எப்படி படிக்கிறீர்கள்?

நீங்கள் எப்படி இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்? எங்கிருந்து உங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கின்றன. எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.இதே கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். எனது பதில் ஒன்று தான். புத்தகம் படிப்பது எனது ஒய்வு நேர விருப்பமில்லை. மாறாக அது எனது வேலை. இன்னும் சொல்வதாயின் அன்றாடச் செயல்பாடு.


இருக்க இடமின்றி அலைந்து திரிந்த நாட்களில் கூட தினம் பத்து பக்கமாவது வாசித்திருக்கிறேன். பசியை மறப்பதற்கு புத்தகங்கள் உதவியிருக்கின்றன.  தாளமுடியாத வலியை , துக்கத்தை பகிர்ந்து கொள்ள புத்தகங்களே துணை நின்றிருக்கின்றன. என்னை உருவாக்கியதில் நூலகங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது.


சிறு வயதிலிருந்து படிக்கும் பழக்கம் உள்ளதால் என்னால் புத்தகங்களை வேகமாக வாசிக்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு நூறு முதல் நூற்றி இருபது பக்கங்கள் வரை என்னால் படிக்க முடியும்.   ஒரு வரி கூட விடாமல், எந்த பக்கத்தையும் கவனமற்று புரட்டிக் கடந்துவிடாமல் வாசிப்பதே எனது வழக்கம். அது போல ஒரே புத்தகத்தை வெவ்வேறு காரணங்களுக்காக நாலைந்து முறை படிப்பதும் எனது இயல்பு.


கவிதை புத்தகங்களை வாசிப்பது இதிலிருந்து மாறுபட்டது. என்னால் ஒரு கவிதைத் தொகுப்பில் நாலைந்து கவிதைகளுக்கு மேல் ஒரு நேரம் படிக்க முடியாது. இதனால்  சில கவிதைத் தொகுப்புகளை படிக்க ஒரு வருசம் ஆகியிருக்கிறது. நான் அதிகம் கவிதைகள் படிப்பவன் இல்லை.


இலக்கியம் சாராத பிற துறை புத்தகங்கள் என்றால் இந்த வேகம் சற்று குறைய கூடும். ஆனால் வாசிக்க துவங்கிய சில பக்கங்களிலே அலுப்பும் எரிச்சலும், போலியான குரலில் நகல் எழுத்தாக, மலினமான ரசனை கொண்டதாக இருக்கிறதே என்றும் தோன்றும் புத்தகங்களை அப்படியே கைவிட்டுவிடுவேன்.


தமிழை விட ஆங்கிலத்தில் அதிகம் வாசிப்பவன் நான். ஆங்கிலத்தில் உள்ளது போன்று பல துறைகளில் நம்மிடயே இன்றும் புத்தகங்கள் வரவில்லை. குறிப்பாக காமிக்ஸ், சினிமா, பயண அனுபவங்கள், தொகைநூல்கள், நேர்காணல்கள். ஆய்வியல் புத்தகங்கள் தமிழில் அதிகமில்லை.


புத்தகங்கள் வாங்குவதற்காகவே ஊர் ஊராக சுற்றியிருக்கிறேன். இன்றும் என் பயணத்தில் ஒரு பகுதி புத்தகக் கடை தேடுதல்களே. இணையத்தின் வழியே நிறைய புத்தகங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அப்படி எனக்கு வந்துசேரும் புத்தகங்களை கணிணி வழியாகவே வாசிக்க துவங்கி அதுவும் பழக்கமாகி விட்டது.


இவை தவிர எனது நண்பர்கள் மும்பை மற்றும் டெல்லி செல்லும் போது எனக்கு விருப்பமான புத்தகங்களை  வாங்கி வந்து தருகிறார்கள். சென்னையில் ஆங்கில புத்தகங்கள் கிடைப்பது இன்று எளிதாக உள்ளது. விலை தான் பயமுறுத்துகிறது. கிடைக்காத புத்தகங்கள் என்றால் அதை யாராவது வெளிநாட்டு நண்பரிடம் சொல்லி வரும் போது வாங்கி வர வைக்கிறேன்.


சிறந்த புத்தங்களை சிபாரிசு செய்யும் இணையதளங்கள் நிறைய உள்ளன. இணையத்தில் புத்தக வாசகர்கள் ஒன்றிணைந்து பல குழுக்களாக உள்ளார்கள். அதில் நான் உறுப்பினராகியதால் ஒவ்வொரு மாதமும் எது போன்ற புத்தகங்கள் கவனம் பெறுகின்றன. விருது பெறுகின்றன என்று உடனடியாக அறிந்து கொள்ள முடிகிறது. அத்துடன்  The New Yorker, esquire. The Times Literary Supplement  வழியாக முக்கிய படைப்பாளிகள், புத்தகங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.உலகம் முழுவதுமிருந்தும் வெளியாகும் சிறு பத்திரிக்கைகள் பல இணையத்தில் உள்ளன. இதில் இருபதிற்கும் மேற்பட்ட சிறுபத்திரிக்கைகளாவது வாசித்து விடுகிறேன். குறிப்பாக


