உடைவாள்

சிறுகதை.

கைகளால் அல்ல வாளால் கதவை தட்டிக் கொண்டிருந்தான் மாயநாதன். துருப்பிடித்த வாளது. குடையைக் கையில் எடுத்துச் செல்வது போல எங்கு சென்றாலும் அவன் பெருவாள் ஒன்றை கையோடு தூக்கிக் கொண்டு அலைந்தான். மிக நீண்ட வாளது.

“நான் உன்னைக் கொல்லணும். ராமண்ணா கதவைத் திற“ என்ற அவனது குரல் உரத்துக் கேட்டது

“நான் தூங்கிட்டேன். நாளைக்கு வா“ எனச் சப்தமிட்டேன்

“இல்லை. நான் உன்னை இப்போ பாக்கணும்.. நீ கதவைத் திறக்காட்டி.. பக்கத்து வீட்டுக் கதவை தட்டுவேன்“

“அவங்களோட உனக்கு என்னடா பிரச்சனை“

“என்னை அவங்க தேவையில்லாமல் முறைக்கிறதைப் பாத்துருக்கேன்.. நான் யாருனு அவங்களுக்குக் காட்டணும். “

“எத்தனை நாளைக்கு இப்படி நடந்துகிடுவே.. உனக்கு சலித்துப் போகலையா“ என்றபடியே கதவைத் திறந்தேன்

வாசலில் நெற்றியில் அடிபட்டு ரத்தம் ஒழுக மாயநாதன் நின்றிருந்தான்

“என்ன காயம்“ என்று கேட்டேன்

“அடிச்சிட்டாங்க. பேடிப்பயலுக. நாலு பேர் சேர்ந்து என்னை அடிச்சிட்டாங்க. “

“உன்னை எதுக்காக அடிக்கணும்“

“அவங்க என் வாளைக் கேலி செய்தாங்க. அதான் அவங்க பைக்கோட லைட்டை உடைச்சிட்டேன்“

“வாளைக் குடு. அதைத் தூக்கி எறிந்தா தான் நீ உருப்படுவே“

“இப்படி பேசினா. உன்னையும் கொல்லுவேன்“

“என்னை கொல்றது இருக்கட்டும்.. முதல்ல உன் ரத்தத்தைத் துடை“

என்று ஒரு பழைய துண்டு ஒன்றைக் கொடுத்தேன். அதை வாங்கிக் கொள்ளாமல் வீசி எறிந்துவிட்டுச் சொன்னான்

“ இந்த வாளால் அந்தப் பசங்களைக் கொல்லுவேன். “

“உனக்கு இப்போ என்ன வேணும்“

“ஐம்பது ரூபா. “.

“நான் தரமாட்டேன். நீ குடிச்சது போதும். வீட்டுக்கு போ“

“ஐம்பது ரூபா தரட்டா பரவாயில்லே நூறு ரூபா குடு“

“இது என்னடா பேச்சு“

“ராமண்ணா.. நீ என்னோட கிளாஸ்மேட்..   பிரண்ட் ஞாபகம் இருக்கில்லே“

“அதான் துருப்பிடிச்ச வாளோட என்னைக் கொல்ல வந்துருக்கியா“..

“என்னை பற்றி உனக்குத் தெரியும்லே.. நூறு இல்ல.. ஐநூறு குடு“

“ஒரு சல்லிக்காசு தர மாட்டேன். நீ அந்த வாளைக் கீழே போடு“

“அது என் பாட்டன் நெடுங்காடனோட வீரவாள்“

“டேய்.. நீயா தர்றா. இல்லை பிடுங்கி நான் வீசவா“

“நீ அந்த வாளை தொட்டே.. உன்னைக் கொன்னுருவேன்.. ராமண்ணா.. எனக்குப் பணம் தர வேணாம்.. அந்த அலாரம் டைம்பீஸை குடு. அதை வித்துக் காசாக்கிடுறேன். மனுசன் என்ன மயிருக்குடா டைம் படி எழுந்துகிடணும் டைம் படி வேலை செய்யணும். இந்த அலாரம் டைம்பீஸ் சப்தம் கேட்டா அதைக் கொல்லணும்னு தோணும்“

