ்ந்து பேசுகிறீர்கள் என்று அவர் வெளிப்படையாகவே பேசினார்.
ஒரு இரவு ரயில்நிலையத்தில் கழிந்தது. மறுநாள் டால்ஸ்டாய் தன்னை கிராமப்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கியிருக்கும்படியாக நவிகோவ் என்ற விவசாயி எழுதி கடிதத்திற்கு பதில் போடும்படியாக சொல்லி செர்ட்கோவிடம் உடனே டிக்டேட் செய்ய ஆரம்பித்துவிட்டார். தனது பாதை வேறு என்றும் இப்போதுள்ள தனதுவயது மற்றும் உடல்நிலை காரணமாக அங்கே வந்து தன்னால் தங்க இயலாது என்று தெரிவித்து ஆனாலும் அவனது அன்பிற்கு நன்றி தெரிவித்து கடிதத்தை முடித்தார் டால்ஸ்டாய்.
ஒவ்வொரு வரி முடியும் போதும் கடிதம் நன்றாக வந்திருக்கிறதா என்று கேட்டுக் கொள்ள அவர் தவறவேயில்லை. எத்தனையோ ஆயிரமாயிரம் வரிகளை எழுதியிருந்த போதும் இந்தக் கடிதம் தான் நினைத்தை சரியாக வெளிப்படுத்துகிறதா என்பதில் டால்ஸ்டாய்க்கு சந்தேகமே இருந்தது. எழுதிய கடிதத்தை ஒன்றுக்கு நான்கு முறை படிக்கச் சொல்லி கேட்டு திருத்தம் சொல்லி உடனே அனுப்பி வைக்கும்படியாக சொன்னார்.
அன்று மற்ற கடிதங்களுக்கும் அவர் பொறுமையாகச் சொல்லிச் சொல்லி பதில் எழுத வைத்தார். அன்றிரவு அவருக்கு நோய் முற்றியது. தன்னை அறியாமல் உளற துவங்கினார். எதை பற்றிபேசுகிறோம் என்ற தெளிவு மறந்து போய்விட்டது.
சிடுசிடுப்பும் சினமுமாக அவர் எதையோ கேட்டதை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை. அடுத்த நாள் இது முற்றியது. வெறும்நோட் புக்கை எடுத்து நீட்டி இதில் உள்ளதை படித்து சொல் என்று புலம்ப துவங்கினார். அடுத்த நாளில் மருத்துவர்கள் அவர் மீதான நம்பிக்கையை கைவிடத்துவங்கினார்கள். மறுநாள் டால்ஸ்டாய் இறந்துபோனார். உலகம் எவ்வளவு எளிமையாக உண்மையாக இருக்கிறது என்று அவர் மருத்துவரிடம் வியந்ததாக அவரது கடைசி குறிப்பு கூறுகிறது.
1910 நவம்பர் 8 திங்கள்கிழமை அவரது மரணச்செய்தி பரவியதும் ரஷ்யாவெங்கும் துக்கம் அனுஷ்டிக்கபட்டது. ரஷ்ய பாராளுமன்றம் அன்று தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து அவருக்கு இரங்கல் தெரிவித்தது. பல்கலைகழக மாணவர்கள் வகுப்பில் இருந்து வெளியேறி ஆங்காங்கே நினைவு கூட்டங்களை நடத்த துவங்கினார்கள். மறுநாள் அவரது இறுதிசடங்கில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். டால்ஸ்டாய் தனிமனிதன் இல்லை. அவன் ரஷ்யாவின் ஆன்மா என்று செர்ட்கோசொன்னது தான் நடந்தேறியது.
தனது பண்ணையில் புதைக்கபட்டார் டால்ஸ்டாய். அவரது மனைவி சோபியா ஒரு வார காலம் நோயுற்று படுக்கையில் கிடந்தாள். பின்பு அவள் டால்ஸ்டாய் விரும்பியபடி தனது நிலத்தை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்தாள். அது போலவே அவள் ஆசைப்பட்டபடியே டால்ஸ்டாயின் எழுத்துக்களுக்கான முழுஉரிமை சோபியாவிற்கு வழங்கபட்டது.
ஒன்பது ஆண்டுகாலம் டால்ஸ்டாயின் நினைவுகளோடு வாழ்ந்து மறைந்தார். அஸ்தபோவ் ரயில் நிலையம் இன்று டால்ஸ்டாயின் கடைசி புகலிடமாக உலகெங்குமிருந்து பார்வையாளர்கள் வந்துபோகும் காட்சிநிலையமாக மாறியிருக்கிறது.
அன்னாகரீனனா நாவலின் இறுதியில் அன்னா ஒரு ரயில்நிலையத்தில் தற்கொலை செய்து இறந்து போகிறாள். டால்ஸ்டாயின் வாழ்வும் அப்படியே ஒரு ரயில் நிலையத்தில் முடிந்து போகிறது. அன்னாவின் மரணத்தின் முன்பாக மனம் உடைந்தே போயிருந்தாள். டால்ஸ்டாயும் அப்படியே.
டால்ஸ்டாயின் கடைசி நாட்களை மையமாக கொண்டு Jay Parini எழுதிய நாவல் The Last Station பத்து ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இந்த நாவல் தற்போது Michael Hoffman ஆல் படமாக்கபட்டுள்ளது.
ரஷ்யாவில் 1912ம் ஆண்டே மௌனப்படமாக Departure of a Grand Old Man என்ற பெயரில் டால்ஸ்டாயின் கடைசி நாட்கள் படமாக்கபட்டுள்ளது. அது சோபியாவை பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கியது என்ற காரணம் காட்டி படத்தை தடை செய்துவிட்டார்கள்.