1)wordswithoutborders. 2)BibliOdyssey 3)3ammagazine 4)blackbird. 5).bloomsburymagazine. 6)geist. 7) goodreadingmagazine 8)granta. 9)Istanbul Literature Review 10)Jacket Magazine 11)Little Magazine 12) Me Three 13 ) WEB DEL SOL 14) WORD RIOT 15) Slate 16) lapetitezine 17) cafeirreal.18) tarpaulinsky.19) pifmagazine 20) shampoopoetry.கையில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் கல்லூரி நாட்களில் படித்துக் கொண்டிருந்தேன். பின்பு படிப்பதை ஒழுங்கு செய்து கொண்டேன். இலக்கியம் அதில் முதன்மையானது. உலக இலக்கியத்தின் செவ்வியல் பிரதிகள், அது போலவே சமகால உலக இலக்கியப் பிரதிகளான நாவல், சிறுகதை, கட்டுரைகள் என்று  தேடித் தேடி வாசிப்பேன். கோட்பாடுகள் மற்றும் விமர்சன நூலின் மீது அதிக விருப்பம் இல்லை. 


 அதுபோலவே, இதிகாசம், தத்துவம், வாழ்க்கை வரலாறு, நுண்கலைகள், நாட்டார்கதைகள், சினிமா, சரித்திரம், எளிய விஞ்ஞான நூற்கள், மொழிபெயர்ப்பு புத்தகங்கள், தொகை நூல்கள், சமகால பிரச்சனைகள் இவையே என் விருப்பமான துறைகள்.கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு துறை சார்ந்து விரிவாக வாசிப்பது என்று நானாக முடிவு செய்து கொண்டு அதற்கான புத்தகங்களை தேடி சேகரித்து தேர்வு செய்து வாசித்து வருகிறேன்.


1999 ஆண்டு முழுவதும் இந்திய சரித்திரம் படித்தேன்.  2000ம் ஆண்டில் விஞ்ஞானத்தின் வரலாறு மற்றும் விஞ்ஞானிகளின் சுயசரிதைகள் வாசித்தேன். 2001 ல் பதினேழாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் நடந்த மாற்றங்கள். 2002ல் கிரேக்க இலக்கியம். 2003ல் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள். தொன்மங்கள். 2004ல் ஆயிரத்தோரு அராபிய கதைகள் மற்றும் பல்வேறு சமகால அராபிய எழுத்தாளர்கள். 2005ல் உலகம் எங்கும் சுற்றியலைந்த கடலோடிகளின் குறிப்புகள், வாழ்க்கை வரலாறுகள். 2006ல் மகாத்மா காந்தி பற்றிய நூற்கள் மற்றும் காந்திவழி வந்தவர்களின் சுயசரிதைகள். 2007ல் யூத இலக்கியம். மற்றும் உலகபோரின் பாதிப்புகள். 2008ல் தொன்மங்கள். குறிப்பாக இந்திய தொன்மங்கள், நாட்டார்கதைகள்.


இந்த ஆண்டு அப்படி எனது கவனம் முழுவதும் ஆசிய நாடுகளின் பழங்கதைகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள், நுண்கலைகள், நம்பிக்கைகள் சீன ஜப்பானிய இலக்கியங்கள் என்று தேர்வு செய்திருக்கிறேன்.


நான் வாசிக்க விரும்பிய துறை சார்ந்த அடிப்படை புத்தகங்களை சேகரிப்பதற்கு இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்படும். ஒரு துறை சார்ந்து குறைந்த பட்சம் நூறு புத்தகங்களாவது வாசிக்க வேண்டும் என்று திட்டமிடுவேன். அதில் பலவற்றை நூலகங்களில் இருந்தும், நண்பர்கள் வழியாகவும் பெறுவேன். சில புத்தகங்களை நானே வாங்கிவிடுவேன்.


வாசிப்பதைத் தவிர எந்த குறிப்பும் எடுத்துக் கொள்வதுமில்லை. அடிக்கோடு இடுவதும் இல்லை. என் விருப்பத்திற்காக மட்டுமே வாசிக்கிறேன். நினைவில் தங்குவது மடடுமே தங்கட்டும் என்று விட்டுவிடுவேன்.


தினசரி படிப்பது என்ற பழக்கம் இப்போதுமிருக்கிறது. எந்த நேரத்தில் என்பது மட்டும் மாறிவிட்டிருக்கிறது. குறைந்த பட்சம் தினசரி இரண்டு மணி நேரம் வாசிக்கிறேன். சில நாட்கள் மற்ற வேலைகள் யாவையும் தூக்கி வைத்துவிட்டு நாள் முழுவதும் படிப்பது மட்டுமே தொடரும்.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதில் எனக்கு விருப்பமில்லை. அரிதாக ஏதாவது சில நிகழ்ச்சிகளை காண்பதுண்டு. மற்றபடி தொலைக்காட்சிப்பெட்டி அணைக்கபட்டிருந்தால் அதை நீண்ட நேரம் என்னால் பார்த்துக் கொண்டிருக்க இயலும் என்று வேடிக்கையாக சொல்வேன்.