எனக்கு அதைக் கேட்டபோது சிரிப்பு வந்தது. அதை அவன் கவனித்திருக்க வேண்டும். சன்னமான குரலில் கேட்டான்

“சிஸ்டர் தூங்கியாச்சா“

தலையாட்டினேன். அவன் நெற்றியில் வழியும் ரத்தத்தைக் கையில் துடைத்தபடியே சொன்னான்

“நீ என்னோட வெளியே வா“

“இல்லை.. நீ வீட்டுக்கு போ“

“அவ்வளவு தூரம் என்னாலே தனியா போக முடியாது. நீ பைக்ல என்னைக் கொண்டுவந்துவிடு“

“அப்போ  இங்கேயே படு.. “

“இது என் வீடில்ல.. நான் அடுத்த வீட்ல தூங்க மாட்டேன். “..

“அப்போ உன் வீட்டுக்கு போ. இங்கே வந்து ஏன் தொந்தரவு குடுக்குறே“

“நீ ஏன் உன் வீட்லயே இருக்கே.. தெருவில் போய் உறங்க வேண்டியது தானே“

“என்னடா பேச்சிது“

“நீ என்னோட வா.. நான் வீட்டுக்கு போறேன். “

“சரி போவோம்“

“பைக்ல வேணாம்.. நடந்து போவம்“

“இந்த ராத்திரியிலயா“.

“ஏன் ராத்திரியான கால் நடக்காதா“

“சரி போவோம்“.

“நீ திரும்பி நடந்து வர்றது கஷ்டமா இருக்கும். பைக்கை எடுத்துக்கோ.. அதை உருட்டிகிட்டே போவோம். திரும்பி வரும் போது நீ பைக்ல வரலாம்“

“நாம ஹாஸ்பிடலுக்குப் போயிட்டு.. மருந்து போட்டுட்டு உன் வீட்டுக்கு போவோம்“

“இதுக்கு எல்லாம் யாரு ஹாஸ்பிடல் போறது. காயம் தானா சரியாகிடும்.. “

“முட்டாள்மாதிரி பேசாதே. ரத்தம் சொட்டுது“

“அப்போ பைக்ல போவோம்.. ஹாஸ்பிடல் எதிரே ஒரு பரோட்டா கடை இருக்கு.. அங்கே நாம முட்டை பரோட்டா சாப்பிட்டு பிறகு சாவகாசமா டாக்டரை பாக்கலாம்“

“நீ இன்னும் சாப்பிடலையா“

“தெரியலை.. ஆனா முட்டை  பரோட்டா சாப்பிடணும்னு ஆசையா இருக்கு“

“மணி இப்போ என்ன தெரியுமா“

“இதுக்காகத் தான் கடிகாரத்தை உடைக்கணும்னு சொன்னேன்“. என்றபடியே தள்ளாடியபடியே எனது எழுதும் மேஜையில் இருந்த அலாரம் டைம்பீஸை எடுத்துப் போட்டு உடைத்தான்

கண்ணாடி சில்லுகள் சிதறும் சப்தம் கேட்டு உள்ளிருந்து என் மனைவி வெளியே வந்தாள். கலைந்த தலையும் பாதித் தூக்கமுமாக அவனை முறைத்தபடியே சொன்னாள்

“உங்க கையாலே எங்க எல்லோரையும் கொன்னு போட்டுருங்க.. அப்போவாது உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும். இது என்ன பிழைப்பு.. இதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்லே. “

“சிஸ்டர்.. ஐ ஆம் சாரி….உங்க தூக்கத்தைக் கெடுத்துட்டேன்“

“மனுசனா இருந்தா சூடு சொரணை இருக்கணும்.. குடிச்சிட்டா.. என்ன வேணும்னாலும் பேசலாமா.. எப்போ பாரு.. வீட்டு வாசல்ல வந்து நின்னுகிட்டு கொல்லுவேன் கொல்லுவேன் என்ன பேச்சு இது. இனிமே இந்த வீட்டு படியேறி உள்ளே வந்தே.. உனக்கு மரியாதை இல்ல. “.