The Last Station திரைப்படத்தை பத்துநாட்களுக்கு முன்பாக பார்த்தேன். டால்ஸ்டாயாக நடித்துள்ள Christopher Plummer அற்புதமாக நடித்திருக்கிறார். படம் மிக மேலோட்டமாகவே உருவாக்கபட்டிருக்கிறது. டால்ஸ்டாயின் மனைவியாக நடித்துள்ள ஹெலன் மிரான் நிஜ சோபியாவிலிருந்து மிகவும் மாறுபட்ட கதாபாத்திரமாக உருவாக்கபட்டிருக்கிறார். டால்ஸ்டாயை அவர் இளம்காதலனை போல நடத்துவதும், டால்ஸ்டாய் மனைவியோடு படுக்கையில் புரண்டு காதலிப்பதும் எண்பது வயதான டால்ஸ்டாயின் மனப்போக்கினை படம் ஆதார அளவில் கூட புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. படம் அவரது வாழ்க்கை குறிப்புகளுடன் சற்று அதிகமான கற்பனையை கலந்திருக்கிறது.
டால்ஸ்டாயின் மனைவி சோபியா இப்படத்தில் அதிக உணர்ச்சிவசப்படுகின்றவராக, கணவன் மீது ஆறாத காதல் கொண்ட மனைவியாக சித்தரிக்கபடுகிறார். அவரது இயல்பும் மனப்போக்கும் கூட படத்தில் பெரிதாக மாற்றியமைக்கபட்டிருக்கிறது. ஹாலிவுட் சினிமாவின் செயற்கை தனங்கள் அதிகமிருந்த போதும் இந்த படம் செர்ட்கோவின் சித்தரிப்பிலும் அவருக்கும் டால்ஸ்டாய்க்குமான உறவை பற்றியும் தெளிவாகவே எடுத்து சொல்கிறது.
கடைசி ரயில்நிலையம் என்பதை தலைப்பை தவிர வேறு எங்கே படம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. படத்தின் முடிவில் டால்ஸ்டாய் அஸ்தபோவ் நிலையத்தில் இறந்து போகிறார். அங்கே நடைபெறும் சம்பவங்கள் கூட மிக தட்டையான அளவிலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாய் என்ற மனிதரைப் பற்றிய படம் என்பதால் இதை தவறவிடாமல் ஒரு முறை பார்க்க வேண்டிய அவசியம் உண்டாகிறது.
இதை விடவும் The Last Days of Leo Tolstoy- Vladimir Chertkov புத்தகமும், சோபியா டால்ஸ்டாயின் THE AUTOBIOGRAPHY OF COUNTESS SOPHIE TOLSTOY இரண்டும் மிக உண்மையாக டால்ஸ்டாயை பதிவு செய்திருக்கின்றன. அவை தேடி வாசிக்க வேண்டிய இரண்டு புத்தகங்கள். டால்ஸ்டாயே தனது பால்ய காலம் இளமை பருவம், என விரிவாக இரண்டு தனிநூல்கள் எழுதியிருக்கிறார்.
சோபியா டால்ஸ்டாய் தனது நவம்பர் 19 1903ம் குறிப்பேட்டில் இப்படித்தான் எழுதியிருக்கிறார்
படுக்கை அறைக்குள் சென்றேன். என் கணவர் டால்ஸ்டாய் படுத்திருந்தார். அன்று முழுவதும் அவர் என்னோடு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சமீபமாகவே அவரிடமிருந்து ஒரு அன்பான வார்த்தையும் கேட்கமுடியவில்லை. நான் நினைத்தது போலவே அவர் உள்ளுற செத்துகொண்டிருக்கிறார் . சமீபமாகவே அவர் எதையும் எழுதவில்லை எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தனிமை. நாளெல்லாம் தனிமை. அல்லது தன் சீடர்களுடன் பிரசங்கம். இதை தவிர வீடடு மனிதர்கள் யாரோடும் ஒரு வார்த்தை பேசாத தனிமை அவரை கவ்விக் கொண்டுவிட்டது. நான் அவர் இறந்துவிட்டதாகவே உணர்கிறேன்
இன்னொரு குறிப்பில் எழுதுகிறார்
ஏன் அவர் இப்போதெல்லாம் எழுதுவதில்லை என்று கேட்டதற்கு எழுதுவதற்கு மனதில் காதல் வேண்டும். அது என்னிடம் இப்போதில்லை என்று சொல்கிறார். என்னை காதலிக்க வேண்டியது தானே என்று கேட்டால் அது இனி இயலாது. என் மனதில் இப்போது உன்மீது காதலே இல்லை. வெறுமை மட்டுமே மிஞ்சியிருக்கிறது என்று வெளிப்படையாக மறுத்திருக்கிறார். எவ்வளவு கடுமையான சொல் அது. என்னை அது வதைத்து கொண்டேயிருக்கிறது.
48 வருச காலம் இருவரும் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் முடிவில் டால்ஸ்டாய் உறங்கும் மனைவி எழுந்து கொள்வதற்குள் விடிகாலையில் அவள் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறிப் போகிறார். மரணத்தின் கடைசி நிமிசத்தில் கூட மனைவியை காண விரும்பாமல் விலகியே இருக்கிறார். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவும் வெறுப்பும் எழுத்தால் ஒருபோதும் முழுமையாக புரிந்து கொள்ளபட முடியாதது போலும்.
எழுத்தை விட வாழ்வு அதிக புனைவும் எதிர்பாராமையும் புதிர்தன்மையுமே கொண்டிருக்கிறது. டால்ஸ்டாய் அதை வாழ்ந்து அனுபவித்திருக்கிறார்.