என் வாசிப்பு அனுபவத்தின் ஒரு காட்சியிது.


***


செவ்வாய்கிழமை இரவு மதுரையிலிருந்து சென்னை வருவதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஏறினேன். பயணத்தில் படிப்பது எனது நீண்ட நாள் பழக்கம். அதுவும் ரயில் பயணம் என்றால் நிச்சயம் இரண்டு புத்தகங்களாவது தேவைப்படும்.


துயில் நீண்ட இரவில் நான் ஒருவன் மட்டும் கையளவு வெளிச்சத்தில் தனியே புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தேன். சில நேரம் புத்தகம் படிப்பதை நிறுத்திவிட்டு அருகாமையில் உறங்குபவர்களை பார்ப்பேன். ஆழ்ந்த உறக்கம் கவ்விய முகங்கள். ஒரே ரயில்பெட்டி. ஆனால் ஒவ்வொருவரும் ஒரு கனவில் இருக்க கூடும். அவர்கள் உறங்கியபடியே கனவு காண்கிறார்கள். நான் விழித்தபடியே புத்தங்களின் ஊடாக கனவு காண்கிறேன், வித்தியாசம் அவ்வளவு மட்டுமே,


மாலையில் நடைபாதை கடையில் தேடி மூன்று புத்தங்கள் வாங்கினேன். ஒன்று The Conference of the Birds – Farid ud-Din Attar. . மற்றது  ஸந்தோஷ் குமார் கோஷ் எழுதிய வங்காள நாவலான கினு கோனார் சந்து.  மூன்றாவது  பறவையியல் அறிஞர் சாலிம் அலியின் சுயசரிதை புத்தகமான  ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி.மூன்றில் எதை முதலில் படிப்பது என்று மாறி மாறி கையில் வைத்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். சாலிம் அலி புத்தகத்தை ஏற்கனவே ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன். ஸ்ந்தோஷ் குமார் புத்தகத்தை  கல்லூரி நூலகத்தில் படித்திருக்கிறேன். படிக்காத புத்தகம் பரித் உத் தின் அத்தரின் பெர்சிய நூல் மட்டுமே. ஆனால் அது சூபி தத்துவம் பற்றியது. ஆகவே உடனடியாக படிக்க முடியுமா என்ற யோசனையாக இருந்தது.


ரயில் கிளம்புவதற்காகவே காத்திருந்தவர்கள் போல ஸ்டேஷன் விட்டு கிளம்பியதும்  பெரும்பாலோர் சாப்பிட துவங்கியிருந்தார்கள். அடுத்த பதினைந்து நிமிசங்கள்  உணவகம் ஒன்றின் சமையல் அறைக்குள் படுத்துகிடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.


ரயில் கொடை ரோட்டினை நெருங்கிய போது  விளக்குகள் பெரும்பாலும் அணைக்கபட்டுவிட்டன. பேச்சரவம் மட்டும் லேசாக கேட்டுக் கொண்டிருந்தது. இனி படிக்கலாம் என்று கினு கோனார் சந்துவை கையில் எடுத்தேன்.


நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட இந்திய மொழி நாவல்வரிசை முழுவதுமே அற்புதமான புத்தகங்கள். மொழி பெயர்ப்பும் மிக சரளமாக அமைந்திருக்கும்.  வங்காள இலக்கியத்தை வாசிக்க வைத்ததில் நேஷனல் புக்டிரஸ்டிற்கு முக்கிய பங்கிருக்கிறது. அவர்கள் வழியாக தான் தாகூர், அதின் பந்தோபாத்யாயாய, விபூதி பூஷண், மாணிக் பத்தோபாத்யாயா, சுனில் கங்கோபாத்யாயா, சீர்ஷேந்து முங்கோபாத்யாயா, தாராசங்கர் பானர்ஜி போன்றவர்களை வாசிக்க நேர்ந்தது. நாவல் என்ற வடிவத்தை மிக சிறப்பாக கையாண்டவர்கள் இவர்களே.