“ராமண்ணா.. எனக்குக் கோவம் வரும். சிஸ்டரை பேச வேண்டாம்னு சொல்லு“ என்றான்

“நீ உள்ளே போய்ப் படு…. நான் இவனை அனுப்பிட்டு வர்றேன்“ என மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டுச் சொன்னேன்.

“நீ கேட் கிட்ட வெயிட் பண்ணுடா.. நான் வர்றேன்“ என உள்ளே போய்ப் பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்

கேட்டை ஒட்டி நிறுத்தி இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோது மாயநாதனை காணவில்லை. எங்கே போயிருப்பான். தெருமுனை வரை போய்ப் பார்த்துவந்தேன். ஆள் அடையாளமேயில்லை. யார் வீட்டிற்குள்ளாவது போயிருப்பானா. குழப்பமாக இருந்தது. இனி எங்கே போய் அவனைத் தேடுவது. எரிச்சலில் பைக்கை நிறுத்திவிட்டு படியேறி வீட்டிற்குள் போனேன்.

மாயநாதன் நின்றிருந்த இடத்தில் இரண்டு சொட்டு ரத்தம் சிந்தியிருந்தது

••

மாயநாதன் நல்ல உயரம். மாநிறம். என்னோடு பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினான்.. நன்றாகப் பாடம் நடத்துவான். அவனது ஒரே பலவீனம். குடி. காலையிலே குடிக்கத் துவங்கிவிடுவான். இதனால் பாதி நாள் பள்ளிக்கு வருவதில்லை. போதை உச்சம் அடைந்துவிட்டவுடன் அவன் துருப்பிடித்த வாளை தேட ஆரம்பித்துவிடுவான். மாயநாதனின் மனைவி பூரணி பலமுறை அந்த வாளை ஒளித்து வைத்திருக்கிறாள். ஆனால் போதையில் அவன் கத்தும் கத்தில் தானே வாளை எடுத்துக் கொடுத்துவிடுவாள்.

மாயநாதனின் தாத்தா கரையடி கருப்பசாமி கோவில் பூசாரியாக இருந்தார். அந்தக் கோவிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வாள்களில் அதுவும் ஒன்று. ஆனால் மாயநாதன் அதை ஒத்துக் கொள்ளமாட்டான். அந்த வாள் தன் பூட்டன் நெடுங்காடன் போரில் பயன்படுத்திய வாள் என்று பொய் சொல்வான். விசேச நாட்களில் அந்த வாளுக்குச் சந்தனம் குங்குமம் வைத்து வழிபடவும் செய்வான்.

இடுப்பில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அலையும் பெண்களைப் போல அவன் போதையில் வாளோடு சுற்றிக் கொண்டிருப்பான். பேருந்தில். அலுவலகத்தில் மருத்துவமனையில் அவனை வாளோடு பார்த்தவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். சில நேரம் போலீஸ் அவனைப் பிடித்து விசாரணை செய்திருக்கிறார்கள்.

அந்த வாளை போலீஸாருக்கு எதிராக உயர்த்தி மாயநாதன் சப்தமிட்டிருக்கிறான். குடியின் மூர்க்கத்தில் இருந்த அவனை அடிக்க வேண்டாம் எனக் காவலர்கள் வாளை பறிமுதல் செய்து அனுப்பி வைத்தார்கள். ஆனால் போதை தெளிந்தவுடன் நெற்றி நிறையத் திருநீற்றுடன் அவன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அந்த வாள் கோவிலுக்கு உரியது எனப் பணிவாகப் பேசி மீட்டுக் கொண்டு வந்திருக்கிறான்.

