இலக்கிய முகவர்

நார்டின் கோடிமர் தனது நேர்காணல் ஒன்றில் தான் எந்தப் பத்திரிக்கைக்கும் கதையை அனுப்புவதேயில்லை. எழுதத் துவங்கிய நாள் முதல் தனது கதைகளைத் தனது இலக்கிய முகவராக (Literary Agent) செயல்பட்ட சிட்னி தான் அனுப்பி வைப்பார். தனது புத்தகங்களை அமெரிக்காவின் முக்கியப் பதிப்பகங்கள் வெளியிடுவதற்கும் அவரே காரணம். ஆகவே பத்திரிக்கைகளுக்குக் கதையை அனுப்பி விட்டுக் காத்திருப்பது என்ற பழக்கமே தனக்குக் கிடையாது என்கிறார்.

தமிழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இது போன்ற வசதியோ, உதவியோ கிடையாது. கதைகளை அனுப்பி விட்டு  எப்போது வெளிவரும் எனக் காத்துகிடப்பது இன்றும் மாறாத விஷயம்.

இத்தனை தொழில்நுட்ப வசதிகள் வந்தபோதும் எந்தப் பத்திரிக்கையிலிருந்தும் உங்கள் கதையோ, கட்டுரையோ இந்த இதழில் வெளியாகும் என்று ஒரு மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ வந்ததேயில்லை. கதைகளுக்குச் சன்மானம் ஆறு மாதம் முதல் ஒரு வருஷம் ஆனபிறகே அனுப்பி வைப்பார்கள். அதுவும் சொற்ப தொகை. கட்டுரைகளுக்கு அதுவும் கிடையாது.

தென்னாப்பிரிக்காவில் வசித்த நார்டின் கோடிமர் தனது இருபது வயதில் எழுதத் துவங்கிய போதே அவர் தனக்கான இலக்கிய முகவரைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

நார்டின் கோடிமரின் இலக்கிய முகவராகச் செயல்பட்டு வந்த சிட்னி சாட்டர்ஸ்டீன் தீவிர இலக்கிய வாசகர். மிகவும் வசதியானவர். அவருக்குக் குழந்தைகள் கிடையாது. ஆகவே எழுத்தாளர்களைத் தனது பிள்ளைகளாகக் கருதக்கூடியவர். அவரது முயற்சியின் காரணமாகவே கோடிமரின் கதைகள் அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க்கர் இதழில் தொடர்ந்து வெளியாகின என்கிறார்.

சர்வதேச அளவில் கவனம் பெற்ற எழுத்தாளர்கள் எல்லோரும் சொல்லும் ஒரே உண்மை, தனது இடத்தை உருவாக்கியதில் இலக்கிய முகவர் மற்றும் மொழிபெயர்ப்பாளரின் பங்கே முதன்மையானது என்பதாகும். பிராந்திய மொழிகளில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் செல்லமுடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

இலக்கிய முகவர்கள் நூலை வெளியிட மட்டும் உதவி செய்வதில்லை. எழுத்தாளருக்கு உரிய அதிகப்பட்ச தொகையைப் பெற்று தருவதிலும் கவனமாக இருக்கிறார்கள். கோடிமர் தனது முகவர் மூலமே தனக்குப் பெருந்தொகை கிடைத்தது. அவர் எனக்காகப் பதிப்பகங்களில் வாதாடினார். தந்தையைப் போல அவர் என்னைக் கவனித்துக் கொண்டார். அதனால் தான் என்னால் சுதந்திரமாக எழுத முடிந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

இலக்கிய முகவர்கள் எழுத்தாளரை ஒரு பிம்பமாக உருமாற்றுகிறார்கள். அவர்களின் பல்வேறு வகைப்பட்ட முயற்சிகளின் வழியாகவே எழுத்தாளர் சர்வதேச அரங்கில் கவனம்பெற முடிகிறது. குறிப்பாகப் புகழ்பெற்ற விருதுகள் மற்றும் இலக்கியக் கருத்தரங்குகளில் எழுத்தாளரை முன்னிறுத்துவதில் பதிப்பகங்களும் இலக்கிய முகவர்களும் கரம் கோர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.