கினு கோனார் சந்து என்ற நாவலின் தலைப்பு தான் அதை படிப்பதற்கு முக்கிய தூண்டுதலாக உள்ளது. பால்காரன் கினு தெரு என்பதே வங்காள நாவலின் தலைப்பு. அதை மிக அழகாக தமிழில் கினு கோனார் சந்து என்று மாற்றியிருக்கிறார்கள். கல்கத்தாவின் புறநகரில் உள்ள நெரிசலான சந்துகளில் ஒன்று அது. அங்கே குடிவரும் நீலா என்ற பெண்ணை பற்றியதே நாவல். 1970களில் வெளியான நாவல் என்பதால் நேரடியான விவரணைகள் கொண்ட யதார்த்த நடையில் எழுதப்பட்டிருக்கிறது


காரை உதிர்ந்த சிறிய அறைகள் கொண்ட காற்றோட்டம் இல்லாத குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர்களை விவரிக்கிறது நாவல். மத்திய தர வர்க்கத்து மனிதர்களின் ஆசைகள், அபத்தங்களை கேலி செய்கிறது. நீலா என்ற பெண்ணே முக்கிய கதாபாத்திரம். அவள் ஒரு தொடர்கதையில் வரும் சுஜாதாவை நினைவுபடுத்தும் கதாபாத்திரம்.

நீலாவின்  அம்மா ஆஸ்துமா நோயாளி. அப்பா தோல்வியுற்ற மனிதர். அண்ணன் அண்ணி இருவரும் தங்களது சுகத்தை மட்டுமே பெரிதாக எண்ணுபவர்கள். அண்ணியின் பணக்கார சித்தப்பா மனைவியை இழந்தவர். எப்படியாவது நீலாவை மயக்கிவிட வேண்டும் என்று சுற்றியலைபவர். அவர்கள் அருகாமை வீட்டிற்கு குடிவரும் எழுத்தாளர். அவரது மனைவி. எழுத்தாளரை தேடிவரும் கவிஞர் மற்றும் நண்பர்கள் வட்டம், அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள் என்று நாவல் அந்த வீதியின் மாறாத இயக்கத்தை காட்டுகிறது.


இந்த நாவலை வாசிக்கும் போது எனக்கு வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு நாவல் நினைவிற்கு வந்தபடியே இருந்தது. ரெயினீஸ் ஐயர் தெருவை உடனே வாசிக்க வேண்டும் போலிருந்தது. அற்புதமான கதை சொல்லும் தன்மை கொண்ட நாவலது.


ஒவ்வொரு வீதிக்கும் இது போன்ற எண்ணில் அடங்காத கதைகள் இருக்கின்றன. குடியிருப்பவர்களும் காலி செய்து போனவர்களும் அந்த வீதியின் நினைவுகளை தங்களுக்குள் தேக்கி வைத்திருக்கிறார்கள். வீதி என்பது வெறும் நடைபாதையில்லை. அது ஆசைகளும் நிராசைகளும் வெளிப்படுத்தபடமுடியாத துக்கமும் உதிர்ந்து கிடக்கும் இடம் என்றே தோன்றுகிறது.


கல்கத்தா 1945 ஆண்டில் எப்படியிருந்தது என்பதை நாவல் விவரிக்கிறது. புதிதாக ரேடியோ வருவதை மக்கள் வியப்போடு பார்க்கிறார்கள். மாறிவரும் சமூக சூழலை எப்படி எதிர்கொள்வது என்ற தத்தளிப்பு நாவலில் அழகாக வெளிப்படுத்தபடுகிறது


பல்லில் சிக்கிய அரைபட்ட மணல் போன்று அவளுக்கு உடம்பு கூசியது என்றொரு வரி நாவலில் உள்ளது. நீண்ட நேரம் அந்த ஒற்றை வரியை நினைத்தபடியே இருந்தேன். நாவலில் நீலா எதிர்கொள்ளும் அத்தனையும் அந்த ஒற்றை வரிக்கு பொருந்தி வரக்கூடியது என்றே தோன்றியது.


ஏனோ தொடர்பில்லாமல் அசோகமித்ரன் மணல் என்றொரு கதை எழுதியிருக்கிறார். அதில் ஒரு பெண் வீட்டை விட்டு காதலனோடு ஒடிப்போவதற்கான மனதள்ளாட்டம் துல்லியமாக விவரிக்கபட்டிருக்கும் என்றும் ஞாபகம் வந்தது.


157 பக்க நாவல் என்பதால் திண்டுக்கல் தாண்டியதும் அதை முடித்து விட்டிருந்தேன். கினு கோனார் சந்து போல மதுரையில் எத்தனையோ வீதிகள் இருக்கின்றன. எவ்வளவோ எழுதப்படாத கதைகள் இருக்கின்றன.


ஒடும் ரயிலில் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கடந்து செல்லும் இருளை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.  எனது இருக்கையை கடந்து சென்ற காவலர் திரும்பி பார்த்து சிரித்தபடியே போனார். ஒரு தேநீர் குடிக்கலாம் போன்றிருந்தது.
வீட்டில் பெரும்பான்மை இரவுகளில் நானே தயார் செய்து தேநீர் குடிப்பேன். பின்னிரவின் அமைதியில் சூடான தேநீரை சிறிது சிறிதாக குடித்தபடியே கணிணியில் ஒரேயொரு பாடல் கேட்பது ரசனைக்குரிய அனுபவம். அந்த ஒரு பாடல் எனக்கு மட்டுமே ஒலிப்பது போல மிக நெருக்கமாக கேட்கும். அப்படி அடிக்கடி கேட்கும் பாடல் ஜென்சி பாடிய ஆயிரம் மலர்களே மலருங்கள். இளையராஜாவின்  இசையில் உருவான அந்தப் பாடல் தரும் மயக்கம் சொல்லில் அடங்காதது. 