ஒவ்வொரு நாளும் இரவில் சிவப்பேறிய கண்களுடன் கையில் வாளுடன் மாயநாதன் வீட்டை விட்டு இறங்கி நடப்பான். அவன் மனதில் அவன் கொல்ல வேண்டிய மனிதர்களின் பட்டியல் ஒன்றிருந்தது.

அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவன் நான். அவனது ஒரே நண்பன். மாயநாதன் என்னோடு பள்ளியில் இருந்து ஒன்றாகப் படித்தவன். என் வீட்டில் சாப்பிட்டு என்னோடு வளர்ந்திருக்கிறான். இருவரும் நாங்கள் படித்த பள்ளியிலே ஆசிரியராக வேலைக்குச் சேருவோம் என நினைத்துக் கூடப் பார்த்திருக்கவில்லை.

பள்ளியில் மாயநாதன் சண்டை போடாத ஆட்களேயில்லை. தனியார் பள்ளியது. அதன் நிர்வாகி சார்லஸ் ஆன்டனி கூட அவனைக் கண்டால் பயப்படுவார். இரண்டு முறை அவரை வாளால் வெட்ட முயன்றிருக்கிறான். ஒரு முறை அவரது அறைக்குள் இருந்த பழைய ஹெட் மாஸ்டர்களின் புகைப்படங்களை உடைத்து எறிந்தான். காரணம் அதில் ஒரு ஹெட் மாஸ்டராக இருந்த எட்வர்ட் அவனைப் பள்ளியின் போது சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அதை இன்று வரை அவனால் மறக்க முடியவேயில்லை.

குடிபோதையில் கையில் வாளுடன் அவன் தெருவில் நடந்து வருவதைக் காண வேடிக்கையாக இருக்கும். வேண்டுமென்றே அதைத் தலைக்கு மேலாகச் சுழற்றுவான். காற்றோடு சண்டையிடுவான். சில நேரம் நடுத்தெருவில் அவன் அந்த வாளை ஊன்றிக் கொண்டு நிற்பான். தன்னைக் கடந்து போகிறவர்களை வாளால் மிரட்டுவான். நாயின் முன்னால் கூட வாளை தூக்கி மிரட்டக்கூடியவன் மாயநாதன்.

மாயநாதன் பள்ளிவிட்டு மாலையில் வீடு திரும்பி வரும் போதே மதுபாட்டிலை வாங்கிக் கொண்டு வந்துவிடுவான். ஒரு ஈயத்தட்டில் ஊறுகாயும், பொட்டுகடலையும் போட்டுக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டு குடிக்க ஆரம்பிப்பான். பரணி சமையல் அறையில் இதைக் கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டிருப்பாள்.

நாய்க்குட்டியை தடவிவிடுவது போல அந்த வாளைக் குடிக்க ஆரம்பிக்கும் போது தடவி விட ஆரம்பிப்பான். துருப்பிடித்த வாள் என்றாலும் உறுதியாக இருந்தது. அதன் பிடி நெளிந்திருந்தது. குடிக்கும் போது மாயநாதன் கண்களை மூடிக் கொண்டு தான் குடிப்பான். கண்ணை விழித்துவிட்டால் போதை ஏறிவிட்டதாக அர்த்தம். போதை ஏறியதும் அந்த வாளை நிமிர்த்தி வைப்பான். பின்பு அவிழும் வேஷ்டியை ஒரு கையால் பிடித்தபடியே வாளை ஊன்றி எழுவான். மிகுந்த கோபத்துடன் வாளிடம் சொல்வான்

“இன்னைக்குக் கொல்லுறோம். ஒருத்தன் பாக்கி இல்லாம வெட்டி சாய்க்கிறோம்“

சிகரெட்டை பற்ற வைப்பதற்காக வாளை தரையில் போடுவான். சிகரெட்டைப் பற்ற வைக்கக் கைகள் நடுங்கும். தீக்குச்சியை உரச முடியாது

“பரணி.. இங்க வாடி.. இந்தச் சிகரெட்டை பற்ற வை“ எனக் கத்துவான். அவள் எழுந்து வந்து சிகரெட்டைப் பற்ற வைத்துத் தருவாள்.

