காலண்டரில் உள்ள நாட்களையும் கடிகாரம் காட்டும் நேரத்தையும் நம்பியே உலகம் இயங்குகிறது. ஆனால் கலைஞர்கள் நாளையும் நேரத்தையும் தனது கற்பனையின் வழியே மாற்றிக் கொள்கிறார்கள் புதிய தோற்றம் கொள்ளச் செய்கிறார்கள். தங்கள் விருப்பம் போலக் கலைத்துப் போட்டு அனுபவிக்கிறார்கள். கடந்தகாலம் என்ற சிறுசொல் எவ்வளவு பெரிய வாழ்க்கையை உள்ளடக்கியது என உலகம் உணரவில்லை. ஆனால் கலைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். காலம் தான் கலைஞனின் முதன்மையான கச்சாப்பொருள்.
கண்ணாடியில் நாம் காணுவது நமது தோற்றத்தை மட்டுமில்லை. வயதையும் தான் என்று கவிஞர் தேவதச்சன் ஒருமுறை சொன்னார். அது உண்மை. பத்து வயதில் கண்ணாடியில் பார்த்த என் முகமும் இன்று கண்ணாடியில் காணும் என் முகமும் ஒரே மனிதனின் வேறுவேறு வயதின் அடையாளங்கள் தானே. காலம் காட்டும் கடிகாரம் போலவே கண்ணாடியும் செயல்படுகிறது. கடிகாரம் கடந்து செல்லும் காலத்தின் நகர்வை உணர வைக்கிறது. ஆனால் கண்ணாடி அந்தக் காலநகர்வு நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது.
கிரேக்கப் புராணத்தின் படி ஹெமேரா என்பது நாளின் உருவகமாகும் . ஹெமேராவைப் பகலின் கடவுளாக் கருதுகிறார்கள். இது போலவே இரவின் உருவகம் மற்றும் கடவுளாகக் கருதப்படுகிறவர் நிக்ஸ். இந்திய மரபிலும் , நிஷா இரவோடு தொடர்புடைய தெய்வம். அவள் விடியலின் உருவமாக இருக்கும் உஷையின் சகோதரி. பகலையும் இரவையும் விடியலையும் அந்தியினையும் வியந்து ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. செவ்வியல் கவிதைகளில் இந்த உருவகங்கள் மிகச்சிறப்பாகவே கையாளப்பட்டிருக்கின்றன.
நான் பகலை விடவும் இரவை ஆராதிப்பவன். இரவை மயக்கும் வாசனைத் திரவியம் என்று நினைப்பவன். அதனால் தான் யாமம் என்ற நாவலை எழுதியிருக்கிறேன். உண்மையில் இரவு என்பது எழுதுபவர்களுக்கான மேஜை. இரவு என்பது காலத்தின் திரைச்சீலை. அதில் நாம் விரும்பியதை வரைந்து கொள்ளலாம்.
பகல் நம்மை இழுத்துச் செல்கிறது. பொருளியல் வாழ்க்கைக்குள் சுழல வைக்கிறது. இரவோ நம்மை விடுவிக்கிறது. கனவுகளையும் மகிழ்ச்சியினையும் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறது. கனவுகளைத் துரத்துபவர்களுக்கு இரவு தான் புகலிடம்.
பகலிரவை இரண்டு சிற்பங்களாக வடித்திருக்கிறார் மைக்கேலாஞ்சலோ. அது போலவே விடியலையும் அந்தியினையும் இரண்டு சிற்பங்களாக உருவாக்கியுள்ளார். இதில் இரவும் விடியலும் பெண்ணாகவும் பகலும் அந்தியும் ஆணாகவும் சித்தரிக்கபட்டிருக்கிறது.
மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்ட இச்சிற்பங்களின் அழகும் துல்லியமும் வியக்க வைக்கிறது. குறிப்பாக உடலின் சதைகள் மற்றும் விரல்களை மைக்கேலேஞ்சலோ மிகவும் அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார். நிஜமான கைகளை. கால்மடிப்பினைக் காணுவது போல உயிரோட்டத்துடன் உள்ளது.
இந்த நான்கு சிற்பங்களில் இரவைத்தான் மைக்கேலேஞ்சலோ முதலில் செதுக்கியிருக்கிறார். நான்கில் மிகப்புகழ்பெற்ற சிற்பமும் இதுவே.
மைக்கேலேஞ்சலோ பற்றிய திரைப்படமான The Agony and the Ecstasyல் பெரிய பளிங்குப்பாறை ஒன்றை வெட்டியெடுத்து மாட்டுவண்டியில் கொண்டு வருவார்கள். அந்தப் பாறையைப் பார்த்தவுடன் மைக்கேலேஞ்சலோ அதற்குள் மோசஸ் ஒளிந்திருக்கிறார் என்று சொல்லி மகிழ்ச்சி அடைவார். தனது பணி கல்லிற்குள் உள்ள உருவத்தை வெளிக்கொணர்வது மட்டுமே என்றும் தெரிவிப்பார்.
