மாக்சிம் கார்க்கியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு The Fall of a Titan என்ற நாவலை எழுதியிருக்கிறார் ரஷ்ய எழுத்தாளர் இகோர் கூஸெங்கோ.
இரண்டாம் உலகப்போரின் போது இவர் கனடாவில் ரஷ்ய உளவாளியாகப் பணியாற்றியவர். இந்த நாவலை 1955ம் ஆண்டுத் தமிழ்சுடர் பதிப்பகம் வீழ்ச்சி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. கே.எம்.ரங்கசாமியும். ஜி. கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.. 492 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். இப்போது இந்நூலின் பதிப்பு கிடைப்பதில்லை.
அமெரிக்க அரசு அணுஆயுதம் தயாரிப்பதை அறிந்த சோவியத் அரசு அது குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்க முயன்றது. இதற்காக உளவுப்பிரிவு ஒன்றைக் கனடாவில் உருவாக்கியது.
கனடாவில் உள்ள சோவியத் தூதரகத்தில் செயல்பட்ட இந்தப் பிரிவில் ரகசியத் தகவல்களை டீகோட் செய்பவராக வேலை பார்த்தார் கூஸெங்கோ. ஒட்டாவாவில் மக்களோடு மக்களாகக் கலந்து வசிக்கும் படி கூஸெங்கோ அறிவுறுத்தப்பட்டார்.
கனேடிய அரசின் முக்கியச் செயல்பாடுகள் குறித்த தகவல்களைச் சேகரிப்பது, அமெரிக்க அணு ஆயுத சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளைக் கண்காணிப்பது மற்றும் ராணுவத்தின் ரகசிய அறிக்கைகள். திட்டமிடல்களைச் சேகரித்து அனுப்புவது இந்த உளவுப்பிரிவின் வேலை,
பெறப்படும் தகவல்களை ரகசிய குறியீடுகள் மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பி வைப்பதும். அங்கிருந்து தரப்படும் உத்தரவுகளை மொழியாக்கம் செய்வதும் கூஸெங்கோவின் பணி. இதற்காக அவர் பகலிரவாக வேலை செய்து வந்தார்.
உளவுப்பிரிவானர் தாங்கள் சேகரித்த ரகசியத் தகவல்களை ரஷ்யாவிற்கு அனுப்பியதும் மூல ஆவணங்களை எரித்துவிடுவது வழக்கம். சில நேரம் முக்கியமான ஆவணங்களைப் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றில் பூட்டி வைத்திருப்பார்கள். அதைக் கையாளுவதும் கூஸெங்கோவின் வேலை
ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதில் ஏற்பட்ட மோசமான பாதிப்பை அறிந்த கூஸெங்கோ இது போல ரஷ்ய அரசும் அணுகுண்டு தயாரித்துச் செயல்படுத்தினால் எவ்வளவு பெரிய நாசம் ஏற்படும் என உணர்ந்தார்,
அவரது மனைவி இந்த உளவுப்பணியின் விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்ததோடு தாங்கள் ரஷ்யா திரும்பாமல் கனடாவிலே வசிக்கலாம் என்று ஆலோசனை சொன்னார்.
மனக்குழப்பமும் கவலையும் கொண்ட. கூஸெங்கோ முடிவில் தனது மனசாட்சிப்படி நடக்க முடிவு செய்தார்.
தனக்குக் கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் தங்களின் உளவுப்பணி குறித்த109 ஆவணங்களைக் கனடா அரசிடம் ஒப்படைக்க முயன்றார். ஆனால் இவர் சொல்லும் உண்மையை நம்ப யாரும் தயாராகயில்லை.
இப்படி ஒரு உண்மை வெளியானால் உலக அரங்கில் ரஷ்யாவின் பெயர் கெட்டுவிடும் எனப் பயந்த சோவியத் ராணுவம் அவரைக் கொல்வதற்கு முயன்றது.
அவர்களிடமிருந்து தப்பியோடிய கூஸெங்கோ காவல்துறையின் உதவியை நாடினார். அவர்கள் ஆவணங்களைக் கைப்பற்றியதோடு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று அவரது உயிரையும் காப்பாற்றினார்கள்.
கூஸெங்கோ அளித்த ஆவணங்களின் மூலம் ரஷ்யாவின் உளவு வேலைகள் வெளிச்சத்திற்கு வந்தது. விரிவான நீதி விசாரணை நடைபெற்று கனேடிய அரசின் ராணுவத்தலைவர்கள். உயர் அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டார்கள்.
கூஸெங்கோ வேறு பெயரில் யாருக்கும் தெரியாத இடத்தில் வாழ்வதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தது கனேடிய அரசு. தனது இறுதி நாள் வரை கனடாவில் வசித்தார் கூஸெங்கோ. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தோன்றும் கூஸெங்கோ தனது முகத்தை மறைத்துக் கொண்டு முகமூடி அணிந்திருக்கிறார். மரணத்தின் பின்பே அவர் எங்கே வசித்தார், எப்படி வாழ்ந்தார் என்ற உண்மை வெளியாகியது.
தலைமறைவாக வாழ்ந்த நாட்களில் கூஸெங்கோ இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று தான் தி ஃபால் ஆஃப் எ டைட்டன், நாவல்
தனது சொந்த அனுபவங்களை முதன்மைப்படுத்தி எழுதிய போதும் தனது ஆதர்ச நாயகனாக இருந்த மாக்சிம் கார்க்கியின் கடைசிக் கால வாழ்வும் தனது வாழ்க்கை போலவே கசப்பாக மாறியதை குறியீடாகக் கொண்டு நாவல் எழுதியிருக்கிறார்.