திருச்சியில் தேநீர் கிடைக்கும் என்பதால் திருச்சி ரயில் நிலையம் வரும்வரை வெளிச்சத்தை குறைத்துவிட்டு கினு கோனார் சந்துவின் நாவலில் வரும் கதாபாத்திரங்களையே நினைத்துக் கொண்டிருந்தேன்.


ஏதேதோ நாவல்களின் வழியே உருவான கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வில் எதிர்கொண்டவர்களை விடவும் ஏன் அதிக நெருக்கம் கொண்டுவிடுகிறார்கள். மோகமுள்ளின் யமுனாவும் பாபு எழுத்தில் உருவானவர்கள் என்றாலும் நமக்கு மிக நெருக்கமான மனிதர்கள் தானே. என்ன விசித்திரம் அது.


என் அண்டை வீட்டில் குடியிருந்தவர்களின் முகங்கள் பெயர்கள் மறந்து போய்விட்டது. ஆனால் டாஸ்டாயெவ்ஸ்கியின் கதையில் வரும் நாஸ்தென்காவும், சோபியாவும்,  பீட்டர்ஸ்பெர்க் நகரும் மறப்பதேயில்லை.ஏன் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நாவலில் வரும் மெல்க்யூடியஸ்  பல ஆண்டு பழகிய நண்பனை போலிருக்கிறான்.


நான் ஒரு போதும் போயிராத தெரு கினுகோனார் சந்து. அந்த மனிதர்கள் எவர் கற்பனையிலே உருவானவர்கள். ஆனால் வாசித்து முடிக்கும் போது அந்த வீதியில் சில ஆண்டுகாலம் வசித்து பழகியது போன்ற நெருக்கம் எப்படியோ உருவாகிவிடுகிறது. எழுத்தின் விளக்கமுடியாத விந்தை அற்புதமானது.


நாவலின் கடைசி வரி என்னவென்று திடீரென தோன்றியது. மறுமுறை புத்தகத்தை கையில் எடுத்து பார்த்தேன். புதிதாக தன் வாழ்வை அமைத்துக் கொள்ள துடித்தான். அது ஒரு சவால் ஆனாலும் அதையும் ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான் என்று முடிந்திருந்தது.


எனக்கு பா. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவலின் இறுதிவரிகள் நினைவிற்கு வந்தன.


மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை.


சிங்காரத்தின் இந்த கடைசிவரிகள் அற்புதமானவை. பலமுறை அதை வாய்விட்டு சொல்லி மகிழ்ந்திருக்கிறேன். நாவல் முடிந்தபிறகும் இந்த வரிகள் நம்மிடம் இருந்து மறைவதேயில்லை. தேர்ந்த கதைசொல்லிகள் நாவலின் துவக்கவரியையும் முடிவுவரியையும் மிக சரியாக எழுதிவிடுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் டால்ஸ்டாய்.ரயில் திருச்சி  வந்திருந்தது. இரவிலும் ஆரவாரமாகவே இருந்தது. இறங்கி பிளாட்பாரத்தில் நின்றபடியே தேநீர் அருந்தினேன். பெரும்பான்மை ரயில் நிலையங்கள் இரவில் வேறு தோற்றம் கொண்டுவிடுகின்றன. எல்லா ரயில் நிலையங்களிலும் ஒரே போல பெஞ்சுகள், மரங்கள், பணியாளர்கள் இருப்பது போலவே தோன்றுகிறார்கள்.


ரயிலில் ஏறும் அவசரத்தில் நடுத்தரவயது பயணி ஒருவர் தனது தண்ணீர்பாட்டிலை தவறவிட்டார். அது உருண்டு பிளாட்பாரத்திலிருந்து ரயிலின் கிழே போய் விழுந்தது. தண்டவாளத்தினுள் இறங்கி அதை எப்படி எடுப்பது என்று தெரியாமல் குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்.


ரயில்வே பணியாளர் ஒருவர் ரயில் புறப்பட்டு போனால் மட்டுமே அதை எடுக்க முடியும் என்றார். அந்த பயணியோ பனிரெண்டு ரூபாய் கொடுத்து வாங்கியது என்று புலம்பியபடியே அந்த பாட்டிலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.


என்ன விசித்திரமான பிரச்சனை பாருங்கள். கையில் இருந்த தண்ணீர் பாட்டில் நழுவி போகிறது. அதை மீண்டும் எடுக்க வேண்டும் என்றால் ரயில் கிளம்பினால் மட்டுமே முடியும். ஆனால் பயணியோ ரயிலில் போக இருப்பவர். கையில்லாத ஊமை கண்ணால் வெயிலில் உருகும் வெண்ணையை காவல் காத்தது  என்ற கவிதை வரி நினைவிற்கு வந்தது.