மோசஸ் தனது நிகரற்ற படைப்பு என்பதை மைக்கேலேஞ்சலோ நன்றாக உணர்ந்திருந்தார். ஆகவே சிற்ப வேலை முடிந்ததும், “இப்போது பேசுங்கள் மோசஸ்!” என்று கட்டளையிட்டு அவரது வலது முழங்காலில் சுத்தியலால் அடித்தார் என்று சொல்கிறார்கள். பளிங்குச் சிற்பத்திற்கு உயிர் கொடுக்கும் செயலாக அந்நிகழ்வு கருதப்பட்டது. மைக்கேலேஞ்சலோவின் சுத்தியல் பட்ட அடையாளமாக மோசஸ் முழங்காலில் ஒரு வடு உள்ளது.
போப் கியுலியானோ டெல்லா ரோவரே, மைக்கேலேஞ்சலோவை ரோமுக்கு வரவழைத்து, சிஸ்டைன் தேவாலயத்தின் விதானத்தில் ஓவியங்கள் வரையும்படி கட்டளையிட்டார். The Agony and the Ecstasy திரைப்படம் அந்த நிகழ்வை விரிவாக விளக்குகிறது. அதில் மைக்கேலேஞ்சாவின் கஷ்டங்கள் மற்றும் கலைத்திறமையை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.
இர்விங் ஸ்டோனின் நாவலை மையமாகக் கொண்டே அப்படத்தை உருவாக்கியிருப்பார்கள். Michelangelo – Infinito என்றொரு திரைப்படம் 2017ல் வெளியானது. அதுவும் மைக்கேலேஞ்சலோவின் வாழ்வினை சிறப்பாகச் சித்தரித்திருந்தது.
ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை நாவலாக எழுதி மிகப்பெரிய வெற்றி கண்டவர் இர்விங் ஸ்டோன். மைக்கேலேஞ்சலோ வான்கோ, பிசாரோ பற்றிய இவரது நாவல்களுக்காகத் தீவிரமான கள ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். மைக்கேலேஞ்சலோவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இரண்டு ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்தார் என்கிறார்கள்
பளிங்குக் கல்லில் செய்யப்பட்ட இரவுச்சிற்பம் மிகுந்த புகழ்பெற்றது. இத்தாலியின் புளோரன்ஸ் நகரிலுள்ள டி சான் லோரென்சோவிலுள்ள சாக்ரெஸ்டியா நுவாவினுள் இச்சிற்பம் இடம்பெற்றுள்ளது
கியுலியானோ டி லோரென்சோ மெடிசியின் கல்லறை சர்கோபகஸின் இடதுபுறத்தில் இதனைக் காணலாம்.
“இந்தக் கல்லில் வாழ்க்கை தூங்குகிறது; நீங்கள் சந்தேகப்பட்டால் அதைத் தொடவும், அது உங்களிடம் பேசத் தொடங்கும்“ என்று கார்லோ ஸ்ட்ரோஸி எழுதியிருக்கிறார். இவர் புளோரண்டைன் வரலாற்றின் பல குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதியவர்.
மைக்கேலேஞ்சலோவும் லியோனார்டோ டாவின்சியும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். ஆனால் இருவருக்குள் நெருக்கம் இருந்ததில்லை. டாவின்சி மீதான தனது வெறுப்பை மைக்கேலேஞ்சலோ வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்.
இரவு, பகல், விடியல் மற்றும் அந்தி ஆகியவற்றை இது போலச் சிற்பங்களாக யாரும் அதற்கு முன்பாகச் செதுக்கியதில்ல. ஆகவே முன்மாதிரி இல்லாமல் உருவாக்கபட்ட சிற்பங்களாகும்.
மைக்கேலேஞ்சலோ ஒவ்வொரு சிலையிலும் உணர்வுகளையே முதன்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இரவு பெண் முகத்தில் தூக்கத்தின் அமைதியைக் காண முடிகிறது. அவளது மடித்த கைகள் தலையைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். அந்தக் கைகளிலிருந்த தலை நழுவியது போலிருக்கிறது. அவளது வயிற்று மடிப்புகள். பெரிய தொடைகள் ஆண்களின் உடலமைப்பு போன்ற சாயலைக் கொண்டிருக்கிறது. விந்தையான நிலையில் உள்ள அவளது மார்பகங்கள், அதில் மலர்மொக்கு போன்று செதுக்கபட்டுள்ள மார்க்காம்புகள். அவள் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைக்கவசத்தை அணிந்திருக்கிறாள் அவளது தொடையின் கீழே ஒரு ஆந்தை காணப்படுகிறது. துர்கனவைச் சுட்டுவது போன்ற முகமூடியும் செதுக்கபட்டிருக்கிறது. இரவின் ஆழ்ந்த அமைதியினை உணர்த்துவதாக இச்சிற்பம் காணப்படுகிறது.