பிரபலமான எழுத்தாளர் தனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கான முன்பணத்தைக் கொடுத்து நாவலின் உரிமையைப் பெறுவது என்பது ஏலம் மூலம் நடத்தப்படுகிறது. நாவலின் ஒன்றிரண்டு அத்தியாயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இலக்கிய முகவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக இந்தியப்பணத்தில் இரண்டு கோடி முதல் ஐந்து கோடி வரை நாவலின் உரிமையாக ஏலத்தில் பெற்றுத் தந்துவிட முடிகிறது.

நாவல் வெற்றி பெற்றால் இது போல இன்னும் நான்கு மடங்கு தொகையைப் பிறமொழிகளின் உரிமையை விற்பதன் மூலம் பெற்றுத் தருகிறார்கள்.

உலகெங்கும் திரைப்படத்துறை இப்படித்தான் இயங்குகிறது. அதே முறையைப் புத்தகங்களுக்கும் செயல்படுத்துகிறார்கள்.

இதில் எழுத்தாளரின் தலையீடு என்பதே கிடையாது. அவர் ஒரு சரியான இலக்கிய முகவரை கண்டுபிடித்து அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் போதும், மற்றவை யாவும் முகவரின் பொறுப்பாக மாறிவிடும்.

வெற்றிகரமாக ஐந்து நாவல்களை ஒருவர் எழுதிமுடித்துவிட்டால் அதன்பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் கோடீஸ்வரராகக் கழிக்கலாம். ஹாரிபோட்டர் நாவல் வழியாகப் பெற்ற பணத்தில் ஜே. கே. ரௌலிங் ஒரு மகாராணி போல வாழுகிறார்.

பணம் பெற்றுக் கொண்டு முகவர்களாகச் செயல்படுகிறவர்கள் பிரபலமான எழுத்தாளர்களைத் தங்கள் வசம் வைத்திருப்பதன் மூலம் பெருந்தொகையைக் கமிஷனாகப் பெறுகிறார்கள். அத்தோடு பதிப்பகங்களுடன் இவர்கள் மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள்.

பிரபலமான எழுத்தாளராக உருவாவதற்காக இது போன்ற இலக்கிய முகவர்களைத் திருமணம் செய்து கொண்டவர்களும் உண்டு. சில நேரம் இலக்கிய முகவர்கள் மீது காதல் கொண்டு அவர்களைத் திருமணம் செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். பிரிட்டனின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜுலியன் பார்ன்ஸ் தனது இலக்கிய முகவரான பாட் கவனாக்கை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர் மூலமாகவே ஜுலியன் பார்ன்ஸின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. பின்பு அவர்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்ட போதும் பாட் கவனாக் தான் இலக்கிய முகவராகச் செயல்பட்டு வந்தார்.

கார்மென் பால்செல்ஸ் செகலா ஸ்பானிஷ் மொழி எழுத்தாளர்களின் இலக்கிய முகவர், 300 எழுத்தாளர்களின் முகவராக இவர் செயல்பட்டு வருகிறார். குறிப்பாகக் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், யோசா உள்ளிட்ட ஆறு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் இதில் அடங்குவர். இவரது விடாமுயற்சியின் காரணமாகவே சர்வதேச அரங்கில் லத்தீன் அமெரிக்க இலக்கியம் கவனம் பெற்றது. இதற்காக அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது

ஆண்ட்ரூ வைலி அமெரிக்காவின் பிரபலமான இலக்கிய முகவர். இவர் தனது போட்டியான முகவர்களிடமிருந்து எழுத்தாளர்களை வேட்டையாடி ஈர்க்கக் கூடியவர் என்கிறார்கள். 1995 ஆம் ஆண்டில், பாட் கவனாக்கை விட்டு விலகி எழுத்தாளர் மார்ட்டின் அமிஸைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதோடு அவரது நாவலுக்கு 500,000 டாலர் முன்பணத்தைப் பெற்று தந்ததாகச் சொல்கிறார்கள். இதன் காரணமாக அமீஸுக்கும் அவரது நீண்டகால நண்பர் ஜூலியன் பார்ன்ஸ் இடையே மனக்கசப்பு உருவானது

நியூயார்க்கில் உள்ள போர்ச்சர்ட் தனது ஏஜென்சி மூலம் இருநூறு எழுத்தாளர்களின் முகவராகச் செயல்பட்டுவருகிறார். இவர் மூலமே எலி வீஸல் இலக்கிய உலகில் கவனம் பெற்றார்.

