இசையின் சித்திரங்கள்

அழிசி வெளியீடாக வந்துள்ள ரா. கிரிதரன் எழுதியுள்ள காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பினைப் படித்தேன். மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள் , இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தமிழில் இது போன்ற கட்டுரைகள் இதுவரை வந்ததில்லை.

மேற்கத்திய இசையினை அறிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் ஒரு கையேடு போலவே இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. புனைவெழுத்திற்கு நிகரான சுவாரஸ்யத்துடன் இக் கட்டுரைகளை கிரிதரன் எழுதியிருக்கிறார்.

மேற்கத்திய இசைமேதைகளின் வரலாறு, இசையில் அவர்கள் ஏற்படுத்திய சாதனைகள். கர்நாடக இசைமேதைகள் பற்றிய கட்டுரைகள். இசைஞானி இளையராஜாவின்  தனித்துவமிக்க How to name it. Nothing but wind போன்ற இசைக்கோர்வைகளின் முக்கியத்துவம், இசைக்கலைஞர் நரசிம்மனின் இசைத்தொகுப்புகள், சுபின் மேத்தா, ஜீன் சிபேலியஸ், பான்சுரிக்கலைஞர் க்ளைவ் பெல்லின் நேர்காணல் என இந்த தொகுப்பிலுள்ள கட்டுரைகள் யாவும் மிகச்செறிவாகவும் கவித்துவ மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.

இக் கட்டுரைகளை வாசிக்கும் போது பக்கத்திலிருந்து கிரிதரன் நம்மோடு உரையாடுவது போன்ற தொனி மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மேற்கத்திய செவ்வியல் இசை மட்டுமின்றி கர்நாடக இசை, ஜாஸ், ஆபரா, ரவிசங்கரின் சிம்பொனி, Fusion இசைத்தொகுப்புகள் என ஆழ்ந்து கேட்டு வந்தவர் என்பதைக் காணமுடிகிறது.

லண்டனில் வசிக்கும் கிரிதரன்  அங்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளைக் காண  ஒவ்வொரு தேவாலயமாகச் செல்கிறார். அவருடன் நாமும் இணைந்து பயணித்து இசை கேட்கிறோம். நம்மையும் ஒரு இசைப்பயணியாக்குவதே அவரது தோழமை.  தேவாலயத்தின் அமைப்பு, அங்கு இசைக்கபடும் இசையின் வகை, அதன் வரலாற்று பின்னணி, அந்த இசையை அணுக வேண்டிய விதம்,  பார்வையாளர்களின் நிசப்தம் என தேர்ந்த இசை ஆசிரியரைப் போலவே நம்மை வழிநடத்துகிறார்.

பாப்லோ கசல்ஸ் பற்றிய கட்டுரையை வாசிக்க  துவங்கிய சில நிமிஷங்களில் ஒரு ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வை அடைந்தேன்.   பாக்கின் ஆறு செல்லோ இசைக்குறிப்புகள். அதை மீள்உருவாக்கம் செய்யும் பாப்லோ கசல்ஸின் வாழ்க்கை, அவரது இசைப்பயணம். இதன் ஊடாக அவரது சொந்த மண்ணில் நடந்த அரசியல் மாற்றங்கள். ராணுவ ஆட்சியின் கொடுமை. இசைப்பதிவிற்காக லண்டன் சென்றது. நிறைவேறாத அவரது இசைக்கனவு. முடிவில் பிரான்ஸின் பிரதேஸ் கிராமத்தில் வாழ்ந்து வந்த அவரது நாட்கள், அவருக்காக நிகழ்த்தப்பட்ட இசைநிகழ்ச்சி. அதன் பிரம்மாண்டம் என பாப்லோ கசல்ஸின் வாழ்க்கை வழியாக பிரம்மாண்டமான மானுட நாடகத்தையே நாம் காணுகிறோம். தமிழில் எழுதப்பட்ட நிகரற்ற இக்கட்டுரைக்காக கிரிதரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்தக் கட்டுரையின் முடிவில் காணொளிஇணைப்புகளை கொடுத்திருக்கிறார். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உடனடியாக இந்த இணைப்பை காணத்துவங்கினேன். ஆஹா.. செல்லோ இசை கடல் அலையைப் போல உள்ளிழுத்துக் கொள்கிறது. நிகரில்லாத அனுபவம்.

இந்த கட்டுரையில் காற்றில் ஊசலாடும் மெழுகுவெளிச்சம் பேல தத்தளித்த கசல்ஸின் தன்னம்பிக்கை என்றொரு கவித்துவமான வரியை எழுதியிருக்கிறார். . அபாரமான அந்த வரியை கடந்து செல்ல முடியவில்லை. இசைக்கலைஞனின் ஆன்மாவை தொட்டு எழுதப்பட்ட வரியது. கிரிதரனுக்குள் ஒரு தேர்ந்த கவிஞனிருக்கிறார்.  

இருபதாண்டுகளாகத் தொடரும் மௌனப்புரட்சி கட்டுரையில்  மேற்கத்திய இசையில்  இசைஞானி இளையராஜாவின் ஞானம் மற்றும் அவர் உருவாக்கிய திசையிசை பாடல்களின் செவ்வியல் இசையினை எப்படி உருமாற்றுகிறார் என்பதையும் அவரது இசைத்தொகுப்பில் உருவாக்கியுள்ள இசைக்கோலங்களின் தனித்துத்தையும் கிரிதரன் விவரிக்கும் போது இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் அந்த இசைத்தொகுப்புகளை கேட்டிருக்கிறோமே என்று தோன்றியது.   

சமாதானத்தின் இசை என்ற சுபின் மேத்தாவின் இசைப்பங்களிப்பு பற்றிய கட்டுரை ஒரு திரைப்படம் போலவே கண்முன்னே விரிகிறது. கிரிதரன் சுபின் மேத்தாவாக உருமாறிவிடுகிறார். நான் சுபின் மேத்தா நடத்திய இசைநிகழ்ச்சியை நேரில் கேட்டிருக்கிறேன். மும்பையில் நடந்தது. மறக்கமுடியாத அற்புத அனுபவமது. இந்த கட்டுரையில் சுபின் மேத்தா உருவான விதம் மற்றும் அவரது ஆளுமையின் சிறப்பம்சங்கள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரைத் தொகுப்பு வாசிப்பதற்கானது மட்டுமில்லை. இதிலுள்ள இணைப்புகளின் வழியே மிகச்சிறந்த இசை நிகழ்ச்சிகளை கேட்கவும் ரசிக்கவும் உறுதுணையாக இருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.

இசை குறித்து நிகரற்ற நூலை எழுதியதற்காக ரா.கிரிதரனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

அழிசி ஸ்ரீனிவாசன் மிக அழகிய வடிவமைப்புடன் இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். தமிழ் பதிப்புலகிற்கு அழிசி செய்து வரும் பங்களிப்பு பெரும் நன்றிக்குரியது. அவருக்கு என் அன்பும் பாராட்டுகளும்

••

0Shares
0