கார்க்கியும் கூஸெங்கோவும் அன்றைய ஸ்டாலின் அரசை முழுமையாக நம்பினார்கள். விசுவாசிகளாக நடந்து கொண்டார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை அறிந்து கொண்ட போது அவர்களால் அரசின் பிடியிலிருந்து வெளியேற முடியவில்லை. அநீதி மற்றும் அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள். சொந்த வாழ்க்கையில் நிறைய இழப்புகளைச் சந்தித்தார்கள். அந்த வீழ்ச்சி தான் இந்த நாவலின் மையப்பொருள்
டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி. துர்கனேவ். செகாவ் போன்றவர்களுக்கு விரிவான வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாக்சிம் கார்க்கிக்கு முழுமையான வாழ்க்கை வரலாறு எழுதப்படவில்லை. அந்த வகையில் இந்த நாவல் அவரது வாழ்வின் இருண்ட பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
ரஷ்யாவிலிருந்து வெளியேறி கார்க்கி. சில காலம் ஐரோப்பாவில் வசித்தார் பின்பு ஸ்டாலினின் வற்புறுத்தலால் 1931 இல் ரஷ்யாவுக்குத் திரும்பினார். எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார். உலக இலக்கியங்களை ரஷ்யாவில் கொண்டுவரும் பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த ஆரம்பித்தார். ஆனால் அரசியல் நெருக்கடிகள். அதிகாரத்தின் மீற முடியாத உத்தரவுகள் காரணமாக தான் விரும்பாத விஷயங்களை செய்ய வேண்டிய நிலை கார்க்கிக்கு ஏற்பட்டது. அவரது மகனின் மரணம் அவரை நிலைகுலைய வைத்தது. வீட்டுச்சிறையில் வைக்கபட்டது போல அவர் உணர்ந்தார். கார்க்கி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இன்றும் வாதங்கள் தொடர்கிறது.
கூஸெங்கா மாஸ்கோவில் கல்வி பயின்றவர். தன்னோடு படித்த . நிறு ஸ்வெட்லானாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ராணுவத்தின் ரகசிய தகவல் பிரிவில் பணியாற்றியவர். அங்கே சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தி ஃபால் ஆஃப் எ டைட்டன் நாவலில் கோரின் என்ற பெயரில் மாக்சிம் கார்க்கி சித்தரிக்கபடுகிறார். பியோதர் நோவிகோவ் என்ற ராணுவ அதிகாரியின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. நோவிகோவ் தனது பதினாறு வயதில் ரஷ்யப் புரட்சியைச் சந்திக்கிறார். அதில் தனது பெற்றோர்களை இழக்கிறார். பின்பு பல்கலைகழகத்தில் உளவுத்துறையின் சார்பில் சக மாணவர்களை உளவு பார்க்கும் வேலையில் ஈடுபடுகிறார். படித்து முடித்து கல்லூரி பேராசிரியராகிறார். கட்சியின் நம்பிக்கைக்கு உரியவராக மாறுகிறார். இந்நிலையில் இவருக்குக் கோரினை கண்காணிக்கும் வேலை தரப்படுகிறது. கோரினின் மகள் நினா போல நிஜ வாழ்க்கையில் கார்க்கிக்கு மகள் கிடையாது. கார்க்கியை நினைவுபடுத்தும் கதாபாத்திரம் கோரின் என்ற போதும் கூஸெங்கோவால் கார்க்கியின் ஆளுமையை முழுமையாக நாவலில் கொண்டுவர இயலவில்லை.
ஹாலிவுட்டில் கூஸெங்கோவின் வாழ்க்கை குறித்து The Iron Curtain என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கூஸெங்கோவின் உளவுப்பணி விரிவாகச் சித்தரிக்கப்படுகிறது. ஆரம்ப காட்சியில் கூஸெங்கோவின் தோற்றம் மற்றும் செயல்பாட்டில் கம்பீரம் வெளிப்படுகிறது. உண்மையை அறிந்த பின்பு அவரது தோற்றம் உருமாறுகிறது. குறிப்பாக அவருடன் பணியாற்றும் ராணுவ அதிகாரி குடித்துவிட்டு கடந்த கால உண்மைகளைப் பேசும் காட்சியில் கூஸெங்கோ விழிப்புணர்வு அடைகிறார். இரவில் தனியே அவரைத் தேடிச் சென்று சந்திக்கும் போது அவருக்கு தன்னிலை புரிந்துவிடுகிறது
தனது மனைவியை அழைத்துக் கொண்டு ரகசிய ஆவணங்களுடன் பத்திரிக்கை அலுவலகம். நீதித்துறை அமைச்சரின் அலுவலகம் என ஏறி இறங்குகிறார். எவரும் அவரைப் பொருட்படுத்தவில்லை. அந்தக் காட்சிகள் படத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மாக்சிம் கார்க்கியின் கடைசி நாவல் The Life of Klim Samgin. நான்கு தொகுதிகள் கொண்டது. கார்க்கியின் கதைகள். கட்டுரைகள். நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த நாவல் இதுவரை வெளியாகவில்லை.
•••