கையிலிருந்து நழுவும் யாவும் நம் கைக்கு திரும்பவும் வந்துவிடும் என்பது சாத்தியமேயில்லாதது போலும் .ஒரு வேளை கைக்கு திரும்பி வந்துவிட்டால் அது அதிசயம் தான். அதை பலநேரம் நாம் எளிதாக மறந்துவிடுகிறோம்.


அடுத்த புத்தகமாக சாலீம் அலியின் சுயசரிதையை வாசிக்க ஆரம்பித்தேன். இதுவும் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு தான். நாக. வேணுகோபாலன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.


பள்ளி வயது முழுவதும் கிராமங்களில் வாழ்ந்தவன் என்பதால் சப்தத்தை வைத்து அது என்ன பறவை என்று கண்டறியும் திறன் இயல்பாகவே எனக்கு உண்டு. அதிலும் இரவு காவலுக்காக வயல்வெளிக்கு போய் தங்கியிருந்ததால் இருட்டில் கேட்கும் குரல்கள் எவை என்று அறிந்திருக்கிறேன்.


எனக்கு குருவிகளை பிடிக்கும். குறிப்பாக அதன் இடைவிடாத இயக்கம் காரணமாக குருவிகளை மிகவும் நேசிக்கிறேன்.  தானியங்களை களத்தில் அடிக்கும் நாட்களில் குருவிகள் படைபடையாக வந்து கொத்தி போவதை காணும் போது ஆனந்தமாக இருக்கும். எத்தனை விதமான குருவிகள். எவ்வளவு இனிமையான சப்தங்கள்சாலிம் அலியின் சுயசரிதையின் பெயர் ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி .. there`s a special  providence in the fall of a sparrow என்ற வரி ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தில் வருவது.  ஹாம்லெட் இதை சொல்கிறான்.
சாலிம் அலி வெறும் பறவை ஆராய்ச்சியாளர் மட்டுமில்லை என்பதற்கு இந்த தலைப்பே உதாரணம்.சாலிம்அலியின் இந்த சுயசரிதை அற்புதமானது. இதுவெறும் பறவைகளின் மீது ஒருவர் கொண்ட ஈடுபாட்டினை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. மாறாக ஒரு மனிதன் தன் முடிவுறாத தேடுதலில் எதை கண்டு அடைகிறான்.அவனது வாழ்க்கை பார்வைகள் எப்படி மாறுகின்றன. விருப்பம் எப்படி தீராத இயக்கமாக மாறுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. மெல்லிய நகைச்சுவையும், கவித்துவமான வரிகளும், இயற்கையை நுட்பமாக எப்படி அவதானிக்கமுடியும் என்ற  விவரணைகளும் இதன் தனிச்சிறப்பு.


எண்பத்தேழாவது வயதில் தன் பால்யத்தை திரும்பி பார்த்து துல்லியமாக விவரிக்கிறார் சாலிம் அலி. எனக்கு அவரது பறவை ஆய்வுகளை விடவும் அவரது குடும்பமும் அதன் மனிதர்களும் அவர்களது அலைக்கழிப்பு மிக்க வாழ்க்கையும் அதில் தெறிக்கும் உண்மைகளும் ரொம்பவும் பிடித்திருந்தது.


குறிப்பாக வேட்டையாடுவதை தங்களது வீரச்செயலாக கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து எப்படி ஒருவர் பறவைகளை நேசிப்பவராக உருமாறுகிறார் என்ற மாற்றம் முக்கியமானது.


சிறுவயதில் தான் வேட்டையாடிய மஞ்சள் தொண்டை குருவி ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அது ஏன் மற்ற குருவிகளை போல இல்லை என்று ஆராய்ச்சி செய்ய துவங்கிய சலீமை அவரது மாமா இயற்கை வரலாற்று கழகத்தின் தலைவராக இருந்த மிலார்டை சந்தித்து விபரம் கேட்கும்படியாக அனுப்பி வைக்கிறார்.


தயங்கி தயங்கி அங்கே செல்லும் சலீமை மதித்து மிலார்ட் அந்த குருவி பற்றி நிறைய தகவல்களை தருவதோடு அது போல தன்னுடைய சேமிப்பில் உள்ள பதப்படுத்தபட்ட குருவி ஒன்றையும் எடுத்து காட்டுகிறார்.


அத்துடன் பறவைகள் பற்றி வாசிப்பதற்காக மும்பையின் சாதாரண பறவைகள் , அலையும் ஒரு இயற்கையியல் மாணவன் என்ற இரு நூல்களையும் தருகிறார். அது தான் சாலீம் அலி பறவைகளை நோக்கிய தேடுதலின் முதற்புள்ளி. ஒரு சிறுவன் கேட்கிறானே என்று எஸ். மிலார்ட் அலட்சியப்படுத்தியிருந்தால் சாலிம்அலி உருவாகியிருக்கமாட்டார்.


