ஒளியே துணை

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது தேவமலர் மற்றும் மதகுரு ஆகிய நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நாவல்களை க..நா.சு மொழிபெயர்த்திருக்கிறார்.

தேவமலர் எனக்கு மிகவும் பிடித்த நாவல். தேசாந்திரி பதிப்பகம் மூலம் இதை மறுபதிப்புச் செய்திருக்கிறேன்

ஸ்காண்டிநேவிய இலக்கியத்தில் செல்மாவின் இடம் தனித்துவமானது. தொன்மங்கள், நாட்டுப்புறக்கதைகள், தேவதை கதைகள் என மண்ணிலிருந்து உருவான கதைகளின் சரட்டினைக் கொண்டு புதிய புனைவுலகை உருவாக்கியவர் செல்மா.

இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Selma (2008) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டு பகுதிகளாகத் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்டிருக்கிறது. Erik Leijonborg இயக்கியிருக்கிறார்

முதற்பாதி செல்மாவும் அவரது இணைபிரியா தோழியும் சிசிலிக்கு மேற்கொள்ளும் பயணம் பற்றியது. Selma Lagerlöf ஆக நடித்திருப்பவர் Helena Bergström

••

ஸ்வீடனின் தென்மேற்கில் உள்ள மார்பகா  என்ற பண்ணையில் வசித்த வசதியான குடுமபத்தில் பிறந்தவர் செல்மா, இவரது மூன்று வயதில் போலியோ தாக்கி கால்கள் பாதிக்கப்பட்டன. இதனால் செல்மா வீட்டிற்குள்ளாகவே வளர்க்கப்பட்டார். ஜன்னல் வழியாக உலகைக் காணும் சிறுமியாக இருந்தேன் . ஒளியே எனது துணை. கடவுள் ஒளியின் வழியாகவே என்னுடன் உரையாடினார் என்கிறார் செல்மா

இவருக்குச் சிறப்பு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனால் செல்மா பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. வீட்டிலே தனி ஆசிரியர் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டார்.

பாட்டி தான் அவரது ஒரே துணை. பாட்டி சொன்ன கதைகள் தான் அவரை எழுத்தாளர் ஆக்கியது என்கிறார்.

அத்தோடு கிராமப்புறத்திலிருந்த காரணத்தால் பண்ணையில் வேலை செய்த கூலிகள் வேலையாட்கள், சொன்ன மாயக்கதைகளைக் கேட்டு வளர்ந்த காரணத்தால் அவரது புனைவுலகம் அற்புதமும் இயல்பும் ஒன்று கலந்ததாக உருவானது.

செல்மா இருபது வயதை எட்டியபோது, அவரது குடும்பம் வறுமை அடைய நேரிட்டது. இதனால். தந்தை பண்ணை வீட்டினை விற்க வேண்டிய சூழல் உருவானது. தனது பண்ணையிலிருந்து வெளியேறி செல்மா ஸ்டாக்ஹோமுக்குக் குடிபெயர்ந்தார், அங்கு அவர் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். பின்னர்ப் பத்து ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக வேலை செய்தார். தனது வேலைகளுக்கு நடுவே , அவ்வப்போது தனது கதைகளை எழுதி வந்தார். ஒரு இலக்கியப்போட்டியில் பரிசு கிடைத்தபிறகே தனது ஆசிரியர் பணியை உதறி முழுநேர எழுத்து வாழ்க்கையை மேற்கொள்ளத்துவங்கினார்.

திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்த செல்மாவிற்கு உற்ற தோழியாக அமைந்தவள் சோஃபி எல்கன் அவள் ஒரு யூத எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் . வசதியான வீட்டில் பிறந்தவள்.

சோஃபி இளவயதிலே திருமணம் செய்து கொண்டாள். ஒரு குழந்தையும் இருந்தது. 1879ல் திடீரெனக் கணவர் நோயில் இறந்து போனார். அதன் சில நாட்களில் மகளும் இறந்து போனாள். இதனால் மனம் உடைந்த போன சோஃபி மன ஆறுதலுக்காக மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்யத்துவங்கினாள். அப்படித்தான் செல்மாவின் அறிமுகம் கிடைத்தது

முதற்சந்திப்பிலே இருவரும் நெருக்கமாகிவிட்டார்கள். அதன்பிறகு இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழத்துவங்கினார்கள். இந்த உறவு பலத்த சர்ச்சைக்கு உள்ளான போது செல்மா அதைப் பொருட்படுத்தவேயில்லை.