சாமுவேல் பெக்கட்டின் படைப்புகள் அமெரிக்காவில் பிரபலமானதற்கு இவரே பொறுப்பு. இது போலவே ரோலண்ட் பார்த், பியர் போர்டியூ, மார்க்ரெட் துராஸ், யூஜின் அயோனெஸ்கோ, அலன் ராபே-கிரியே, சார்த்தர், இயன் மெக்வான் படைப்புகளும் இவர் மூலமாகவே அமெரிக்கப் பதிப்புலகில் கவனம் பெற்றது. இவரது ஏஜென்சி மூலம் அறிமுகமான எழுத்தாளர்கள் எட்டு புலிட்சர் பரிசு மற்றும் ஐந்து நோபல் பரிசு வென்றிருக்கிறார்கள்.

ரேணுகா சாட்டர்ஜி, ஷெர்னா கம்பட்டா, மிதா கபூர், கனிஷ்கா குப்தா போன்றோர் இந்தியாவின் புகழ்பெற்ற இலக்கிய முகவர்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்

இலக்கிய முகவர்களை விடுங்கள். இங்குள்ள ஆங்கில இதழ்களே நம்மைக் கவனிப்பதில்லையே.

கடந்த முப்பது ஆண்டுகளில் இதுவரை எனது ஒரு புத்தகம் பற்றிக் கூட The Hindu ஆங்கில நாளிதழில் விமர்சனம் வெளியானதில்லை. அவர்கள் சென்னையில் தான் செயல்படுகிறார்கள். இவர்களை விடவும் New Indian Express, Times Of India போன்ற பிற ஆங்கிலத் தினசரிகள் மேலானவர்கள். அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் காட்டும் அக்கறையில் துளி கூட ஆங்கில இந்து காட்டுவதில்லை.

இது போலவே இலக்கிய இணைப்பாக வெளிவரும் ஆங்கில இதழ் எதுவும் தமிழ் எழுத்தாளர்கள் எவரைப் பற்றியும் ஒரு விஷயத்தையும் வெளியிடுவதில்லை. இது ஒருவகைத் தீண்டாமை. இது தான் நமது சூழல்.

எழுத்தாளனே தனது புத்தகத்தினை எடிட் செய்து, அவனே பிழைதிருத்தம் செய்து, அவனே வெளியிட்டு, அவனே புத்தக வெளியீடு நடத்தி, அவனே அதை விளம்பரம் செய்து விற்க வேண்டிய தமிழ்ச் சூழலில் இலக்கிய முகவரைப் பிடித்துப் பிறமொழிகளில் புத்தகம் கொண்டு போவது என்பதெல்லாம் வெறும் பகல் கனவே.

இதைச் சாத்தியப்படுத்த அயல்நாடுகளில் வசிக்கும் இலக்கிய ஈடுபாடு கொண்ட தமிழர்கள் முன்வர வேண்டும். அவர்கள் தங்களுக்கு விருப்பமான படைப்பாளிகளின் புத்தகங்கள் பிறமொழிகளில் வெளியாக உதவிசெய்ய வேண்டும்.

அமெரிக்காவில் முப்பது நாற்பது தமிழ்ச்சங்கங்கள் இருக்கின்றன. நிறைய பொருள்வசதியும் இருக்கிறது. அவர்கள் செய்யவேண்டிய பணிகளில் இதுவே முக்கியமானது என்பேன். சிறந்த தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் வெளிவர அவர்கள் உதவி செய்தால் நிச்சயம் தமிழ் இலக்கியம் சர்வதேச அளவில் கவனம் பெறும்.

அப்படித்தான் சீன மற்றும் ஜப்பானிய இலக்கியங்கள் கவனம் பெற்றன. சர்வதேச விருதுகளைப் பெற்றன.

••

0Shares
0