கையில் செத்து போன குருவியோடு அதிகாரியான ஒரு வெள்ளைகாரரின் முன் நிற்கும் சிறுவனின் தோற்றம் அப்படியே என் கண்ணில் தெரிவதுபோன்று இருந்தது.


சாலிம்அலியின் புத்தகத்தில் சென்ற நூற்றாண்டில் வேலை தேடி பர்மாவிற்கு சென்றவர்களின் வாழ்க்கை மற்றும் பறவையியல் ஆய்விற்காக  இந்திய நகரங்கள், வன வாழ்க்கை மிக விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.


குறிப்பாக இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த மும்பை நகரம் பற்றிய வரிகளை காணும் போது மும்பை நகரம் எவ்வளவு அடர்ந்த மரங்களும் இயற்கை சூழலும் கொண்டிருந்தது என்று வியப்போடு திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதிலும் செம்பூர் பற்றிய பத்திகள் இன்றைய சூழலில் நம்பமுடியாத உண்மைகள்.


அது போலவே ஹைதராபாத்தில் தான் வாழ்ந்த வீட்டினை பற்றியும் தமிழ்நாட்டில் மறையூர் மற்றும் நீலகரியில் தங்கி சாலிம்அலி மேற்கொண்ட வனஉயிர் கணக்கெடுப்பு நாட்களும் நாவலை விடவும் சுவாரஸ்யம் நிறைந்தது.கைலாஸ் மானசரோவர் நோக்கி பறவைகளை கண்டறிவதற்காக சாலிம் அலி மேற்கொண்ட பயணமும் அதன் குறிப்புகளையும் வாசிக்கும் போது எவ்வளவு இடர்பாடுகளை தாண்டி ஒரு மனிதன் தன் தேடுதலின் பின்னால் சென்றிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.


சாலிம் அலியும் பறவைகள் போலவே தீராத பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பயணத்திலும் அவர் கண்ட பறவைகளை குறிப்புகள் எடுத்திருக்கிறார். அதன் இறகுகளை சேகரித்திருக்கிறார். அடிப்படை தரவுகளை தொகுத்திருக்கிறார். உலகமெங்கும் அவர் மேற்கொண்ட பயணங்களும் அதில் உருவான அனுபவங்களையும் சாலீம் அழகாக எழுதியிருக்கிறார். தமிழில் பறவைகள் பற்றிய புத்தகங்கள் மிக குறைவு. கிருஷ்ணன் எழுதியதும் தியோடர் பாஸ்கரன் எழுதிய புத்தங்கள் மட்டுமே நான் வாசித்திருக்கிறேன்.


சாலிம் அலியை வாசித்து முடிக்கையில் மணி ஒன்றரை ஆகியிருந்தது. அது எனது வழக்கமான தூங்கும் நேரம். படுத்துக் கொள்வதா அல்லது இன்னும் கொஞ்ச நேரம் படிக்காலாமா என்று ஊசலாட்டமாக இருந்தது.சமீபமாகவே இரவில் அதிகம் நேரம் வாசிக்க நேர்கிறது என்பதால் பரவாயில்லை காலையில் உறங்கி கொள்ளலாம் என்று பரித் உத்தின் அத்தரின் பறவைகளின் மாநாட்டை கையில் எடுத்தேன்


பெர்சியாவில் 1120 ஆண்டு பிறந்த பரித் உத்தின் அத்தர் எழுதிய சூபி புத்தகமது.  கண்ணி கண்ணியாக கவிதைகளின் வழியே சூபி தத்துவங்களை விளக்கி சொல்கிறார் அத்தர். 4500 வரிகள் கொண்ட குறுங்கதைகள் ஊடுகலந்த கவிதைகள். நான் அதன் உரைநடை ஆக்கத்தினை வாசித்தேன்.உலகில் உள்ள பறவைகள் யாவும் தங்களுக்கான அரசனை தேர்ந்து எடுப்பதற்காக ஒன்று கூடுகின்றன. அதற்கு முக்கியமான நோக்கம் சிமர்க் என்ற கற்பனையான நிலவெளியை அந்த பறவைகள் தேடிக் கொண்டிருக்கின்றன அங்கு செல்பவர்கள் நித்யமானவர்களாகி விடுவார்கள். கடவுளின் அருகாமை அவர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகின்றன. அவர்களை வழிநடத்த ஹோபோ என்ற பறவை அரசனாக தேர்வாகிறது. முப்பது விதமான பறவைகள் ஒன்று சேர்ந்து இந்த யாத்ரையை துவங்குகின்றன. சூபியின் ஆன்மீக பயணமே பறவைகளின் வழியாக சொல்லப்படுகிறது.