அவன் சிகரெட்டை ஆழமாக இழுத்து உறிஞ்சியபடியே சொல்வான்

“உங்க அப்பனைத் தாண்டி முதல்ல கொல்லணும்.. அவன் என்ன சொன்னான். கல்யாணத்தில எனக்கு ஒரு மோதிரம் போடுறேன்னு சொன்னானே.. போட்டானா“

“போட்ட மோதிரத்தை வித்துக் குடிச்சிட்டு ஏன் கத்துறே“ எனச் சொல்வாள் பரணி

“அது தங்கமில்லை. கவரிங். உங்க அப்பன் என்னை ஏமாத்திட்டான். அவனை நான் கொல்லணும்.. “

“அதான் தினம் தினம் என்னைக் கொல்றயே.. அது போதாதா.. இந்தக் கொடுமை எல்லாம் பாக்க சகிக்கமா அந்த மனுசன் செத்துப் போயி ஆறு வருசமாச்சி. “

“செத்துப்போயிட்டா என்கிட்ட இருந்து தப்பிச்சிக்க முடியுமா.. மயானத்துல போயி சவத்தைத் தோண்டி கொல்லுவேன். மனுசனா இருந்தா வாக்குமுக்கியம்.. உங்கப்பன் என்னை ஏமாத்திட்டான்.. அவனை இந்த வாளால் ரெண்டு துண்டா வெட்டி கொல்லுவேன்“

அவள் முறைத்தபடியே “ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த வாளால நானே உன்னை வெட்டி கொல்லப்போறன் பாரு“ என்பாள்.

“என்னை வெட்டியிருவியா.. வா.. இந்த வாளைப் பிடி.. என்னை வெட்டுடீ“

எனத் தலையைக் குனிந்து கொடுப்பான்

பரணி எரிச்சலோடு “என் உயிரை ஏன் எடுக்குறே.. வெளியே போய்த் தொலை“ என்பாள்

“அந்த பயம் இருக்கட்டும்.. நான் ராமண்ணா வீட்டுக்கு போயி அவனைக் கொன்னுட்டு வர்றேன். அந்த நாயி.. எனக்கு அட்வைஸ் பண்றான். அவனைச் சல்லி சல்லியாக வெட்டி போட்டுட்டு வர்றேன்“

“நீ யாரைத் தான் வெட்டலே.. போ.. “ என அவள் கத்துவாள்

போதையில் வாளை கையில் எடுத்தபடியே மாயநாதன் நடந்து என் வீடு தேடி வருவான்

அவனுக்குப் பயந்தே என் மனைவி எப்போதும் வீட்டுக்கதவைப் பூட்டியே வைத்திருப்பாள். அவன் வாளால் தான் எப்போதும் கதவைத் தட்டுவான்.

“டேய் ராமண்ணா..கதவை திற.. நான் உன்னை வெட்டணும்“

உள் அறையில் இருந்து என மகளும் மகனும் இதைக் கேட்டு சிரிப்பார்கள். அவர்களுக்கு மாயநாதனை கண்டால் ஒரு பயமும் கிடையாது. சில நேரம் என் பிள்ளைகளை வீதி கண்டுவிட்டால் மறக்காமல் கடைக்கு அழைத்துப் போய்ச் சாக்லெட்டுகள் வாங்கித் தருவான்.