இரவோடு ஒப்பிட்டால் பகலின் தோற்றம் அவ்வளவு சிறப்பாக இல்லை. உறுதியான உடல் கொண்ட ஆணின் தோற்றம், தலை மற்றும் முகத்தின் கரடுமுரடான நிலை, மைக்கேலேஞ்சலோ அதில் இன்னமும் கூடுதலாக வேலை செய்ய வேண்டும என நினைத்திருந்தார். ஆனால் கால அவகாசம் கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்தச் சிற்ப வரிசையில் அவர் பகலின் சிற்பத்தையே கடைசியாகச் செய்து முடித்திருக்கிறார்.
இரவு, பகல் இரண்டின் கால்விரல்களே என்னை அதிகம் வசீகரித்தன. அந்த விரல்களின் நளினம். மிருது. மடங்கிய நிலையிலுள்ள அதன் வசீகரம். உறக்கம் கால்களின் வழியே தான் உடலுக்குள் ஊடுருவுகிறது. கால்கள் ஒய்வெடுப்பதை உடலின் முக்கியத் தேவை. தலையும் காலும் கொண்டுள்ள இணைவே உடலின் பிரதான இயக்கம்.
பகலெனும் ஆணின் உடல் உறுதியானது பகல்நேரத்தின் பல்வேறு பணிகளுக்கு உரிய ஆற்றல் கொண்டதாக அந்த உருவம் செதுக்கபட்டிருக்கிறது. கம்பீரமான, முறுக்கேறிய அந்தத் தொடைகள் வலிமையின் சான்றாக உள்ளன. பகலின் முகம் முழுமையாக முடிக்கப்படாமலிருக்கிறது
இரவுப் பெண்ணை விடவும் விடியல் மிக அழகாகச் செதுக்கபட்டிருக்கிறாள். இரவைச் செதுக்கியதற்குப் பின்னால் இதனைச் செதுக்கியிருக்கிறார் என்கிறார்கள். அவளது வசீகரமான உடலமைப்பு. கால்களை உயர்த்தியுள்ள விதம். அவளது தூக்கம் கலையாத முகம். இரவின் நெகிழ்வான வடிவத்துடன் ஒப்பிடும்போது விடியலின் முகத்தில் இனம் புரியாத சோகம் படிந்திருக்கிறது.
அந்தியின் தோற்றம் அவனது பெண் இணைவை விட மிகக் குறைவான உணர்ச்சியைக் காட்டுகிறது. ஆழ்ந்த சிந்தனையுடன் கல்லறையைப் பார்க்கும் நிலையில் சிற்பமுள்ளது. இந்த நான்கு சிற்பங்களையும் பளிங்கு வடிக்கப்பட்ட கவிதைகள் என்றே அழைக்கிறார்கள்
மைக்கேலேஞ்சலோவின் பகலிரவுச் சிற்பங்கள் இத்தாலிய மறுமலர்ச்சிகாலக் கலையின் உன்னதங்கள் என்றால் அதே பகலிரவை நவீன யுகத்தின் சால்வடார் டாலி, இரண்டு வெண்கலச் சிற்பங்களாக உருவாக்கியுள்ளார். அதில் செவ்வியல் கூறுகள் இல்லை. பாடிபில்டர்களின் உடல்வாகை போன்ற இரண்டு உருவங்களே காணப்படுகின்றன. உடலின் பகுதிகள் செதுக்கபட்ட விதம். நிற்கும் நிலை. முகபாவம் எல்லாவற்றிலும் நவீன மனதின் வெளிப்பாடே காணப்படுகிறது.
கியோகோ நாகசே என்ற ஜப்பானியப் பெண்கவிஞர் இரவைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் இரவு என்பதை இன்றைக்கும் நாளைக்கும் இடையே நான் தனியாகச் செல்லும் ஒரு அமைதியான பாதை என்று குறிப்பிடுகிறார். அது போலவே பட்டுப்புழு தனது கூட்டை தானே உருவாக்கிக் கொள்வது போலத் தனக்கான இரவை தானே உருவாக்கிக் கொள்வதாகவும் அந்த இரவிற்குச் சின்னஞ்சிறு விளக்கு போதும் அது சிறிய முட்டை போன்ற சிறியதொரு உலகை தனக்கு உருவாக்கி தந்துவிடும் என்கிறார்.
மைக்கேலேஞ்சலோவும் இதே உணர்வை தான் கொண்டிருந்திருப்பார். அவரும் ஒரு கவிஞரே. கியோகோ நாகசே சொற்களால் உருவாக்கியதை தான் மைக்கேலேஞ்சலோ பளிங்கில் செதுக்கி கலையின் உன்னத வடிவமாக்கியிருக்கிறார்.