ஒவ்வொரு பறவையும் தனக்கான தனித்துவத்துதையும் தான் ஏன் இந்த பயணத்தை மேற்கொள்ளவேண்டும்  என்பதையும் கேள்வி கேட்கிறது. ஹோபே கதைகளின் வழியாக பதில்  சொல்கிறது. பறவைகள் ஏழு பள்ளதாக்குகளை தாண்டி பறந்து சென்றால் மட்டுமே சிமர்கை அடைய முடியும். அந்த ஏழு பள்ளதாக்குகளாக 1) love, 2) understanding, 3) independence and detachment, 4) unity, 5) astonishment,  6) poverty 7)  nothingness உருவகப்படுத்தபட்டுள்ளன.


தாகம் தீராத பறவைகளால் மட்டுமே சிமர்கை அடைய முடியும் என்கிறது ஹோபோ. முடிவில் அப்படியே நடந்தேறுகிறது. ஒவ்வொவரும் தன்னை அறிந்து கொள்வதே இறைமையின் முக்கிய அம்சம். இந்த பறவைகளின் தீராத தாகமும் அதற்காக தேட்டமுமே உண்மையான கடவுள் என்கிறது கவிதைநூல். அக நெருக்கடிகளிலிருந்து விடுபடலும், அமைதி காத்தலும், தன் ஆன்மாவை கறைபடமால் வைத்துக் கொள்வதுமே இறைதேடலின் முக்கிய அம்சங்கள் என்கிறார் அத்தர்.


நான் படித்தது இந்த கவிதை நூலின் ஆங்கில உரைநடை வடிவம் என்பதால் ஆங்காங்கே மட்டுமே கவிதைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. என்றாலும் அதை உள்வாங்கி கொள்வதற்கு ஒவ்வொன்றையும் இரண்டு முறை படிக்க வேண்டியிருந்தது. ஆனால் வாசிக்க வாசிக்க நம் கண்முன்னே ஒரு சூபி ஞானி  அருகில் அமர்ந்து காதில் சொல்லி தருவது போன்ற நெருக்கம் உருவாகிறது.


பறவைகளின் தலைவன் சொல்லும் கதைகளும்  அறவுரைகளும் வாழ்க்கை குறித்த ஆழ்ந்த பதிவுகள். பறவைகள் கேள்வி கேட்பதும் அந்த கேள்விகள் வாழ்க்கையின் ஆதார உண்மைகளை பற்றியதாக அமைந்திருப்பதுமே இந்த நூலின் சிறப்பு.


பறவைகளின் மாநாடு இப்படி கடந்து செல்லும் பயணத்தில் படித்துவிடக்கூடியதில்லை என்பது நன்றாக புரிந்தது. இன்னொரு முறை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. ஆயிரம் வருசங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு பெர்சிய பிரதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.


என் கையில் இருந்த மூன்று புத்தங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை. ஆனால் அவை ஒரே இரவில் ஒரே மனிதனால் வாசிக்கபடுகின்றன என்பது விசித்திரமாக இருந்தது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.  இன்னும் சில மணி நேரத்தில் சென்னை வந்துவிடக்கூடும்.


இரவு மீதமிருந்தது. உறக்கம் அழுத்திய கண்களுடன் புத்தகங்களை எனது தோள் பையினுள் திணித்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒரு பயணி கையில் டுத்பேஸ்டுடன் அடுத்த நாளை சந்திப்பதற்காக வாஷ்பேஷினை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்.


கண்களை மூடியதும் மூன்று புத்தகங்களும் ஒன்றாகிவிட்டது. கினு கோனார் சந்தில் பறவைகள் கூடுகின்றன. சாலிம்அலி அதை குறிப்புகள் எடுக்க துவங்குகிறார். தண்ணீருக்குள் கல் நழுவிப் போவது போல என்னை அறியாமல் உறக்கத்தின் ஆழ்ந்த பிடிக்குள் சென்று கொண்டிருந்தேன்.


விடிகாலை ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு அருகாமை வந்த போது ரயில் பெட்டியினுள் மின்விளக்குகள் எரிய துவங்கியிருந்தன. காலை வெளிச்சம் வெளியில் நீண்டு பரவியிருந்தது. பயணிகள்  இறங்குவதற்கு தயராக நின்று கொண்டிருந்தார்கள்.  கலையாத உறக்கத்துடன் நானும் இறங்குவதற்கு நின்று கொண்டிருந்தேன். மூன்று புத்தகங்களும் மறுபடி நினைவில் வந்தன.


கீழே இறங்கி நடந்தேன்,  பரபரப்பாக இயங்கும் காய்கறி கடைகள் எதுவும் திறக்கபடவில்லை


அதிகாலை தேநீர் கடையின் முன்பாக நின்றபடியே சாலையை வெறித்து பார்த்தேன்.


நடமாட்டம் துவங்காத சாலை. எங்கிருந்தோ பறவைகள் சப்தமிடுகின்றன.


 இன்னும் ஒரு பயணம், இன்னும் படிக்க வேண்டிய புத்தகங்கள் எப்போதுமே மீதமிருக்கின்றன என்றபடியே தேநீருடன் அடுத்த நாளைத் துவங்கினேன்.


*****

0Shares
0