ஒரு முறை பெரிய பலாப்பழம் ஒன்றை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து என் மனைவியிடம் தந்து “சிஸ்டர்.. இது கூழச்சக்கா.. நல்ல இனிப்பா இருக்கும்.. எனக்கு ஒரேயொரு சுளை கொடுத்தா போதும்“ என்றான்

ஆனால் வீட்டுக்கதவை வாளால் தட்டுவதை எவ்வளவு நேரம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியும். ஆகவே நானே கதவை திறந்துவிடுவேன். அவன் சாமுராய் வீரர்கள் வாளோடு நிற்பது போல  ஸ்டைலாக நின்று கொண்டிருப்பான்

“உனக்கு என்னடா வேணும்“ என எதுவும் தெரியாதவன் போலக் கேட்பேன்

“நான் உன்னைக் கொல்லணும்“ எனத் தலைகவிழ்ந்தபடியே சொல்வான் மாயநாதன்

“எனக்குப் பரிட்சை பேப்பர் திருத்த வேண்டிய வேலை கிடக்கு.. இப்போ நேரமில்லை. நாளைக்குக் கொல்லலாம்“ என்பேன்.

“இல்லை. நான் உன்னைக் கொல்லணும்.. நீ வெளியே வா“

“ஏன் வீட்டுக்குள்ளே கொன்ன என்ன“ எனக் கேட்பேன்

“அது தப்பு.. வீட்ல பிள்ளைகள் இருக்காங்க. நீ என்னோட வெளியே வா.. நாம ஸ்கூலுக்குப் போவோம். உன்னை வச்சி தான் கொல்லுவேன்“

“மாயா.. இப்போ மணி என்ன தெரியுமா“

“பத்து இருக்கும்.. ஸ்கூல் பூட்டியிருக்கும்னு நினைக்கிறயா.. அந்த வாட்ச்மேன் என்னைக் கண்டா திறந்துவுடுவான். நான் எத்தனையோ நாள் ஸ்கூல் வராண்டாவிலே தூங்கியிருக்கேன் “

“உனக்கு தான் வீடு இருக்கே. “

“எனக்கு எதுவும் பிடிக்கலை… நீ பேச்சை மாற்றாதே.. சட்டையைப் போட்டுட்டுக் கிளம்பு நான் உன்னைக் கொல்லணும்“

“நான் இன்னும் சாப்பிடலை“

“அப்போ நானும் உன் கூடச் சாப்பிடுவேன்“

“சரி சாப்பிடு. முதல்ல அந்த வாளை ஒரமா வை. “

“ராமண்ணா. உனக்கு வாளை கண்டா பயமா இருக்கா“

“நீ ஒரு வாத்தியார்.. அந்த நினைப்பு உனக்கு இருக்கிறதேயில்லை“

“ நான் வாத்தியார் இல்ல.. பட்டாளத்துகாரன். என் உடம்புல ஒடுறது நெடுங்காடன் ரத்தம். நான் கொல்ல வேண்டிய ஆட்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே இருக்கு“

“எல்லோரையும் மெதுவா கொல்லலாம். நீ என்ன சாப்பிடுறே.. தோசையா. இட்லியா“

“தோசை.. ஒண்ணே ஒண்ணு.. ஆனா எள்ளு பொடி வேணும்“

“இருக்கு.. தரச்சொல்றேன்.. நீ அந்த வாளை வெளியே வச்சிட்டு உள்ளே வா“

“அப்போ உன் தோசையே வேணாம்“

“கை கழுவ வேணாமா.. அதுக்குத் தான் சொல்றேன்“

“தோசை சாப்பிட்டவுடனே நீ சட்டை போட்டுட்டு வெளியே வரணும்“

“வருறேன்.. நீ கைகழுவிட்டு சாப்பிட உட்காரு“

“தரையில தான் உட்காருவேன். எழவு எடுத்த மேஜைல உட்கார்ந்து சாப்பிட்டா பசி ஆற மாட்டேங்குது“