1895 இல் இருவரும் இத்தாலிக்குப் புறப்பட்டனர். அந்தப்பயணமே படத்தின் முற்பகுதியாக உள்ளது. விடுதியில் அறையெடுத்துக் கொள்ளும் போது இருவரும் ஒரே அறையில் தங்குவதை விடுதி உரிமையாளன் விநோதமாகப் பார்க்கிறான்.கட்டிலில் உறங்கும் சோபியின் முகத்தைத் தடவி முத்தமிடுகிறாள் செல்மா. கடற்கரையிலும், மலைப்பிரதேசத்திலும் இவரும் ஒன்றாகக் காதலர்கள் போலச் சுற்றுகிறார்கள். இந்தச் சமயத்தில் சோஃபி ஒரு இளைஞனைச் சந்திக்கிறாள். அவர்களுக்குள் காதல் உருவாகிறது. அதை செல்மாவால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. கவலை.கொள்கிறாள். இந்த உறவுச்சிக்கலே முதற்பாதியில் விரிவாக விவரிக்கப்படுகிறது

இரண்டு பெண்களும் பார்வையிலே தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள நெருக்கமும் தவிப்பும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டாவது பகுதி செல்மாவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அதைப்பெற மேற்கொண்ட பயணத்தைப் பற்றியது. தனது நோபல் பரிசு ஏற்புரையில் இறந்து போன தனது தந்தையை நினைவு கொள்ளும் செல்மா அவர் சொன்ன கதைகளுக்கும். தனக்குக் கதை சொன்ன குடியானவர்கள். இசைக்கலைஞர்கள். மற்றும் கிராமப்புறக் கதைசொல்லிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறார்

செல்மா லாகர்லெவ்வின் நோபல் பரிசு உரை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது.

கிராமப்புறத்திலுள்ள வயதான ஆண்களும் பெண்களும் தங்கள் சிறிய குடிசை முன்பாக உட்கார்ந்துகொண்டு நீர் தேவதைகள் பற்றியும் காட்டின் விநோதம் பற்றியும் மற்றும் பூதங்களின் அற்புத கதைகளை என்னிடம் சொன்னதற்கு நான் கடன்பட்டிருக்கிறேன். ,துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரீகள், தாங்கள் பார்த்த தரிசனங்கள் மற்றும் கேட்ட குரல்கள் பற்றிச் சொன்னதற்கும் கடன்பட்டிருக்கிறேன். மற்றும் வார்ம்லாண்டின் சமவெளி பற்றிய கதைகளுக்கும் சாகச வீரர்களுக்கும் கடன்பட்டிருக்கிறேன். பூமியில் உலவும் விலங்குகள், வானத்தில் பறக்கும் பறவைகள், மரங்கள் மற்றும் பூக்கள், அவை அனைத்தும் அவற்றின் சில ரகசியங்களை என்னிடம் கூறியுள்ளன. அதற்கும் கடன்பட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

செல்மா லாகர்லெவ்வினை கௌரவப்படுத்தும் விதமாக ஸ்வீடன் நாட்டுப் பணத்தில் அவரது படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். செல்மா லாகர்லெவ்வின் நாவல்கள் திரைப்படமாகவும் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியாகியுள்ளன.

Selma (2008) திரைப்படம் லாகர்லெவ்வின் காதல் உறவையும் அவரது தனிமையினையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

ஸ்வீடனில் இன்று லாகர்லெவ் வீடு நினைவகமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பள்ளிப்பாடப்புத்தகங்களில் லாகர்லெவ்வின் கதைகளை மாணவர்கள் பாடமாகப் பயிலுகிறார்கள்

தமிழில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்ப நாவல்களில் ஒன்று மதகுரு. Gösta Berlings Saga நாவலே மதகுருவாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. லாகர்லெவ்வின் நாவல்களில் அதிகம் ஆண்களே இடம்பெற்றிருக்கிறார்கள். அதுவும் காதலால் அலைக்கழிக்கப்படும். குடியால் தன்னை அழித்துக் கொண்ட ஆண்கள் அதிகம்.. கெஸ்டா பெர்லிங் நாம் மறக்கமுடியாத கதாபாத்திரம்.

டிசம்பர் 10, 1909 இல் செல்மா நோபல் பரிசு பெற்றார். இதன்பிறகு 1914 இல், அவர் அகாடமியின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு பல்கலைக்கழகங்கள் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கின்றன.‘

செல்மாவின் JERUSALEM மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று-

••

0Shares
0