“சரி தரையில உட்கார்ந்துக்கோ.. “

“நீயும் தரையில உட்காரு.. “

இருவரும் தரையில் உட்கார்ந்து கொண்டோம். என் மனைவி மாயநாதனுக்கு முதல்தோசையைத் தட்டில் போட்டாள். அவனாகவே எள் பொடியை வைத்துக் கொண்டான்

தோசையைப் பிய்த்து சாப்பிட்டபடியே சொன்னான்

“சிஸ்டர்.. இவன் ஹெட்மாஸ்டரா வரவேண்டியவன். ஆனா அந்தக் கேடுகெட்ட சார்லஸ் ஆன்டனி என்ன செய்திருக்கான். மணிவேலை எச்எம் ஆக்கிட்டான். இவன் வாயை திறந்து ஒரு வார்த்தை அதைப் பற்றிப் பேசலை.. பயம். ஸ்கூல் வேலை போயிடுமேனு பயம். எனக்கு ஒரு மயிரானை பற்றியும் பயம் கிடையாது. நான் வாளோட போய்க் கேட்டேன். என்னைச் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.. அப்போ அவன் என்ன செய்தான் தெரியுமா.. எனக்காக அந்தச் சார்லஸ் கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கான். அதுக்காக இவனைக் கொல்லணும்“

“சாப்பிடும் போது பேசக்கூடாது“ என்றாள் என் மனைவி

“சிஸ்டர்… எனக்குத் தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு தோசை வேணும்“ என்றான் மாயநாதன். அவனுக்குப் பிடித்தமான தோசையது.

என் மனைவி அவனுக்காக ஒரு தேங்காய் எண்ணெய்விட்டுத் தோசை போட்டு கொடுத்தாள்.

சாப்பிட்டுவிட்டுத் தட்டை அவனைக் கழுவிக் கொண்டுவந்து வைத்தான். பிறகு தன் வாளை எடுத்துக் கொண்டு “அந்த கோழிக்கடை ராவுத்தரைக் கொல்லணும். அந்த நாய் என் பொண்டாட்டி கோழி கேட்டா தரமுடியாதுனு சொல்லியிருக்கான்.. ராமண்ணா.. நான் உன்னைக் கொல்லுவேன். ஆனா உன் வீட்ல தோசை சாப்பிட்டதாலே இன்னைக்கு உன்னை விட்டுட்டு போறன்“

வாளோடு வெளியேறிப்போகும் போது மாயநாதன் கதவை மூடிவிட்டு தான் சென்றான். தெரு நாயின் முன்னால் அவன் வாளை உயர்த்தியபடி கத்திக் கொண்டிருப்பது கேட்டத

மாயநாதன் உறங்க மாட்டான். பெருவாளோடு தெருத்தெருவாக அலைவான். மூடிய கதவுகளின் முன்னால் நின்று சப்தமிடுவான். சிலநேரம் தெருவிளக்கு வெளிச்சம் அதிகமாக இருக்கிறது என வெளிச்சத்திடம் கோவித்துக் கொள்வான். ரோந்து சுற்றும் காவலர்கள் அவனைக் கண்டுகொள்வதில்லை. போதையின் உச்சத்தில் அவன் வாளை தரையில் இழுத்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருக்கும் சப்தம் தனியே கேட்டபடியே இருக்கும்

காலை போதை வடிந்தவுடன் அவன் முந்தைய நாள் நடந்த எதைப் பற்றியும் துளியும் குற்றவுணர்வும் கொள்ள மாட்டான். குளித்து நெற்றியில் திருநீறு பூசி கையில் கணக்குப் புத்தகம் இரண்டு நோட்டுகளுடன் பள்ளிக்குக் கிளம்பிவிடுவான். பள்ளி நேரத்தில் என்னோடு பேசிக் கொள்வது கூடக் கிடையாது.

மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதில் அவனுக்கு மிகுந்த சந்தோஷம். பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு நிமிசத்தில் அவன் மனது மாற ஆரம்பித்துவிடும். பாடத்தை அப்படியே விட்டுவிட்டு குடிப்பதற்காக வெளியேறிப் போய்விடுவான்

மாயநாதன் கடன் வாங்காத ஆட்களேயில்லை. சண்டையிடாத ஆட்களும் இல்லை. மருத்துவச் சிகிட்சைகள் எடுத்துக் கொண்ட போதும் அவனது மனம் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது.

••

ரத்தம் சொட்டிய தலையோடு  கிளம்பிப் போன பிறகு நான் மாயநாதனைக் காணவில்லை.

ஆனால் என் வீட்டு வாசலின் ஒரம் அவனது வாள் கிடப்பதாக என் மனைவி காட்டினாள்

அதைக் கையில் தூக்கிப் பார்த்தேன். நல்ல கனமாக இருந்தது. எதற்காக இதை விட்டுப்போயிருக்கிறான் எனப் புரியவில்லை. அந்த வாளை வீட்டிற்குள் கொண்டுவரக்கூடாது என்றாள் மனைவி.

இதை என்ன செய்வது. ஒருவேளை நாளை வந்து கேட்டாலும் கேட்பான் எனத் தொட்டிச்செடியை ஒட்டி அதைச் சாய்த்தி வைத்தேன். ஒரு நாள் அதன் மீது பூச்சி ஒன்று ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். செடிகளுடன் சேர்ந்து அந்த வாளும் இயற்கையின் அங்கம் போலாகியது.

அதன் பிறகு நான் மாயநாதனைக் காணவேயில்லை. பள்ளிக்கூடத்திற்கும் அவன் வரவில்லை.

ஒரு வாரத்தின் பிறகு ஒரு நாள் மாயநாதனின் மகள் என் வீடு தேடி வந்து நின்றிருந்தாள்

“அப்பாவைக் காணோம்.. தேடாத இடமில்லை .. எங்க போனாருனு தெரியலை “

“குடிச்சிட்டு எங்கேயாவது போயிருப்பான். வந்துருவான்“ என்றேன

“அம்மா அழுதுகிட்டு இருக்கா.. வீட்ல காசே இல்லே“

நான் பர்ஸிலிருந்து இருநூறு ரூபாய் எடுத்து அவளிடம் தந்தேன். அந்தச் சிறுமி பணத்தைக் கையில் சுருட்டிக்கொண்டு கவிழ்ந்த தலையோடு நடந்து போய்க் கொண்டிருந்தாள்

எங்கே போனான் மாயநாதன். என்ன ஆயிற்று அவனுக்கு

மாதங்கள் கடந்த பிறகும் அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் சில நேரம் வீட்டுக்கதவில் அவன் வாளை வைத்துத் தட்டும் சப்தம் கேட்பது போலவே இருக்கும். நானாகக் கதவை திறந்து பார்ப்பேன். யாருமிருக்க மாட்டார்கள்.

மாயநாதனின் மனைவி டெய்லரிங் வேலைக்கு போய் வரத்துவங்கினாள். அவளும் மகளும்  சண்டை சச்சரவு எதுவுமில்லாமல் நிம்மதியாக சாப்பிட்டு நிம்மதியாக உறங்கினார்கள்.

பின்னொரு நாள்  என் மனைவி தொட்டிச் செடி ஒரமாகக் கிடந்த வாளை வீட்டிற்குள் எடுத்துவந்து கழுவித் துடைத்து பூஜை அறையில் கொண்டு போய் வைத்தாள்.

அன்றிலிருந்து அந்த வாளிற்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்தூவி வணங்கத் துவங்கினாள்

எதற்காக என நான் கேட்டுக் கொள்ளவேயில்லை. பெண்களின் சில செயல்கள் விசித்திரமானவை. அவற்றை ஆராயக்கூடாது. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன்

அந்த வாளின் வடிவில் மாயநாதன் என் வீட்டிற்குள் சாஸ்வதமாக நிலைகொண்டுவிட்டான்  என்றே தோன்றியது.

•••

0Shares
0